Last Updated : 10 Jan, 2022 06:26 AM

56  

Published : 10 Jan 2022 06:26 AM
Last Updated : 10 Jan 2022 06:26 AM

‘ஒன்றியம்’ ஒரு சொல்லுக்கு வந்த வல்லமை

மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று சொல்லலாமா? இந்தக் கேள்வியில் தொடங்கி அண்மையில் ஒரு விவாதம். சொல்லின் பொருள் பற்றிய மொழிப் பயிற்சி போன்றதல்ல இந்த விவாதம். இது சொல் அரசியல். வழக்கமான அரசியலில் இல்லாத நுட்பமும் நளினமும் சொல் அரசியலுக்கு உண்டு. மொழியும் அரசியல் போக்குகளை நிச்சயிக்க வல்லது. இப்படிச் சொல்வதால் மொழி நடையின் கவர்ச்சி என்ற மலினத்தைத்தான் சொல்கிறேன் என்று நினைத்துவிடக் கூடாது.

மத்திய - மாநில அரசுகளின் அதிகார உறவு பற்றிய சொல்லாடல் 1960-களில் தொடங்கியது. அண்ணாவோடு ராஜாஜியின் பங்களிப்பும் இதற்கு உண்டு. இப்போது தமிழ்நாடு முதல்வர், ‘ஒன்றிய அரசு’ என்பது சட்டத்தில் இல்லாத தொடர் அல்ல, அதைப் பயன்படுத்திக்கொண்டே இருப்போம் என்று கூறியுள்ளார். ‘ஒன்றியம்’ என்பதை மையச் சொல்லாக்கி, ஏற்கெனவே இருக்கும் சொல்லாடலை அதன் வசத்தில் வைத்துக் கட்டமைத்துக்கொள்கிறார். இதைத்தான் மொழி வழியாக அரசியல் போக்குகளை நிர்ணயிப்பது என்றேன்.

இனிமேலும் இணைச் சொல்லாகுமா?

மொழி எப்படிச் செயல்படுகிறது என்று பார்ப்பவர்களுக்கு இது சுவாரசியமான பிரச்சினை. இதைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லலாம். ‘ஒன்றிய அரசு’ என்பதால் என்ன சாதித்துவிட்டார்கள் என்று கேட்கக்கூடும். ‘மத்திய அரசு’ என்பதை ‘ஒன்றிய அரசு’க்கு இணைச் சொல்லாக்க இனி நாம் தயங்குவோம். ‘மத்திய அரசு’ என்பது ஒரு நூலாவது வேறுபட்ட அரசமைப்புச் சித்தாந்தத்தைச் சேர்ந்ததாகத் தோன்றும்.

அகராதியில் ‘ஒன்றிய அரசு’ என்று வந்தால் “காண்க ‘மத்திய அரசு’ ” என்று தருவார்களா? கட்டுரை எழுதும் மாணவர் ‘மத்திய அரசு’ என்று எழுதுவதை ‘ஒன்றிய அரசு’ என்று ஆசிரியர் திருத்தினால், அதைச் சித்தாந்த வக்கிரம் என்போமா, துல்லியம் என்று பாராட்டுவோமா? “‘மைய அரசு’, ‘நடுவண் அரசு’, ‘மத்திய அரசு’, ‘ஒன்றிய அரசு’ இவற்றுள் பொருத்தமானதைக் காட்டுக” என்று தேர்வில் ஒரு கேள்வி இருந்தால், கேள்வியில் குறை என்று சொல்ல மாட்டோம்.

“இணைச் சொல்லா என்ற பிரச்சினையை விடுங்கள், ‘ஒன்றியம்’ என்பதற்குப் பொருள்தான் என்ன?” என்றும் சிலர் கேட்கக்கூடும். சொல் தன் பொருளை எப்படிப் பெறுகிறது என்று அவர்களுக்கு விளக்க வேண்டும். கடலையை உடைப்பதுபோல் சொல்லிலிருந்து பொருளை எடுத்துக்கொள்வது இல்லை. பொருள் சொல்லுக்குள் இல்லை. சொல் தன் அளவிலேயே, சுய இயக்கத்தில் பொருள் தராது. மற்ற சொற்களிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதில்தான் சொல்லின் பொருள் இருக்கிறது. ‘அந்தி’ என்ற சொல் ‘விடியல்’ என்பதிலிருந்து அர்த்தம் பெறுவதுபோல்.

‘ஒன்றிய அரசு’ என்பது ‘மத்திய அரசி’லிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதுதான் அதன் பொருள். புதிய சமன்பாட்டுக்கான சொல்லாடலாகத் திரண்டுகொள்ளும் ‘ஒன்றிய அரசு’ மத்திய அரசை எப்படி அவதானிக்கலாம் என்பதை மட்டும் சொல்லவில்லை. மாநில அரசின் சுய அடையாளமும் அங்கேயே சுரக்கிறது. அதற்கு வந்த எதிர்ப்பே தான் கட்டிய வேடத்தில் அது கச்சிதமாகப் பொருந்திக்கொள்ள உதவியது. மாநில அரசு கோருவதை மத்திய அரசு ஏற்றாலும் மறுத்தாலும் இனி அதை ‘ஒன்றியம்’ என்ற உரைகல்லில் உரைத்து மாற்று காண்பார்கள்.

பொருளின் விளையாட்டுக் களம்

பொருள் முடிவாகிவிட்டதாக மூடியிருந்த ‘மத்திய அரசு’, ‘ஒன்றிய அரசு’ இரண்டுமே இப்போது திறந்துகொண்டன. ஒரு சொல்லின் பொருள் கூறு ஏதாவது அழுத்தமாக வேண்டுமானால், அதை மற்றதன் பொருள் கூறுகளை மாற்றி அமைப்பதால் எளிதாகச் செய்ய முடியும். இரண்டுமே பரந்து கிடக்கும் அர்த்த மைதானங்கள். இதைத்தான் ‘ஒன்றியம்’ என்ற சொல் சாதித்தது. சொல்லுக்கு என்றைக்குமே பொருள் நிலைக்காதா என்று கேட்கக்கூடும். சொல் தனக்கு வேண்டிய பொருளை ஈர்த்துக்கொள்ளச் செய்வது அரசியல் சொல்லாடலின் நுட்பமான இயக்கம்; குற்றமல்ல. இதற்கு ஈடுகொடுக்கும் இன்னொரு சொல்லாடலைக் கட்டமைக்க முடியுமானால் அதுதான் பொருத்தமான எதிர்வினை. அப்போதும் நீங்கள் செய்யப்போவது இதே சொல் அரசியல்தான்.

அதாவது, சொல்லின் பொருள் உறைந்துபோகாமல் பார்த்துக்கொள்வது. சித்தாந்த நீரோட்டத்தில் மையச் சொற்களின் பொருள் நிலைப்பதில்லை. ‘இந்திய அரசு’, ‘ஒன்றிய அரசு’ - இப்படி எதுவானாலும் அதனதன் பொருள், அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளவாறுதானே என்றும் கேட்கலாம். சட்டங்களின் சொற்களுக்குக்கூட அந்தந்தச் சட்டங்களிலேயே விளக்கம் இருக்கிறதே என்றும் சொல்லலாம். எதைச் சொல்ல ஒரு சொல் வருகிறது என்பதற்கு யூஜின் நீடா சில விளக்கங்களைத் தொகுத்துள்ளார். நான் என்ன நினைத்து ஒரு சொல்லைச் சொல்கிறேனோ அதுதான் அதன் பொருள்.

கேட்பவர் என்ன புரிந்துகொள்கிறாரோ அதுதான் பொருள். பொதுவாக, மக்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதுவேதான் பொருள். துறை வல்லுநர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் சொல்லின் பொருள். இப்படி விளக்கங்கள் பல. அரசமைப்புக்குச் சட்ட வல்லுநர்கள் என்ன பொருள்கொள்கிறார்களோ அதுதான் அதன் பொருள் என்பது ஏற்கக்கூடியதுதான். ஆனால், அந்தப் பொருளும் சித்தாந்த நிலவரங்களுக்கு ஏற்ப மாறும் என்பதும் யதார்த்தம்.

சொல்லாடல் வசமாகும் அரசியல்

இந்திய அரசுக்காகத் தமிழ்நாடு அரசின் சட்டத் துறை அரசமைப்புச் சட்டத்தை 2009-ம் ஆண்டு மொழிபெயர்த்துள்ளது. அதிகாரபூர்வமான இந்த மொழிபெயர்ப்பில், ‘ஒன்றியம்’ என்பது தாராளமாகப் புழங்குகிறது. அந்தச் சொல்லை ஆங்கில மூலத்தோடு பொருத்திப் பொருள்கொள்ள வேண்டும். ஆங்கிலச் சொல்லுக்கு அரசமைப்பின் பின்னணியில் பொருள் தேட வேண்டும். அரசமைப்புக்கோ ஐரோப்பிய முன்மாதிரிகளில் பொருள் அறிய வேண்டும்.

தத்துவவியலர் தெரிதா சொல்வதுபோல், சொல்லின் பொருள் எந்தக் கோட்டிலும் நிலைகொள்வதில்லை. ‘ஒன்றியம்’ முறையான சொல்லாவது அது அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பில் இருப்பதால் மட்டுமே அல்ல. அது மாற்றுச் சொல்லாடலின் மையம். புதுச் சொல்லாடல்கள்தானே அரசியல் மாற்றத்தின் ஆரம்பமும் அடையாளமும்!

- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x