Published : 05 Jan 2022 07:40 AM
Last Updated : 05 Jan 2022 07:40 AM

தவறும் வானிலை முன்கணிப்புகள்: தீர்வுதான் என்ன?

ஒரு பேருந்து நிறுத்தத்தில் அனைவரும் குடைபிடித்து நிற்கிறார்கள். ஒருவர் மட்டும் குடையில்லாமல் மழையில் நனைகிறார். பக்கத்தில் இருப்பவரிடம் குடை இல்லாதவர் எரிச்சலுடன் இப்படிக் கேட்கிறார், “நான் வானிலைத் துறையில் வேலை பார்க்கிறேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று. மழை பெய்யும் என்பதை ஊரே அறிந்திருக்கும்போது, வானிலைத் துறை முன்னறிவிப்புகள் மட்டும் ஏன் அதை கணிக்கத் தவறுகின்றன என்கிற கேள்வியை 2007-ல் ஆர்.கே.லக்ஷ்மண் வரைந்த ஒரு கேலிச்சித்திரம் நறுக்கென உணர்த்திவிடுகிறது. 14 ஆண்டுகள் கடந்தும் இந்திய வானிலை ஆய்வுத் துறை அதேபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்டுதான் வருகிறது.

2021 நவம்பர் 7, அதிகாலையில் பெய்த 21 செ.மீ. மழை, டிசம்பர் மாதம் 30-ல் ஒருசில மணி நேரத்தில் 15 செ.மீ-க்கு மேல் பெய்த மழையைப் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருக்கவில்லை. இந்தப் பெருமழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கிவிட்ட பிறகு, மழை தீவிரமாக இருக்கும் என்று அந்த மையம் எச்சரிக்கை விடுத்தது மக்களிடையே ஏமாற்றத்தையும் அயர்ச்சியையும் ஏற்படுத்தியது. டிசம்பர் 30 திடீர் மழை குறித்து எச்சரிக்கத் தவறியதாகக் குற்றம்சாட்டி, சென்னை வானிலை ஆய்வு மைய முன்கணிப்பு வசதிகளை மேம்படுத்தும்படி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

நவம்பர் 6 அன்று ஒரே இரவில் பெய்த 21 செ.மீ. மழை 2015-க்குப் பிறகு பெய்த மிகப் பெரிய மழை. அதே நேரம், மண்டல வானிலை ஆய்வு மையத்தின் 3 ரேடார்களில் சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடாரும் காரைக்காலில் உள்ள ரேடாரும் அதற்கு முன்னதாகவே பழுதுபட்டிருந்தன. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் இந்த ரேடார்களில் பழுது நீக்கப்பட்டிருக்கவில்லை. மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இது குறித்துப் பிரச்சினையை எழுப்பிய பிறகுதான் அவை பழுதாகியிருந்த தகவலே பொது வெளிச்சத்துக்கு வந்தது. அந்தக் காலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ரேடார் தரும் தகவல்களைக் கொண்டே சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கணிப்பை வெளியிட்டுவந்தது.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு வானிலை பலூனில் ரேடியோசோண்டே எனப்படும் கருவி வைக்கப்பட்டு, சென்னை, காரைக்காலில் பறக்கவிட்டு, வானிலை ஆய்வுத் துறை ஆராயும். இந்தக் கருவியே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறித்த தகவலைத் தரும். இந்தப் பரிசோதனை பல மாதங்களாகச் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட பகுதியில்-ஊரில் எவ்வளவு மழை பொழியும் என்பதையும் குறுகிய காலத்தில் கனமழை பெய்யும் Mesoscale நிகழ்வுகளையும் முன்கணிப்பது சிரமம் என்று வானிலை ஆய்வுத் துறை கூறுகிறது.

அறிவியல் அடிப்படை

முந்தைய தரவுகள், கணிப்புகள், கணினி மாதிரிகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மழை, புயல், வெள்ளம் குறித்த எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுவருகிறது. வானிலைக் கணிப்பில் குறுகிய கால முன்கணிப்பு – குறிப்பிட்ட நிமிடத்திலிருந்து அடுத்த ஆறு மணி நேரத்துக்கு வழங்கப்படும் இந்தக் கணிப்பில் காற்றின் வேகம், காற்று வீசும் திசை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

டாப்ளர் வானிலை ரேடார் குறுகிய கால முன்கணிப்புக்குப் பயன்படுகிறது. அதேநேரம் நீண்ட கால முன்கணிப்பு என்பது அதிக காலத்துக்கானது. செயற்கைக்கோள் படங்கள் இரண்டு வகை முன்கணிப்புக்கும் பயன்பட்டாலும் புயல் போன்றவற்றின் நகர்வைத் தீர்மானிக்கவே பெரிதும் பயன்படுகின்றன. அதே நேரம், செயற்கைக்கோள் படங்கள் தரும் தகவல்களைக் கணினி மாதிரியில் உள்ளிட்டு, குறுகிய கால முன்கணிப்பைத் துல்லியமாகப் பெறுவது கடினம்.

வானிலை முன்கணிப்புக்கு ‘குளோபல் ஃபோர்காஸ்ட் சிஸ்டம்ஸ்’ (GFS) எனப்படும் ஒரே ஒரு மாதிரியை மட்டுமே இந்திய வானிலை ஆய்வுத் துறை பின்பற்றுகிறது. இப்படி ஒரு மாதிரியை மட்டும் பின்பற்றுவது தவறான முன்கணிப்புக்கு வழிவகுக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மண்டல அளவிலான வானிலை முன்கணிப்பு சார்ந்து ஜி.எஃப்.எஸ். மாதிரியில் பிரச்சினை இருப்பதாக, புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் ராஜீவன் தெரிவிக்கிறார். 35 ஆண்டுகளாகத் தென்மேற்குப் பருவமழை குறித்து ஆராய்ந்துவருபவர் இவர்.

முன்னெச்சரிக்கைகளில் கவனம்

புத்தாயிரத்தின் தொடக்க ஆண்டுகளில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறுப்புக்கு எஸ்.ஆர்.ரமணன் நியமிக்கப்பட்டார். அந்தக் காலத்தில் தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளும் பெருகத் தொடங்கியிருந்தன. வானிலை முன்னெச்சரிக்கையைத் தமிழில் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் அவர் கூறிய முறை சாதாரண மக்களையும் கவர்ந்தது. வானிலை முன்னெச்சரிக்கைகள் குறித்து மக்கள் பெரிதாகக் கவனம் கொள்ளாதிருந்த நிலையை அது சற்று மாற்றியது.

2015 சென்னை பெருவெள்ளத்துக்குப் பிறகு சென்னையில் தனியார் வானிலைப் பதிவர்கள் பெருகினார்கள். ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான், ‘சென்னை ரெயின்ஸ்’ ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் எந்த நேர இடைவெளியில் பெருமழை பெய்யும் – குறிப்பிட்ட எந்தப் பகுதியில் புயல் கரையைக் கடக்கும், எப்போது கூடுதல் முன்னெச்சரிக்கை தேவை என்கிற தகவல்களை வழங்கிவருகிறார்கள். சர்வதேச வானிலை மாதிரிகள் இணையத்தில் அளிக்கும் தரவுகளை ஆராய்ந்தே இந்த எச்சரிக்கைகளை அவர்களால் விடுக்க முடிகிறது.

அரசு நிறுவனத்தைப் போன்ற தீர்மானிக்கப்பட்ட பொறுப்புகள் அவர்களுக்கு இல்லையென்றாலும்கூட, சமூக ஊடகங்களில் தங்களைப் பின்தொடர்பவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் அவர்கள் தொடர்ச்சியாக இந்தத் தகவல்களைப் பதிவிட்டுவருகிறார்கள். இப்படித் தனியார் ஆய்வாளர்களே கூடுதல் தகவல்களைத் தர முடியும்போது, அரசு நிறுவனம் இன்னமும் பொத்தாம் பொதுவாக எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருப்பதால் என்ன பயன்?

வானிலை சார்ந்து ஒரு தனிநபர் அதிகபட்சமாக என்ன தெரிந்துகொள்ள விரும்புவார். குறிப்பிட்ட நிகழ்வு எப்போது தீவிரமாக இருக்கும்? அது தன்னை நேரடியாகப் பாதிக்குமா? பாதிப்பிலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது? –இவைதான் ஒருவருடைய எதிர்பார்ப்புகளாக இருக்கும். இது சார்ந்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிடும்போதே மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை 100% சரியாக இருக்க வேண்டுமென யாரும் எதிர்பார்ப்பதில்லை. குறிப்பிட்ட நிகழ்வு சார்ந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கையால், தனக்குப் பயன் கிடைத்ததா என்றே பார்க்கிறார்கள். ஒருவருடைய கைபேசியிலேயே ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தின் வெப்பநிலை, மழையளவு, காற்று வீசும் வேகம் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ளும் நவீனச் செயலிகள் உள்ள நிலையில், வானிலை ஆய்வுத் துறை இன்னமும் பழைய பாணியிலான முன்னெச்சரிக்கைகளை விடுத்துக்கொண்டிருப்பது எப்படிப் பெருமளவு மக்களின் கவனத்தைப் பெறும்?

பருவநிலை மாற்றம்

இந்திய வானிலை ஆய்வுத் துறை கணிதவழி வானிலைக் கணிப்பு மாதிரிகளையே இன்னும் பயன்படுத்திவருகிறது. பிரிட்டன் வானிலை ஆய்வுத் துறையோ முன்கணிப்புக்கு சூப்பர் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகிறது. செயற்கைக்கோள் தரும் தரவுகளைக் காட்சிபூர்வமாகச் சித்தரிக்க சூப்பர் கம்ப்யூட்டர்கள் உதவுகின்றன. இந்தச் செயல்முறை மூலம் ஒருசில விநாடிகளில் திட்டவட்டமான வானிலை முன்கணிப்பைத் தர முடிகிறது.

பருவநிலை மாற்றம் குறித்து உலக வானிலை அமைப்பு, ஐபிசிசி உள்ளிட்டவை தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்துவருகின்றன. இந்திய வானிலை ஆய்வுத் துறை, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளை ஆராய்ச்சிக்கான தரவு சேகரிப்பு சார்ந்து மட்டுமே அணுகிவருவதுபோலத் தெரிகிறது. டிசம்பர் 30-ம் தேதி சென்னையில் சில மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த மழைக்கு பருவநிலை மாற்றத்தின் ஓர் அம்சமான ‘லா நீன்யா விளைவு’ காரணமாக இருக்கலாம் என மேரிலாண்ட் பல்கலைக்கழக வளிமண்டலக்-கடலியல் துறைப் பேராசிரியர் ரகு முருட்டுகுட்டே தெரிவிக்கிறார்.

எனவே, இயற்கைச் சீற்றங்கள் சார்ந்த நடைமுறை முன்னெச்சரிக்கைகளை விடுப்பதற்கு உரிய வகையில் பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகளை மாற்றியமைத்து வானிலை ஆய்வுத் துறை பயன்படுத்த வேண்டும். அப்படித் தொடர்பு ஏற்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் உரிய பலனைத் தராத சம்பிரதாய அறிவிப்புகளாகிவிடும் ஆபத்து இருக்கிறது.

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x