Published : 10 Feb 2022 06:18 AM
Last Updated : 10 Feb 2022 06:18 AM
உத்தர பிரதேசம் 403 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. அதன் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில், அம்மாநில மேற்குப் பகுதியின் 11 மாவட்டங்களின் 58 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. மீதம் உள்ள 9 மாவட்டங்களின் 55 தொகுதிகளுக்கு இரண்டாவதுகட்டமாக பிப்ரவரி 14-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாட்டில் முதன்முறையாகப் பிரச்சாரக் கூட்டங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் இல்லாத முதல் தேர்தலை இந்த 113 தொகுதிகள் சந்திக்கின்றன. இவை அனைத்துமே முஸ்லிம்களும், ஜாட் சமூகத்தின் விவசாயிகளும் அதிகம் வாழும் தொகுதிகள்.
மேற்குப் பகுதியில் அதிகபட்சமாக முஸ்லிம்கள் 32 சதவீதமாகவும் ஜாட் சமூகத்தினர் 22 சதவீதமாகவும் உள்ளனர். கடந்த 2017 தேர்தலில், இந்த மேற்குப் பகுதியின் 113 தொகுதிகளில் 92 தொகுதிகள் பாஜகவின் வசமாயின. இதற்கு அப்போது வீசிய பிரதமர் மோடி அலையும், முஸாஃபர் நகர் மதக் கலவரமும் காரணமாகின.மதக் கலவரத்தால் ஜாட் சமூகத்தின் இந்துக்களும் முஸ்லிம்களும் பிரிந்தது பாஜகவுக்குச் சாதகமானது. ஆனால், இந்த முறை தேர்தலில் டெல்லியின் விவசாயப் போராட்டத்தால் ஜாட் சமூகமும் முஸ்லிம்களும் மீண்டும் ஒன்றாகிவிட்டனர். இம்மாவட்டங்களில் அதிகம் வசிக்கும் ஜாட் சமூகத்தினரில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள்.
இதனால், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களை எதிர்த்த ஒரு வருடத்துக்கும் மேலான போராட்டத்தின் தாக்கம் மேற்குப் பகுதியில் அதிகமாக இருக்கிறது. மூன்று சட்டங்களும் பிரதமர் மோடியால் திரும்பப் பெறப்பட்டன. இப்போராட்டத்தின் முக்கிய முகமான பாரதிய கிஸான் சங்கத்தின் ராகேஷ் திகாய்த் முஸாஃபர்நகரைச் சேர்ந்தவர். இவர் மேற்குப் பகுதியில் முஸாஃபர்நகரிலும் மீரட்டிலும் மகா பஞ்சாயத்துகள் நடத்தினார். இதில் எழுந்த போராட்டக் குரல்கள் ஜாட் சமூகத்தினரை மீண்டும் ஒன்றிணைத்தன. இதுதான் தற்போது உ.பி.யில் ஆளும் பாஜகவுக்குப் பெரும் சவாலாகிவிட்டது.
ஏற்கெனவே, இங்குள்ள விவசாயிகளின் முக்கியப் பயிரான கரும்புக்கு உ.பி. அரசு அளிக்கும் தொகை நிலுவையில் உள்ளது. கடந்த 2017 தேர்தல் அறிக்கையில் பாஜக அடுத்த 14 நாட்களுக்குள் கரும்புக்கான தொகை செலுத்தப்படும் என உறுதியளித்தது. ஆனால், இப்பிரச்சினை இன்னும்கூடத் தொடர்வது பாஜகவுக்கு எதிராகிவிட்டது. மூடப்பட்ட சில கரும்பு ஆலைகளை அரசு திறந்தும் பலன் கிடைக்கவில்லை. இதனால், முஸாஃபர்நகரின் ஒரு தொகுதியில் மூன்றாவது முறை போட்டியிடும் கரும்புத் துறை அமைச்சர் ராணா இம்முறை வெற்றிபெறுவது சிக்கலாகிவிட்டது.
இதுபோன்ற காரணங்களால், பாஜக தனது முதல்கட்டப் பிரச்சாரத்திலேயே இந்துத்துவக் கொள்கையை முன்னிறுத்தத் தொடங்கிவிட்டது. மேற்குப் பகுதியின் கைரானா தொகுதியில் முஸ்லிம்களின் மக்கள்தொகையானது பாதிக்கும் அதிகம். இதனால், கைரானாவில் இந்துக்கள் குடும்பத்துடன் வெளியேற்றப்படுவதாகக் கடந்த தேர்தலில் ஒரு புகார் கிளம்பியது. அதன் பிறகு அடங்கிப்போன பிரச்சினையை நினைவுபடுத்தும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது முதல் நேரடிப் பிரச்சாரத்தை கைரானாவிலிருந்து தொடங்கினார். முதல்வர் யோகி ஆதித்யநாத், இப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட முறை வந்து சென்றார்.
பாஜகவின் மதவாத அரசியலை முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பல வகைகளில் சமாளிக்க முயல்கிறார். இதற்கு உதவியாகத் தனது முக்கியக் கூட்டணிக் கட்சியாக ராஷ்ட்ரிய லோக் தளத்தை (ஆர்எல்டி) சேர்த்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் அஜித்சிங்கால் தொடங்கப்பட்ட இக்கட்சி, ஜாட் சமூகத்தின் ஆதரவு பெற்றது. அவர் கரோனா இரண்டாவது அலையில் தொற்றுக்குள்ளாகி மறைந்ததால், அஜித்சிங்கின் மகன் ஜெயந்த் சவுத்ரி இப்போது அக்கட்சியின் தலைவராக உள்ளார். கூட்டணியின் 32 தொகுதிகளைப் பெற்ற ஆர்எல்டியிடமிருந்து பிரதமர் மோடி அலையால் ஜாட்கள் 2014 மக்களவைத் தேர்தலில் பிரிந்தனர். விவசாயப் போராட்டத்துக்குப் பின் மீண்டும் ஆர்எல்டியிடம் ஜாட்கள் வரத் தொடங்கிவிட்டனர். இதை ஆமோதிக்கும் வகையில் பாஜகவின் முக்கியத் தலைவர் அமித்ஷா விடுத்த அழைப்பை ஜெயந்த் ஏற்கவில்லை.
உ.பி.யின் ஜாட்கள் தொடக்கம் முதல் சமாஜ்வாதியை நேரடியாக ஆதரிக்காதவர்கள். அதனால், இதைச் சமாளிக்க அகிலேஷ், ஆர்எல்டியின் சின்னத்தில் சமாஜ்வாதியின் எட்டு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். பாஜகவின் மதவாத அரசியலை எதிர்க்க சமாஜ்வாதிக் கூட்டணியில் இந்த முறை ஒரு புதிய உத்தியும் கையாளப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஒன்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களால் வாக்குகள் சிதறி பாஜக வெல்லும் சூழல் உ.பி.யில் அதிகம். இதைச் சமாளிக்க முஸாஃபர்நகர், ஷாம்லி உள்ளிட்ட பல தொகுதிகளில் சமாஜ்வாதி, வழக்கத்துக்கு மாறாக முஸ்லிம்களுக்குப் பதிலாக இந்துக்களை வேட்பாளராக்கிவிட்டது. மற்ற எதிர்க்கட்சிகளான காங்கிரஸும் பகுஜன் சமாஜும் முஸ்லிம் வேட்பாளர்களையே அத்தொகுதிகளில் போட்டியிட வைத்துள்ளன.
உ.பி.யின் மேற்குப் பகுதியில் 18% உள்ள பட்டியலின வாக்காளர்கள், இந்த முறை பகுஜன் சமாஜ், பாஜக, சமாஜ்வாதி மற்றும் பிரியங்காவால் காங்கிரஸுக்கும் இடையே பிரியும் சூழல் தெரிகிறது. மேற்குப் பகுதியின் அலிகர், ஆக்ரா, புலந்த்ஷெஹர், ஹாபூர், மீரட், சஹரான்பூர், ராம்பூர், பிஜ்னோர், பரேலி, அம்ரோஹா, ஷாஜஹான்பூர், முராதாபாத் போன்ற மாவட்டங்களில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம். இவர்களை இழுக்கும் சமாஜ்வாதியின் நிறுவனர்களில் ஒருவரான ஆஸம்கான், இரண்டு வருடங்களாகச் சிறையில் உள்ளார். தேர்தலில் போட்டியும் சிறைப் பறவையாகவே தொடர்கிறது. முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்க அசதுதீன் ஒவைஸியின் அகில இந்திய இத்தாஹதுல் முஸ்லிமின் கட்சி முனைப்புக் காட்டுகிறது. இது பாஜகவுக்குச் சாதகமாக மாறும் சூழல் உள்ளது.
முதல்கட்டப் பிரச்சாரம் முடியும் நாள் காலையில், பாஜக தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மதுராவின் கிருஷ்ண ஜென்மபூமி விவகாரம், லவ் ஜிகாதுக்கு 10 ஆண்டுகள் சிறையுடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் போன்ற இந்துத்துவ அறிவிப்புகளுடன் பல இலவச அறிவிப்புகளை பாஜக வெளியிட்டுள்ளது. இதை மிஞ்சுவதற்குக் காத்திருந்த சமாஜ்வாதியும் மாலையில் தன் அறிக்கையில் கூடுதலான அறிவிப்புகளை அளித்துள்ளது.
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, ஆண்ட்ராய்டு கைபேசி, பெண்களுக்கு இருசக்கர வாகனம், விவசாயிகளுக்கு மின்சாரம், ஏழைகளுக்கு மலிவு விலை உணவு உள்ளிட்ட பல இலவசங்களை இரண்டு கட்சிகளுமே அளிப்பதாகக் கூறியுள்ளன.இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதியும் இடம்பெற்றுள்ளது. ஏற்கெனவே, பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் சரிநிகர் போட்டி உருவாகிவிட்ட நிலையில், இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளால் உ.பி.வாசிகளின் சாதி, மத அரசியலை வென்றுவிட முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
- ஆர்.ஷபிமுன்னா,தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT