Published : 06 Jan 2022 06:55 AM
Last Updated : 06 Jan 2022 06:55 AM
வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்ததாலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி மழை கொட்டியதாலும் காவிரிப் படுகையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 20.11.2021 வரையிலான கணக்கெடுப்புப்படி 1,36,500 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கின. அவற்றில் நெல் பயிரிடப்பட்ட 90,000 ஹெக்டேர் நிலங்களும் அடங்கும். தோட்டக்கலைப் பயிர்களில் 4,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட மரவள்ளிக் கிழங்குகள் உள்ளிட்டவை சேதமாகின. காவிரிப் படுகை மாவட்டங்களிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் பகுதிகளிலும் இந்தப் பாதிப்பு அதிகம்.
மனித உயிர்கள் இழப்பு, உணவு உற்பத்திப் பாதிப்பு, கால்நடைகளின் இழப்பு, மக்கள் வசிக்கும் வீடுகள் சேதம் என்று பேரிடர் இந்த ஆண்டும் மக்கள் வாழ்வை முடக்கியது. தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் உதவி கேட்டு முறையீடு செய்தது. மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டின் பாதிப்புகளைக் கணக்கெடுக்க ஒரு குழுவை அனுப்பியது. மத்திய உள்விவகாரங்கள் அமைச்சக இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 உறுப்பினர்கள் அடங்கிய குழு தமிழ்நாடு வந்தது. இரு பிரிவுகளாகப் பிரிந்து, இந்தக் குழுவினர் மழை வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டனர்.
தங்கள் ஆய்வை முடித்த பின் 24.11.2021 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய வேளாண்மைக் கூட்டுறவு மற்றும் உழவர் நலத் துறை இயக்குநர் விஜய்ராஜ்மோகன் “மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டோம். அதுபற்றிய அறிக்கையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் மத்திய அரசுக்கு அளிப்போம்” என்று கூறினார். அதன்பின் எந்த அறிவிப்பும் வந்தபாடில்லை.
தமிழ்நாடு அரசுத் தரப்பில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைத் தற்காலிகமாகச் சீரமைக்க முதல் கட்ட மதிப்பீடாக ரூ.549.63 கோடி, நிரந்தரமாகச் சீரமைக்க ரூ.2,079.89 கோடி என மத்திய அரசிடம் உதவி கோரப்பட்டது. மொத்தம் ரூ.2629.29 கோடியைத் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யும்படி தமிழ்நாடு அரசு கோரியது. இந்த ஆய்வுக்குப் பின் சமர்ப்பிக்கப்பட்ட முதல் கட்ட அறிக்கையில், கோரப்பட்ட ரூ.549.63 கோடி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சேதங்கள் ரூ.521.28 கோடி என்று மதிப்பிடப்பட்டுத் தற்காலிகச் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.1070.92 கோடியும் நிரந்தரச் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.3554.88 கோடியும், ஆக மொத்தம் ரூ.4,625.80 கோடி கூடுதலாக வழங்கும்படி தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கேட்டது.
ராஜராஜசோழன் காலத்திலேயே இயற்கையின் கோரதாண்டவம் நிகழ்ந்திருக்கிறது. காவிரியில் வெள்ளத்தால் கரைகள் உடைப்பெடுத்துப் பலத்த சேதம் ஏற்பட்டபோது, விவசாயிகளால் அரசுக்கு வரி கட்ட முடியவில்லை. மன்னரிடம் வரித் தள்ளுபடி கோரி உழுகுடிகள் விண்ணப்பித்துள்ளனர். ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்ற நூலில் வே.தி.செல்வம் இதனைப் பதிவுசெய்திருக்கிறார். தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலும் காற்று, புயல், சூறாவளி ஆகியவற்றின் கொடுங்கரங்கள் உழவர்களின் கழுத்தை வளைத்துள்ளன. 1677, 1681, 1858, 1850, 1920, 1924 ஆகிய ஆண்டுகளில் வெள்ளம் காவிரிப் பகுதியை வாரிச் சுருட்டியுள்ளது. அப்போதைய அரசாங்கங்களும் வரித் தள்ளுபடி உள்ளிட்ட விவசாய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
1681-ல் 10,000 பேருக்கும் மேல் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளனர். வெள்ளி, தங்கம், ரொக்கம் ஆகியவற்றையும் மக்கள் இழந்தனர். குறிப்பாக, 1858-ல் ஏற்பட்ட வெள்ளம் குறித்து ஜெரே சுவாமிகள், லவூயெனான் சுவாமிகள் உள்ளிட்ட கிறித்தவப் பாதிரிமார்கள் குறிப்புகள் எழுதியுள்ளனர். அந்த வெள்ளத்தில் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆகிய நதிகளில் வெள்ளம் கரைகளை உடைத்துள்ளது. கல்லணையை ஒட்டியுள்ள குழிமாத்தூர், கடம்பங்குடி, பூண்டி ஆகிய ஊர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு அழிவைச் சந்தித்தன. கொள்ளிடக் கரைகளில் 4,000 மனிதர்களின் சடலங்கள் கிடந்தன. அப்போதைய அரசு அன்றைய மதிப்பில் ரூ.9 லட்சம் வரை வரித் தள்ளுபடி செய்ததாக பாதிரியார்களின் குறிப்புகள் கூறுகின்றன.
இதற்கு முன் 1823-24 இயற்கைப் பேரிடரிலும் அரசு செய்த 7% வரையிலான வரி தள்ளுபடி குறித்துக் குறிப்புகள் உள்ளன. சுதந்திர இந்தியாவிலும் வெள்ளத்தின் பேரிரைச்சல், இயற்கைப் பேரிடரின் கோர தாண்டவம் ஆகியவை தொடர்கின்றன. அப்போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நிவாரணக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
அண்மையில் ஏற்பட்ட சில இயற்கைப் பேரிடர்களின் விவரமும் தமிழ்நாடு அரசு கோரிய உதவியையும் மத்திய அரசு வழங்கிய தொகையையும் பார்ப்போம்: 2011-ல் தானே புயல் பாதிப்புகளுக்குத் தமிழ்நாடு அரசு கோரியது ரூ.5,249 கோடி, கிடைத்தது ரூ.500 கோடி மட்டுமே. 2015 வெள்ளப் பாதிப்புகளுக்குக் கேட்டது ரூ.25,912 கோடி. கிடைத்தது ரூ.2,195 கோடி. 2016-ல் வார்தா புயலின்போது கேட்டது ரூ.22,573 கோடி, கிடைத்தது ரூ.266 கோடி, 2017-ல் ஒக்கி புயலின்போது கேட்டது ரூ.5,255 கோடி, கிடைத்தது ரூ.133 கோடி. 2018-ல் கஜா புயலின்போது கேட்டது ரூ.15,000 கோடி. கிடைத்தது ரூ.1,146 கோடி மட்டுமே.
தமிழ்நாடு அரசு கோரும் தேசியப் பேரிடர் நிவாரணம் முழுமையாகவும் கிடைப்பதில்லை, உரிய காலத்திலும் கிடைப்பதில்லை என்கிற ஆதங்கம் விவசாயிகளிடம் தொடர்ந்து நிலவுகிறது. அதைப் போலவே மத்திய அரசின் பரிந்துரைகளும் வெளிப்படையாக இல்லை. நடப்பாண்டு குறுவைப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியபோது, நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு குறித்து தமிழ்நாடு அரசால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பை அறுவடைக் காலம் முடிந்த பிறகே மத்திய அரசு வெளியிட்டது.
இரண்டு விதமான தீர்வுகளை இத்தருணத்தில் விவாதிக்க வேண்டும். ஒன்று, உரிய காலத்தில் வழங்கப்படும் நிவாரண உதவிகள் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஓரளவாவது காப்பாற்றும். மற்றொன்று, காலம் நெடுகிலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பேரிடர்களால் உழவர்கள் அல்லல்படுவதைத் தடுக்க அறிவியல்பூர்வமான திட்டங்களை வகுக்க வேண்டும். பருவநிலை மாற்றம் விவசாயத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இந்திய மனித வளக் குறியீடுகளில் முன்னணியிலும் ஜி.எஸ்.டி பங்களிப்பில் நாட்டின் இரண்டாவது இடத்திலும் உள்ள தமிழ்நாட்டுக்கு விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைக்கவும் அவற்றைப் பெறவும் தார்மிக நியாயம் உள்ளது. இனிமேலாவது, மத்திய அரசின் தாமதப் போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.
- வெ.ஜீவகுமார், வழக்கறிஞர், விவசாயிகள் உரிமைச் செயற்பாட்டாளர், தொடர்புக்கு: vjeeva63@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT