Last Updated : 06 Apr, 2016 09:08 AM

 

Published : 06 Apr 2016 09:08 AM
Last Updated : 06 Apr 2016 09:08 AM

வாக்காளருக்குத் தகுதி வேண்டாமா?

தேர்தல்கள் நெருங்கினால் பல பேச்சுகள் கிளம்புவதும் வழக்கம். அதில் இந்தப் பேச்சும் உள்ளடக்கம். “நல்ல வேட்பாளர்களே இல்லை, எல்லா வேட்பாளருமே ஊழல் பெருச்சாளிகளாக இருக்கிறார்கள், எனவே நான் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கவில்லை!” “யாரும் சரியில்லை; 49 ஓ-க்கு ஓ போட்டேன்!” “மொத்தல்ல நல்ல வேட்பாளர் யாரையாவது காட்டுங்க. அப்புறம் நான் ஓட்டு போடுறேன்!” என்பார்கள்.

எதற்காக தேர்தல்?

நல்ல வேட்பாளர்கள் நள்ளிரவு தாமரைபோல் திடீரென்று முளைத்து எழுவார்களா என்ன? வேட்பாளர் எங்கிருந்து வருகிறார்? நம்முடைய ஊரைச் சேர்ந்த, நம்முடைய சாதியை சார்ந்த, நம்முடைய வட்டாரத்தில், நம் கண் முன் தொழில்செய்து கொண்டு நடமாடும் யாரோ ஒருவர்தானே நம்முடைய வேட்பாளராகிறார்.

‘நீரளவே ஆகுமாம் ஆம்பல்' என்ற வரிதான் நினைவுக்கு வருகிறது. நம் தகுதி அளவிற்குத்தான் நம்முடைய வேட்பாளர்களையும் கட்சிகள் தேர்ந்தெடுக்கின்றன.

ஒரு தேர்தலில் அடுத்து வர இருக்கும் ஐந்தாண்டுகளில் நமக்கான ஆட்சியாளர்களாக, நம் பகுதிக்கான நலத் திட்டங்கள், முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாக நாம் நம் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும், அதற்காகவே இந்தத் தேர்தல் என்பதை நாமும் வேட்பாளர்களைப் போலவே வசதியாக மறந்துவிடுகிறோம். அதிகாரப் போட்டியில் ஒருவரை ஒருவர் முந்தும் சாகச விளையாட்டில் நாம் நம்மை அறியாமல், யார் கையையோ பிடித்து உயர்த்திக் கொண்டிருக்கிறோம்.

யாருக்கு பொறுப்பு?

வாக்காளர்களாகிய நாம் எவ்வளவு விழிப்புடன் இருக்கிறோம், நாம் நல்லவர்களா, கெட்டவர்களா? கட்சிகள் சாதி வேட்பாளரை நிறுத்தினால், “நம்மாளு நின்னிருக்கான்டா, அவனை ஜெயிக்க வைக்கணும்” என கங்கணம் கட்டிக் கொண்டு ஓடி ஓடி வேலை செய்கிறோம். எல்லா கட்சிகளுமே பெரும்பான்மை வாக்காளர்களின் சாதியில் இருந்தே வேட்பாளர்களை நிறுத்தினால், அப்பொழுது நாம் யாருக்கு வேலை பார்ப்போம்? சாதி ஒன்றான பிறகு நம் கவனம் பணத்தின்மீது திரும்புகிறது. “நம்ம சாதிக்காரன் வந்தா மட்டும் என்ன? அவனும் இருக்கிறவங்களுக்குத் தான் கொடுப்பான். இல்லாதவன எவனும் கண்டுக்க மாட்டானுங்க…” என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டு, யார் பணத்துடனோ, பரிசுப் பொருளுடனோ வந்து நம்மைப் பார்ப்பார்கள் என்று காத்திருக்கிறோம்.

முன்பெல்லாம் தேர்தல் என்றால் டீ செலவுக்கும், பூத் செலவுக்கும்தான் கட்சிகள் செலவு செய்யும். இன்று வாக்குகளுக்கான செலவே பெரும் செலவு. அப்படியென்றால், இந்த அசிங்கத்துக்கு யார் பொறுப்பேற்பது?

நாமும் காரணமா?

வெட்கமேயில்லாமல் ஓட்டுக்குப் பணம் வாங்குவது சம்பந்தமாக இப்போது பேசப் பழகிவிட்டோம். அதுவும் பணம் வாங்குபவர்கள் பேசும் நியாயம் இருக்கிறதே! “ஏன், அவன் என்ன அவன் வீட்டுக் காசையா எடுத்துக் கொடுக்கிறான், நம்ம வரிப்பணம்தானே ஏதோ ஒரு ரூபத்துல அவன் கிட்ட போயிருக்கு?” “இப்ப செலவு பண்ணா, சேர்த்து சம்பாரிக்கப் போறான், நம்ம கிட்டயா கொடுக்கப்போறான்!” ஒரு அரசியல் கொள்ளையில் நாமும் பங்கு கொண்டிருக்கிறோம், அல்லது சிறிய பரிசுப் பொருளை வாங்கிக் கொண்டு அரசியல் கொள்ளைக்கு வழிவகை செய்திருக்கிறோம் என்பது வாக்காளர்களாகிய நமக்கேன் புரியவில்லை? தேர்தலின் முக்கியத்துவம் பற்றி வாக்காளர்களாகிய நாம் எவ்வளவு கவனமின்மையுடனும், அக்கறையின்மையுடனும் இருக்கிறோம் என்பதை யாராவது நமக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சில கோடி ரூபாய்களேனும் செலவுசெய்தால்தான் ஒருவர் இன்று சட்டசபை உறுப்பினர் ஆக முடியும் என்ற நிலைமை வந்ததற்கு நாமும் ஒரு விதத்தில் காரணம்தானே?

நாம் வெறும் நூறு ரூபாய்கூட அதில் வாங்கி இருக்கலாம். ஆனால் அவர் எவ்வளவு சம்பாதித்தால் நமக்கு அந்த நூறு ரூபாய் கொடுப்பார் என்று யோசித்திருக்கிறோமா? பத்து கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்ய வேண்டும் என்றாலே அவர் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவ்வளவு செலவு செய்வார்? வட்டியும் முதலுமாக, அடுத்த தேர்தலுக்கும் சேர்த்து அவர் சம்பாதிக்க வேண்டும் என்றால் அவர் நேர்மையாகவா சம்பாதிக்க முடியும்? நம் தெருவுக்குப் போடும் சாலையிலும், நம் ஊருக்குக் கட்டும் கட்டிடங்களிலும், நம்முடைய ஊருக்கான இலவசத் திட்டங்களிலும்தானே கை வைப்பார்? பணம் அவர் கைக்கு வேறெப்படி வரும்? நான்கு அடி பள்ளம் எடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு அடி பள்ளம் எடுத்தால் அதற்கு நமக்கு கொடுக்கப்பட்ட நூறு ரூபாய்தான் காரணம் என்பதை நாம் ஏன் கவனமாக மறந்துபோகிறோம்?

நாமே நாயகர்கள்

நம்முடைய சாதியை சேர்ந்த ஆள்தான் தேர்ந்தெ டுக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறோம்? மீண்டும் மீண்டும் இந்தச் சமூகத்தை சாதியின் அடிப்படையிலானதாகப் பிரிப்பதற்கு நாமேதானே உடந்தையாக இருக்கிறோம்? இரண்டு தேர்தலில் சாதி ஓட்டுக்களைக் கணக்கிட்டு வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகளைத் தோல்வியில் தள்ளிவிட்டால், சாதி நம்மிடம் மண்டியிட்டுக் கிடக்காதா?

இப்படி ஒவ்வொரு குடிமகனும் வாக்காளரும் சேர்ந்து நாம் நம் அறங்களைத் தவற விடுகிறோம். யாரும் ஒழுங்கில்லை, நானும் ஒழுங்கில்லை என நம் தவறுகளுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கிறோம். எனவே தான் மோசமான வேட்பாளர்களை ஆதரிக்கக்கூட நமக்கு தயக்கம் வரவில்லை. சமூகத்தின் இழிநிலைகளெல்லாம் வாக்காளர்களாகிய நாம் தவறவிடும் சின்ன சின்ன இடைவெளிகளில் இருந்தே பெருக்கெடுக்கின்றன. நாம் வாங்கிக்கொள்ளும் நூறு ரூபாய்தான் பத்தாயிரம் இருபதாயிரம் கோடிரூபாய் ஊழலாக நம் முன் பூதாகரம் எடுத்து நிற்கிறது. நாம்தான் மாற்றத்தின் நாயகர்கள். நாம் நினைத்தால் மட்டுமே குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாத நல்ல தகுதியான வேட்பாளர்களைத் தேர்வுசெய்ய முடியும்.

தகுதியுடைய வேட்பாளர்கள் நமக்கு வேண்டும் என்றால், நாம் முதலில் தகுதியுடைய வாக்காளர்களாக மாறுவோம். குடி உயர கோல் உயரும். மக்கள் எவ்விதமோ அரசு அவ்விதம். ஜனநாயகத்தில் மக்களே தங்களுக்கான அரசைத் தீர்மானிக்கிறார்கள். தேர்தலில் மாற்றத்தின் நாயகர்கள் நாம்தான்!

தொடர்புக்கு: vandhainila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x