Published : 27 Dec 2021 07:11 AM
Last Updated : 27 Dec 2021 07:11 AM

சிஷ்யனை மெச்சிய குரு! - இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவனின் கடைசிப் பேட்டி

‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசனை முதன்முதலில் நாயகனாக்கிப் பெருமை சூடிக்கொண்டது மலையாளத் திரையுலகம். தமிழ்த் திரைப்படங்களுக்கும் முன்பே மலையாளப் படங்களில் நாயகன் ஆகிவிட்டார் கமல்ஹாசன். கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் ‘கன்யாகுமாரி’ படத்தில்தான் முதன்முதலில் நாயகனாக அறிமுகம் ஆனார் கமல்ஹாசன்.

மலையாளப் படம் என்றாலும் ‘கன்யாகுமாரி’யின் படப்பிடிப்புக் காட்சிகள் முழுக்கத் தமிழகத்தில்தான் எடுக்கப்பட்டன. சுசீந்திரம் ஆலயத்தின் பிரம்மாண்டமான ஆஞ்சநேயரின் முன்பாகத் தொடங்கி, முழுக்க கன்னியாகுமரியிலேயே படப்பிடிப்பு செய்யப்பட்ட ‘கன்யாகுமாரி’ படத்தில் சங்கரன் என்னும் பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் கமல்.

குமரிக் கடற்கரையில் பாசி மாலை விற்றுப் பிழைக்கும் நாயகி, அவரது வயோதிக அம்மாவுடன் வசிக்கிறார். குடிப்பதற்காகப் பாசி விற்ற காசைப் பறித்துச் செல்லும் மாமாவின் தொல்லைகளுக்கு இடையில், தன் காதலன் சிற்பக் கலைஞர் சங்கரன் மீட்பராகத் தெரிகிறார். இந்தச் சூழலில், கன்னியாகுமரிக்குச் சுற்றுலா வரும் சாமியார் ஒருவர் விடுதியில் தங்குகிறார். அதே விடுதியில் காதலியை மறக்க முடியாமல் ஏங்கும் நவீன தேவதாஸ், விருப்பம் இல்லாமல் வயோதிகரைத் திருமணம் செய்துவாழும் இளம் பெண், இந்திக்காரக் குடும்பம், சல்லாபப் புத்திக்காரர் ஒருவர் என பல்வேறு மனோபாவங்களைக் கொண்டோரும் தனித்தனியே வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒருவருக்கொருவர் தொடர்புபடுத்தித் திரைக்கதையாக விரியும் திரைப்படம் இது. இதில் சிற்பக் கலைஞர் சங்கரனாக கேரளத்துப் பதின்பருவ வாலிபரை அப்படியே கண்முன்பு நிறுத்துவார் கமல். படத்தில் ஒரு காட்சியில்கூட சட்டை அணிந்திருக்க மாட்டார் நாயகன் கமல்ஹாசன். படம் முழுவதும் கைலியும், வெகு சில காட்சிகளில் மட்டுமே பனியனும் அணிந்து நடித்திருப்பார். மலையாளத் திரைமொழிக்கே உரிய நேர்த்தி அவரது முதல் நாயக அவதாரத்திலேயே அத்தனை நுட்பமாக வெளிப்படும்.

‘கன்யாகுமாரி’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் கமல்ஹாசனை நாயகனாக அறிமுகம் செய்தவர் இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன். எம்.ஜி.ஆர். நடித்த ‘நாளை நமதே’, சிவகுமாரை வைத்துப் ‘பால்மணம்’, ‘மறுபக்கம்’, ஜெய்சங்கர் நடித்த ‘கல்யாண ஊர்வலம்’, கமல், கெளதமி நடித்த ‘நம்மவர்’ உட்பட தமிழில் குறிப்பிடத்தக்க படங்களையும் இயக்கியவர். இதில் சிவகுமார் நடித்த ‘மறுபக்கம்’ திரைப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘உச்சி வெயில்’ என்னும் குறுநாவலையே ’மறுபக்கம்’ ஆக்கியிருந்தார் சேதுமாதவன். மலையாளத்தில் 1960-களில் இருந்தே மிகத் தீவிரமாக இயங்கிய கே.எஸ்.சேதுமாதவன் நமக்கு கமல்ஹாசன் குறித்துப் பிரத்யேகமாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அது பிரசுரமாவதற்கு முன்பே அவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துவிட்டார்.

‘‘கன்யாகுமாரி’ படத்துக்கான கதையை எழுதி முடிச்சுட்டு நடிக்குறதுக்கு ஆட்களைத் தேர்வு செஞ்சுட்டு இருந்தேன். ஹீரோ வேஷத்துக்குக் கேரளத்துல நிறைய பேரைப் பார்த்தேன். ஆனால், எனக்குப் பிடிச்ச மாதிரி யாரும் கிடைக்கல. வீட்ல நானும் நண்பர்களுமா உட்கார்ந்து இதைப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ திடீர்னு என் வீட்டுக்கு ஒரு வாலிபர் வந்தாரு. அந்த வாலிபரைப் பார்த்ததுமே எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. என்னோட படத்துக்கான நாயகனா நான் எப்படி மனசுல உருவேத்தி வெச்சுருந்தேனோ அப்படியே இருந்தார் அந்த வாலிபர். நீ யாருப்பான்னு கேட்டேன். என்னைத் தெரியலையா... நான் ‘கமல்’னு சிரிச்ச முகத்தோட சொன்னாரு.

‘‘உடனே நான் உற்சாகமாகிட்டேன். ஏன்னா, கமல் அதுக்கும் முன்னமே என்னோட ‘கண்ணும் கரளும்’ படத்துல குழந்தை நட்சத்திரமா நடிச்சுருந்தாரு. அந்தப் படத்துலயே எங்க அம்மாவுக்கு கமலோட நடிப்பு ரொம்பப் பிடிக்கும். உடனே அம்மாவைக் கூப்பிட்டு கமல் வந்திருக்குறாருன்னு சொன்னேன். அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். நல்லா வளர்ந்துட்டியேப்பான்னு சொன்னாங்க. உடனே, கமல்கிட்ட நான் இப்போ எடுத்துட்டு இருக்குற படத்துல நடிக்கிறியான்னு கேட்டேன். தொடர்ந்து டெஸ்ட் எடுத்தோம். அவரு அந்தப் படத்தில் நாயகனா நடிச்சாரு. கமல் அன்னிக்கு எப்படி என் வீட்டுக்கு வந்தாரு? அது தற்செயலா நடந்துச்சா? யாராவது சொல்லி வந்து பார்த்தாரான்னு மறந்துட்டேன்’’ எனவும் பகிர்ந்திருந்தார்.

தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் திரைப்படம் இயக்கியிருக்கும் கே.எஸ்.சேதுமாதவன், தன் கலைப் பயணத்தில் பத்து முறை தேசிய விருதும், ஒன்பது முறை கேரள மாநிலத் திரைப்பட விருதும் பெற்றவர். ஆனால், துளியும் ஆர்ப்பாட்டம் இன்றி நிதானமாக வாழ்ந்தவர். தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர் “சின்ன வயதிலிருந்தே கமலுக்குத் தனிப்பட்ட திறமைகள் நிறைய உண்டு. குழந்தை நட்சத்திரமா என்னோட படங்களில் நடிக்கும்போதே வெளிப்புறப் படப்பிடிப்புக்குப் போகும்போது ரொம்ப முதிர்ச்சியா நடந்துக்குவாரு. முகத்தில் குழந்தைத்தனம் இருக்கும். ஆனால், அவர் செயல்பாட்டில் அவர் குழந்தையா இருந்தது இல்லை. வளர வளர அதை அப்படியே தொடர்ந்தார். உலக சினிமாக்களைப் பார்த்து அவரோட அறிவையும் விசாலமாக்கிக்கிட்டாரு. தமிழனா பிறந்தாலும் நான் மலையாளின்னு வேடிக்கையா சொல்லுவாரு. மலையாள மக்கள் மத்தியில் இன்னிக்கும் கமல் மேல நல்ல மரியாதை இருக்கு. மலையாளக் கலையுலகில் அவரது அபாரமான நடிப்புதான் அதுக்குக் காரணம்.

‘‘1974-ல் ‘கன்யாகுமாரி’ படம் பண்ணுனேன். 1994-ல் கமலை நாயகனா வெச்சு தமிழில் ‘நம்மவர்’ எடுத்தேன். அந்த இருபது வருஷ இடைவெளியில், திரையுலகில் கமல் சகல துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றுவிட்டார். அதை ‘நம்மவர்’ படப்பிடிப்பின்போது கவனிச்சு, அவர்கிட்ட சொன்னேன். கமல் இன்னிக்கு அரசியலுக்கும் வந்துட்டாரு. ஆனா, கமலுக்குள் அரசியல் ஆர்வம் இன்னிக்கு வந்தது இல்ல. அவருக்குள்ள அந்தப் பொறி ரொம்ப வருசமா இருக்குது. அது இப்போதான் வெளிப்பட்டிருக்கு.

நம்மவர் படப்பிடிப்பின்போது ஒருநாள் ஓய்வா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ கமல், முன்னாடி எங்க ரோட்டைவிட, வீடுதான் உயரத்துல இருந்துச்சு. இப்போ வீட்டைவிட ரோடு உயரமா ஆகிடுச்சு. லஞ்சத்துக்காகவும், தாங்கள் சம்பாதிக்கணும்கிறதுக்காகவும் சும்மா சும்மா ரோடு போட்டு அதை உயரமாக்கிட்டாங்கன்னு ஆதங்கப்பட்டாரு. நடிகனா ஏசி காரில் உட்கார்ந்து போறவரா இல்லாம, தன்னைச் சுத்தி நடக்குற விஷயங்களில் அரசியல் பத்தின புரிதல் அப்பவே அவருக்கு இருந்துச்சு.

“கமல் இன்னிக்கு இந்த அளவுக்கு வளர அவரோட அர்ப்பணிப்பும் ஒரு காரணம். 1977-ல் கமல்ஹாசன், சோபா ஜோடியை வைத்து ‘ஓர் மகள் மரிக்குமோ’ன்னு மலையாளத்தில் ஒரு படம் எடுத்தேன். இந்தப் படத்தை இந்தி, தெலுங்கிலும் டப் பண்ணினோம். அந்தப் படத்தோட படப்பிடிப்பு நடந்துட்டு இருந்தப்போதான் கமல்ஹாசனோட அம்மா இறந்துபோனாங்க. அதே நேரத்தில், வெளிப்புறப் படப்பிடிப்புக்கும் திட்டம் போட்டிருந்தோம். அடக்கம் முடிச்சுட்டு கமல் போன் செஞ்சாரு. நான் படப்பிடிப்பைத் தள்ளி வெச்சுக்கலாம்னு சொன்னேன். ஆனால் கமல், என்னை நம்பிப் பணம் போட்டிருக்கிறீர்கள். சரியான நேரத்துக்கு வந்துடுவேன்னு வந்து நின்னாரு. அந்தப் படத்துக்குத் தயாரிப்பாளரும் நான்தான். ஒரு மனிதர் எந்த அளவுக்குத் தொழில்பக்தி உள்ளவரா இருந்தா இப்படிச் செய்ய முடியும்னு யோசிச்சுப் பாருங்க...’’ என்று தான் அறிமுகம் செய்துவைத்த நாயகன் குறித்துச் சிலாகித்தார் இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன்.

- என்.சுவாமிநாதன், swaminathan.n@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x