Published : 17 Jan 2014 10:46 AM
Last Updated : 17 Jan 2014 10:46 AM

வாசிப்பால் இணைப்போம் உலகை

எழுத்தாளர் சுஜாதாவை யாரோ ஒருமுறை சீண்டியிருந்தார். சுஜாதா என்ன எழுதினாலும் வெளிவருகிறதே, அவர் லாண்டரிக் கணக்கு எழுதினாலும் போடுவீர்களா என்று ஒரு பத்திரிகை ஆசிரியருக்குக் கடிதம் வந்தது. உடனே சுஜாதா, லாண்டரிக் கணக்கு ஒன்று எழுதிப் போட்டார்: வேட்டி இத்தனை, சேலை இத்தனை, அப்புறம் கைக்குட்டை (ரத்தக் கறை படிந்தது) ஒன்று என அதுவும் இதழில் வெளியானது. லாண்டரிக் கணக்கு இருக்கட்டும், தாங்கள் வாங்கிய புத்தகக் கணக்கு யாரும் வைத்திருக்கிறார்களா? உள்ளபடியே அது எத்தனை சுவாரசியமும் ஈர்ப்பும் நிறைந்ததாக இருக்கும். அதைவிட வாசிப்பின் பட்டியல்? அது எத்தனை மதுரமாக இனிக்கும்...

அசர வைக்கும் பட்டியல்

மதுரையில் வசிக்கும் எழுத்தாளர் ச. சுப்பாராவ் வியப்பளிக்கும் ஒரு வாசகர். கைபேசி, மின்னஞ்சல், முகநூல் என்ற நவீன சாதனங்கள், ஊடகங்கள் போன்றவற்றில் பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் விழிப்பாக நேரத்தைச் சேமித்து அப்படியே கொத்துகொத்தாகப் புத்தகங்களை வாசித்துத்தள்ளுபவர். போன ஆண்டு, தற்செயலாக ஏதோ பேச்சின்போது ஓராண்டில் இத்தனை நூல்கள் வாசித்தேன், இத்தனை பக்கங்கள் என்று புள்ளிவிவரம் கொடுத்தார். அதிர்ந்துபோய், இதற்கெல்லாமா கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அடுத்த மின்னஞ்சலில் அதிர்ச்சிப் பட்டியல் ஒன்று வந்துசேர்ந்தது.

1989-ல் தொடங்கி 2012 வரை ஆண்டுதோறும் தான் வாசித்த ஆங்கில, தமிழ் நூல்களின் எண்ணிக்கை, பக்கங்கள் ஆகியவற்றின் கணக்கு, நாள் ஒன்றுக்கு சராசரி எத்தனை பக்கங்கள் என்று அந்தக் கூட்டல், பெருக்கல், வகுத்தல் கணக்கு அதில் இருந்தது. மிகக் குறைந்தபட்சமாக ஓர் ஆண்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 23.14 பக்கங்கள், வேறு ஓர் ஆண்டில் மிக அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 75.36 பக்கங்கள். இந்த 24 ஆண்டுகளில் மட்டும் மேற்படி அசுரன் (பின்னே மனிதரா அவர்?) ஆங்கிலம் (448), தமிழ் (1,136) இரண்டிலுமாக மொத்தம் வாசித்திருந்தது 1,584 புத்தகங்கள். 4,18,945 பக்கங்கள்.

இலக்கிய ரசிகர், உளவியல் மருத்துவர் நெல்லை டாக்டர் ராமானுஜம் கடந்த வாரம் சும்மா இருக்காமல், முகநூல் கணக்கில் சுப்பாராவை வம்புக்கிழுத்து, “என்னைச் சோர்வடையச் செய்யும் வாசிப்பின் வெள்ளை அறிக்கை ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை?” என்று தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்திக் கேட்டிருக்கிறார் போலிருக்கிறது. சுப்பாராவ் சளைக்காது இப்படிப் பகிர்ந்திருக்கிறார்: 2013-ல் படித்த புத்தகங்கள் - 87. அதில்

தமிழ் - 58. ஆங்கிலம் - 29, மொத்தப் பக்கங் கள் - 17351. நாளொன்றுக்கு சராசரி - 47.53. தமிழில், கு. அழகிரிசாமி முழு தொகுப்பு, ‘முகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்’, பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய ‘நான் கண்ட நாடகக் கலைஞர்கள்’, தியடோர் பாஸ்கரனின் ‘சித்திரம் பேசுதடி’, பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’, பி.எஸ்.ராமையாவின் ‘மணிக்கொடி காலம்’, டி. கே. கலாப்ரியாவின் ‘சுவரொட்டி’ என நிறைய நல்ல புத்தகங்கள் என்று சொல்லும் அவருக்கு 100 புத்தகங்கள், நாளுக்கு 50 பக்கங்கள் என்பது இந்த ஆண்டின் இலக்காம்.

படிக்க நேரமில்லையா?

படிக்கவே நேரமில்லை என்று சொல்பவர்கள், ஒரே ஒரு நடை புத்தகக் கண்காட்சிக்குச் சென்று பார்க்க நேர்ந்தால், பச்சிளம் குழந்தைகளோடு நடையாய் நடக்கும் பெற்றோரையும், வாண்டுச் செல்லங்களையும், உடல் உபாதைகளைப் பொருட்படுத்தாது தேடலில் திளைக்கும் முதியோரையும், மாற்றுத் திறனாளிகளையும் சந்திக்கும்போது நிச்சயம் ஒரு மறுபரிசீலனைக்குத் தங்களை அவர்கள் உட்படுத்தவே செய்வார்கள்.

“வாழ வேண்டுமானால் வாசி” என்றார் குஸ்தாவ் ஃப்ளொபெர் என்ற நாவலாசிரியர். “முந்தைய 15 நாள்களில் புதிய நூல் எதையும் வாசிக்காதவரின் உரையாடலில் எந்த நறுமணமும் கமழ்வதில்லை” என்பது சீனத்தில் புழங்கும் சொலவடை. “அடுத்த தலைமுறைக்கான பரிசுப்பொருள் புத்தகங்கள்” என்கிறது மற்றுமொரு சீனப் பழமொழி. அண்மையில் புதுவையில் நடந்த ஒரு கவிதை நூல் வெளியீட்டில் நூலாசிரியைக்கு வந்து குவிந்த சால்வைகள் நாற்பதாவது இருக்கும். அவற்றை அவரோ வேறு யாரோ என்ன செய்ய இயலும்? அதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் மிக எளிய புத்தகம் ஒன்றை வழங்கியிருந்தால்கூட அவற்றைப் பலரும் வாசித்து இன்புற முடியும்.

எனது நண்பர் ஒருவர் எப்போது எங்கே என்னைக் கண்டாலும் பையைப் பற்றி இழுத்து அதில் என்ன நூல் இருக்கிறது என்று பார்ப்பது வழக்கம். கடைசியாய் என்ன படித்தீர்கள் என்று கேட்கும் அன்பர் ஒருவர் தூண்டிக்கொண்டே இருப்பவர். “வற்றி உலர்ந்துபோன நகைச்சுவைத் துணுக்குகளால் தமது சிறப்புரையைக் கட்டமைக்கும் சிலர் அற்புதமான நூல்களை ஆங்காங்கு பொருத்தமாக மேற்கோள் காட்டினால் அந்தப் பேச்சின் தரம் எவ்வளவு உயரும்” என்று ஆதங்கத்தோடு கேட்பார் இன்னொருவர்.

திறந்துகொண்டது இன்னொரு விழி

பிறவியிலேயே தோன்றிய குறைபாடு ஒன்றின் காரணமாகத் தமது பன்னிரண்டு வயதிலேயே கண்பார்வையை வேகமாக இழந்துகொண்டிருந்த ஒரு மனிதர் அவசர அவசரமாக ஒரு நூலை வாசித்து முடித்திருக்கிறார். பிறகு, முற்றிலும் கண்பார்வை பறிபோன வேதனையான ஆண்டுகள் ஒன்றில் தாம் வாசித்த அந்த இறுதிப் புத்தகத்தின் தாக்கத்தில் தனது 25ம் வயதில் முயற்சி மேற்கொண்டு மூன்று மொழிகளில் முதுநிலை பட்டம்பெற்று பல்கலைக்கழகப் பேராசிரியராக வேலை நியமனம் பெற்று, எழுத்தாளராகவும் பரிணமித்து, சமூகப் போராளியாகவும் வாழ்ந்துவருகிறார் அவர்.

பஞ்சாபில் வசித்துவரும் டாக்டர் டார்செம் என்ற அந்த அற்புத மனிதர் ‘திருதராஷ்டிரா’ என்ற பெயரில் சுயசரியதையை எழுதியிருக்கிறார். அவருள் தாக்கத்தை ஏற்படுத்திய நூலை எழுதியவரும் கண்பார்வையற்றவர் என்பது முக்கியமான செய்தி. நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்கி எழுதிய புகழ் பெற்ற ரஷ்ய நாவலான ‘வீரம் விளைந்தது’ என்ற நூல்தான் அது. வாசிப்பினால் என்ன பெரிதாகக் கிடைத்துவிடும் என்று யார் கேட்க முடியும்?

கவிதையோ, கதையோ, பயணக் கட்டுரையோ, அறிவியல் உலாவோ, தத்துவ விசாரமோ, வரலாற்று ஆய்வோ, தொல்லியல் தேடலோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் வாசிப்பு. அது இந்த அகண்ட பிரபஞ்சத்தின் எதாவது ஒரு சிறப்பு வாசலுக்கான வழியைக் காட்டலாம். திறவுகோல் அளிக்கலாம். புதையலாகவும் மாறிவிடலாம். இது எதுவுமே நடக்கக்கூட வேண்டாம். வாசிப்பின் இன்பமே மகத்தானதாக அமைந்துவிடலாம். வாசிக்காது இருக்க எந்தக் காரணமும் சொல்லாத அன்பர்கள் வாசிக்க எதற்குக் காரணம் கேட்க வேண்டும்? வாசிப்பால் இணைப்போம் இந்த உலகை!

- எஸ் வி வேணுகோபாலன், எழுத்தாளர், தொடர்புக்கு: sv.venu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x