Published : 29 Dec 2021 08:34 PM
Last Updated : 29 Dec 2021 08:34 PM
கரோனா எனும் பெருந்தொற்று மனித சமுதாயத்தை ஆட்கொண்ட ஒருசில மாதங்களிலேயே ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசியை நோக்கிய நகர்வைத் தொடங்கிவிட்டனர். இன்று 2 வயதுக் குழந்தையில் தொடங்கி உலகின் மிக மூத்த மனிதர் போட்டுக் கொள்ளும் அளவுக்கு கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் வந்துவிட்டன. இன்னமும் கூட முதல் தடுப்பூசியைக் கண்டறிந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தனது ஆராய்ச்சிகளை முடித்துவிடவில்லை. கரோனா எப்படி உருமாறினாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் நிரந்தரமான தடுப்பூசி ஒன்றை தயாரிக்கும் முனைப்பில் இருக்கின்றது. அப்படித்தான் ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், நம்மூரின் சீரம் இன்ஸ்டிட்யூட், பாரத் பயோடெக் ஏன் இந்திய அசராங்கத்தின் டிஆர்டிஓ எனப் பலமுனைகளிலும் கரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசிகள் மேம்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
ஆனால் மனித சமுதாயத்தை 1400 ஆண்டுகளாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காசநோய்க்கான தடுப்பூசியின் தற்போதைய நிலை என்னவென்பதை, காசநோய் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நூற்றாண்டு விழா கொண்டாடும் இவ்வேளையில் நாம் தெரிந்துகொள்வது அவசியம்.
அடிப்படை புள்ளிவிவரம்: 2020ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி 27 லட்சம் இந்தியர்கள் காசநோயாளிகள். அவர்களில் தினமும் 1,200 பேர் இறப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். தினமும் 198 நாடுகளில் 4,000 பேர் காசநோயால் இறக்கின்றனர். 28,000 பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக காசநோயாளிகளில் 30% பேர் இந்தியர்கள்.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களை சற்றே இன்னு ஆழ அகலப் பார்த்தோம் என்றால் இன்னும் மருத்துவ உலகம் உடனடியாக கவனிக்கத்தக்க தகவல்கள் கிடைக்கும்.
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 1 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். தடுக்கக்கூடிய குணப்படுத்தக்கூடிய நோயாக இருந்தும் கூட காசநோயால் ஆண்டுதோறும் 15 லட்சம் பேர் இறக்கின்றனர். இன்றும் உலகின் மிகக் கொடிய தொற்றுநோயாக காசநோய் இருக்கின்றது. எச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் காசநோயால் இறக்கின்றனர். ஆப்பிரிக்காவில் மட்டும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களில் 32% பேர் காசநோய் தீவிரத்தால் உயிரிழக்கின்றனர்.
காசநோய் பாதிப்பு குறைந்த வருவாய் கொண்ட நாடுகளிலேயே அதிகமாக இருக்கிறது. ஆனாலும், காசநோய் உலகம் முழுவதுமே இருக்கின்றது. உலகின் காசநோயாளிகளில் பாதிப் பேர் வங்கதேசம், சீனா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளில் இருக்கின்றனர்.
உலக மக்கள் தொகையில் 4-ல் ஒரு பங்கு காசநோய் கிருமியின் தொற்றுக்கு ஆளாகிறது. ஆனால், இவர்களில் 5 முதல் 15% பேர் மட்டுமே காசநோயாளிகள் ஆகின்றனர். மற்றவர்களுக்கு காசநோய் தொற்று இருந்தாலும் அவர்களுக்கு அது நோயாகாமல் மற்றவர்களுக்கு மட்டுமே பரப்பக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
ஆனால், முறையான, சரியான ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் காசநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். இது மட்டுமே நம்பிக்கை தரும் செய்தி.
இந்த நம்பிக்கையைக் கொண்டே 2025-ம் ஆண்டு ‘காசநோய் இல்லாத இந்தியா’ எனும் இலக்கை நோக்கி மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காசநோயை ஒழிப்பதற்கான உலக இலக்கும் 2030 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில்தான் அந்த முக்கியமான கேள்வி எழுகிறது?
மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியின் அவசியம், அவசரம் என்ன? காசநோய்க்கு தற்போது உலகம் முழுவதும் பிசிஜி தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆல்பர்ட் கால்மெட் (Albert Calmette), கமில் கியூரான் (Camille Guerin) எனும் இரண்டு பிரெஞ்சு அறிவியலாளர்கள் பி.சி.ஜி. தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர்.
பிசிஜி (BCG) தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 2021ஆம் ஆண்டுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1921-ல் முதன்முதலாக மனிதர்களுக்கு காசநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கரோனாவுக்கான தடுப்பூசி போல் அதிவேகமாகக் காசநோய் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. 13 ஆண்டுகளாக கடும் பிரயத்தனத்திற்குப் பின்னரே இந்தத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. பிசிஜி தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நூறு ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியின் அவசியம், அவசரத்தைப் பற்றிப் பேசுவோம்.
பிசிஜி தடுப்பூசி குறித்து மதுரை அரசு மருத்துவமனை நுரையீரல் துறை மருத்துவ நிபுணர் இளம்பரிதி கூறியதாவது:
''பிசிஜி தடுப்பூசியானது குழந்தைகளை கொடுந்தொற்றுகளில் இருந்து தற்காக்கிறது. குருனைக் காசநோய் (Miliary Tuberculosis) தொடங்கி, நுரையீரலுக்கு வெளியான காச நோய் (ExtraPulmonary Tuberculosis), டிபி மெனின்ஜிடிஸ் (TB Meningitis) எனப்படும் மூளை காசநோய் ஆகியனவற்றில் இருந்து குழந்தைகளைத் தற்காக்கிறது. இதைத் தாண்டி காசநோய் ஏற்படாமலேயே பிசிஜி தடுப்பூசி தடுக்கிறது என்று அறுதியிட்டுக் கூறும் அளவுக்கு ஆய்வு முடிவுகள் ஏதுமில்லை.
உலக அளவில் காசநோய் தடுப்பு குறித்த ஆராய்ச்சிகளுக்குப் போதுமான நிதி இல்லாததும் காசநோய்க்கான மருந்துகள், தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பான ஆராய்ச்சிகள் பின் தங்கியிருப்பதற்கு ஒரு காரணம். காசநோய் சிகிச்சையைப் பொறுத்தவரையில் இன்றைக்கு சிகிச்சைக்கான மாத்திரை, மருந்துகள் நிறைவாகவே இருக்கின்றன. அவற்றை நோய் பாதித்தோர் முறையாக, இடையில் சிகிச்சையை நிறுத்தாமல் மேற்கொண்டாலே காசநோயை குணப்படுத்திவிடலாம். இன்னும், மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகளுக்கான ஆராய்ச்சி நடக்க வேண்டும், தடுப்பூசி வர வேண்டும் என்பதுதான் என்னைப் போன்றோரின் விருப்பமும் எதிர்பார்ப்பும் கூட''.
இவ்வாறு அவர் கூறினார்.
பிசிஜியின் செயலாற்றல் - ஒரு பார்வை:
ஒரே ஒரு டோஸ் பிசிஜி தடுப்பூசி காசநோய்க்கு மட்டுமல்லாமல் பல நெஞ்சக நோய்களுக்கும் தீர்வாக இருக்கிறது. ஏன் தொழுநோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சிறுநீரகப்பை புற்றுநோய்க்கும் (bladder cancer) அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாக இருக்கிறது.
காசநோய் கிருமி எங்கெல்லாம் இருக்கிறதோ, எங்கெல்லாம் நோயாளிகள் அதிகமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் பிசிஜி தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. அதன்படி உலகம் முழுவதும் 64க்கும் மேற்பட்ட நாடுகளில் பிசிஜி தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 195 நாடுகளில் 167 நாடுகளில் பிசிஜி தடுப்பூசி செலுத்தும் பழக்கம் இருக்கிறது. உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் தடுப்பூசியாக பிசிஜி தடுப்பூசிதான் இருக்கிறது. பிசிஜி தடுப்பூசி மிகவும் விலை குறைந்த தடுப்பூசியாகவும் இருக்கின்றது.
அப்புறம் ஏன் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி தேவை என்ற சந்தேகம் உண்டாகலாம். அதில் பூகோளச் சிக்கல் இருக்கிறது. புவிமையக் கோடு (பூமத்தியரேகை, Equator) இது பூமியை தெற்கு, வடக்கு எனப் பிரிக்கிறது. இந்தக் கோட்டில் இருந்து விலகி நிற்கும் நாடுகளில் பிசிஜி தடுப்பூசியின் ஆற்றல் அதிகமாகவும் இந்தக் கோட்டை ஒட்டியுள்ள நாடுகளில் இதன் தடுப்பாற்றல் சற்று குறைவாகவும் உள்ளது. இதனால்தான், இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, மலாவி ஆகியனவற்றில் 15, 16 வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு காசநோய் பாதிப்பு ஏற்படுவது அதிகமாக இருக்கிறது. அதேவேளையில் அண்மையில் அமெரிக்காவின் அலாஸ்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பரிசோதனையில் ஒரு தடவை அளிக்கப்படும் பிசிஜி தடுப்பூசியானது 60 வயது வரை பாதுகாப்பை அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பிசிஜி தடுப்பூசிகள் என்பன இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிசிஜி டோக்கியோ, ரஷ்யா, ஸ்வீடன் ஆகியனவற்றில் இரண்டு பிரதிகள் MPB70 என்ற ஆன்டிஜென் உள்ளது. இதில் மரபணு வரிசைப்படுத்துதலின் படி MPB64 மரபணுவும், மீத்தோஆக்ஸிமைகோலேட் (methoxymycolate) வேதிப்பொருளும் உள்ளன. பிசிஜி பாஸ்டர், கோபென்ஹேகன், க்ளாக்ஸோ, டைஸ் சீக்ரட் லிட்டில் என்ற குழு தடுப்பூசியில் ஒற்றைப் பிரதி MPB70 ஆன்டிஜென் உள்ளது. இதில் methoxymycolate மற்றும் MPB64 மரபணுக்கள் இல்லை.
இவற்றின் மரபியல் ஒப்பீட்டு ஆய்வுகள் 1921-ல் இருந்து 1961 வரை செலுத்தப்பட்ட பிசிஜி தடுப்பூசிக்கு அடங்கிய கிருமிகளில் இப்போது சில டிஎன்ஏ டூப்ளிகேஷன் நடந்துள்ளது. டிஎன்ஏ ரெப்ளிகேஷன் என்பதில் ஒரு மரபணு இரண்டு அச்சு அசல் பிரதிகளாக உருவாகும். டிஎன்ஏ டூப்ளிகேஷனின்போது இரண்டைத் தாண்டி கூடுதல் பிரதிகள் உருவாகும். இந்த மாதிரியான நேரங்களில்தான் பிசிஜி தடுப்பூசியின் செயலாற்றல் கேள்விக்குறியாகிறது. அதனால்தான் புதிய தடுப்பூசிகளின் தேவை அவசியமாகிறது.
காசநோய்க்கு எதிரான முழுமையான எதிர்ப்பாற்றல் என்பது இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். மிகவும் சிறந்த ஆற்றலைத் தரும் தடுப்பூசி என்றால் அது டி செல் T-cell வினையாற்றுதலைத் தூண்டி, CD4, CD8, ஆகியனவற்றை Th1- தொடர்புடைய சைட்டோகைனின்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும். ஆகையால், Th1 ரெஸ்பான்ஸ்களை உருவாக்கும் ஃபார்முலா கொண்ட தடுப்பூசிகள்தான் காசநோய்க்கு எதிரான வெற்றிகரமான தடுப்பூசியாக இருக்க இயலும். இதற்கான முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
கரோனா உலகைத் தாக்கிய குறுகிய காலத்தில் நூறை நெருங்கும் எண்ணிக்கையில் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளும், உலக சுகாதார நிறுவனங்களும் தடுப்பூசிக்கான ஆராய்ச்சிகளுக்கு தாராளமாக நிதியுதவி அளிக்கின்றன. ஆனால், காசநோய்க்கான தடுப்பூசியைத் தயாரிப்பதில் அப்படி ஏதும் முனைப்பு காட்டப்படவில்லை என்பதே பொது சுகாதார மருத்துவ உலகின் குற்றச்சாட்டாக உள்ளது.
லாப நோக்கம் சரியானது தானா? காசநோய் மற்றும் நெஞ்சக நோய்களுக்கு எதிரான சர்வதேச கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் அதன் தலைவர் கை மார்க்ஸ் பேசியது முக்கியத்துவம் வாய்ந்தது.
”காசநோய் ஒழிப்பிற்காக செயல்படும் என்னைப் போன்ற பலரும், கோவிட் 19 தடுப்பூசியை ஒப்பிடும்போது காசநோய்க்கான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை உருவாக்குவதில் சம முயற்சி இல்லை எனக் கருதுகிறோம். இதற்கு போதிய நிதியும் இல்லை. குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை அளிப்பதில் ஏற்பட்டுள்ள தோல்வியும், காசநோய் ஒழிப்பில் சந்தித்துவரும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஏழை நாடுகளின் மனித உயிர்களின் மீதுள்ள மதிப்பின்மையையே காட்டுகிறது.
கரோனா தந்த பாடங்களை காசநோய், இன்னும்பிற தொற்று நோய்கள் ஒழிப்பில் பின்பற்றப்பட வேண்டும். காசநோய்க்கும் இன்னும் பிற தொற்று நோய்கள் ஒழிப்புக்கும் கரோனா ஒழிப்புக்கு செலவழித்ததுபோல் நிதியை ஒதுக்க வேண்டும். அதுதவிர நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். தூது-RNA (Messenger RNA . mRNA) ஆகியனவற்றைப் பயன்படுத்தி தடுப்பூசிகளைத் தயாரிக்க வேண்டும்” என்று கூறினார்.
உலக அளவில் ரத்த அழுத்தத்துக்கும், நீரிழிவு நோய்க்கும் ஆண்டுக்கு ஒரு புது மருந்து வருகிறது. அவற்றிற்கு மருந்து நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைதான் இறுதியானது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் எவ்வளவு விலையிருந்தாலும் வாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டுள்ளனர். ஆனால், காசநோய் பெரும்பாலும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளின் மக்களையே தாக்குகிறது. அப்படியிருக்க அதில் மருந்து நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக அதிகம் செலவழிக்க வாய்ப்பில்லை. மேலும், காசநோய்க்கான மருந்தின் விலையை அரசுதான் நிர்ணயிக்கும். வணிக ரீதியாக லாபம் பார்க்க முடியாது என்பதாலேயே உலகில் காசநோய் மருந்து, தடுப்பூசியில் பெரிய அளவில் முதலீடுகள் இல்லை.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் இனி தனது கவனம் முழுவதையும் காசநோய், மலேரியா ஒழிப்பில் செலுத்தப் போவதாகக் கூறியுள்ளார். ஆகையால் இதுபோன்ற தொண்டுள்ளம் கொண்டவர்களின் உபயத்தால் காசநோய் ஒழிப்பு சாத்தியப்படும் என்பதில் ஐயமில்லை.
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT