Published : 03 Feb 2022 06:47 AM
Last Updated : 03 Feb 2022 06:47 AM

எதிர்காலத்தை இருளாக்கிவிடுமா இணையவழித் தேர்வு?

கடந்த ஆண்டு கல்லூரிகள் திறக்கப்பட்ட பின் தமிழ்நாடு உயர் கல்வித் துறைச் செயலர் 16.11.2021 அன்று ஓர் அரசாணை பிறப்பித்தார். அதில், இந்தக் கல்வியாண்டுக்கான (2021-22) நவம்பர் மாதப் பருவத் தேர்வுகள் நேரடித் தேர்வாக நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நேரடித் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பல இடங்களில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தினார்கள். தேர்வைப் பார்த்து எழுதுவதற்கான போராட்டமாக இது பார்க்கப்பட்டது.

மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறையுடைய தமிழ்நாடு அரசு நேரடித் தேர்வை நடத்துவதில் உறுதியாக இருந்தது. மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துக் கல்வித் துறை அமைச்சர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இணைய வழியில் நடத்தப்பட்ட பாடத்துக்கு இணைய வழியில்தான் தேர்வு வைக்க வேண்டும் என்றார்கள் மாணவர்கள். இணையவழி வகுப்புகள் சரிவர எடுக்கப்படவில்லை; நேரடித் தேர்வை எதிர்கொள்வதற்குத் தகுந்த பாடம் சார்ந்த தரவுகள் இல்லை என்பது போன்ற இயலாமைகள் மாணவர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டன.

ஆனாலும், அரசு தன் முடிவில் உறுதியாக இருந்தது. டிசம்பரில் நடைபெற வேண்டிய தேர்வு ஜனவரிக்கு மாற்றப்பட்டது. பெருந்தொற்றுப் பரவலின் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் கல்லூரிகள் மூடப்பட்டன. ‘நேரடித் தேர்வுக்குத் தயாராவதற்காக மாணவர்கள் இந்த விடுமுறையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று கல்வித் துறை அறிவித்தது. இம்மாதம் 21-ம் தேதி மீண்டும் ஓர் அறிவிப்பு ‘அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்’ என கல்வித் துறை அறிவித்துள்ளது.

2020 மார்ச் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இடையில் இருமுறை திறக்கப்பட்டது. 2020-க்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் (இறுதி ஆண்டு மாணவர்கள் மட்டும் இணைய வழியில் தேர்வெழுதினர்) நடத்தப்படவே இல்லை. அகமதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்குத் தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களில் எப்போதும் முழு மதிப்பெண் பெற முடியாது. ஆனால், பலர் முழு மதிப்பெண்களைப் பெற்றனர். அந்த மதிப்பெண் பட்டியல் அவர்களைக் ‘கரோனா பாஸ்’ என்று காட்டிக்கொடுத்துவிட்டது.

அதன் பின்னர், இரு பருவத் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. இரண்டும் இணைய வழியில்தான். கலை, அறிவியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை பார்த்து எழுதுவதுதான் இணையவழித் தேர்வு. மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களுக்காக ஆசிரியர்களால் கொடுக்கப்படும் ஒப்படைப்புகளுக்கு (Assignment) நிகரானது இந்தத் தேர்வு. அதற்கு மேல் இந்தத் தேர்வுக்கு எவ்வித மதிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. வாட்ஸ்அப்பில் வினாத்தாள் அனுப்பப்படும். வினாக்களுக்கேற்ற விடைகளைப் புத்தகத்திலிருந்தோ இணையத்திலிருந்தோ பார்த்து எழுதுவார்கள்.

புத்தகத்தில் தேடுவதற்குக்கூடத் தற்போதுள்ள மாணவர்கள் தயாராக இல்லை; இணையம்தான் அவர்கள் வேகத்துக்கு உகந்ததாக இருக்கிறது. குறிப்பிட்ட மாணவர்கள்தான் தேர்வை எழுதுகிறார்களா என்பதும் ஐயத்துக்குரியது. அதிகபட்சமாக நாற்பது பக்கங்கள் வரை எழுதி கூரியரிலோ அஞ்சலிலோ அனுப்பப்படும் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தி மதிப்பெண் வழங்கும் செயல், துயர நாடகத்தின் இறுதிக் காட்சிகளுக்கு ஒப்பானது.

பார்த்து எழுதி எண்பது, தொண்ணூறு எனப் பெறும் மதிப்பெண்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற உதவுமா? நேரடித் தேர்வெழுதி மாணவர்கள் பெறும் பத்து இருபது மதிப்பெண்களின் தகுதிகூட பார்த்து எழுதிப்பெற்ற எண்பது, தொண்ணூறு மதிப்பெண்களுக்குக் கிடையாது. இணையவழித் தேர்வெழுதிப் பட்டம் பெறுபவர்களின் பணிநிலை குறித்து ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். எச்.டி.எஃப்.சி. வங்கி, கடந்த ஆகஸ்ட் மாதம் நேர்காணல் ஒன்றுக்குப் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதில் ‘2021 passed out candidates are not eligible’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எதிர்ப்புக்குப் பிறகு not என்பது also என மாற்றம் செய்யப்பட்டது. தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகள் பலவற்றிலும் இந்தப் புறக்கணிப்பைத் தற்போது பார்க்க முடிகிறது. அரசு புறக்கணிக்க முடியாது; ஆனால், தனியார் நிறுவனங்களும் அப்படி இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இந்தப் புறக்கணிப்பு தொடர்கிறது. அஞ்சல் வழியில் படித்தவர்களுக்கு இந்தச் சிக்கல் இப்போதும் இருக்கிறது.

இணையவழியில் தேர்வெழுதித் தங்கள் மதிப்பெண் பட்டியலை நிறைத்துக்கொண்டவர்களும் இனி இந்தச் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். எதிர்காலத்தின் மீதும் தங்கள்மீதும் நம்பிக்கை கொண்ட மாணவர்கள் நேரடித் தேர்வெழுத அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். நேரடித் தேர்வுக்காகப் பாடத்தின் அளவைக் குறைக்கலாம்; மாணவர்கள் நலன் கருதி தேர்ச்சிக்கான மதிப்பெண்ணைக்கூடக் குறைக்கலாம். இணையவழித் தேர்வைவிட இது மேலானது.

‘கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பருவத் தேர்வுகள் கண்டிப்பாக இணைய வழியிலேயே நடைபெறும்’ என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இணையவழியில் தேர்வு நடத்துவதற்குக் கல்லூரிகளைத் திறக்க வேண்டிய அவசியமில்லை; யாரைத் திருப்திப்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு என்பது விளங்கவில்லை. 1 முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில்லாமல் வகுப்புகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்திருக்கும்போது, கல்லூரித் தேர்வை ஏன் நேரடியாக நடத்தக் கூடாது? கல்லூரி மாணவர்களில் பெரும்பாலோர் இரு தவணைத் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்கள். முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெறும் கல்லூரிகளில் தேர்வை நடத்துவது மிக எளிதானது.

பள்ளி மாணவர்களுக்கு நேரடித் தேர்வை நடத்துவதில் அரசு கொண்டிருக்கும் உறுதியைக் கல்லூரி மாணவர்கள் தேர்விலும் கடைப்பிடிக்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக நேரடித் தேர்வையே எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதியாவது கல்வித் துறை தன் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

- சுப்பிரமணி இரமேஷ், ‘தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ramesh5480@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x