Published : 01 Mar 2022 08:12 AM
Last Updated : 01 Mar 2022 08:12 AM
தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இல்லாவிட்டாலும் வேண்டுமென்றே தங்களைக் காயப்படுத்திக் கொள்கிறவர்களின் (Deliberate self-harm) எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதிலும், பதின்பருவத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் மாணவர்கள் முதல் இரண்டு இடங்களில் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுவதால் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பருவமடைந்த மாணவர்களின் மூளையில், ஒரு செயலைச் செய்வதற்கு ஊக்கம் தருகின்ற, செய்தபின் மகிழ்ச்சியூட்டுகின்ற டோபமைன் அதிகம் சுரப்பதாலும், சிந்தித்துச் செயல்படவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும் வழிகாட்டும் பிரீஃபிரான்டல் கார்டெக்ஸ் முழுமையாக வளர்ச்சியடையாததாலும் பதின்பருவத்தினர் இதில் எளிதில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆபத்தானதாக இருந்தாலும், தற்காலிகமாகக் கிடைக்கும் மகிழ்ச்சிக்காகத் தங்களைக் காயப்படுத்திக்கொள்கிறார்கள்.
உடனிருப்பவர்கள் சிறிது கவனமாக இருந்தாலே இத்தகைய மாணவர்களைக் கண்டறிந்து சரியான நேரத்தில் காப்பாற்றிவிட முடியும். ஏனென்றால், தங்கள் உடலில் உள்ள காயத்தை யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக, எப்போதும் நீளமான கால்சட்டை, பாவாடை, மணிக்கட்டுவரை மூடியுள்ள ஆடையை அவர்கள் அணிந்திருப்பார்கள். காயத்தின் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட துணியைச் சுற்றி, கட்டு போட்டிருப்பார்கள். காரணம் சொல்ல முடியாத புதிய காயங்கள் அல்லது சரிவர ஆறாத பழைய காயங்கள் இருக்கும். கத்தி, பிளேடு போன்ற கூர்மையான பொருட்களை வாங்குவார்கள். ரத்தக் கறை படிந்த துணிகளை மறைப்பார்கள். தன்னைக் காயப்படுத்திக்கொள்வதால் ஏற்படும் ஆபத்து குறித்து இணையத்தில் வாசிப்பார்கள். அதிகமாகத் தனிமையைத் தேர்ந்தெடுப்பார்கள்.
அதிக நேரம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது, சரியில்லாத குடும்ப உறவுகள், புறக்கணிப்புகள், உடல், மன, பாலியல் துன்புறுத்தல்கள், மனச்சோர்வு, ஆளுமைக் கோளாறுகள் உள்ளிட்ட காரணிகள் இதற்குத் தூண்டுதலாக இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பெற்றோரையும் நண்பர்களையும் பழிவாங்கவும், கோபத்தை வெளிப்படுத்தவும், தான் எதற்கும் பயனில்லை என நினைப்பதாலும் தங்களையே காயப்படுத்திக்கொள்கிறவர்களும் உண்டு. இது போன்ற சிக்கல்களை சில மாணவர்கள் ஆக்கபூர்வமான வழிகளில் கையாளுகிறார்கள். ஓவியம் வரைவது, கவிதை எழுதுவது, தங்கள் துயரங்களை ஒரு தாளில் எழுதிக் கிழித்துவிடுவது, வாசிப்பில் ஈடுபடுவது, நண்பர்களுடன் கலகலப்பாக உரையாடுவது, இசை, விளையாட்டு போன்ற வழிகளில் தங்கள் சோகத்தை, விரக்தியை, ஏமாற்றத்தை, வெறுமையை இவர்கள் சரிசெய்துகொள்கிறார்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதன் வழியாக வெறுமையை வெற்றிகொள்ள முடியும் என்கிறார் உளவியலர் விக்டர் பிராங்கிள். இதற்காக அவர் பரிந்துரைத்த மூன்று வழிமுறைகள் பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
(1) பிறர்நல சேவை: தன்னலமின்றிப் பிறருக்கு உதவுகிறவர்கள் தாம் உயிர் வாழ வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்கிறார்கள். உதாரணமாக, 1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரின் மகள் பிரியங்கா காந்தி மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். அவரைச் சந்தித்த அன்னை தெரசா, ‘வந்து என்னோடு சேவை செய்’ என்று அழைத்ததாகவும், பல ஆண்டுகள் அவருடன் இணைந்து பணியாற்றியதாகவும், அவருக்குத் தான் நன்றிக்கடன்பட்டிருப்பதாகவும், தன்னலமற்ற சேவையையும், அன்பையும் தன்னிடம் அவர் காட்டியதாகவும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். இழப்பின் இருளில் வாழ்வைத் தொலைத்துவிடாதிருக்க பிரியங்காவுக்கு உதவியது பிறர்நல சேவை.
(2) உறவுகளின் மீது கவனம்: முற்சாய்வு எண்ணமின்றி மற்றவர்களோடும் இயற்கையோடும் திறந்த மனதுடன் தொடர்பில் இருப்பது, பாராட்டுவது, அன்றாடம் நாம் செய்யும் செயல்கள் மீது மனம்நிறைக் கவனத்துடன் (mindfulness) செயல்படுவது எல்லாம் பேருதவி செய்யும்.
(3) அணுகுமுறை மாற்றம்: எதிர்மறைச் சூழ்நிலைகளிலும், அதில் ஏதாவது நல்லது இருக்கிறதா என பார்ப்பதும், துன்பம் அல்லது கஷ்டத்தை வாய்ப்பாக ஏற்று முன்னேறி மற்றவர்களுக்கு உந்துசக்தியாக இருப்பதும் பலன் தரும்.
எதார்த்தத்தில், பெரும்பாலான பதின்பருவப் பிள்ளைகளுக்குத் தங்கள் மனச்சோர்வை, உணர்வெழுச்சியை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்தும் வழி தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவி என்னைச் சந்திக்க வந்திருந்தார். இறுக்கமான மனநிலையில் இருந்த அவர், தயங்கித் தயங்கிப் பேசினார். திடீரென, ‘என்னால முடியல சார். வீட்டுல அப்பாவும் அம்மாவும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்க. பள்ளிக்கூடத்திலயும் நிறைய வேலை கொடுக்கிறாங்க. அதனால…’ என்று தயங்கியவர், ‘என்னையே நான் காயப்படுத்திக்கிறேன்’ என்றார். நான் மாணவியின் கைகளைப் பார்த்தவுடன், ‘தொடையில சார்’ என்றார்.
தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்கிறவர்களில், உடலைக் கீறிக்கொள் கிறவர்கள்தான் உலகளவில் அதிகம் இருக்கிறார்கள். தற்கொலை செய்துகொள்வது இவர்களின் எண்ணம் இல்லையென்பதால் பட்டும் படாமலும்தான் ஆரம்பத்தில் காயப்படுத்திக்கொள்வார்கள். மனம் இலகுவாவதுபோலத் தோன்றுவதால் ஏற்படும் ‘மகிழ்ச்சி’யால் சில நாட்கள் கழித்து சற்றுக் கடுமையாகக் காயப்படுத்திக்கொள்வார்கள். அடுத்ததாக, அழுத்தமும் ஆழமும் அதிகரிக்கும். தங்களைக் காயப்படுத்திக்கொள்ளும்போது, அல்லது அடுத்த சில நிமிடங்களுக்கு மிகவும் ஆறுதலாக உணர்ந்தாலும் அவமானமும் குற்ற உணர்வும் தங்கள் மீதே வெறுப்பும் கொள்வார்கள்; பயப்படுவார்கள். குற்ற உணர்விலிருந்து வெளிவரவும், ஆறுதல் பெறவும் மறுபடியும் தங்களையே காயப்படுத்திக்கொள்வார்கள். காயத்தை ஆற விடாமல் செய்கிறவர்களும், மருந்து போட்டுக்கொள்வதைத் தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளும்போது, இறுக்கமான மனநிலை இலகுவாவதுபோலவும், எதிர்மறை எண்ணங்களும் உணர்வுகளும் குறைந்து உணர்வுச் சமநிலை அடைவதுபோலவும் தோன்றலாம். ஆனால், இது உண்மையுமல்ல, நிரந்தரமுமில்லை! இவ்வழிமுறைகள் ஆக்கபூர்வமானதாக இல்லாததால் மறுபடியும் மனச்சோர்வுக்கு இட்டுச்செல்வதுடன், அவர்களையும் அறியாமலேயே சில வேளைகளில் உயிரையும் பறித்துவிடுகிறது. யார்மீதும் நம்பிக்கையற்ற, நல்ல நண்பர்கள் இல்லாத இருளில் தள்ளிவிடுகிறது, உடலில் சில பகுதிகளில் நிரந்தரப் பலகீனம், நிரந்தரத் தழும்பு ஏற்படுகிறது, சதையையும் ரத்த நாளங்களையும் காயப்படுத்துகிறது, காயத்தில் தொற்று ஏற்படுகிறது.
காயப்படுத்திக்கொள்கிறவர்களைக் குற்ற வாளிகள்போல் தீர்ப்பிடுவதோ, தனியாக விட்டுவிடுவதோ கூடாது. அவர்களோடு கலந்துரையாடுவதும், பாசமான குடும்பச் சூழலும், உடனடியாக மனநல ஆலோசனையும் இருந்தால் அவர்களை நிச்சயம் காப்பாற்றிவிடலாம்.
மார்ச் 01: தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்வதற்கு எதிரான விழிப்புணர்வு நாள்
- சூ.ம.ஜெயசீலன், ‘வாழ்வைத் திறக்கும் சாவி: கொஞ்சம் வாழ்வியல் கொஞ்சம் உளவியல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT