Published : 20 Apr 2016 09:12 AM
Last Updated : 20 Apr 2016 09:12 AM
வெயில் சுட்டெரிக்கும் காலத்தில் தேர்தல் நடத்துவது என்பது எதன் குறியீடு என்றே புரியவில்லை. ஒருவேளை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வாழ்க்கை வாட்டி வதக்கி எடுத்துவிடும் என்று வாக்காளர்களுக்குக் குறிப்பால் உணர்த்துவதற்காக எல்லா தலைவர்களின் சார்பிலும் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம். ஆனால், இன்றைய தேதிக்கு களப்பலியாகிக்கொண்டிருப்பவர்கள், கட்சிக் கூட்டங்களுக்கு ‘அழைத்துவரப்படும்’ஆதரவாளர்கள்தான்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஜினி, கமல் முன்னிலையில் நட்சத்திர கிரிக்கெட் நடந்தது. நடிகைகளும் வந்திருந்து ‘கமெண்ட்ரி’கொடுத்ததைப் பற்றி இன்றுவரை எல்லோரும் திகிலுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேயாகவே இருந்தாலும் சற்று நேரம் நின்றால் ஆவியாகிவிடும் அளவுக்குக் கொளுத்தியெடுக்கும் வெயில். பெரிய சைஸ் மயானம்போல், பார்வையாளர் அரங்கில் ஒரு தேள், கழுகுகூடத் தென்படவில்லை.‘ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும் ரசிகப் பெருமக்களே..’ என்ற தொனியில்கூட வர்ணனையாளர் படவா கோபியால் பேச முடியவில்லை. அப்படி ஒரு சமூக அறிவியல் காணாத கூட்டம். கிரிக்கெட்டைப் பார்க்க வந்தவர்களைவிட இந்த நிகழ்ச்சிக்கு எதிராக மைதானத்துக்கு வெளியே போராடியவர்கள் அதிகமாம்! ஆனானப்பட்ட நடிகர்களுக்குக் கூடாத கூட்டம் அரசியல் கட்சிக் கூட்டங்களுக்குக் கூடுகிறது என்றால், கொள்கைதான் காரணம் என்று கோயபல்ஸ்கூடச் சொல்ல மாட்டார். சில நூறு ரூபாய்கள், குவார்ட்டர்கள், பிரியாணிகள் போன்ற ‘வாக்குறுதி’களை நம்பி இப்படி வதைபடுகிறார்கள் வாக்காளர்கள்.
யார் அந்த ‘கிரவுடு’?
திருமணங்களிலேயே இலை போடுவது முதல் மொய் எழுதுவது வரை எல்லா வேலைகளும் காண்ட்ராக்டர்களுக்கு விடப்படும் சூழலில், ஜனநாயகக் காதுகுத்து விழா மட்டும் விதிவிலக்கா என்ன? எல்லாம் காண்ட்ராக்ட் மயம்தான். வஞ்சனை தெரியாத வாக்காளர்களை, கிடைக்கும் வண்டிகளில் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து சேர்ப்பித்துவிடுகிறார்கள். மொத்தமாக மக்கள் கூட்டம் என்ற போர்வையில் காட்டப்படுபவர்களை கேமராக்கள் க்ளோஸப்பில் காட்டினால்,‘டேய்… இந்தம்மாவை ஏற்கெனவே மம்முகா கட்சிக் கூட்டத்தில் பார்த்தோமே, இப்ப சிக்காங்கொக்கா கூட்டத்துல உக்காந்திருக்குடோய்!’ என்று வாக்காளர்கள் வாய் திறந்துவிடுவார்கள். எனவே, எல்லாமே ஷங்கர் பட பாணியில் லாங்-ஷாட் ‘கிரவுடு’தான். அந்தப் பரிதாப ஜீவன்கள் படும் வேதனையைச் சூரிய பகவானால்கூடச் சகித்துக்கொள்ள முடியாது.
பங்குனி வெயில் பல்லைக் காட்டிக்கொண்டு அடித்ததுபோக, சித்திரை வெயில் போட்டுப் புரட்டியெடுத்துக்கொண்டிருக்கிறது. கோயமுத்தூரிலேயே வெயில் 100 டிகிரியைத் தாண்டுகிறது என்றால், தமிழகத்தின் பிற பகுதிகள் குறிப்பாக சென்னையின் நிலையைப் புரிந்துகொள்ள முடியும். இந்த லட்சணத்தில் மாநாடு, பிரச்சாரம் என்று கூட்டம் கூட்டமாகக் கிளம்பிவிடுகிறார்கள்.
பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்!
பிரச்சாரம் என்ற பெயரில் இந்தத் தலைவர்கள் பேசும் முறை இருக்கிறதே… நூறு மடங்கு வெயில் தேவலாம் என்றிருக்கிறது. தேர்தல் பிரச்சாரம், தொலைக்காட்சிப் பேட்டி என்று ஏதாவது ஒரு வடிவில் நம்மைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள் தலைவர்கள். இதுபோக, கட்சிவாரியாக சேனல்கள் வேறு. ரிட்டயர் ஆகப்போகும் ஹெட்மாஸ்டர்போல் (இதில் எந்தக் குறியீடும் கிடையாது!), ஒரு விரலை நீட்டி எச்சரிக்கும் பாணியில் ‘ஷெய்வீர்களா… நீங்கள் ஷெய்வீர்களா?’ என்று ஜெயலலிதா கேட்கும்போது, உடனடியாக எதையாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. கிளிப்பிள்ளை போல், செல்லும் இடங்களிலெல்லாம் ஜெராக்ஸ் பேச்சு பேசும் ஸ்டாலின் இன்னொரு ரகம். இந்தத் தேர்தலின் சாணக்கியர் என்றும் சகுனி என்றும் போற்றப்படும் வைகோ, வாயைத் திறந்தாலே ‘1975… சுத்தி போலீஸ்காரன் நிக்கிறான்… சுடுடான்னேன்… இதெல்லாம் பார்க்க அம்மா இல்லையே’ என்று கருப்புத் துண்டைப் பிடித்துக்கொண்டு கம்பீரமாகக் கண்ணீர்விட்டுக் கடுப்பேற்றுகிறார். ‘காத்திருப்பு’ புகழ் நாஞ்சில் சம்பத்தே நக்கல் செய்கிறார் என்றால் வைகோ எப்படிப் பேசுகிறார் என்று புரிந்துகொள்ளலாம். இன்னொரு பக்கம் காலர் மைக்கைக் கடித்துக்கொண்டு குறுக்கும் மறுக்குமாக நடந்தபடி புள்ளிவிவரங்களாக அள்ளிவிடுகிறார் அன்புமணி.
மக்கள் நலக் கூட்டணியாக இருந்து, கேப்டன் நலக் கூட்டணியாகி, மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக - தாமாக என்று தாமாகத் தமது பெயரை மாற்றிக்கொண்டிருக்கும் மாற்றுக் கூட்டணியின் ஒரே பேச்சாளர்… விஜயகாந்த் அல்ல - அண்ணியார் பிரேமலதா பேசுவதை ஐந்து நிமிடம் பொறுமையாகக் கேட்பவர்கள், பின்னாட்களில் நரகத்தில் எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்டாலும் ‘குங்ஃபூ பாண்டா’படத்தில் வரும் ஆமை குரு மாதிரி அமைதி காப்பார்கள். அந்தப் பேச்சு! சீமானின் பேச்சுகளை ‘ம்யூட்’ செய்துவிட்டுப் பார்ப்பது, தொலைக்காட்சி மூலம் உடற்பயிற்சி கற்றுக்கொள்பவர்களுக்கு நல்ல பலன் தரும் என்றால் அது மிகையாகாது. ஆனால், பக்க விளைவாக வாயும் முகமும் ஒரு பக்கம் கோணிக்கொள்ளும் ஆபத்தும் உண்டு. இந்த முறை எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. கம்யூனிஸ்ட் தலைவர்களே ‘வேட்டி கட்டின ஆம்பிளைங்களாய்யா நீங்க’என்று பேசும் அளவுக்குப் போய்விட்டது. இந்தத் தேர்தலில் நடந்தேறியிருக்கும் ‘டிராமா’க்களின் முன் நெடுந்தொடர்கள்கூட நிற்க முடியாது.
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கேப்டன் பற்றிச் சொல்லவில்லையென்றால், சமூகம் நம்மை மன்னிக்குமா? பத்திரிகையாளர்களுக்கு எத்தனையோ சவால்கள் இருக்கலாம். ஆனால், விஜயகாந்தின் ‘உரை’யைத் தமிழ்ப்படுத்தி, உருட்டித் திரட்டி ஒரு வடிவம் கொடுக்கும் சவால் இருக்கிறதே. அதற்கு கம்பராமாயணத்துக்கே காளகேய பாஷையில் உரை எழுதிவிடலாம். நீர் ஏனய்யா இப்படி நொந்துகொள்கிறீர் என்று நீங்கள் கேட்கலாம். நானும் பத்திரிகையாளன்தானே? கேப்டனின் உரையை உரைநடையாக்குவதற்குள் ஏழெட்டு முறை எவரெஸ்ட்டில் ஏறி இறங்கிவிடலாம்.
இத்தனை களேபரங்களுக்கு நடுவில், ‘விடியல் கூட்டணி’அமைத்துத் தமிழக அரசியலையே புரட்டிப்போட்டிருக்கும் நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக்கின் உரையைக் கேட்டேன். மனிதர் நன்றாகவே பேசுகிறார். ஹும்ம்… என்ன பிரயோஜனம்!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT