Published : 01 Feb 2022 07:19 AM
Last Updated : 01 Feb 2022 07:19 AM
கடந்த 28.01.2022 அன்று சென்னை பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் திருவண்ணாமலை மாவட்டம், வீரளூர் கிராமத்தில் நிகழ்ந்த சாதிக் கொடுமை பற்றிய கள ஆய்வு அறிக்கையை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டார். அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் நானும் கலந்துகொண்டேன்.
அந்தக் கிராமத்திலிருந்து பாதிக்கப்பட்ட பட்டியலின அருந்ததியர் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மேற்கண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அறிக்கை வெளியிட்ட பிறகு, பாதிக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் சிலர் பேசினார்கள். “நாங்கள் இந்த சாதியில் பிறந்தது தப்பா? செத்த பொணத்த புதைப்பதற்குப் பொதுப் பாதை கேட்பது தவறா?” என்று கண்ணீரும் கம்பலையுமாக அவர்கள் பேசியதை மிகுந்த கவலையோடு பார்த்தோம்... கேட்டோம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...’ என்ற குறளை நான் மேற்கோள்காட்டிப் பேசியது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவில்லை.
சில தினங்களுக்கு முன்பு குடியரசு தின விழாவை நாடே கொண்டாடியது. அது அரசமைப்பு நடைமுறைக்கு வந்த நாள். ஆனால், ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் இப்போதும் கானல் நீராகவே உள்ளன. வீரளூர் கிராமத்தில் பட்டியலின அருந்ததிய மக்களில் யாராவது இறந்தால், சடலத்தை மயானத்துக்கு எடுத்துச்செல்லப் பொதுச் சாலையைப் பயன்படுத்த முடியாமல் மிகவும் குறுகலான, ஒதுக்குப்புறமான பாதை வழியாகக் கொண்டுசெல்ல வேண்டிய அவலம் இருந்தது. இந்தக் கொடுமைகளுக்கு எதிராகப் பட்டியலின மக்கள் தொடர்ந்து போராடி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் வரை தலையீடு செய்து, கடந்த ஜனவரி 12-ம் தேதி காவல் துறையின் பாதுகாப்புடன் நாட்டான் என்பவரின் சடலம் பொதுச்சாலை வழியாக மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பட்டியலினத்தவர் ஒருவரின் சடலம் அந்தப் பொதுச் சாலை வழியாக எடுத்துச்செல்லப்பட்டது இதுவே முதன்முறை.
கடந்த ஜனவரி 15-ம் தேதி பட்டியலின வகுப்பைச் சார்ந்த அமுதா என்ற பெண் இறந்துவிட்டார். அவரது சடலத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச்செல்ல பட்டியலின சாதி அல்லாதவர்கள் ஆட்சேபணை தெரிவித்த காரணத்தால் அதிகாரிகள் முன்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே, இடைநிலை சாதியைச் சார்ந்தவர்கள் பட்டியலின மக்களைக் கேவலமாகப் பேசி அடித்து விரட்டியதோடு, அவர்களின் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என அவர்களின் உடமைகளை அடித்து நொறுக்கியுள்னர்.
இந்தத் தாக்குதலில் ஆயுதங்களால் வெட்டப்பட்டு 7 பேர் தலை, கை, கால்களில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். வருவாய்த் துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் அங்கே இருந்தும் இந்த வன்முறைத் தாக்குதலைத் தடுத்துநிறுத்தவில்லை. முன்கூட்டியே தகவல் கிடைத்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறியுள்ளனர்.
மேற்கண்ட வன்முறைச் சம்பவத்துக்குப் பிறகு, இடைநிலை சாதியைச் சார்ந்தவர்கள் பட்டியலின மக்களுக்கு விவசாய வேலைகளைத் தர மறுத்துள்ளனர். அந்தக் கிராமத்தில் பெரும்பான்மையான பட்டியலின மக்கள் இடைநிலை சாதிகளைச் சார்ந்த விவசாயிகளின் நிலங்களில் கூலி வேலை செய்வதுதான் அவர்களுக்கு வாழ்வாதாரம். இந்த வாழ்வாதாரம் தற்போது மறுக்கப்படுகிறது.
தங்கள் உரிமைகளுக்காகப் பட்டியலின மக்கள் குரல்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு விவசாய வேலையை மறுப்பது ஒருவகையிலான நிர்ப்பந்தமே. வீரளூர் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 4,812. (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி) இதில் 1,146 பேர் பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஆறு பேர் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான கிராமங்களில் மக்கள்தொகையில் பட்டியலின மக்கள் சிறுபான்மையினர்தான். பெரும்பான்மையான பட்டியலின மக்கள் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாகவே உள்ளனர். கூலி வேலைதான் அவர்களின் வாழ்வாதாரம். வாழ்வாதாரமும் மறுக்கப்படுகிறது, சாதிக் கொடுமையும் நிகழ்த்தப்படுகிறது.
வெளியிடப்பட்ட கள ஆய்வறிக்கையில் சொல்லப்படும் தகவல் நமது நெஞ்சைச் சுடுகிறது. இடைநிலை சாதிகளைச் சார்ந்தவர்கள் அரசியல் வேறுபாடின்றி எல்லாம் ஒன்றுதிரண்டு பட்டியலின மக்களைத் தாக்கியிருக்கிறார்கள். இதில் விரல்விட்டுச் சிலர் விதிவிலக்காக இருந்திருக்கலாம். பெரும்பான்மையானவர்கள் இத்தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கள ஆய்வறிக்கையில் உள்ள கசப்பான இந்த உண்மையைப் படிக்கும்போது பெரியார் செய்த எச்சரிக்கை நினைவுக்கு வருகிறது.
“பார்ப்பனர்கள் நமக்குச் செய்யும் கொடுமையை விட சூத்திரர்களாகிய நாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்யும் கொடுமை பன்மடங்கு அதிகம் என்று சொல்லுவேன்” என்று இடைநிலை சாதிகளைச் சார்ந்தவர்களைச் சாடினார் பெரியார். சாதிய அடுக்கில் சூத்திரர்களாக வைக்கப்பட்டிருக்கும் இடைநிலை சாதியைச் சார்ந்தவர்கள் தங்களுக்குக் கீழே வைக்கப்பட்டிருக்கும் பட்டியலின மக்களை மதிக்க வேண்டும், சமமாக நடத்த வேண்டும், சாதிரீதியில் கொடுமைப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் பெரியார் அவருக்கே உரிய பாணியில் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், பெரியார் எச்சரிக்கை இன்னும் எச்சரிக்கையாகவே இருக்கிறது.
தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டுவிட்டது, அதைக் கடைபிடிப்பது தடைசெய்யப்படுகிறது என்ற அரசியல் சட்டப் பிரிவு, குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் பட்டியலின மக்களுக்கு உரிமைகள் வழங்கினாலும் அந்த உரிமைகள் நடைமுறையில் மறுக்கப்படுவது தொடர்கதையாக நீடித்துவருகிறது.
சாதி ஆணவத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது மட்டும் போதாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசமைப்பு வழங்கிடும் உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு உணர்த்த வேண்டும், உள்வாங்க வைக்க வேண்டும்.
அரசமைப்பு நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில் அதன் வரைவுக்குழுத் தலைவராக இருந்த அம்பேத்கர் எச்சரித்ததை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
“இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் மேல்பூச்சாகவே இருக்கிறது. அடிப்படையில் அது ஜனநாயகமற்றது.”
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், பட்டியலின மக்களுக்கு உரிமைகளை வழங்கிடும் அரசமைப்பு நடைமுறைக்கு வந்து 73 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த அவலநிலை நீடிக்க அரசும் மக்களும் அனுமதிக்கலாமா?
- ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் - சிபிஐ(எம்).
தொடர்புக்கு: grcpim@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT