Published : 16 Dec 2021 03:05 AM
Last Updated : 16 Dec 2021 03:05 AM
முதல்வர் மு.கருணாநிதி தனது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் முன்பே 1971 டிசம்பர் 3-ல் வாஷிங்டனிலிருந்து அறிக்கை விடுத்தார்: “இந்தியாவின் வெற்றிக்குத் தமிழ்நாட்டு மக்கள் கட்சி சார்பற்ற முறையில் எல்லாவிதத் தியாகங்களையும் செய்யத் தயாராக இருக்குமாறு வேண்டுகிறேன்.” டிசம்பர் 5-ல் கருணாநிதிக்கு நடைபெற்ற வரவேற்புக் கூட்டம், பாகிஸ்தானின் படையெடுப்புக்கு எதிரான கண்டனக் கூட்டமாகவே நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் பெரியாரும் கி.வீரமணியும் கலந்துகொண்டு பேசினார்கள். டிசம்பர் 12-ல் கூடிய திமுக செயற்குழுவில், படையெடுப்பைக் கண்டித்தும் வங்கதேசத்தை ஆதரித்தும் தீர்மானங்கள் நிறைவேறின. திமுக சார்பில் ரூ.25,000 யுத்த நிதியாக வழங்கப்பட்டது. பிரச்சாரம் செய்யவும், போர் நிதி திரட்டவும் திமுகவின் பொருளாளர் எம்ஜிஆர் தலைமையில் கலைக் குழு அமைக்கப்பட்டது. ஆளுநர் கே.கே.ஷா முன்னிலையில் அமைச்சர்கள் க.இராசாராம், அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட 150 பேர் நாட்டைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் தயார் என்று தங்களது ரத்தத்தால் கையெழுத்திட்டனர்.
எதிரிகளை முறியடிப்பதற்கு உறுதுணையாக இருப்போம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி இலக்கு நிர்ணயித்து, போர் நிதி திரட்டப்பட்டது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை அளித்தனர். மாநில அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ரூ.500 நிதியளித்தனர். சட்டமன்ற உறுப்பினர்களைக் குருதிக்கொடை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார் கருணாநிதி. கொடிநாளை முன்னிட்டு அவர் ஆற்றிய வானொலி உரையிலே ‘தூங்கும் புலியை இடறியவர்கள் தூள்தூளாவது உறுதி’ என முழங்கினார். தயாளு அம்மையார் தலைமையில் அமைச்சர்களின் துணைவியர் ஒன்றுசேர்ந்து, போர் வீரர்களுக்கான பொருட்களைத் திரட்டினார்கள். சென்னை பூக்கடை, சைனா பஜார், மயிலாப்பூர், தியாகராய நகர், புரசைவாக்கம் என இந்தக் குழு கடைகடையாய் ஏறி இறங்கி, ஒரே நாளில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை நன்கொடையாகத் திரட்டி அனுப்பிவைத்தது. அமைச்சர் சத்தியவாணி முத்து தலைமையில், சென்னையில் பெண்களின் பேரணியும் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் பல ஊர்களில் மிதிவண்டிப் பேரணிகளும் நடத்தப்பட்டன. தான் நடிக்கும் ஒரு படத்துக்கான முழு ஊதியத்தையும் பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக அறிவித்தார் எம்ஜிஆர். பாதுகாப்பு நிதியாக ரூ.5,000-ஐ மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியத்திடம் வழங்கினார் ஜெயலலிதா.
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் காயமுற்ற வீரர்களுக்கும் ரூ.5,000 பணமும் 3 ஏக்கர் புன்செய் அல்லது 1 1/2 ஏக்கர் நன்செய் நிலமும் வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. போரில் உயிர்துறந்த வடஆர்க்காடு மாவட்டத்தின் தாதவள்ளி ஆறுமுகம், நீலகிரி மாவட்டத்தின் மஞ்சூர் அலன் ஆகிய வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் அளிக்கப்பட்டன. சுதந்திர வங்கதேசம் உருவானபோது, அதை வாழ்த்தி சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் 26-ல் வங்கதேச விடுதலை நாள் விழா அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தப்பட்டன. போரில் பயன்படுத்தப்பட்ட ‘விக்ராந்த்’ விமானம்தாங்கிப் போர்க் கப்பலுக்கு சென்னை துறைமுகத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
1962-ல் சீனப் போரின்போது அண்ணா விடுத்த அழைப்பை 1971-ல் பாகிஸ்தான் போரின்போது கருணாநிதி எதிரொலித்தார். இன்று மு.க.ஸ்டாலினும் அதைப் பின்தொடர்கிறார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திய தமிழ்நாடு முதல்வருக்கு லெப்டினென்ட் ஜெனரல் அருண் எழுதிய கடிதம் அதற்குச் சான்று. ‘வீடு இருந்தால்தானே ஓடு மாற்ற முடியும்?’ என்பது அண்ணாவின் பிரபல வாசகம். மாநில உரிமைகளுக்காக மத்திய அரசோடு தமிழ்நாடு என்றைக்கும் மல்லுக்கட்டிக்கொண்டேதான் இருக்கும். ஆனால், நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் ஒரு சவால் எழும்போது, இந்தியப் படையின் முதல் வீரராகவும் தமிழ்நாடே முன்னிற்கும்.
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT