Published : 19 Jan 2022 06:39 AM
Last Updated : 19 Jan 2022 06:39 AM
தேர்தல் போட்டியில் காவிரிப் பிரச்சினை கர்நாடகத்தில் பிரம்மாஸ்திரமாக்கப்படுகிறது. அதைக் கைப்பற்றுவதில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, காவிரி மேலாண்மை ஆணையம் மீதும் மத்திய அரசின் மீதும் முழு நம்பிக்கை வைத்துள்ளதாகத் திரும்பத் திரும்பக் கூறுகிறார். மேகேதாட்டு அணையைக் கட்டி முடிக்கலாம் என்ற உறுதியோடு கர்நாடக அரசு உள்ளது.
மத்திய அரசின் நீர்வளத் துறை இந்தத் திட்டத்துக்கு முன்பே அனுமதி தந்த தகவலை பசவராஜ் பொம்மை 22.12.2021-ல் கர்நாடகச் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதற்கேற்ப காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணிகள் சமீப காலமாகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. 3 ஆண்டுகள் இடைவெளியில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒரு நிரந்தரத் தலைவர் கிடைத்துள்ளார். சோமித்ரா குமார் ஹல்தார் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற முழு நேரத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்றுள்ளார்.
எனினும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தைக் கடந்த ஒரு மாதமாக 3 தேதிகள் மாற்றியும் இதுவரை நடத்த முடியவில்லை. எதார்த்தத்தில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புப்படி தண்ணீரை முறையாக வழங்குவதும் இல்லை. 2021-ல்கூட செப்டம்பர் வரை தமிழ்நாட்டின் பங்காக 119.5 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகம் 85.8 டி.எம்.சி கொடுத்து 33.7 டி.எம்.சி. நீரைத் தேக்கிக்கொண்டது. இதற்காகத் தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுக வேண்டியிருந்தது.
சூழும் கார்முகில்களும் கொட்டும் கனமழையுமே தமிழ்நாட்டின் நெற்களஞ்சியங்களை நிரப்புகின்றன. 2021-ல் தமிழ்நாடு பெற்ற நீர் அளவு 4,563.9 டி.எம்.சி. ஆகும். இதில் மழையால் 4,314.9 டி.எம்.சி.யும் இதர மாநிலங்களிலிருந்து 249 டி.எம்.சி. தண்ணீரும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது. கர்நாடக அரசியல் என்பது அடுத்த மாநிலங்களின் தாகத்துக்குத் தண்ணீர் தராமல் வயிற்றில் அடிப்பதாகவே உள்ளது. இந்தச் சமயத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் காவிரிப் பிரச்சினையில் முன்பைவிடத் தீவிரம் பெற வேண்டியுள்ளது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக இசைவு பெறாமல் வனப் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிப்புப்படி எந்த அனுமதியும் பெறாமல் மேகேதாட்டுப் பகுதியில் கர்நாடக அரசு கட்டுமானப் பொருட்களைக் குவித்தது.
இது குறித்த செய்திகள் 2021 ஏப்ரலில் வெளியாயின. தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாய சென்னை அமர்வு மேற்கூறிய செய்திகளின் அடிப்படையில் தாமாகவே வழக்கை விசாரணைக்கு எடுத்தது. சம்பந்தப்பட்ட துறைகள், காவிரி மேலாண்மை மூத்த அதிகாரிகள் அடங்கிய ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது. 05.07.2021-க்குள் இந்தக் குழு தன் அறிக்கையைத் தாக்கல்செய்ய தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் ஒரு உத்தரவையும் பிறப்பித்தது. ஆயினும் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு டெல்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாய அமர்வில் தடை பெற்றது. அதன்படி தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழு கலைக்கப்பட்டது. ஆயினும், பசுமைத் தீர்ப்பாயத்தின் டெல்லி அமர்வுக்குத் தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்துசெய்ய சட்டபூர்வ அதிகாரங்கள் ஏதும் இல்லை என்று செல்வராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்த மற்றொரு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தமிழ்நாடு அரசு டெல்லி பசுமைத் தீர்ப்பாய அமர்வின் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்திருக்கலாம். தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக் குழுவுக்குப் புது ரத்தம் கிடைத்திருக்கும். தமிழ்நாடு அரசோ நேரடியாக உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு விசாரணையைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துவிட்டது. இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை என்றும், தாமாக முன்வந்து பதிவுசெய்யும் அதிகாரம் பசுமைத் தீர்ப்பாயத்துக்கு உள்ளதா என்பது தொடர்பான வேறு ஒரு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஏற்கெனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு வேண்டுமானால், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகக் கூறிவிட்டது. தமிழ்நாடு அரசு இந்த நிலையைச் சமாளிப்பதற்குச் சட்டபூர்வமான சில வழிகள் உள்ளன.
மேற்கூறிய இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் நீதிபதி ரிஷிகேஷ் ராய் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு அண்மையில் ஒரு வழக்கில் தந்த தீர்ப்பு, கலங்கரை விளக்காக ஒளி தருகிறது. மஹாராஷ்டிரத்தில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான விவகாரத்தில் மஹாராஷ்டிர அரசுக்குப் பசுமைத் தீர்ப்பாயம் ஒரு வழக்கில் ரூ. 5 கோடி அபராதம் விதித்தது. அவ்வாறு அபராதம் விதிக்கப் பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இலலை என்று மஹாராஷ்டிர அரசு முறையீடு செய்தது. மத்திய அரசும் இதனை ஆமோதித்தது. உச்ச நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கும் மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவரும் உச்ச நீதிமன்றத்தின் முன்பு இதே நிலைப்பாட்டை முன்வைத்தார்.
ஆயினும், மேற்கூறிய நீதிபதிகளின் அமர்வு அதனை ஏற்கவில்லை. சீரழியும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள அதிகாரம் படைத்தது என்றும், நீதியை நிலைநாட்ட பசுமைத் தீர்ப்பாயம் சுயமாகத் தலையிடலாம் என்றும் இந்த அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. 77 பக்கங்கள் அடங்கிய இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக் குழுவுக்குப் புத்துயிர் தரக் கோரலாமா என்று தமிழ்நாடு அரசு ஆராய வேண்டும்.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தில் பிரளயங்களும் பூகம்பங்களும் உசுப்பப்படும்போது, தமிழ்நாடு கரையில் உட்கார்ந்து தேநீர் பருகிக்கொண்டிருக்க முடியாது. கர்நாடகத்தின் அரசியல்ரீதியான முயற்சிகளைத் தமிழ்நாடும் அரசியல்ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். மேகேதாட்டு திட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடைபெறுவதற்குத் தமிழ்நாடு அரசு கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், காவிரிப் படுகையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர் நீதிபதிகளையும் சட்ட வல்லுநர்களையும் கொண்ட ஆலோசனைக் குழுவைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.
- வெ.ஜீவகுமார், வழக்கறிஞர், விவசாயிகள் உரிமைச் செயல்பாட்டாளர்,
தொடர்புக்கு: vjeeva63@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT