Published : 21 Dec 2021 07:00 AM
Last Updated : 21 Dec 2021 07:00 AM
மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராரும் கடலுடுத்த’ பாடலைத் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. மனோன்மணீயம் பெ.சுந்தரம் கேரள மாநிலம் ஆலப்புழையில் 1855-ல் பிறந்தவர். பி.ஏ. பட்டம் பெற்றவர். சிறந்த தமிழறிஞர். அவர் இயற்றிய மனோன்மணீயம் என்னும் 4,500 வரிகள் கொண்ட கவிதை நாடக நூலில் உள்ள ஒரு பாடலே ‘நீராரும் கடலுடுத்த’ என்பதாகும்.
பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும், பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 1913-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வாசிப்பும் இந்த அரசாணையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
கரந்தைத் தமிழ்ச் சங்கம்
24.05.1901 அன்று பாலவனத்தம் நிலக்கிழவர் பொ.பாண்டித்துரையாரால் மதுரையில் புதிய தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா தஞ்சாவூரில் சிறப்பாக நடைபெற்றது. இதைக் கண்டு மகிழ்ந்த தஞ்சையைச் சேர்ந்த சில தமிழ்ச் சான்றோர், ‘நம் நகரத்தில் இதுபோல் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கினால் நன்றாக இருக்குமே’ என்று எண்ணினார்கள். அந்த நல்ல எண்ணத்தின் விளைவே தஞ்சை தமிழ்ச் சங்கம். நிலக்கிழவர் சாமிநாதனார் அந்தச் சங்கத்தின் தலைவராக இருந்தார்.
காலப்போக்கில் அந்தச் சங்கம் மறைந்தாலும், கரந்தை வட ஆற்றங்கரையில் இருந்த பஞ்சநதம் பாவா மடத்தில் தமிழ்ச் சங்கம் ஒன்று தொடங்கப்பட்டது. ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்தின் பெயர் மீதுள்ள ஈர்ப்பின் காரணத்தால், புதிதாகத் தொடங்கப்பட்ட சங்கத்துக்கு வித்யா நிகேதனம் என்று பெயர் சூட்டப்பட்டது. வித்தியா நிகேதனம் தஞ்சைப் பகுதியில் மிகச் சிறப்பாகத் தமிழ்ப் பணியாற்றிவந்தது. ஆனால், சங்கத் தலைவர் ராஜாளியார், செயலாளர் சாமிநாதனார் ஆகியோரின் கட்டுப்பாடுகளை விரும்பாத இளைஞர்கள் தம்முள் இணைந்து தனியாக ஒரு சங்கத்தை நிறுவ எண்ணினார்கள்.
அதன் விளைவாகத் தோன்றியதுதான் இன்றைய கரந்தைத் தமிழ்ச் சங்கம். விரோதிகிருது ஆண்டு வைகாசித் திங்கள் முதல் நாள், 14.05.1911 அன்று நாவலர் ந.மு.வேங்கடசாமி தலைமையில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. சங்கத் தலைவர் உமா மகேசுவரனார் ஒரு சிறந்த வழக்கறிஞராக இருந்ததால், தமிழ்ச் சங்கத்துக்கு முறையான பொது விதிகளை ஏற்படுத்தினார். பிற்காலத்தில் எந்த ஒரு தனிநபரும் உரிமை கொண்டாட முடியாத வகையில், 1860--ல், 21-வது சட்டப் பிரிவின்படி ஆனந்த சித்திரை ஆண்டு பத்தாம் நாள் [15.05.1914] சங்கம் பதிவு செய்யப்பட்டது.
தமிழ் வாழ்த்து
தமிழ் மொழியின் நிலைமை, தமிழரின் வாழ்வு ஆகியவற்றைச் சீர்செய்வது, சங்க உறுப்பினர் களுக்குள் நட்புரிமையையும் ஒருமைப்பாட்டையும் உண்டாக்குவது, தமிழரின் அற நிலையங்களைப் பேணிக் காப்பது, உறுப்பினர்களின் ஒழுக்க நிலை, உடல்நிலை, சமூக நிலை, கல்வி நிலை - இவை செம்மையுறுவதற்கான வசதிகளை அமைப்பது, தமிழரின் தொழிலும் பொருளாதாரமும் வளம் பெறச் செய்வது - இவைதான் சங்கத்தின் நோக்கங்களாக வரையறுக்கப்பட்டன. தொண்டு - தமிழ் - முன்னேற்றம் என்பதே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலையாய கொள்கை என்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமா மகேசுவரன் முழங்கினார்.
கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற இரண்டாம் ஆண்டு முதல், மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ என்னும் பாடல் சங்கத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கத் தொடங்கியது. முதன்முதலில் இந்தப் பாடலை மேடையில் பாடியவர் கூடலூர் வே.இராமசாமி. இந்தப் பாடல் தமிழ்நாட்டின் மேடைகளில் மட்டும் அல்லாது தரணி எங்கும் பாடிப் பரவ வேண்டும் என்பது உமா மகேசுவரனாரின் கனவு.
1913-ல் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு அறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பாடல் உலகெங்கும் பரவ வேண்டும் என்னும் கனவின் தொடர்ச்சியைப் போல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆறாம் ஆண்டு அறிக்கை ‘நீராரும் கடலுடுத்த’ பாடலுடனேயே தொடங்குகிறது. தமிழ்ச் சங்கத்தின் அடுத்தடுத்த முன்னெடுப்புகள் அப்பாடலைத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் ஒலிக்கச் செய்தது!
அண்ணாவின் தேர்வு
அறுபதுகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றங்கள் அரங்கேறத் தொடங்கின. மாநில மொழிகளை நசுக்கும் விதமாக மத்திய அரசு மேற்கொண்ட இந்தித் திணிப்பு முயற்சிகள் இந்தியா எங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. தமிழ்நாட்டு அரசியலில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்னும் மாபெரும் சமூகப் புரட்சி நடந்து முடிந்திருந்த காலகட்டம் அது. அதன் விளைவாக 1967-ல் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. தமிழ் மொழியின் வளர்ச்சிப் போக்கை முன்னெடுக்கும் விதமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு விழாக்கள், கல்லூரி, பள்ளி விழாக்கள் அனைத்திலும் பாடக்கூடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தமிழறிஞர்களைக் கூட்டி ஆலோசனை செய்தார் முதல்வர் அண்ணா.
தமிழ் குறித்து, தமிழ்க் கவிஞர்கள் இயற்றிய பாடல்களில், சிறந்த இரு பாடல்களாக மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ பாடலும், கரந்தைக் கவியரசு இயற்றிய ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே’ என்ற பாடலும் பரிந்துரைக்கப்பட்டன. இரண்டில் ஒரு பாடலைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அண்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ‘நீராருங் கடலுடுத்த’ பாடலில் வரும் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ எனும் வரிகளில் வரும் ‘திராவிடம்’ என்னும் சொல் அவரைக் கவர்ந்தது. அப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அரசுபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை அண்ணா மேற்கொண்டார். ஆனால், அதற்குள் நோய்வாய்ப்பட்டிருந்த அண்ணா 03.02.1969-ல் மறைந்தார்.
கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாட வேண்டும் என, அரசாங்கப் பொதுத் துறையின் சார்பில் 23.11.1970 அன்று அரசாணையாக வெளியிடச் செய்தார். உமா மகேசுவரனார் தோற்றுவித்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நீண்ட நாள் பெருங்கனவு அன்று நிறைவேறியது. இன்று, அந்தப் பாடல் மாநிலப் பாடலாகவும் மாறியிருக்கிறது.
- எஸ்.ராஜகுமாரன், எழுத்தாளர், இயக்குநர், தொடர்புக்கு: s.raajakumaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT