Published : 21 Feb 2022 12:29 PM
Last Updated : 21 Feb 2022 12:29 PM

புத்தகத் திருவிழா 2022 | புதிய தலைமுறை நாவலாசிரியர்கள்

தமிழ்ச் சூழலில் புனைகதைகளை எழுதுவதற்கான வெளியும் அதனை வெளியிடுவதற்கான வாய்ப்புகளும் தற்போது கூடியிருக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கடந்த சில ஆண்டுகளில் நம்பிக்கையளிக்கும் கதைஞர்கள் பலர் உருவாகியிருக்கின்றனர். நவீன இலக்கியத்துக்கு அவர்கள் கையளித்த நாவல்கள் குறித்து உரையாடுவது முக்கியம்.

எதார்த்தத்தின் மீது அதீதக் கற்பனையை ஊடாட விட்டுப் புனைவில் ஒரு புதிர் விளையாட்டை நிகழ்த்திக்கொண்டிருப்பவர் தூயன். கணிதச் சமன்பாடுகளையும் தத்துவங்களையும் கதாபாத்திரங்களின் நகல்களாக்கி உரையாடுவதுதான் தூயனின் புனைவுப் பாணி. அவ்வகையில், இவரது ‘கதீட்ரல்’ நாவலில், மேலைச் சிந்தனைகளையும் இந்தியத் தத்துவத்தையும் நீட்சன், அவந்திகை என்ற கதாபாத்திரங்களினூடாக உரையாடலுக்கு உட்படுத்துகிறார். உரையாடலில் வாசிப்பவர்களையும் பங்கேற்கச் செய்கிறது தூயனின் மாய மொழி. ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ என்ற நாவலை எழுதிய மயிலன் ஜி.சின்னப்பனும் கவனிக்கத்தக்கவர். ஒருவன் தற்கொலை செய்துகொண்டதற்குப் பின்புள்ள காரணிகளை உளப்பகுப்பாய்வு முறையில் எழுதியிருக்கிறார். மருத்துவத் துறை சார்ந்து நுண்ணுணர்வுடன் எழுதப்பட்ட நாவல்.

மேலை இலக்கியக் கோட்பாடுகளைத் தன் புதினங்களில் பரிசோதித்துக்கொண்டே இருக்கும் கிருஷ்ணமூர்த்தியின் ‘பாகன்’ என்ற நாவல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. தந்தை மகனுக்கும் மகன் தந்தைக்கும் பாகனாகும் தருணங்களும் குடும்ப அமைப்புக்குள் நிகழும் அடையாளச் சிக்கல்களும்தான் நாவல். சுனில் கிருஷ்ணன் எழுதியுள்ள ‘நீலகண்டம்’ நாவலில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நினைவுகளில் விரியும் குழந்தைகளின் அக உலகம்தான் கதை. நம் உயிர் பயனற்ற பொருளாக எப்போது மாறுகிறது என்ற கேள்வியை வாசகர்கள் அடைவதுதான் இந்நாவலின் சிறப்பு.

மானுட உறவுச் சிக்கல்களுக்குப் பின்னிருக்கும் உளவியலைக் காத்திரமாகச் சொன்ன நாவல் சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்.’ நவீன வாழ்வின் போதாமைகளையும் அதன் இறுக்கங்களையும் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் இளம் தலைமுறைக்குப் பின்னிருந்து இயங்கும் புனைவுத் தன்மைக்கான காரணங்களையும் நாவல் தேட முயன்றிருக்கிறது. வெளிநாட்டின்மீதான மோகம், அதனால் இன்றைய தலைமுறையினர் அடையும் பதற்றம் என விரியும் நாவல் அரிசங்கரின் ‘பாரிஸ்.’ இவரது முந்தைய நாவல் ‘உண்மைகள் பொய்கள் கற்பனைகள்’.

வெவ்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் இக்காலத்தில் அதிக அளவில் நாவல் எழுத வந்திருப்பது ஆரோக்கியமான போக்கு. பல நாவல்கள் மொழிவளம் இல்லாமல் தட்டையாகவும் சில நாவல்கள் மொழிப் பிரக்ஞையுடன் புதிய கலைச்சொற்களைத் தமிழுக்குக் கொண்டுசேர்த்திருக்கும் விதத்தில் கவனத்துக்குரியதாகவும் இருக்கின்றன. அவ்வகையில், கார்த்திக் பாலசுப்ரமணியம் ஐ.டி. துறை சார்ந்து எழுதியுள்ள ‘நட்சத்திரவாசிகள்’ குறிப்பிடத்தக்க நாவல்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் பணி நிச்சயமின்மையும் குடும்ப அமைப்புக்குள் அப்பணி நிகழ்த்தியிருக்கும் நெருக்கடிகளும் புனைவாகியிருக்கின்றன. மூன்று அரபுத் தொல்குடிச் சமூகங்கள் மீது மதங்கள் நுழைவதன் நுட்பத்தைக் கவனப்படுத்தி, கனகராஜ் பாலசுப்ரமணியம் எழுதியுள்ள ‘அல்கொஸாமா’ என்ற நாவலும் முக்கியமானது. ஒவ்வொரு சமூகமும் உருவாக்கி வைத்துள்ள இனப் பெருமையின் கற்பிதங்கள்தாம் இந்நாவலின் மையம்.

நவீனச் சமூகத்திலும் எந்த நிலமும் பெண்களின் இருப்புக்கு உகந்ததாக இல்லை என்பதைத் தன் வாழ்வனுபவங்களினூடாக பிரியா விஜயராகவன் எழுதியிருக்கும் நாவல் ‘அற்றவைகளால் நிரம்பியவள்.’ குடும்பம் என்னும் அமைப்புக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ள விரும்பாமல், தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேர்ந்துகொள்ளும் ஒரு பெண்ணின் அக உலகத்தை எழுதிய நாவல் பா.கண்மணியின் ‘இடபம்’. பங்குச் சந்தை குறித்துத் துல்லியமான தகவல்களுடன் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. இடபம் என்பது பங்குச் சந்தைக்கும் நாவலில் இடம்பெறும் பெண்ணுக்கும் குறியீடு.

ஏதேன் தோட்டத்து ஆப்பிள் என்ற தொன்மத்தைக் கொண்டு காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனையை எழுதிப்பார்த்த நாவல் சி.சரவண கார்த்திகேயனின் ‘ஆப்பிளுக்கு முன்.’ இவர் ‘கன்னித் தீவு’ என்றொரு நாவலும் எழுதியிருக்கிறார். சாதி குறித்த வன்மம் குழந்தைகளின் மனங்களில் பெற்றோராலும் சமூகத்தாலும் எப்படிக் கலக்கப்படுகின்றன என்பது குறித்து உரையாடும் அருண்பாண்டியன் மனோகரனின் ‘அணங்கு’ நாவலும் முக்கியமானது. அபாரமான நகைச்சுவையைத் தன் புனைவுகளின் பாணியாக்கி எழுதிவரும் பிரபு தர்மராஜின் ‘கசவாளி காவியம்’, ‘கோலப்பனின் அடவுகள்’ ஆகிய நாவல்களையும் குறிப்பிட வேண்டும்.

இவர் ‘ராணி இல்லம்’ என்றொரு த்ரில்லர் நாவலையும் எழுதியிருக்கிறார். அசுர வேகத்தில் அடுத்தடுத்து எழுதிக்கொண்டிருக்கும் தரணி ராசேந்திரன் (நானும் என் பூனைக்குட்டிகளும், லிபரேட்டுகள்-I,II, சாண்ட்விச்), அய்யனார் விஷ்வநாத் (பழி, ஹிப்பி, புதுவையில் ஒரு மழைக்காலம்), நர்சிம் (சார்மினார் எக்ஸ்பிரஸ், அலப்பறை, குற்றப்பொய்கை) ஆகியோரும் குறிப்பிடத்தக்க நாவல்களை எழுதியுள்ளனர். நம்பிக்கை தரும் நாவலாசிரியர்கள் இவர்களிலிருந்து உருவாவதற்கான தொடக்கப் புள்ளிகள் இவர்களது புனைவுகளில் வெளிப்பட்டிருக்கின்றன.

- சுப்பிரமணி இரமேஷ், ‘தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: ramesh5480@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x