Last Updated : 27 Dec, 2021 06:58 AM

3  

Published : 27 Dec 2021 06:58 AM
Last Updated : 27 Dec 2021 06:58 AM

படித்தால் மட்டும் போதுமா? வேலை வேண்டாமா?

செப்டம்பர் 22 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான ‘செவிலியர்களுக்கும் வேண்டும் சமூக நீதி’ கட்டுரை செவிலியர்களுக்கு நடக்கும் அநீதியை வெளிப்படுத்தியது. ஆனால், சென்ற ஆட்சியில் செவிலியர் படிப்பில் நடைபெற்ற அநியாயத்தைப் பற்றி அறிந்துகொள்ளக் கொஞ்சம் தமிழக அரசின் சுகாதாரத் துறையில் நடைபெறும் சில விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

கிராம (நகர) சுகாதாரச் செவிலியர்களின் பணிகளைப் பற்றிப் பார்ப்போம். இவர்களது பணிகள் என்னென்ன என்பதை சென்னை, பொது சுகாதாரம் மற்றும் நோய் மருந்துத் துறை இயக்குநர் 01.11.2010 அன்று ஒரு பட்டியலை அளித்துள்ளார். கர்ப்பகாலப் பராமரிப்பு, பிரசவகாலப் பராமரிப்பு, பிரசவப் பின்காலப் பராமரிப்பு, பச்சிளங்குழந்தைப் பராமரிப்பு, தடுப்பூசி போடுதல் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பராமரிப்பு, வளரிளம் பருவத்தினர் பராமரிப்பு, குடும்பநலம், தாய்சேய் மற்றும் சிறுநோய் சிகிச்சை முகாம்கள், பிறப்பு - இறப்புப் பதிவு செய்தல், அவர்களின் பகுதியில் உள்ள முக்கிய புள்ளிவிவரங்களைச் சேகரித்தல், திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம், தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம், தடுப்பூசிகளால் தடுக்கப்படக்கூடிய நோய்கள் பற்றிய கண்காணிப்பு, இனப்பெருக்கப் பாதை, ஹெச்ஐவி தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, குறிப்பேடுகள், பதிவேடுகள், தகவல் கல்வித் தொடர்பு என்று நீள்கின்றன. இந்தத் தலைப்புகள் ஒவ்வொன்றின் கீழும் 5 முதல் 15 வரை பணிகள் அந்த ஆணையில் தரப்பட்டுள்ளன. இதில் உள்ள இதர வேலைகளில் தற்போது பல பணிகள் அவர்களுக்குத் தரப்படுகின்றன. சுருக்கமாகக் கூறினால், ஒரு கிராமத்தில் அந்த சுகாதாரச் செவிலியரின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு பிறப்பு முதல் இறப்பு வரை இவர்களின் கண்காணிப்பு அவசியம் என்றாகிறது.

இந்திய அளவில் சுகாதாரத் துறையில் தமிழக அரசு சிறப்பான அளவில் உள்ளதற்குக் காரணம், மேலே கூறப்பட்ட வலுவான கட்டமைப்புதான். இந்தக் கட்டமைப்புக்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளும்தான் காரணம். ஆனால், சில ஆண்டுகளாக நடைபெறும் நிகழ்வுகள் அந்தக் கட்டமைப்பின் அடித்தளத்தையே அசைப்பதுபோல இருக்கின்றன. நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஏ.என்.எம். என்ற கிராம (நகர) சுகாதாரச் செவிலியர்களுக்கான கல்வித் தகுதி என்பது 2017 வரை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள 11 அரசு மையங்களில் சத்துணவில் வேலைபார்த்து ப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு (அவர்கள் 42 வயதிற்கு உட்பட்டிருந்தால்) அவர்களைத் தேர்ந்தெடுத்து அரசு மையங்களில் மாதம் ரூ.500 நிதிஉதவி அளித்து, இரண்டாண்டுகள் பயிற்சி முடித்துத் தேர்வுகள் எழுதித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக காலிப் பணியிடங்களில் பணியாற்றப் பணி ஆணை வழங்கப்பட்டுவந்தது. எந்தவித இடைத்தரகரும் இல்லாமல், ஒரு பைசா செலவில்லாமல் பணி ஆணையைப் பெற்று அவர்கள் பணியாற்றிவருகின்றனர்.

ஆனால் 2017-ல் திருச்சியிலுள்ள 4 கல்லூரிகளுக்கு இந்த ஏ.என்.எம். படிப்புக்கான அரசு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கல்லூரிகள் அனுமதிக்குப் பிறகு வருடந்தோறும் குறிப்பிட்ட தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு 2021-22-ல் அரசின் 11 மையங்களையும் சேர்த்து 75 கல்லூரிகள் தொடங்கி நடத்தப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு கல்லூரிக்கும் 20 முதல் 60 பேர் வரை கல்வி கற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வருடத்துக்குச் சுமார் 3,720 மாணவிகள் படிப்பை முடித்து வெளியேறுவார்கள். வருடத்துக்கு 3,720 பேர் என்றால் 5 வருடத்தில் 15,000-க்கும் மேற்பட்டோர் படித்து வெளியேறுவார்கள். ஆனால், இவர்களுக்கான பணியிடம் எங்கே உள்ளது? எப்படி இந்த அளவுக்குக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தார்கள்?

இந்தக் கல்லூரிகளில் மாணவிகளைச் சேர்க்கும்போது, படித்து முடித்தவுடன் அரசுப் பணியிடம், மாத ஊதியம் 30,000-க்கும் மேல் என்று கூறி விளம்பரப்படுத்தி, வருடத்துக்கு 1 முதல் 1.5 லட்சம் வரை கல்வித்தொகை வசூலிக்கிறார்கள். கேட்டால் நாங்கள் கோடிக் கணக்கில் கொடுத்துதான் இந்தக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றோம், நாங்கள் அதைத் திரும்ப எடுக்க வேண்டாமா என்கிறார்கள். ஆகவே, இதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. நன்கு விசாரித்தால் உண்மை வெளியே வரும்.

இங்கு படித்தவர்களுக்குப் பணியிடம் அளிக்க வேண்டுமல்லவா? ஆனால், தனியாருக்கு முதன்முதலில் அனுமதி அளிக்கப்பட்ட 4 கல்லூரிகளில் படித்து 2019-ல் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று, தமிழக அரசு நர்ஸிங் கவுன்ஸில் பதிவுசெய்த முதல் செட் மாணவிகளுக்கே பணியிடம் வழங்கப்படவில்லை.

ஆனால், அதே ஆண்டும் அதற்கு அடுத்த 2020-ம் ஆண்டும் அரசு மையங்களில் தேர்வானவர்களுக்குப் பணியிடம் வழங்கப்பட்டு, அவர்கள் பணிபார்த்துவருகின்றனர். அதாவது, முன்னால் படித்தவர்களுக்கு வேலை தரப்படவில்லை, பின்னால் முடித்தவர்களுக்குப் பணி ஆணை வழங்கப்பட்டுவிட்டது. இருவருக்கும் சான்றிதழ் அளித்தவர் தமிழக அரசின் ஒரே பொது சுகாதாரத் துறை இயக்குநர்தான். ஏனிந்த வேறுபாடு?

அரசு வேலை கட்டாயம் என்று சேர்ந்தவர்களைத் தனியார் வேலைக்குச் செல்லக் கூறுவதும், நிரந்தர ஊதியம் என்று எண்ணிப் படித்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியக் கூறினால் அது நியாயமாக இருக்குமா? காலமுறை ஊதியம் வாங்கும்போதே இவர்களின் பணிக்கு இந்த ஊதியம் குறைவு என்று அவர்கள் குமுறிக்கொண்டிருக்கும்போது, இந்தப் பணிக்கு ஒப்பந்த ஊதியத்தில் ஊழியர்களைப் பணியமர்த்தினால் இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முதலிடத்தில் எப்படித் தொடர முடியும் என்று தற்போதைய அரசு யோசித்து, உடனடியாக இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

சிறிய முட்செடியாக இருக்கும்போதே இதற்கு முடிவெடுக்காவிட்டால், பின்னர் இந்தப் பிரச்சினை பூதாகரமாக ஆகிவிடும். இந்த விவரங்கள் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், பின்னால் பிரச்சினை வந்தால் அரசுக்குத்தானே என்று அலட்சியமாக உள்ளனர். முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும்தான் இதற்கு முடிவு காண வேண்டும். இல்லையென்றால், பல பெண்களின் வாழ்க்கை நரகமாகிவிடும்.

- வீ.சக்திவேல், தொடர்புக்கு: sundarisakthi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x