Published : 31 Dec 2021 08:12 AM
Last Updated : 31 Dec 2021 08:12 AM
பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிமாற்றத்தைச் சந்தித்திருக்கிறது தமிழ்நாடு. புதிய முதல்வர் பதவியேற்று ஏறக்குறைய எட்டு மாதங்களாகிவிட்ட பிறகும் ‘முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்...’ என்று எல்லா பக்கங்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஐம்பதாண்டுகளாக திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான சகோதர யுத்தத்தில் பகைமை பாராட்டாமல், பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள விரும்புகிறார் மு.க.ஸ்டாலின். திராவிட இயக்கத்தின் மாணவர் அரசியலில் முன்னோடித் தலைவர்களான க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன் இருவருக்குமே சிலை நிறுவி, அவர்களது நூல்களை நாட்டுமையாக்கியிருப்பதையே அதற்கு ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கும் அமைச்சரவையில் கணிசமான இடங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த காலங்களிலும் இவ்வாறு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில்லை. அதே வேளையில், கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாகப் பதவி வகித்த முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் அடுத்தடுத்து தவணை முறைச் சோதனைகளும் நடந்துவருகின்றன. ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட புதிய பல்கலைக்கழகம் அதே பெயரில் தொடரவும் அனுமதிக்கவில்லை. எனவே, முதல்வரின் அமைதிக்குப் பின்னால் ஆழமும் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
கரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், அடுத்த சில நாட்களிலேயே கரோனா சிகிச்சைப் பிரிவுக்குக் கவச உடையோடு சென்று அதிசயிக்கவைத்தார். வயதுவந்தோருக்கான தடுப்பூசிகளைப் போடுவதில் அவர் தலைமையிலான அரசு எடுத்துவரும் தீவிர நடவடிக்கைகள் மக்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. வாரந்தோறும் நடத்திவரும் தடுப்பூசித் திருவிழாக்கள் பெருவெற்றி பெற்றுள்ளன. மயங்கிக் கிடந்த குரங்குக்கு செயற்கை சுவாசம் அளித்து உயிர்கொடுக்க முயன்ற ஓட்டுநர் பிரபு, திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய விரிசலைக் கண்டவுடன் அங்கு வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுவதற்கு உதவிய தனியரசு என்று பாராட்டுக்குரியவர்களை நேரிலேயே அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் முதல்வர்.
சமீபத்தில், தமிழ்த் தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாக அறிவித்ததும், ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கத்தைத் தொடங்கியுள்ளதும் மக்களைக் கவர்ந்துள்ளது. ஒருசில தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டாலும் இன்னும் சில வாரங்களில் இரண்டாவது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டிய நிலையிலும், கடுமையான விமர்சனங்கள் எழாமல் புதிய ஆட்சியின் தேனிலவுக் காலத்தை வெற்றிகரமாகத் தொடர்வதும் ஆச்சரியமான ஒன்றுதான்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில், இன்னும் உட்கட்சிப் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை. இணைபிரியாத இரட்டைத் தலைமை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்ற கேள்வி எழுந்தாலும், சசிகலா மீதான எதிர்பார்ப்புகள் மிகைப்படுத்தப்பட்டவையோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. திமுக கூட்டணியின் தோழமைக் கட்சிகள் இன்னும் தேர்தல் மனநிலையிலிருந்து இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. 2024 மக்களவைத் தேர்தல் வரைக்கும் இந்தக் கூட்டணியை தோழமைக் கட்சிகள் விரும்புகின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பு வகித்த எல்.முருகன், சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராகிவிட்டார்.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாக ஏற்றுக்கொண்டுள்ளார். புதுச்சேரி வரலாற்றிலேயே ஒரு புதுமையாக ஆளுநர் உரையைத் தமிழிலேயே வாசித்துள்ளார் தமிழிசை சௌந்தராஜன்.
திரைப்படத் துறைக்கு வழங்கப்படும் நாட்டின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றிருக்கிறார் ரஜினிகாந்த். அரசியல் துறைக்கு அடியெடுத்து வைப்பதற்கு இனி வாய்ப்பே இல்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்திவிட்டார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசன் மும்முனைப் போட்டியில் வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டார். வடிவேலு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளதில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. தனுஷ், இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டு பிரபலமாகப் பேசப்பட்ட திரைப்படங்களில் சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ அரசியல் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இருளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான வீட்டுமனைப் பட்டா போன்றவற்றை ஆட்சியாளர்கள் நிறைவேற்றித் தரவும் காரணமாக அமைந்தது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட தனி இடஒதுக்கீடுச் சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காகத் தற்போது அச்சட்டம் காத்து நிற்கிறது. ராஜீவ் கொலைவழக்கில் தொடர்புடைய எழுவரின் விடுதலை, ஆட்சி மாறிய பின்னும் கேள்விக்குறியாகவே தொடர்கிறது. என்றாலும், சிறைவிடுப்பு வழங்கி இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கத் தொடங்கியிருக்கிறது திமுக. நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து திமுக நிறைவேற்றியுள்ள சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்குமா என்று உறுதியாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் கைதுசெய்யப்படுவதும் தொடர்ந்தபடியே உள்ளது.
புற்றுநோய்ச் சிகிச்சைக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்ட மருத்துவர் சாந்தா, இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மக்கள் இலக்கியத்தின் முன்னோடி கி.ராஜநாராயணன், பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், கே.வி.ஆனந்த், பாடலாசிரியர்கள் புலமைப்பித்தன், பிறைசூடன் ஆகியோரின் மறைவு இந்த ஆண்டின் துயரங்கள்.
கீழடியில் நடந்த அகழ்வாய்வு முடிவுகளின் தாக்கத்தால், தொல்லியல் சார்ந்து தமிழ்நாட்டில் ஒரு புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. வேளாண்மைக்கு என்று முதன்முதலாக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதாரப் பாதிப்புகளால் மாநிலத்தின் நிதிச் சுமை அதிகரித்துள்ளதை மக்களும் புரிந்துகொண்டுள்ளனர். எனவே, அரசிடமிருந்து உடனடியாக எந்தப் பெரிய எதிர்பார்ப்பும் எழவில்லை.
பெருந்தொற்றின் காரணமாக, கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் பள்ளிக்கு வருவது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டது. நடப்புக் கல்வியாண்டில் உரிய முன்னெச்சரிக்கைகளோடு அவர்களைப் பள்ளிக்குத் திரும்பச் செய்வதற்குத் தீவிர முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இடைநிற்றலைத் தடுக்க ‘இல்லம் தேடி கல்வி’ போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. என்றாலும், மீண்டும் இதோ உருமாறிய ஒமைக்ரான் தொற்றின் பரவல் தொடங்கியுள்ளது.
விடைபெற்றுச் செல்லும் 2021-ல் நடந்த ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டில் காட்சி மாற்றங்களையும் உருவாக்கியிருக்கிறது. மாற்றங்களுக்கான தொடக்கம் என்று அதை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், பெருந்தொற்றும் அதன் பாதிப்புகளும் முழுமையாக நீங்கும்வரை, ஒரு தேக்க நிலையைச் சந்தித்துதான் மீள வேண்டியிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT