Published : 27 Feb 2022 09:33 AM
Last Updated : 27 Feb 2022 09:33 AM

புத்தகத் திருவிழா 2022 | காலனிய காலத்தில் தமிழ்நாடு: பரந்து விரிந்த பல்பரிமாண வரலாறு

ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு தொடங்கும் இந்தியாவின் நவீன கால வரலாற்றில், இன்றைய ஆந்திரத்தின் தென்பகுதியையும் தமிழ்நாட்டின் வடபகுதியையும் உள்ளடக்கிய சோழ மண்டலக் கடற்கரைக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. இக்காலத்தில் துறைமுகங்கள் வணிக மையங்களாயின, அங்கு கோட்டைகள் எழுந்தன. வணிக எல்லையை விரித்தெடுப்பதில் ஐரோப்பியர்களுக்குa இடையே கடுமையாக வணிகப் போட்டிகளும் அதன் தொடர்ச்சியாகப் போர்களும் நடந்தன. இறுதியில், ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றார்கள் என்றாலும் போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோரைப் பற்றி நவீன கால வரலாற்றாய்வாளர்கள் விரிவாகப் பேசுவதில்லை. காரணம், வரலாற்று வரைவுக்கான சான்றுகளை ஆங்கிலம் வழியாக மட்டுமே பெறும் நிலை தொடர்வதுதான்.

வரலாற்று ஆய்வுச் சூழலில் நீடித்துவந்த இந்தத் தேக்கநிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர் எஸ்.ஜெயசீல ஸ்டீபன். இருபதுக்கும் மேற்பட்ட அவரது நூல்களிலிருந்து என்சிபிஎச் இதுவரை 9 நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. எஞ்சிய நூல்களும் அடுத்தடுத்து தமிழுக்கு வரவிருக்கின்றன. இந்த நூல்களைத் தவறவிட்டால், தென்னிந்தியாவின் நவீன வரலாறு குறித்த வாசிப்பு முழுமைபெறாது.

தனியொரு ஆய்வாளரால் இது எப்படிச் சாத்தியமானது என்பது வியப்புக்குரியது. ஆனால், அதற்குப் பின்னால் உள்ள அசாத்திய உழைப்பு மலைக்கவைக்கிறது. தமிழ், ஆங்கிலம் தவிர போர்த்துக்கீசியம், டச்சு, பிரெஞ்சு, டேனிஷ், ஜெர்மன் ஆகிய மொழிகளையும் கற்றவர் ஜெயசீல ஸ்டீபன். எனவே, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் மட்டுமின்றி போர்ச்சுக்கல், ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளின் ஆவணக் காப்பகங்களிலிருந்தும் தனது ஆய்வுக்கான சான்றுகளைத் திரட்டியுள்ளார். சோழமண்டலக் கடற்கரைப் பகுதிக்கு வந்த ஐரோப்பியப் பயணிகள், சமயப் பணியாளர்கள், வணிகர்கள், காலனிய நாடுகளின் அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோர் எழுதிய நூல்கள், குறிப்புகள் என்று இவர் மேற்குலக ஆவணக் காப்பகங்களில் தேடித் தேடிச் சேகரித்திருக்கும் வரலாற்று ஆதாரங்கள் பலதரப்பட்டவை. இவற்றோடு காலனிய அரசுகளின் ஆவணங்களும் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், இலக்கியங்களும் இவரது நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளன. அரிதிற் கிடைத்த ஒரு வரலாற்றுச் சான்றை மையமிட்டே தனது கட்டுரையையோ நூலையோ வடிவமைத்துக்கொள்கிறவர் அல்லர் அவர். அவரது ஒவ்வொரு நூலுக்குப் பின்னாலும் பல நூறு அரிய ஆவணங்கள் இருக்கின்றன.

ஜெயசீல ஸ்டீபனின் ஆய்வு எல்லை என்பது சோழ மண்டலக் கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதியில் கி.பி.1500 தொடங்கி 1900 வரையிலான காலகட்டமாகும். ‘சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும்: பொருளாதார, சமூக, அரசியல் அமைப்பு (கி.பி.1500 -1600)’ என்ற அவரது நூல், 16-ம் நூற்றாண்டில் விஜயநகர அரசின் கீழ் தமிழகத்தை ஆட்சிசெய்த நாயக்கக் குறுநில மன்னர்களின் ஆட்சிக் காலத்தைப் பற்றியும் போர்த்துக்கீசியர்களின் வருகை கடல் வணிகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களையும் பற்றியது. அவரது முனைவர் பட்ட ஆய்வேடு இது. வேளாண் உறவுகளையும் கைவினைப் பொருள் பொருளாதாரத்தையும், தமிழ்நாட்டில் கன்னடம், தெலுங்கு பேசியவர்களின் புதிய குடியேற்றங்களையும் பற்றிய விரிவான தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

‘காலனியத் தொடக்கக் காலம் (கி.பி.1500-1800)’ என்ற தலைப்பிலான அவரது புத்தகம், அப்போதிருந்த தீண்டாமை, சமூக விலக்கங்களைப் பற்றியும் கொல்லர்கள், தச்சர்கள், மீன்பிடிச் சமூகங்களைப் பற்றியும் அடிமை வணிக விரிவாக்கத்தைப் பற்றியும் பேசும் கட்டுரைகளை உள்ளடக்கியது. காலனியக் காலகட்டத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறாக இந்நூல் அமைந்துள்ளது. ‘காலனிய வளர்ச்சிக் காலம்: புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை’ என்ற நூல் மொரீஷஸ், மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஒப்பந்தக் கூலிகளாகச் சென்றவர்களைப் பற்றியும் மலேயாவில் தமிழ் வணிகர்கள், நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகள் ஆகியோரின் சமூக வாழ்க்கையைப் பற்றியும் விவரிக்கிறது.

‘நெசவாளர்களும் துணிவணிகர்களும்’ என்ற புத்தகம், தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியிலிருந்து போர்த்துக்கீசியர்கள், நடத்திய துணிவணிகத்தைப் பற்றியும் 16-18-ம் நூற்றாண்டுகளில் செட்டியார், முதலியார், பிள்ளை, மரக்காயர் ஆகியோர் ஆசியாவில் மேற்கொண்ட துணிவணிகத்தைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. தமிழ்நாட்டில் 81 வகைப்பட்ட துணிகளும் ஆடைகளும் உற்பத்தி செய்யப்பட்ட விவரங்களையும் அதன் காரணமாக கடல்சார் வணிகம் வளமுற்று விளங்கியதையும் ஆதாரங்களின் வழி எடுத்துக்காட்டுகிறது.

‘தமிழகக் கடல்சார் பொருளாதாரமும் போர்த்துக்கீசிய காலனியமயமாக்கமும்’ என்ற புத்தகம், ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பிருந்த தமிழர்களின் வணிக உலகத்தையும் அதில் அரசு மற்றும் தனியார் வர்த்தகத்தின் வாய்ப்புகளையும் பேசுகிறது. போர்த்துக்கீசியர்களின் வருகைக்குப் பிறகு கடல்சார் வணிகத்தில் ஏற்பட்ட தாக்கங்கள், பயன்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது. ‘பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை (1674-1793)’ என்ற நூலில் புதுச்சேரி நகரத்தின் தமிழ் வணிகர்கள், வலங்கை இடங்கையினரின் கலகங்கள், வெவ்வேறுபட்ட சமயத்தவர்களின் சமூக வாழ்க்கை, போர் அவலங்கள், இயற்கைப் பேரிடர்கள், உழைக்கும் மக்களின் வாழ்க்கை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

‘தமிழ் இலக்கியப் பயணம் 1543-1887: ஐரோப்பியர் மொழிபெயர்ப்புகளின் வழியே’ என்ற நூல் தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றுக்கு முக்கியமான பங்களிப்பு. லத்தீன், போர்த்துக்கீசியம், இத்தாலி, டச்சு, ஜெர்மன், ஆங்கில மொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து மேற்கண்ட ஐரோப்பிய மொழிகளுக்கும் நடந்த மொழிபெயர்ப்புகளைப் பற்றிய விவரங்களை இந்நூல் தொகுத்தளிக்கிறது. ஐரோப்பிய மொழிகளிலிருந்து தமிழுக்கு விவிலியம் தனித்தனியாக மொழிபெயர்க்கப்பட்டதையும் இந்த மொழிபெயர்ப்புகள் தமிழ் உரைநடையின் வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கங்களையும் ஆராய்கிறது. இதே காலகட்டத்தில் ஐரோப்பியர்களாலும் தமிழர்களாலும் சம்ஸ்கிருதம், மராத்தி, வங்க மொழி, தெலுங்கு ஆகிய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களின் விவரங்களும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

‘தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும், உழைப்பாளர் சமூக உண்மைநிலையும், சாதியும் (கி.பி.600-1565)’ நூலானது, அரசாங்கத்தின் வரிவசூல், கோயில்களுக்கும் மக்களுக்கும் இருந்த உறவு, கோயில்களிலும் மடங்களிலும் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த அடிமைகளின் வாழ்நாள் அனுபவங்கள் ஆகியவற்றை விவரிக்கிறது. தமிழ்நாட்டில் சமூகப் படிநிலையின் மேலடுக்கில் தங்களை வைத்துக்கொண்டிருக்கும் சாதிகள், தங்களுக்கான பெயர்களைச் சைவ மடங்களின் மதிப்பிற்குரிய பட்டங்களிலிருந்து தழுவிக்கொண்டதையும் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.

மிகச் சமீபத்தில் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஜெயசீல ஸ்டீபனின் புத்தகம், ‘தமிழக அடிமைகள், கூலியாட்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வியல் சூழல் (1621-1878)’ என்பதாகும். டச்சு கிழக்கிந்திய நிறுவனம் அடிமைகளை வாங்கி நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கொழும்பு, பாண்டன், ஜகார்த்தா மற்றும் மெலாகாவுக்கு அடிமை வணிகம் நடத்தியதைப் பற்றிய விரிவான தகவல்களை இந்தப் புத்தகம் அளிக்கிறது. தூதஞ்சல் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், வீட்டு வேலையாட்கள், சமையல்காரர்கள் போன்ற பலதரப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை எடுத்துரைக்கிறது. இங்கிலாந்தின் தொழிலாளர் சட்டங்கள் சென்னையில் அறிமுகமான காலகட்டத்தையும் குறிப்பிடுகிறது.

கடந்த ஏழாண்டுகளுக்குள் ஜெயசீல ஸ்டீபனின் 9 புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. என்சிபிஎச் மேலாண் இயக்குநர் சண்முகம் சரவணன் முன்னெடுத்துவரும் தொடர்முயற்சியின் நற்பயன் இது. ரகு அந்தோணி, கி.இளங்கோவன், ந.அதியமான், க.ஐயப்பன், சு.முத்துக்குமரவேல், அ.சாமிக்கண்ணு, எஸ்.தோதாத்ரி ஆகிய மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்புகள் பாராட்டுக்குரியவை. இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படாத புத்தகங்களின் உள்ளடக்கம் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் தொடர்ந்து அறிமுகக் கட்டுரைகளை எழுதிவருகிறார். ஜெயசீல ஸ்டீபனின் புத்தகங்கள் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியான மதிப்பீடுகளை ‘தமிழ் தமிழர் தமிழக வரலாற்று வரைவு’ என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்துள்ளார் பா.இரவிக்குமார். அவரது முன்னுரையின் இறுதி வாக்கியம் இது: ‘நம் காலத்தின் மகத்தான வரலாற்றறிஞர் எஸ்.ஜெயசீல ஸ்டீபன்’.

- தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x