Published : 17 Jan 2022 06:26 AM
Last Updated : 17 Jan 2022 06:26 AM
நிதி ஆயோக்கின் வளர்ச்சிக் குறியீட்டில் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறது. இதே வேளையில், அகில இந்திய அளவில், மத்திய அரசின் பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் ‘தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு 2019-21’ (National Family Health Survey- NFHS 2019-21) வெளிவந்துள்ளது. என்.எஃப்.ஹெச்.எஸ். என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை குழந்தைகள், மகளிர் - வயது வந்த ஆண்களின் ஊட்டச்சத்து தொடர்பான விவரங்கள், நல்வாழ்வு தொடர்பான புள்ளிவிவரங்களைத் தருவது.
1992-93-ல் தொடங்கி, இந்த அறிக்கை தற்போது ஐந்தாவது முறையாக வெளிவந்துள்ளது.சிறாரிடையே காணப்படும் ஊட்டச்சத்து தொடர்பான விவரங்களை அறிய மூன்று முக்கிய அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. முதலாவது, வயதுக்கேற்ற உயரம். வயதுக்கேற்ற உயரம் இல்லாதவர்கள் வளர்ச்சி குன்றியவர்களாகக் கருதப்படுவார்கள்.
என்.எஃப்.ஹெச்.எஸ்.-5-ன்படி 6 மாதங்கள் முதல் 5 வயதுக்கு உட்பட்ட தமிழகச் சிறாரில் வளர்ச்சி குன்றியவர்கள் 25% பேர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த அளவு 2 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது. மேலும், இந்திய சராசரியைவிட (35.5%) தமிழ்நாட்டில் வளர்ச்சி குன்றியவர்கள் குறைவானவர்களே. எல்லா மாவட்டங்களும் அகில இந்திய சராசரியைவிடக் குறைந்த அளவிலேயே வளர்ச்சி குன்றுதலைப் பதிவுசெய்துள்ளன.
அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 33.6%-ம், தொடர்ந்து மதுரையில் 32.4%-ம், நாகையில் 32.3%-ம் பதிவாகியுள்ளன. முந்தைய ஐந்து ஆண்டுகளைவிடக் கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் வளர்ச்சி குன்றிய சிறார் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரையில் 11.2 , நாகையில் 7.8 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளன. மற்றொருபுறம், திருவள்ளூரில் 12, சென்னையில் 10.5 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளன. இதன்மூலம், மாநில சராசரி குறைந்தாலும்கூட, மாவட்டங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் இருப்பது வெட்டவெளிச்சமாகிறது.
மற்றொரு முக்கிய அளவீடான வயதிற்கேற்ற எடையின்மை கொண்ட சிறார் தமிழ்நாட்டில் 22% உள்ளனர். இந்த அளவும் கடந்த 5 ஆண்டுகளில் 2 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது; அகில இந்திய சராசரியைவிட (32.1%) மிகக் குறைவாக உள்ளது. ஆனால், கரூரில் மட்டும் எடை குறைந்த குழந்தைகள் 36.3% பேர் உள்ளனர். இந்த அளவீடு கரூர் உட்பட 10 மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.
மற்றுமொரு அளவீடு உயரத்துக்கேற்ற எடையின்மை. தமிழ்நாட்டுச் சராசரி 4.6%, அகில இந்திய சராசரியைவிட (19.3%) மிகவும் குறைவு. ஆனால், சிவகங்கை (29.8%), திண்டுக்கல் (21.1%), ஈரோடு (20.9%), திருச்சி (20.9%) ஆகிய மாவட்டங்கள் அகில இந்திய சராசரியைவிட அதிக அளவீட்டைக் கொண்டுள்ளன. ஒன்பது மாவட்டங்களில் உயரத்துக்கேற்ற எடையற்ற சிறாரின் சதவீதம் ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதே வேளையில், திருவண்ணாமலை, தருமபுரி, கோவை போன்ற மாவட்டங்கள் எடையற்ற சிறாரின் சதவீதத்தைக் குறைந்துள்ளன.
அதிகரிக்கும் ரத்தசோகை
சிறாரிடையே காணப்படும் ரத்தசோகையும் அவர்களின் நல்வாழ்வைப் பெருமளவில் பாதிக்கக்கூடியது. என்.எஃப்.ஹெச்.எஸ். 5–ன்படி, தமிழகத்தில் 57.4% சிறார் ரத்தசோகையுடன் உள்ளனர். அகில இந்திய சராசரியைவிட (67.1%) இது குறைவுதான் என்கிறபோதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதன் அளவு அதிகரித்துள்ளது பெரிதும் கவலைக்குரியது. முந்தைய ஐந்து ஆண்டுகளில் ரத்தசோகையுடைய சிறார் சதவீதம் 50.7% ஆக இருந்தது.
குறிப்பாக, திருச்சி (82.3%), விழுப்புரம் (73.4%), கரூர் (73.2%) போன்றவை தேசிய சராசரியைவிட அதிக அளவில் ரத்தசோகை உடைய சிறாரைக் கொண்டுள்ளன. அது மட்டுமில்லாமல், 22 மாவட்டங்களில் இதன் அளவு கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. மறுபுறம், ரத்தசோகை உடைய சிறாரின் அளவை திருநெல்வேலி மாவட்டம் பெருமளவில் குறைத்துள்ளது.
ஒப்பீட்டளவில், பார்க்கையில் தமிழ்நாட்டின் ரத்தசோகையுடைய பெண்களின் அளவு இந்திய சராசரியை (57%) விடக் குறைவு. ஆனால், முந்தைய ஐந்து ஆண்டுகளைவிட, தமிழ்நாட்டில் ரத்தசோகை ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளை, 12 மாவட்டங்களில் பெண்களிடையேயான ரத்தசோகை அளவு அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக பெரம்பலூரில் 66% பேரும், கரூரில் 65% பேரும் ரத்தசோகையுடன் உள்ளனர்.
எடையின்மையும் கூடுதல் எடையும்
என்.எப்.ஹெச்.எஸ். 5–ன்படி,15 முதல் 49 வயதுடைய பெண்களிடையே போதிய எடை இல்லாதவர் சதவீதம் தமிழ்நாட்டில் 12.6%. இந்த அளவும் இந்திய சராசரியைவிட குறைவு. ஆனால், புதுக்கோட்டை (20.3%), நாகை (19.4%) மாவட்டங்களில் நாட்டின் சராசரியைவிட அதிக அளவில் பதிவாகியுள்ளது.
சமீபகாலமாக மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தால் உடற்பருமன் பெரும் பிரச்சினையாய் மாறிவருகிறது. 15 முதல் 49 வயதுடைய பெண்களிடையே காணப்படும் உடற்பருமன் உள்ளவர்களின் சதவீதம் தமிழ்நாட்டில் 40.4. இந்த அளவு கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளது என்பது கவலைக்குரியது. மேலும், அகில இந்திய சராசரியைவிட (24.6%) தமிழ்நாட்டில் உடற்பருமனான பெண்கள் அதிகம். பெண்களில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களின் விகிதாசாரத்தில் தமிழ்நாடு (7.5%) இந்திய அளவைவிட (6.1%) அதிகமாக உள்ளது. சென்னை, திருவாரூர், கரூர், கன்னியாகுமரி, திருச்சி போன்ற மாவட்டங்கள் அதிகமானவர்களைப் பதிவுசெய்துள்ளன. இதேபோல் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் விகிதமும் அதிக்ம்.
ஊட்டச்சத்து என்று வரும்போது, உணவுடன் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடங்களும் இன்றியமையாதவை. சுகாதாரமான கழிப்பிடத்துக்காக சமீப காலமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்துவருகின்றன. பெரும்பாலான மாவட்டங்கள் தமிழ்நாட்டில் மேம்பட்ட கழிப்பிடத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை(72.6%), அகில இந்திய எண்ணிக்கையைவிட (70.2%) அதிகம். இருந்தபோதிலும் விழுப்புரம் (53.8%), அரியலூர் (54.6%), புதுக்கோட்டை (55.2%), மாவட்டங்களில் இதன் அளவு குறைவாகவே உள்ளது.
அவசர கவனம் தேவை
பெண்கள், சிறாரின் ஊட்டச்சத்து தொடர்பான பெரும்பாலான அளவீடுகளில் தமிழ்நாடு இந்தியாவைவிடச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. அதேவேளையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி குன்றிய சிறார் எண்ணிக்கை போன்றவை பல மாவட்டங்களில் பெருகிவருவதைக் கவனித்து, அந்தப் பிரச்சினையைக் களைவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம். ரத்தசோகை, உடற்பருமன் போன்றவற்றில் மாவட்டங்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு மாநிலம் தழுவிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். கரோனா போன்ற பெருந்தொற்றுகளை இனிவரும் காலங்களில் எதிர்த்து நிற்பதற்கு ஊட்டச்சத்து மிகுந்த சமச்சீர் உணவோடு, ஆரோக்கியமான உடலும் அவசியம் என்பதைக் கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும்.
- ஆர்.கோபிநாத், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தொடர்புக்கு: gopidina@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 1 Comments )
பசியும், சத்து குறைபாடும் இன்றைய இந்தியாவின் தலையாய பிரச்சினைகள். இதை அரசியல் காரணங்களுக்காக மறுத்தோமாகில், நாம் வருங்கால தலைமுறையை வாழவிட மறுக்கின்றோம் என்றே ஆகும். பசி விஷம் (POISON) என்றால் சத்து குறைபாடு மெதுவான விஷம் (SLOW POISON) ஆகும்.
1
0
Reply