Last Updated : 20 Jan, 2022 06:18 AM

Published : 20 Jan 2022 06:18 AM
Last Updated : 20 Jan 2022 06:18 AM

ஆம்! இந்தியாவுக்கு வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியாரைத் தெரியாதுதான்!

குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறுவதற்குத் தமிழ்நாட்டு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கவனக் குறைவு என்று சொல்லி யாரும் கடந்துவிட முடியாது. ஆனால், பிரச்சினையை வெறுமனே ‘குடியரசு தின அணிவகுப்பில் இடம் கிடைக்காதது’ என்று சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது. அதையும் தாண்டி ஆழமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒரு வடஇந்தியர் சென்றுவருவார் என்றால் காந்தி சாலை, சர்தார் பட்டேல் சாலை, நேரு சாலை, நேதாஜி சாலை, பகத்சிங் தெரு, ஆசாத் தெரு, திலகர் திடல் போன்றவற்றைச் சகஜமாக அவரால் காண இயலும். அவருக்கு இதில் ஆச்சரியம் ஏதும் இருக்காது. ஏனெனில், அவருடைய பொதுப் புத்தியில் இவர்கள் மட்டும்தான் இந்தியத் தலைவர்கள், இவர்கள் மட்டும்தான் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் என்றே உறைந்துபோயிருக்கும். ஆனால், வடஇந்தியர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இந்தத் தலைவர்களின் பெயர்களைச் சூட்டியதைவிட தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவர்களின் பெயர்களைச் சூட்டியதுதான் அதிகம்.

என் தந்தையைப் பெற்றவரும் படிப்பறிவற்றவருமான என் ஆத்தா, தன் தங்கைப் பிள்ளைகளுக்கு ‘காந்தி’, ‘போஸ்’ என்ற பெயர் வைத்தார். மேலும், எத்தனை நேருகள், எத்தனை பகத் சிங்குகள், எத்தனை சந்திரசேகர் ஆசாதுகள், எத்தனை ஜெயப்ரகாஷ் நாராயண்கள் நம் தமிழ்நாட்டில்? ரணதிவே, பூபேஷ், டாங்கே, ஜோதிபாசு என்று வடக்கின் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெயர்களையும் தஞ்சைப் பகுதிகளில் சகஜமாகக் காணலாம். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை எத்தனை வடஇந்தியர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வைத்திருக்கிறார்கள்? தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெயர்களை எத்தனை வடஇந்தியத் தெருக்கள், சாலைகள் தாங்கியிருக்கின்றன? தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டலாம்!

ஒரு வடஇந்தியரின் பொதுப் புத்தியில் தென்னகம், குறிப்பாகத் தமிழ்நாடு எந்த அளவுக்கு இடம்பெற்றிருக்கும் என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும். வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் மட்டுமல்ல வீரபாண்டியக் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்களில் ஆரம்பித்து சுப்பிரமணிய சிவா, திருப்பூர் குமரன், லட்சுமி என்று பலருக்கும் இதே கதிதான். ராஜாஜி, காமராஜர் பற்றிச் சிறிது தெரிந்திருக்கலாம். இதற்கெல்லாம் அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. பள்ளிப் பாடத்தில் ஆரம்பித்து, வாய்மொழி வரலாறு, எழுதப்பட்ட வரலாறு என்று எதிலுமே தென்னிந்தியாவுக்கு இடமில்லை. இத்தனைக்கும் ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் போராடியவர்கள் தமிழர்கள். விதிவிலக்காகச் சில நிகழ்வுகள், சில வரிகள், சில பத்திகள் வட இந்தியர்களின் வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கலாம். இது குறித்து வடஇந்தியாவில் வாழும் தமிழர்களிடம் பேசியபோது இந்தக் கருத்தை அவர்கள் உறுதிப்படுத்தவே செய்தார்கள்.

சாதாரண வடஇந்தியர்கள் மட்டுமல்ல, ஊடகர்களுமேகூட எப்படித் தென்னகத்தையும் தென்னகத்தின் மொழிகளையும் அணுகுகிறார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு சமீபத்தில் தனுஷிடம் பேட்டிகண்ட ஓர் ஊடகர் “சவுத்தில் பேசிக் காட்டுங்கள்” என்று கேட்டது. ‘சவுத்’ என்று ஒரு மொழி இருக்கிறதா என்ன? உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்று, செழுமையான இலக்கியத்தையும் நாகரிகத்தையும் கொண்ட மொழிகளுள் ஒன்று தமிழ். இத்தனைக்கும் பிரதமர் பல உரைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டுகிறார், தமிழை மூத்த மொழி என்கிறார். அந்த மொழியின் பேர்கூட உங்களுக்குத் தெரியவில்லை என்றால், அந்த மொழி பெற்றெடுத்த செல்வங்களான வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் ஆகியோரை உங்களுக்குத் தெரியாதது குறித்து வியப்பொன்றுமில்லை.

இது குறித்து புதுடெல்லியில் வாழும் தமிழரும் எழுத்தாளருமான ஷாஜஹானிடம் பேசியபோது, ‘‘ஊர்தி விவகாரம் குறித்து 2015-லேயே நான் குரல் எழுப்பினேன். டெல்லி வந்ததிலிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பார்க்கிறேன். சில மாநிலங்களின் ஊர்திகள்தான் வரும். 2015-ல் தமிழ்நாட்டு ஊர்தி இருக்கவில்லை… பாஜக ஆட்சியில் இல்லாத எந்த மாநிலத்தின் ஊர்தியும் அப்போது இடம்பெறவில்லை. பிஹார், மேற்கு வங்கம், ஒடிஷா, தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களின் ஊர்தி அப்போது இல்லை. வடக்கில் இமாச்சல பிரதேசமும் வடகிழக்கின் நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களின் வாகனங்களும் இடம்பெறவில்லை. டெல்லி உட்பட எந்த ஒன்றியப் பிரதேசமும் இடம்பெறவில்லை. 16 மாநிலங்களின் ஊர்திகள் மட்டுமே பங்கேற்ற அணிவகுப்பை இந்தியக் குடியரசின் முழுமையான பங்கேற்பாகக் கருத முடியுமா? இந்த ஆண்டு 12 மாநிலங்களின் ஊர்திகள்தான் பங்கேற்கின்றன எனும்போது அதே கேள்விதான் மறுபடியும் எழுகிறது” என்றார்.

மேலும், “ஊர்திகளின் தெரிவுகளை மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகம்தான் முடிவு செய்கிறது. இந்தத் தேர்வு முறை எப்போதுமே குளறுபடிதான். குடியரசு தினம் என்பதே நமது அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதையும், இந்தியா என்னும் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தையும் கொண்டாடும் தினம். அத்தகைய ஒரு விழாவில் எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகளை அனுமதிக்கலாம் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று ஒன்றிய அரசு கருதுவது கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்க மாட்டோம் என்று சொல்வதாகவே பொருள்” என்றும் தெரிவித்தார் அவர்.

இது குறித்து எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். “மத்திய அரசு வேண்டுமென்றே தமிழக அரசின் அலங்கார ஊர்தியைத் தடுத்துவிட்டது என்று சொல்வது முட்டாள்தனம்… ஆனால், இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் விதமாக அமைக்கப்படும் ஊர்வலத்தில் இந்தியா முழுவதும் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல்கூட இவ்வரசுக்கு இல்லை என்பதும் உண்மை. இதை ஒரு நிர்வாகச் சொதப்பல் என்று சொல்லலாமே தவிர, திட்டமிட்டுச் செய்ததாகச் சொல்ல முடியாது” என்கிறார் அவர். மேலும், “குடியரசு தின விழாவை டெல்லியில் மட்டும் ஏன் நடத்த வேண்டும் என்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை டெல்லியில் நடத்தலாம். மாநிலங்களின் உதவியுடன் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு பிரதேசங்களில் மற்றைய நான்கு வருடங்களில் நடத்தலாம்” என்று அவர் கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.

இத்தனைக்கும் வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் ஆகியோரின் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தமிழில் வாழ்த்துச் சொல்லி, அவர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்திருக்கிறார். இதற்கு மேல், இந்தியா அறிந்த, உலகம் அறிந்த தலைவர்களாக அவர்கள் ஆக வேண்டும் என்றால், அவர்கள் வடக்கில் பிறந்திருக்க வேண்டுமோ என்ற கேள்வி எழுகிறது. வேலுநாச்சியார் வடஇந்தியராக இருந்திருந்தால் இன்று ஜான்சி ராணி அளவுக்குப் புகழ்பெற்றிருப்பார். வ.உ.சி.க்கு இணையாக வடக்கில் யாரைச் சொல்வதென்று தெரியவில்லை. பாரதியாரைத் தமிழ்நாட்டுக்குள்ளேதான் ‘தேசிய கவி’ என்கிறோமே தவிர, தேசத்துக்கு அவரை யாரென்று தெரியாது. இதே அவர், வடஇந்தியாவில் பிறந்திருந்தால் தாகூருக்கு இணையாகக் கருதப்பட்டு, தன் கவிதைகளுக்காகவும் சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்குக்காகவும் இந்தியா முழுவதும் அறியப்பட்டிருப்பார். இதுதான் உண்மை!

வடக்கில் பிறந்த தேசத் தலைவர்களைத் தமிழர்கள் ஒருபோதும் வடஇந்தியர்களாகக் கருதியதில்லை. தங்கள் தலைவர்களாகத்தான் கருதிவருகிறார்கள். தெற்கில் பிறந்த தலைவர்களை வடக்கு ஒருபோதும் அப்படிக் கருதியதில்லை. ஆனால், தமிழ்நாட்டைப் பிரிவினைவாதிகளின் பிரதேசம்போல் வடஇந்தியர்கள் அப்போதிலிருந்து சித்தரித்துவருகின்றனர். இந்தப் பாகுபாட்டை அன்றே உணர்ந்து இதற்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள்தான் பெரியாரும் அண்ணாவும். ஆனால், அவர்கள் மீது பிரிவினைவாத முத்திரை! அப்படியென்றால், தெற்கை இந்தியாவாக நினைத்து உள்ளடக்காத வடஇந்தியர்களின் மீது என்ன முத்திரை குத்துவது?

‘இந்தியா’வின் விடுதலைக்காகவும் உருவாக்கத்துக்காகவும் நாட்டின் ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒவ்வொரு மூலைமுடுக்கிலிருந்தும் கணக்கற்றோர் உயிர் உட்பட அனைத்தையும் தியாகம் செய்திருக்கிறார்கள். ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்/ நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?’ என்ற பாடலில் வ.உ.சி.யைப் பற்றிதான் பாரதி பாடியிருக்கிறார். ஆனால், வ.உ.சி.யும் சரி, அவரைப் பாடிய பாரதியும் சரி, இந்திய வரலாற்றின் அடிக்குறிப்பில்கூடத் தங்களுக்கான இடத்துக்காக இன்று போராட வேண்டிய நிலை உண்மையில் பேரவலம்!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x