Published : 27 Feb 2022 09:46 AM
Last Updated : 27 Feb 2022 09:46 AM
ஓவியர் ரோஹிணி மணி, சிற்ப வடிவமைப்பு, வீட்டு உள் அலங்காரம், புத்தக அட்டை வடிவமைப்பு என்று கலையை மையமாகக் கொண்ட பல துறைகளிலும் தடம்பதித்துவருகிறார். 2013 முதல் புத்தக அட்டை வடிவமைப்பில் ஈடுபட்டுவரும் இவர், இதுவரை 500-க்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு அட்டைப்படம் வரைந்திருக்கிறார்.
சிறு வயது முதலே ரோஹிணி மணிக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகம். வேறு துறைகளுக்குச் சென்றால் கலை என்பது பொழுதுபோக்காக மட்டுமே சுருங்கிவிடும் என்பதால், கலைப் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்து அதையே தன் தொழிலாகவும் ஆக்கிக்கொண்டார். எல்லா விதமான கலை வடிவங்களையும் கலைஞர்களையும் தன் வீடு கொண்டாடும் என்பதாலேயே எழுத்தாளர்களுடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார்.
‘2013-ல்தான் புத்தக அட்டையை வரையும் முதல் வாய்ப்பு கிடைத்தது. எந்தப் படைப்பாக இருந்தாலும் வாசித்துவிட்டுத்தான் வரையத் தொடங்குவேன். சில நேரம் புத்தக ஆசிரியர்களும் தங்களது எதிர்பார்ப்பைப் பகிர்ந்துகொள்வார்கள். புத்தகத்தின் ஆன்மாவைக் கூடுமானவரைக்கும் அட்டையில் வெளிப்படுத்திவிட நினைப்பேன்’ என்று சொல்லும் ரோஹிணி, தனக்குப் புலப்படாத விஷயங்களைத் தேடி அறிந்துகொண்ட பிறகே பணியைத் தொடங்குகிறார்.
தமிழே அழகு
சுகுமாரன் எழுதிய ‘பெருவலி’ நாவலுக்கு அட்டைப் படம் வரைவதற்கான தேடல் தன்னை வரலாற்றை நோக்கி இழுத்துச் சென்றதும் அப்படித்தான் என்கிறார். ‘ஷாஜகானைத் தெரிந்த அளவுக்கு நம்மில் பலருக்கும் அவருடைய மகள் ஜஹானாராவைத் தெரியாது. ஜஹானாராவைப் பற்றிய நாவலுக்கு அட்டைப்படம் வரைவதற்காக நானும் ஜஹானாராவைப் பற்றித் தேடி அறிந்துகொண்டேன். அரண்மனைக்குள் பெண்கள் நடத்தப்படும்விதம், அப்பா - மகள் உறவு, சூஃபி வாழ்க்கை என்று பலவற்றையும் தெரிந்துகொண்ட பிறகே அந்த அட்டையை வடிவமைக்க முடிந்தது’ என்கிறார் ரோஹிணி.
அந்தப் புத்தகத்தின் அட்டை, ‘பப்ளிஷிங் நெக்ஸ்ட்’ அமைப்பு சார்பில் 2018-ல் தேசிய விருது பெற்றது. அந்த ஆண்டு தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து புத்தகங்களில் மூன்று (ஏனையவை: ஜெயன் மைக்கேலின் ‘மூப்பர்’, டிஸ்கவரி பப்ளிஷர்ஸ் வெளியீடு; கவிஞர் இசையின் ‘பழைய யானைக் கடை’, காலச்சுவடு வெளியீடு) புத்தகங்கள் ரோஹிணி அட்டைப்படம் வரைந்தவை. புத்தகங்களின் தலைப்பை எந்த எழுத்துருவையும் பயன்படுத்தாமல் கையால் எழுதுகிறார். அதுவே அட்டைக்குத் தனித்த அழகைக் கொடுத்துவிடுகிறது. ‘கல்வெட்டு எழுத்துகள் தொடங்கி, தற்போது சீர்திருத்தம் அடைந்திருக்கும் நிலை வரை தமிழ் எழுத்துகள் வசீகர அழகுடையவை. ஒவ்வொரு எழுத்தும் அதற்கே உரிய வளைவோடும் நெளிவோடும் இருப்பதால் எழுத்தும் எனக்கு ஓவியமே’ என்கிறார்.
நிறங்களின் அரசியல்
ஓவியமோ அட்டைப்படமோ எதுவாக இருந்தாலும் சமரசம் செய்துகொண்டே சென்றால் கலை நீர்த்துப்போய்விடும் என்பது ரோஹிணியின் வாதம். படைப்புகளில் வெளிப்படுகிற அரசியலை சர்ரியலிசத் தன்மை கலந்து அட்டைப்படமாக வரைகிறார் இவர். மெலிந்த நீளமான கால்களைக் கொண்ட யானை, தலைகீழ் செம்பருத்தி, தலையில்லா உடல் என்பது போன்ற ஓவியங்களோடு ஆதிக்கத்தையும் ஒடுக்குதலையும் குறிக்கும் வாள், மீசை, அரிவாள், கம்பிவேலி போன்ற குறியீடுகளும் இவரது அட்டைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. படிமமாக வரைந்தால் வாசகருக்குப் புரியாது என்பது தவறான கருத்து என்று சொல்லும் ரோஹிணி, உருவப்படங்களில்கூட அரசியல் பேசலாம் என்கிறார். இவர் வரைந்த தற்படங்கள் அப்படியானவைதான்.
‘நிறம், உடை, முகவெட்டு போன்றவற்றை வைத்து மனிதர்களை உயர்த்தியும் தாழ்த்தியும் எடைபோடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நாம் காண்கிற படங்களில் தோன்றுகிற பெண்கள் எல்லாம் சிவந்த தோலுடன் இருப்பதாகத் தொடர்ந்து காட்சிப்படுத்தப்படுவதாலேயே கறுப்பு நிறம் மீது இழிவைச் சுமத்துகிறார்கள்.
கறுப்பு என்பது இயல்பு, இயற்கை. அதை ஏன் அவமானமாகக் கருத வேண்டும் என்று பேசினால், “எங்கள் மீது இரக்கப்படுங்கள், பரிவுகாட்டுங்கள்” என்று சொல்வதாகத்தான் பலரும் புரிந்துகொள்கிறார்கள். நாங்கள் இதுதான் இயல்பு என்கிறோம். ஆனால், இதற்காகத் தாழ்வுணர்வு கொள்ளாதீர்கள் என்று மற்றவர்கள் சொல்லிச் சொல்லியே கறுப்பை வெறுக்கச் செய்கிறார்கள். அதை மாற்றத்தானே கலை கையில் இருக்கிறது’ என்று புன்னகைக்கிறார் ரோஹிணி மணி. அதை உணர்த்தும் விதமாகத்தான் அட்டைப்படங்களில் அடர் வண்ணங்களுக்கே முக்கியத்துவம் தருகிறார்.
- தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment