Published : 21 Jan 2022 06:15 AM
Last Updated : 21 Jan 2022 06:15 AM
கடந்த 2021 ஏப்ரல்-மே மாதத்தில் பரவிய கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை மட்டுப்பட்டவுடன் கரோனா வைரஸ் நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டது என்றே பெரும்பாலானோர் நம்பியிருந்தனர். ஆனால், 2022-லும் கரோனா வைரஸின் தாக்கம் தொடரும் என்பதை ஒமைக்ரான் தொற்றுப் பரவல் உணர்த்திவிட்டது.
2021 நவம்பர் 2-வது வாரம் செய்யப்பட்ட பரிசோதனை அடிப்படையில், ஒமைக்ரான் எனும் புதிய வேற்றுருவம் குறித்து உலக சுகாதார நிறுவனத்திடம் நவம்பர் 25-ம் தேதி தென்னாப்பிரிக்கா பதிவுசெய்தது. டிசம்பர் 2-ம் தேதி கர்நாடக மருத்துவர், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரிடம் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. பயணம் மேற்கொண்ட எந்தப் பின்னணியும் இல்லாதவர்கள் டிசம்பர் 18-ம் தேதியே ஒமைக்ரான் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்படத் தொடங்கிவிட்டார்கள்.
ஜனவரி முதல் வாரம் வரையிலும்கூட கரோனா மூன்றாம் அலை தற்போது நிலவிவருகிறது என்பதையோ அதற்கு ஒமைக்ரான் வேற்றுருவம்தான் காரணம் என்றோ மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஜனவரி 17-ம் தேதி வரை இந்தியாவில் ஒமைக்ரான் வேற்றுருவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,209 என்று மத்திய அரசு கூறுகிறது. அதே நேரம், ஒருநாளில் கோவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்துவிட்டது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?
தமிழ்நாட்டில், சென்னையில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஜனவரி 13 தொடங்கி தினசரி 8,000 மிகச் சாதாரணமாகக் கடந்துவருகிறது. “தமிழ்நாட்டில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டும் 80-85% பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால், ஒமைக்ரான் வேற்றுருவம் குறித்துத் தனியாகப் பரிசோதனை செய்வதை நிறுத்திவிட்டோம்” என்கிறார் சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன். அப்படியானால், சென்னையில் மட்டுமே தினசரி 7,000-க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்று பொருள். ஆனால், தேசிய அளவில் ஒட்டுமொத்தமாகவே 8,000 பேர் மட்டுமே ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது மத்திய சுகாதார அமைச்சகம். இரண்டில் எது உண்மை?
2022 ஜனவரி 17-ம் தேதி பரிசோதனை பாசிட்டிவ் விகிதம் 19.65%. அதாவது, மேற்கொள்ளப்படும் 100 பரிசோதனைகளில் 19 பேருக்குக் குறையாமல் கரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இரண்டாவது அலைக்குக் காரணமான டெல்டா வேற்றுருவப் பரவலின்போது ஒருவர் 169 பேருக்குத் தொற்றைப் பரப்பும் வாய்ப்பையே பெற்றிருந்தார். மூன்றாவது அலையில் ஒருவர் 269 பேருக்குத் தொற்றைப் பரப்பும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறார் என்பதை நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து தற்போது பரவிவரும் வேற்றுருவம் ஒமைக்ரான்தான் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஒமைக்ரான் தொற்றில் அதிகமானோர் பாதிக்கப்பட்டாலும், இறப்புவிகிதம் அதிகமில்லை, ஒமைக்ரான் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது ஒரு நிம்மதி. இதற்குப் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டது காரணமாகக் கூறப்படுகிறது. அதே நேரம், அது தீவிரமாகப் பரவும்போது, தடுப்பூசி போடாதவர்களிடம் அதிக எண்ணிக்கையில் தொற்றும்போது இறப்பு விகிதம் கூடலாம் என்பதை மறந்துவிடக் கூடாது.
பெருந்தொற்றுகளைச் சிறப்பாகக் கையாள்வதில் அவற்றின் பரவல், தாக்கம் குறித்த எண்ணிக்கை, தரவுகள் போன்றவை முக்கியமானவை என்கிறார்கள், நோய்த்தொற்றுப் பரவலியல் நிபுணர் ககன்தீப் காங், வைரஸ் நிபுணர் ஷாஹித் ஜமீல் உள்ளிட்டோர். ஆனால், கரோனா முதல் அலை தொடங்கி இப்போது வரை மத்திய சுகாதார அமைச்சகம் குழப்பமான தரவுகளையே முன்வைத்து வருகிறது.
கரோனா பரவலைத் தொடக்கத்தில் சிறப்பாக எதிர்கொண்ட கேரளத்தில் பிறகு தொற்று நீடித்திருந்தது தேசிய அளவில் விமர்சிக்கப்பட்டது. உண்மையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிக பரிசோதனைகள், அதிக மருத்துவக் கண்காணிப்பு, அதிக வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை கேரளம் வெளிப்படுத்தியது. இதன் காரணமாகவே அங்கு கரோனா நீடித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.
கேரளம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் பின்பற்றும் வெளிப்படைத்தன்மை நோய்களைக் கையாளும் முறையை மேம்படுத்துகிறது. மருத்துவக் கட்டமைப்பும் அரசு அமைப்பும் சிறப்பாகச் செயல்பட வழிவகுக்கிறது. மக்களும் நம்பகத்தன்மையுடன் பரிசோதனை, சிகிச்சை போன்றவற்றை நாடி வருகிறார்கள். அதேநேரம், பரவிக்கொண்டிருக்கும் பெருந்தொற்றை உரிய வகையில் அங்கீகரித்துக் கையாளாமலும் ‘நோய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை’ என்று மறுப்பதாலும், தொற்றுப் பரவல் தீவிரமடையவும் மருத்துவ சிகிச்சையை நாடி மக்கள் வருவதைத் தடுக்கவும் காரணமாகிவிடும்.
ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளரோ, மருத்துவ நெருக்கடி நிலை குறித்து முழுமையாகப் புரிந்துகொண்டு திட்டமிட முயல்பவரோ ஒரு அலை பரவிக்கொண்டிருக்கும் வேகம், ஏற்ற இறக்கம், இறப்பு விகிதம் போன்றவற்றைக் குறித்துத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் நோய்த்தொற்று குறித்த தரவுகள் ஓரிடத்தில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டோர் குறித்த தகவல்கள், பரிசோதனை குறித்த தகவல்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் குறித்த தகவல்கள் தனித்தனியாகச் சேகரிக்கப்பட்டுப் பிரிந்து கிடக்கின்றன. இவை ஒரே தளத்தில் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை.
கரோனா வைரஸ் இரண்டாம் அலை வரையிலான இதுபோன்ற தகவல்களைச் சில தனிநபர்கள் கூட்டாக இணைந்து https://www.covid19india.org/ என்கிற இணையதளத்தில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் பதிவேற்றியிருந்தனர். கரோனா வைரஸ் இரண்டாம் அலை முடிவடைந்த நிலையில், தங்கள் பதிவேற்றும் சேவையை அவர்கள் நிறுத்திக்கொண்டனர். தரவுகள் முறைப்படி தொகுத்து அளிக்கப்படாதது ஒரு பிரச்சினை என்றால், நோய்த்தொற்றைக் கையாள்வது குறித்த பொதுவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படாதது மற்றொரு பிரச்சினை.
கரோனா இரண்டு அலைப் பரவல்களின்போதும், முற்றிலும் புதிய நோயான கோவிட்-19தை எப்படிக் கையாள்வது, நிலையான சிகிச்சை முறைகள், நெருக்கடி காலத்தைக் கையாள்வதற்கான திட்டம் போன்ற பல அம்சங்கள் குறித்து தேசிய அளவில் பகிர்ந்துகொள்வதற்கான வழிமுறைகளோ அறிவுறுத்தல்களோ திட்டவட்டமாக உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அதேபோல், நோயாளிகளைக் கையாள்வதில் மருத்துவர்களுக்குக் கிடைக்கும் புரிதல், உயிரைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகள், சிகிச்சை மேம்பாடு குறித்துப் பகிர்ந்துகொள்வதற்கும் அறிவுறுத்துவதற்கும் நடைமுறைகள் வகுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவில்லை.
உலகில் பெரும்பாலான நாடுகளில் தற்போது கண்டறியப்படும் கரோனாவின் வேற்றுருவம் ஒமைக்ரானாக இருக்கும்போது, இந்தியாவில் மூன்றாவது அலைப் பரவலுக்கு ஒமைக்ரான்தான் காரணம் என்பதை மத்திய அரசு இன்னமும் அங்கீகரித்து அறிவிக்கவில்லை. இது வேறு பல பிரச்சினைகளையும் உருவாக்கும். குறிப்பிட்ட வேற்றுருவம்தான் தற்போதைய பரவலுக்கான காரணம் என்பதைத் திட்டவட்டமாக அறிய மரபணுவரிசை முறையை ஆய்வுசெய்ய வேண்டும். இந்தியாவில் 28 மரபணுவரிசை முறை ஆய்வகங்கள் உள்ளன. மஹாராஷ்டிரம், கேரளத்துக்கு அடுத்தபடியாகத் தமிழ்நாடும் மரபணுவரிசை முறைகளை அதிகம் ஆராய்கிறது. மற்ற மாநிலங்கள் மரபணுவரிசை முறையை ஆராய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் வரை 0.2% மட்டுமே மரபணுவரிசை முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது உலக அளவில் மிகமிகக் குறைவு. மரபணுவரிசை முறையை ஆய்வுசெய்வதில் உலக அளவில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்தபோது, மத்திய ஆய்வகங்களில் நெருக்கடி அதிகரித்த நிலையில், மாதிரிகளை அனுப்ப வேண்டாம் என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருந்ததும் நினைவிருக்கலாம்.
தொற்று உறுதியாகும் விகிதத்தைப் பொறுத்து மரபணுவரிசை முறை ஆய்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தற்போதைய தொற்று உறுதியாகும் விகிதம் கிட்டத்தட்ட 20%. அதற்கேற்ப மரபணுவரிசை முறை ஆய்வு செய்யப்படுவதில்லை. அப்படி ஆய்வு செய்யப்பட்டால்தான், புதிய வேற்றுருவங்கள் உருவாவதைக் கண்டறிய முடியும். ஒரு அலை தீவிரமடையும்போது புதிய வேற்றுருவங்கள் உருவாகும். இப்படித்தான் கடந்த ஆண்டில் இரண்டாவது அலைக்கு டெல்டா வேற்றுருவம் காரணமானபோது, டெல்டா பிளஸ் என்கிற வேற்றுருவம் உருவானது.
ஒருபுறம் கரோனா மூன்றாம் அலை பரவல் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக அறிவிப்பதுடன், மரபணுவரிசை முறை ஆய்வு போன்றவற்றை முறைப்படி நடத்தவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாவல் கரோனா வைரஸ் உலகுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பாடங்களைக் கற்பித்துவருகிறது. அதற்கேற்ப விழித்துக்கொண்டு செயல்பட்டால்தான் எதிர்காலத்தில் பெருந்தொற்றுகளைச் சிறப்பாகத் தடுக்கவும் கையாளவும் முடியும்.
- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT