Published : 17 Feb 2022 12:15 PM
Last Updated : 17 Feb 2022 12:15 PM
தமிழின் செவ்விலக்கியங்களுக்கு இணையானவை உலக மொழிகளில் மிகக் குறைவே. நவீனத் தமிழ் இலக்கியத்திலும் உலக எழுத்தாளர்களுக்கு இணையான படைப்பாளிகள் தோன்றியிருக்கிறார்கள். கணிசமான தமிழ்ப் படைப்புகள் ஆங்கிலத்துக்குச் சென்றுகொண்டும் இருக்கின்றன. ஆனாலும், உலக அரங்கில் தமிழ்ப் படைப்புகள் தொடர்ந்து புறக்கணிப்புக்குள்ளாகின்றன. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தற்போதைய முன்னெடுப்பு அந்த நிலையைச் சற்றே மாற்றக்கூடும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
தமிழின் முக்கியமான படைப்புகளை இனம்கண்டு, அவற்றை ஆங்கிலத்துக்குக் கொண்டுசெல்வதுதான் ‘Taking Tamil to the World’ (தமிழை உலக அரங்குக்குக் கொண்டுசெல்லுதல்) என்ற திட்டத்தின் தோற்றுவாய். அப்போது பள்ளிக்கல்வித் துறைச் செயலாளராக இருந்த த.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.ஸின் வழிகாட்டுதலில் இந்தத் திட்டம் உருவானது. இதற்காக, ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., ச.மாடசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், ஆ.இரா.வேங்கடாசலபதி, பத்ரி சேஷாத்ரி உள்ளிட்ட எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்று 2017-ல் அமைக்கப்பட்டது. இவர்கள் ஒன்றுகூடிப் பல பரிந்துரைகளை முன்வைத்தனர்.
இதைத் தொடர்ந்து படைப்புகளும் மொழிபெயர்ப்பாளர்களும் இனம் காணப்பட்டும் வேலைகள் சூடுபிடித்தன. முதல் கட்டமாக திருவள்ளுவரின் ‘Kural’ (திருக்குறள்), சி.சு.செல்லப்பாவின் ‘Arena’ (வாடிவாசல்), தி.ஜானகிராமனின் ‘The Crimson Hibiscus (செம்பருத்தி), நீல.பத்மநாபனின் ‘Generations’ (தலைமுறைகள்), கி.ரா. தொகுத்த ‘Along With the Sun (கரிசல் கதைகள்), ராஜம் கிருஷ்ணனின் ‘Lamps in the Whirlpool (சுழலில் மிதக்கும் தீபங்கள்) உள்ளிட்ட ஆறு நூல்கள் வெளியிடப்பட்டன.
தற்போது, இளங்கோவடிகளின் ‘The Tale of an Anklet’ (சிலப்பதிகாரம்), தலித் எழுத்தாளர் களுடைய சிறுகதைகளின் மொழிபெயர்ப்பான ‘In Defiance: Our Stories’, ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ‘Putham House’ (புத்தம் வீடு), எஸ்.ராமகிருஷ்ணனின் ‘Katha Vilasam’ (கதா விலாசம்), உ.வே.சா.வின் ‘Essays of U Ve Sa’ (உ.வே.சா.கட்டுரைகள்), தோப்பில் முஹம்மது மீரானின் ‘Meeran’s Stories’ (தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்), ஆகிய ஆறு நூல்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
45-வது சென்னை புத்தகக்காட்சியைத் தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘திசைதோறும் திராவிடம்’ என்ற திட்டத்தின் கீழ் மேற்கண்ட ஆறு நூல்களையும் நேற்று வெளியிட்டார். கூடவே, மொழியியல் அறிஞர் பா.ரா.சுப்பிரமணியன் தமிழில் மொழிபெயர்த்த கால்டுவெல்லின் ‘எ கம்பேரடிவ் கிராமர் ஆப் ட்ராவிடியன் லாங்வேஜஸ்’ நூலையும் அவர் வெளியிட்டார் . இந்நூல், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டதாகும்.
இத்திட்டத்தின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் (மொழிபெயர்ப்புகளுக்கான) துணை இயக்குநருமான சங்கர சரவணன் இந்தத் திட்டத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசினார். “முதலில் ஆங்கிலத்தில்தான் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தோம்.
இப்போது இந்தத் திட்டம் ‘திசைதோறும் திராவிடம்’ என்று பெயர் மாற்றம் பெற்று திராவிட மொழிகளிலும் தமிழ்ப் படைப்புகள் மொழிபெயர்க்கப்படவிருக்கின்றன. அந்த மொழிகளிலிருந்தும் தமிழுக்குப் படைப்புகள் வரவிருப்பது கூடுதல் சிறப்பு. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ மலையாளத்துக்குச் செல்கிறது. பழ.அதியமானின் ‘வைக்கம் போராட்டம்’ நூலை மலையாளத்துக்குக் கொண்டுசெல்கிறோம்.
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். மு.கருணாநிதியின் ‘திருக்குறள் உரை', சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ போன்றவை தெலுங்குக்குச் செல்கின்றன. கி.ரா.வின் ‘கரிசல் கதைகள்’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை கி.ரா.வுக்குக் கொண்டுபோய்க் கொடுத்தோம். ரொம்பவும் சந்தோஷப்பட்டார். அவர் உயிரோடு இருந்தபோதே இது சாத்தியமானது குறித்து எங்களுக்கும் மகிழ்ச்சி. ஜானகிராமன் நூற்றாண்டுக்கு அவருடைய ‘செம்பருத்தி’ கொண்டுவந்தோம்.
‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தின் கீழ் ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘The Province of the Book’ நூலும் வெளியிடப்படுகிறது. அண்ணா பற்றி ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்ட ‘மாபெரும் தமிழ்க் கனவு’ ஆங்கிலத்துக்குப் போகிறது என்பது வாசகர்களுக்கு இனிய ஆச்சரியமாக இருக்கும். இதனால், இந்திய அளவில் அண்ணா சென்றுசேர்வார் என்று நம்பலாம்” என்றார் சங்கர சரவணன். அரசு தொடர்பான ஒரு வேலையோ திட்டமோ என்றால் ஆயிரத்தெட்டு முட்டுக்கட்டைகள் இருக்குமே என்று கேட்டதற்கு “இந்தத் திட்டத்துக்கு அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். முந்தைய அரசும் முழு ஒத்துழைப்பு கொடுத்தது, தற்போதைய அரசும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது. இதில் த.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.ஸின் பங்களிப்பு முக்கியமானது” என்றார் சங்கர சரவணன்.
இன்னொரு திட்டம், ‘முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்’. மருத்துவம், பொறியியல், சட்டம், கலைக்கல்வி உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கான துறைசார்ந்த நூல்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படவிருக்கின்றன. இதற்காக இந்திய அளவிலும் உலக அளவிலும் 37 பதிப்பகங்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. மூன்றாவது திட்டம் சிறாருக்கானது. இந்தத் திட்டத்தின் பெயர் ‘இளந்தளிர் இலக்கியத் திட்டம்’.
வயதுக்கேற்ப வகை பிரிக்கப்பட்டு, சிறார் எழுத்தாளர்களைக் கொண்டு சிறார் நூல்கள் எழுதப்படும். இந்தியாவின் முக்கியமான எடிட்டர்களுள் ஒருவரான, ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்ஸிட்டி பிரெஸ்ஸின் (OUP) மினி கிருஷ்ணன் ‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தின் ஒருங்கிணைப்பு எடிட்டராக இருப்பது இந்தத் திட்டத்துக்குப் பெரும் பலம். ‘‘சமீபத்திய கீழடி அகழாய்வுகள், தமிழர்கள் மற்றவர்கள் நினைத்ததைவிடத் தொன்மையான ஒரு பண்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் என்பதை உலகுக்குக் காட்டின.
முதன்முதலில் அச்சிடப்பட்ட இந்திய மொழி தமிழ் என்பதும் அந்த நூல் ஒரு மொழிபெயர்ப்பு என்பதும் கூடுதல் சிறப்பு. அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய திட்டத்தை நான் பார்க்கிறேன். இந்த மொழிபெயர்ப்புகளுக்கு இரண்டு நெறிமுறைகள் எங்கள் குழுவை வழிநடத்தின: படைப்புகளின் இலக்கியச் சிறப்பு, தங்கள் அனுபவங்களுக்கும் புரிதலுக்கும் வெளியே உள்ள விஷயங்களை அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கேற்ற வகையில் சமூகப் பொருத்தப்பாடு கொண்ட கருப்பொருள்கள். அதிகம் விற்கும் புத்தகங்கள் என்ற அடையாளத்தைவிட அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்ற அடையாளத்தை இந்தப் புத்தகங்களுக்கு ஏற்படுத்த நினைத்தோம். தமிழ் தனக்கேயுரிய படைப்பு சாத்தியங்களையும் இந்த உலகம் குறித்த புரிதலையும் கொண்டிருக்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்பானது இந்த இரண்டையும் ஒருங்கே கொண்டுவருகிறது” என்கிறார் மினி கிருஷ்ணன்.
புத்தகக்காட்சியில் ‘தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக’த்தின் அரங்கில் இதுவரையிலான மொழிபெயர்ப்பு நூல்கள் கிடைக்கும். திசைதோறும் தமிழ் செல்லட்டும்... உலகின் பார்வை தமிழ் மீதான வியப்பில் விரியட்டும்!
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT