Last Updated : 09 Feb, 2022 06:02 AM

1  

Published : 09 Feb 2022 06:02 AM
Last Updated : 09 Feb 2022 06:02 AM

காவிரி நெல்லுக்குக் கொள்முதல் தேவை: வல்முதல் எதற்கு?

காவிரிப் படுகை இந்த ஆண்டும் வானம் பொழிந்து விளைந்துள்ளது. விளைந்த நெல்லை நுகர்பொருள் வாணிபக் கழகக் கொள்முதல் மையத்தில் விற்கலாம். அங்கே சிப்பத்துக்கு முப்பது ரூபாய் கொடுத்துக் காவிரி நெல்லை விவசாயிகள் செல்லுபடியாக்க வேண்டும். முப்பது என்பது இடம், காலம் பொறுத்துக் கூடுமே தவிரக் குறையாது.

புதிய சொற்களைச் செய்வதில் எனக்கு ஆர்வமில்லை. இருந்தாலும், விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாகப் பணம் பெறுவதால் இந்த வகைக் கொள்முதலுக்கு ‘வல்முதல்’ என்பது பொருந்தும்போல் தெரிகிறது. நெல்வளத்தோடு சொல்வளமும் பெருகினால் அதை வேண்டாம் என்றா சொல்வோம்?

அமர வசனம்

திரைப்பட வசனங்களில் சில அமரத்துவம் வாய்ந்தவை. எப்போதோ பேசிய வசனம் என்றாலும் இப்போதும் கச்சிதமாகப் பொருந்திக்கொள்ளும். அல்லது, மனித குலத்தின் வரலாறு நின்ற இடத்திலேதான் நிற்கிறது என்பதாகக்கூட இருக்கலாம். துரையே என்றாலும் ஜாக்சனைச் சற்று கீழேவைத்து வீரபாண்டியக் கட்டபொம்மன், “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கு ஏன் தர வேண்டும் வரி?” என்று கேட்பார். அது காலனிய காலம். ஜனநாயகக் குடிமக்கள் அதிகார மையங்களைப் பார்த்து அப்படிப் பேச முடியுமா? வெட்டாற்றங்கரை வேங்கட கவிபோல், “இது தகுமோ? இது முறையோ, தருமம்தானோ?” என்று வேண்டுமானால் இறைஞ்சலாம்.

இப்போது நில வரியாகச் சொல்லத்தக்கது எதுவும் இல்லை. ஆனால், நெல் விற்கும்போது நாற்பது கிலோ சிப்பத்துக்கு முப்பது ரூபாய் வீதம் ஏக்கருக்கு ரூ.1,350 வரை கொள்முதல் நிலையத்துக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். சிப்பத்துக்கு விற்றுமுதல் ரூ.806 என்றால், உற்பத்தி வரி இப்போது வரை 3.72% என்று வைத்துக்கொள்ள வேண்டும். ‘காவிரி நெல்லுக்குக் கலால் வரியா?’ என்று அசரக் கூடாது. நாற்பது வேலி கிராமமானால் அது ரூபாய் மூன்று லட்சத்து அறுபதினாயிரம் கொடுக்கக்கூடும். காவிரிக் கரை கிராமங்கள் ஒன்றுவிடாமல் விளைந்ததில் ஒரு கிலோ நெல் விடுபடாமல் இவ்வாறு கொடுக்கும். அறுபது வேலி, நூறு வேலிக் கிராமங்கள் என்றால் அததற்குத் தக்க. பழைய மதிப்பில் காவிரிப் படுகை பதின்மூன்றேகால் லட்சம் ஏக்கர். கணக்குக்காக அல்ல, உங்களுக்குப் பிடிபடட்டும் என்பதற்காக.

சொல்லின் மூலப் பொருளில் சொல்வதானால் இதுதான் புரட்சி. கீழ் மேலாகும் வட்டச் சுழற்சி. நிலவரி பூஜ்யம் என்பதிலிருந்து விளையும் ஒவ்வொரு கிலோவுக்கும் எழுபத்தைந்து பைசா என்ற உச்சிக்கு வருவது. ஒரு வகை பசுமைப் புரட்சி என்று வைத்துக்கொள்ளுங்களேன்! விளைச்சல் அதிகம் உற்பத்தியும் அதிகம் என்றால், அந்த வீதத்துக்கு விவசாயிகள் கொடுக்க வேண்டிய பணமும் தன்னால் அதிகரிக்கும். இது அரசுக்குப் போகாது என்பது தெரிந்ததுதான். அங்கேயும் போகாமல் விவசாயிகளிடமும் தங்காமல் இடையில் எங்கேயோ சென்றுவிடும். இடைத்தரகர்களால் விவசாயிகளுக்கு இழப்பு வரக் கூடாது என்பதற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தோற்றுவிடுகிறது.

பொறுப்பு முகவருக்கா, முதலாளிக்கா?

இந்திய உணவுக் கழகத்தின் முகவராகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்கிறது. தன் முகவரோ ஊழியர்களோ தவறுசெய்தால், மேலிருக்கும் முதலாளி சாதாரணமாக அதற்குப் பொறுப்பு. தான் கொடுத்த அதிகாரத்தைத் தாண்டி அவர்கள் தாங்களாகவே செய்யும் தவறுகள் இவை என்று இந்திய உணவுக் கழகம் சமாதானம் சொல்லுமோ?

மாவட்ட நிர்வாகமும், ‘தவறு நடந்தால் தெரிவியுங்கள்’ என்று கைபேசி எண் ஒன்றைத் தரும். அதாவது, நடக்கிறது என்பதை விவசாயிகள் ருசுப்பிக்க வேண்டும். சென்ற அக்டோபரில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் கொள்முதல் நிலையங்களில் நிகழும் முறைகேடுகளை விரிவாகவே எழுதியது. மாவட்ட ஆட்சியர்களின் குறைதீர் கூட்டங்களில் விவசாயிகளும் குமுறுகிறார்கள். இந்தச் சூழலில், நடக்கிறது என்று விவசாயிகள் ருசுப்பிப்பதற்குப் பதிலாக நடக்கவில்லை என்று நிர்வாகம்தான் ருசுப்பிக்க வேண்டும். இப்படிச் சொல்லும் அளவுக்கு இந்திய நியாயவியல் முன்னேறியிருக்கிறதா என்று விவசாயிகளுக்குத் தெரியாது.

சிப்பத்துக்கு மூன்றேகால் ரூபாய் பணியாளர்களுக்கு ஊதியம். முதிர்ச்சியுள்ள நிர்வாகப் போக்கில் அதைப் பத்து ரூபாயாக உயர்த்தியது அரசாங்கம். கொள்முதல் நிலையங்களில் தவறு நடக்காது என்று இப்போது எதிர்பார்ப்பது நியாயமே. ஆனாலும், சிப்பத்துக்கு முப்பது ரூபாய் தொடர்கிறது. ‘‘கொடுக்காமல் ஒன்றும் நடக்காது” என்றார் ஒரு விவசாயி. “இப்போதுமா நடக்கிறது?” என்ற கேள்விக்குப் பதிலாக இதைச் சொல்லவில்லை. நிர்வாகத்துக்கும் குடிமக்களுக்கும் வாய்த்த உறவை வாழ்ந்து கழித்ததன் தத்துவமாக அது தொனித்தது.

விவசாயிகளைச் சிறுமைப்படுத்தலாமா?

சட்டம், நியாயம், அரசுக்கு விசுவாசம், விவசாயிகளுக்கு இழப்பு, தனக்கு முறையற்ற ஆதாயம் - இந்தச் சாதாரணங்களைத் தள்ளுங்கள். விவசாயிகள் ஏழ்மைப்பட்டார்கள், அவர்கள் சிறுமையுமா பட வேண்டும்? ஆயிரம் ஆண்டுகள் தாண்டிய தன்னாட்சிப் பெருமை கொண்டவை நம் கிராமங்கள். அவை கூனிக்குறுக வேண்டுமா? இன்னொன்றும் சொல்லலாம். கையாள்வது நெல் என்பதை மறக்கக் கூடாது. அதற்குப் பொருள் மதிப்பைவிட மரபால் வரும் மதிப்பு அதிகம்.

இறந்தவர் காடு ஏகும் முன் படியில் நெல்லை நிரப்பி, அதில் நல்ல விளக்கு வைத்த நிறைநாழியை அவர் கையில் கொடுத்து வீட்டுக்குள் வாங்கிக்கொள்கிறார்கள். அளந்து கொடுத்ததிலிருந்து நான்கு ஐந்து நெல்லை அளந்த மரக்காலில் திரும்பப் போட்டுக்கொள்வது வழக்கம். நெல் கதிரில் குஞ்சம் கட்டிக் கோயிலில் வேண்டுதலாகத் தொங்கவிடுகிறோம். வீட்டு நிலையில் சாணம் கொண்டு நெல் கதிரை ஒட்டிவைக்கிறோம். நெல்லை சிரசில் போட்டு ஆசி கூறுவார்கள். பரப்பிய நெல்லின் மேல் பட்டுப் பாய் போட்டு மணமக்களை அமர்த்துகிறார்கள். அம்மை போட்டிருக்கும் வீட்டார் நெல் கொடுக்க மாட்டார்கள். மாரியம்மனின் முத்துக்கு நிகரானது நெல். நெல்லில் எழுதிக் குழந்தை தன் படிப்பைத் துவங்குகிறது. சிலையும் ஒரு மண்டலம் நெல்லுக்குள் வசித்துக் கோயிலில் வீற்றிருக்கத் தகுதி பெற வேண்டும். அறிவு அறியாத ஆழ்மனதில் வேர்விட்டவை மரபுகள். அவற்றைப் பற்றிக்கொண்டு அங்கே கிடக்கும் நெல்லின் பெயரால் தவறு செய்யக் கூடாது. தை மாத வரவான நெல்லை இரண்டு கைகளிலும் அள்ளிப் பாருங்கள். புத்தாடை உடுத்தி உங்கள் வீட்டுக்குள் வரும் பெண் குழந்தைபோல், “நல்லா இருக்கேனா நான்?” என்று சிரிக்கும். அது நம்மைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொள்ளக் கூடாது. வல்முதல் வேண்டாமே!

- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x