Published : 19 Jun 2014 08:00 AM
Last Updated : 19 Jun 2014 08:00 AM
மொழியில் ‘பன்மை’ தொடர்பாக நாம் அன்றாடம் நிறைய தவறுகள் செய்கிறோம். ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதா’ அல்லது ‘ஒவ்வொரு பூவுமே சொல்கிறதா’ என்பதில் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கே மயக்கம் ஏற்படுகிறது என்றால் சாதாரண மக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
நாம் வழக்கமாகச் செய்யும் பன்மை தொடர்பான பிழைகளையும் அவற்றின் சரியான பயன்பாட்டையும் இங்கே காணலாம்.
1.பிழை: எந்த வீடுகளிலும் எங்கள் தயாரிப்புகளையே பயன்படுத்துகிறார்கள்.
சரி: எல்லா வீடுகளிலும் எங்கள் தயாரிப்புகளையே பயன்படுத்துகிறார்கள் / எந்த வீட்டிலும் எங்கள் தயாரிப்புகளையே பயன்படுத்துகிறார்கள். (‘எந்த’ என்ற சொல்லை அடுத்து வரும் பெயர்ச்சொல் பன்மையில் இருக்கக் கூடாது. ஆனால், ‘எந்தெந்த’ என்ற சொல்லுக்கு அடுத்து வரும் சொல் பன்மையில் இருக்கலாம். எ.டு: ‘எந்தெந்த வீடுகளில் வேப்ப மரம் இருக்கிறது என்று பார்!’)
2.பிழை: எல்லா நாடும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
சரி: எல்லா நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. (எல்லா என்பது பன்மையைக் குறிக்கும் சொல் என்பதால் அதை அடுத்து வரும் பெயர்ச்சொல்லும் பன்மையில் இருக்க வேண்டும்.)
3.பிழை: தொடர்ந்து பத்தாவது நாட்களாக இந்தப் போராட்டம் நடந்துவருகிறது.
சரி: தொடர்ந்து பத்தாவது நாளாக இந்தப் போராட்டம் நடக்கிறது./ தொடர்ந்து பத்து நாட்களாக இந்தப் போராட்டம் நடந்துவருகிறது. (பத்து என்பது பன்மையாக இருக்கலாம். ஆனால், -ஆவது என்ற சொல்லைச் சேர்த்ததால் பத்து நாட்களில் இறுதி நாள் ஒன்றை மட்டுமே அது குறிப்பிடுகிறது.)
4.பிழை: ஒரு மாணவர் ஒருவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
சரி: ஒரு மாணவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்./ மாணவர் ஒருவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். (மாணவரின் எண்ணிக்கையைக் குறிக்க ஒரே ஒரு சொல் இருந்தால் போதுமானது.)
5.பிழை: இந்தச் செய்தியைக் கேட்டு அவர்களுடைய மனங்கள் புண்பட்டன.
சரி: இந்தச் செய்தியைக் கேட்டு அவர்களுடைய மனம் புண்பட்டது. (அவர்களுடைய மனம், அவர்களுடைய நிலை, அவர்களுடைய உயிர் என்றுதான் வர வேண்டும்.)
மறந்துபோன சொல்:
பாட்டில் என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சில காலம் வரை புட்டி என்ற சொல்லைப் பயன்படுத்திவந்தார்கள். ஒரு கட்டம் வரை மது பாட்டிலை மட்டும் புட்டி என்று சொல்லும் வழக்கம் இருந்தது. புட்டிப்பாலும் புழக்கத்தில் இருந்தது. தற்போது அந்த வழக்குகள் மறைந்துபோய்விட்டன. புட்டி என்றபொருள் கொண்ட சீசா என்ற சொல்லும் தற்போது புழக்கத்தில் இல்லை.
சொல்தேடல்:
ஒன்றின் மேற்பரப்பைத் தொடும்போதோ பார்க்கும்போதோ அது தரும் உணர்வையும் அதன் தோற்றத்தையும் குறிக்க ஆங்கிலத்தில் ‘டெக்ஸ்ச்சர்’ (texture) என்ற சொல் உண்டு. இதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
விடை, அடுத்த வாரம் பாருங்கள்!
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT