Published : 24 Dec 2021 07:15 AM
Last Updated : 24 Dec 2021 07:15 AM

தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே தமிழர் என்பதற்குப் பதிலாக திராவிடர் என்ற அடையாளத்தை வலியுறுத்தியவர் பெரியார். இன்று அவரே தாய்மொழியின் அடிப்படையில் தமிழரா என்ற கேள்விக்கு ஆளாகி நிற்கிறார். அந்தக் கேள்விக்குப் பதிலாக, பெரியார் தமிழ், தமிழர் உரிமைகளுக்காக நடத்திய போராட்டங்களும் ஆற்றிய பணிகளும் நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில், பத்திரிகையாளர் ப.திருமாவேலன் ஏறக்குறைய 1,600 பக்க அளவில் எழுதி, நற்றிணை பதிப்பகம் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டிருக்கும் ‘இவர் தமிழர் இல்லை என்றால் வேறு எவர் தமிழர்?’ என்ற தலைப்பிலான புத்தகம் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஏற்கெனவே திருமாவேலன் எழுதிய ‘ஆதிக்கச் சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?’ என்ற நூல், பெரியாரைப் பிற்படுத்தப்பட்டோரின் தலைவராக மட்டுமே அடையாளப்படுத்த விரும்பியவர்களுக்குப் பதிலாக அமைந்தது. பெரியார் குறித்த அவரது தற்போதைய புத்தகம், பெரியாரைத் தமிழர்க்கு விரோதியாகக் கட்டமைக்க முயலும் முன்னாள் பொதுவுடைமைவாதிகளுக்கும் இந்நாள் கிறிஸ்தவ இறையியலர்களுக்கும் விரிவாகப் பதில்சொல்லியிருக்கிறது.

1926 தொடங்கி தன் வாழ்நாள் முழுவதும் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலம், இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் உறுதியுடன் நின்றவர் பெரியார். இந்தியை எதிர்த்த பெரியார் தமிழைத்தான் முன்னிறுத்தினார். தமிழ் எழுத்து வடிவத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு அவற்றைத் தான் நடத்திய இதழ்களில் 1935-லேயே நடைமுறைப்படுத்தியவர் அவர். மொழியுரிமைப் போராட்டங்களுக்குப் பெண்களைத் தூண்டினார் என்று குற்றம்சாட்டப்பட்டு, பெல்லாரி சிறையில் தண்டனை அனுபவித்தவர். சிறையிலிருந்து விடுதலையான பிறகும், இந்தி எதிர்ப்பு இயக்கம் தொடரும் என்று துணிவுடன் அறிவித்தவர். தமிழிசை இயக்கத்திலும் அவரது பங்களிப்பு உண்டு. திருக்குறளுக்காக மாநாடுகளை நடத்தியவர். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வாயிலாகத் திருக்குறள் மலிவுப் பதிப்புகளை விற்பனை செய்தவர்.

வ.உ.சிதம்பரனார், மறைமலையடிகள், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார், பாரதிதாசன், கி.ஆ.பெ.விசுவநாதம், சி.இலக்குவனார், தேவநேயப் பாவாணர், கு.மு.அண்ணல்தங்கோ, குன்றக்குடி அடிகளார் என்று 20-ம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் ஆளுமைகளுடன் பெரியாருக்கு இருந்த நெருக்கமான உறவையும் கொள்கைப் பிணைப்பையும் படம்பிடித்துக் காட்டுவது இந்நூலின் தனிச்சிறப்பு.

பெரியாரைப் பற்றிய அவரது சமகாலத்தைச் சேர்ந்த 90 தமிழறிஞர்களின் பாராட்டுரைகள், தமிழறிஞர்களைக் குறித்த பெரியாரின் கருத்துகள், அவருடன் இணைந்து பயணித்த 50 தமிழறிஞர்களைப் பற்றிய குறிப்புகள் ஆகியவை தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. உ.வே.சாவைப் பாராட்டுகிற பத்திரிகைகள் அவரது ஆசிரியர் மீனாட்சிசுந்தரனாரைப் பற்றிப் பேசுவதில்லை என்பது பெரியாரின் மனக்குறை.

கோயில்களுக்குத் தலபுராணங்கள் எழுதுவதில் சமர்த்தராக இருந்த மீனாட்சிசுந்தரனாரின் தமிழ்ப் புலமையைக் கண்டுகொள்ளவில்லை என்று கடவுள் மறுப்பு பேசிய பெரியார் வருந்தியிருக்கிறார் என்பது வியப்பை அளிக்கிறது. தமிழ் இலக்கியங்களின் பிரதானப் பாடுபொருளாக இருந்த கடவுள் பக்தியின் மீது பெரியாருக்கு எதிர்க் கருத்துகள் இருந்தபோதும், அது குறித்த கோபத்தைத் தமிழறிஞர்களின் மீது வெளிப்படுத்தியபோதும் அவர்களின் தமிழ்ப் பணிகள் கண்டுகொள்ளப்படாமல் போவது குறித்தும் அவரே பேசியிருக்கிறார்.

திராவிட இயக்கத்துக்கு எதிராக ராஜாஜியால் முடுக்கிவிடப்பட்ட ம.பொ.சிவஞானமே ஒருகட்டத்தில் திமுகவில் ஒன்றுகலந்துவிட்ட பிறகு, அவர் எழுப்பிய கேள்விகளை இன்று மதவாத, சாதிய அமைப்புகள் தொடர்கின்றன என்பதே நூலாசிரியரின் பார்வை. (காங்கிரஸைச் சேர்ந்தவர் என்றபோதும் ம.பொ.சி.யின் தமிழுணர்வைப் பாராட்டி பெரியார் எழுதிய குறிப்புகளும்கூட இந்நூலின் வழி வாசிக்கக் கிடைக்கின்றன.)

உடன்பாட்டுக் கூறுகள் கொண்ட மார்க்ஸியம் - அம்பேத்கரியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம் ஆகியவை தங்களுக்குள் ஒத்திசைந்து பயணிக்க வேண்டும் என்பது இந்நூலின் நோக்கமும் எதிர்பார்ப்பும். பெரியாரின் திராவிடம், தமிழியமே அன்றி வேறில்லை என்பதே இந்த ஆய்வின் முடிவான முடிவு. எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா தொடங்கி தற்போது ப.திருமாவேலன் வரையில் பெரியாரைக் குறித்த விரிவான ஆய்வு நூல்கள் பெரும்பாலும் ஆய்வு நூலக உதவிகள் போன்று திராவிடர் கழகத்தின் ஆதரவோடுதான் வெளிவருகின்றன. அமைப்புக்குள்ளிருக்கும் எழுத்தாளர்களையும் இன்னும் அதிக எண்ணிக்கையில் இவ்வாறு ஆய்வுப் பணிகளில் ஊக்குவிக்கலாம்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

டிசம்பர் 24: பெரியார் நினைவு நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x