Last Updated : 27 Mar, 2016 11:56 AM

 

Published : 27 Mar 2016 11:56 AM
Last Updated : 27 Mar 2016 11:56 AM

மாற்றம்: சீரழிவுகளிலிருந்து பேரழிவுக்கு!

தமிழகத்தில் இடதுசாரிகள் அமைத்த ‘மக்கள் நலக் கூட்டணி’ தேமுதிகவிடம் சரணாகதி அடைந்த நாளன்று அக்கூட்டணிக் கட்சிகளைச் சாராதவர்களிடமிருந்தும் வலி மிகுந்த வார்த்தைகள் வெளிப்பட்டதைப் பார்க்க முடிந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 124 தொகுதிகளையும் முதல்வர் வேட்பாளர் என்கிற அந்தஸ்தையும் தேமுதிகவிடம் கொடுத்ததோடு கூட்டணியின் பெயரையும் பறிகொடுத்து, ‘விஜயகாந்த் கூட்டணி’ ஆக மாறியிருக்கிறது இடதுசாரிகள் அமைத்த நால்வர் அணி. தேமுதிக வாங்கியிருக்கும் 124 இடங்கள் தனிப்பெரும்பான்மைக்குரிய 118 இடங்களைக் கடந்தவை (52.9%) என்பதோடு, குறைந்தபட்சம் கூட்டணி அரசு எனும் வார்த்தையைக்கூட தேர்தல் உடன்பாட்டு அறிக்கையில் நால்வர் அணியால் சேர்க்க முடியவில்லை. ‘பெரிதினும் பெரிது கேள்’ என்று பேரம் முடித்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். மிச்சமுள்ள 110 இடங்களை நான்காகப் பிரித்தால், இக்கூட்டணியின் மூலம் அடைந்த பலன் என்ன என்பதை நால்வர் அணிக்குத் தேர்தல் முடிவுகள் உணர்த்திவிடும்.

கவனம் ஈர்த்த முழக்கம்

ஓராண்டுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ‘திராவிட அரசியலுக்கு மாற்று’ என்ற முழக்கத்துடன் தமிழகத்தைச் சுற்றிவந்தது பொதுத்தளத்தில் ஒரு ஈர்ப்பையும் புதிய எதிர்பார்ப்பையும் உண்டாக்கியிருந்தது. அரை நூற்றாண்டு ‘திராவிட அரசியல்’ தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் இன்றைய இழிவான சூழ்நிலையின் வெளிப்பாடு அது. இதே முழக்கத்துடன் பாஜக, பாமக உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் களத்தில் நின்றாலும், இடதுசாரிகள் கவனம் ஈர்க்கக் காரணம் சாதி, மதச்சார்ப்பற்ற அவர்களுடைய நிலைப்பாடும், அவர்கள் பேசும் விளிம்புநிலை அரசியலும், அவர்கள் தம் முன்னுதாரணங்களாக முன்னிறுத்தும் சங்கரய்யா, நல்லகண்ணு போன்ற எளிமையும் நேர்மையும் மிக்க ஆளுமைகளும்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத சூழலாக, இந்தத் தேர்தலில் சுமார் 1.08 கோடி இளைஞர்கள் - 22.92% பேர் - புதிதாக வாக்களிக்கிறார்கள். திமுக, அதிமுக இரண்டுக்கும் எதிரான மனநிலையை இந்தப் புதிய தலைமுறை வாக்காளர்களிடம் பெரிய அளவில் கவனிக்க முடிந்தது. அவர்களைக் குறிவைத்து இறங்குவதற்கான களம் இடதுசாரிகளுக்கு இயல்பாக அமைந்திருந்தது. நிச்சயமாக இடதுசாரிகள் இந்த முறை ஆட்சியைப் பிடிக்கப்போகிறவர்கள் அல்ல என்றாலும்கூட, இப்படியான ஒரு தரப்பை ஆதரிப்பது, தமிழகத்தின் சமகால அரசியல் போக்குக்கு எதிராக நிற்பதற்கான தார்மீக ஆதரவாகப் பார்க்கப்பட்டது. இப்போது இடதுசாரிகள் உருவாக்கியிருக்கும் கூட்டணியோ எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது. வாக்காளர்கள் முன்பு கடைசியாக அவர்கள் முன்வைத்திருக்கும் தேர்வு என்ன? கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றாக விஜயகாந்த்!

மாற்றம் என்னும் அபாய வாள்

இந்திய அரசியலையும், இந்தியாவின் இன்றைய சமூகச் சூழலையும் உற்றுநோக்கும் எவருக்கும் இப்படியொரு கேள்வி அடிக்கடி எழக்கூடும். இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் நாளுக்கு நாள் வறுமையை நோக்கித் தள்ளப்படுகின்றனர். அதிகாரம் பெருமுதலாளிகள் காலில் குவிகிறது. சாதி, மத, இனப் பாகுபாடுகள் அதிகரிக்கின்றன. எல்லாமும் சேர்ந்து சாமானிய மக்களை உக்கிரமாகத் தாக்குகின்றன. இத்தகைய சூழலில் இவை எல்லாவற்றுக்கும் எதிராகப் பேசும், ஒரு இயக்கம் மக்களிடம் இயல்பாகப் பரவ வேண்டும். மக்கள் தன்னெழுச்சியாக அதை வாரி அணைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் நடப்பதென்ன? நேர் எதிராக நாளுக்கு நாள், மிக மோசமாக அடிவாங்குகிறார்கள் இடதுசாரிகள். காரணம் என்ன?

மாற்றம் எனும் சொல் கேட்பதற்கு எவ்வளவு வசீகரிக்கக் கூடியதோ அவ்வளவுக்குக் கையாளும்போது அபாயகரமானது. கைப்பிடியற்ற வாள் அது. எதிரியைத் தாக்குகிறதோ இல்லையோ; சரியாகக் கையாளவில்லையெனில், கையாள்பவரின் கைகளை அது பதம்பார்ப்பது நிச்சயம். அடிப்படையில் தூய்மைவாதத்தை முன்னிறுத்தும் சொல் மாற்றம். இடதுசாரிகள் இந்தியாவில் இவ்வளவு தூரம் கீழே வந்ததற்கும், நாளுக்கு நாள் அடிவாங்குவதற்கும் தூய்மைவாதத்துடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பு ஒரு முக்கியமான காரணம். இடதுசாரிகளிடம் தூய்மைவாதப் பேச்சு அதிகம். தூய்மைவாதப் பேச்சுக்கான செயல்பாடு குறைவு. ஊரையெல்லாம் விமர்சிப்பவர்கள் கடைசியில் தாம் செல்ல அதே பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நீங்கள் எதிரியின் சுத்தத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் கைகள் மட்டுமல்ல; உங்களுடன் கை கோத்து நிற்பவர்களின் கைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். சரியாகச் சொல்வதெனில், இடதுசாரிகள் தங்களது எதிரிகளை மிகச் சரியாக நிர்ணயிக்கிறார்கள். நண்பர்களை அடையாளம் காணும்போது மோசமாக சொதப்புகிறார்கள். வரலாற்று வாய்ப்புகளைத் தாமாக முனைந்து நாசப்படுத்திக்கொள்வதில், அலாதியான வேட்கையை வெளிப்படுத்துகிறார்கள்.

தமிழகத்தின் 2016 தேர்தல் சூழலும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்தில் இடதுசாரிகள் தங்கள் தளமெனப் பார்க்கும் இன்றைய வெற்றிடம் எப்படி உருவானது? அரை நூற்றாண்டு ‘திராவிட அரசியல்’ உருவாக்கிய வெற்றிடம் இது. இங்கே ‘திராவிட அரசியல்’ என்று நாம் எல்லோருமே குறிப்பிடுவது பெரியாரிய அரசியலின் தொடர்ச்சி அல்ல; கருணாநிதிய, எம்ஜிஆரிய, ஜெயலலிதாவிய அரசியலின் எச்சம். தனிமனித வழிபாட்டுக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் படாடோபத்துக்கும் பேர் போன அரசியலின் எச்சம். இதைத்தான் இடதுசாரிகளும் ‘திராவிட அரசியல்’ என்று குறிப்பிடுகிறார்கள் என்றால், விஜயகாந்த், பிரேமலதாவிடம் வெளிப்படுவது எந்த அரசியல்? தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இன்றைக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் முத்தரசன் கையிலும், ஜி.ராமகிருஷ்ணன் கையிலும் வைகோ திணிக்கும் ‘போர் வாள்’ எந்த அரசியலின் அப்பட்டமான குறியீடு?

எது உண்மையான மாற்றம்?

சமூக வலைதளங்களில் இந்தக் கூட்டணி உண்டாக்கியிருக்கும் விமர்சனங்களுக்கு சில இடதுசாரி எழுத்தாளர்கள் இப்படி ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். “நல்லகண்ணுவை முன்னிறுத்துங்கள், சங்கரய்யாவை முன்னிறுத்துங்கள், தனித்து நில்லுங்கள் என்று இப்போது சொல்கிறீர்கள். 2014 மக்களவைத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து நின்றோம். அப்போது யார் எங்களை ஆதரித்தீர்கள்?”

அபத்தனமான கேள்வி இது. 2014 மக்களவைத் தேர்தல் இந்திய வரலாற்றில் கொந்தளிப்பான அரசியல் சூழலைக் கொண்டிருந்தது. மன்மோகன் சிங் அரசு மீதான ஊழல் எதிர்ப்பு அலையை முன்கூட்டிக் கணித்த மோடியும் பாஜகவும் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் திட்டமிட்டு வேலை செய்தார்கள். புதிய உத்திகளைக் கையாண்டார்கள். முக்கியமாக, தங்கள் வழமையான மதவாத அரசியலுக்கு வளர்ச்சிப்பூச்சு பூசி சூழலைத் தம்வசம் ஆக்கியிருந்தார்கள். இடதுசாரிகள் செய்தது என்ன? ஒரு பெரும் போர்க்களத்தில் கையில் எந்த ஆயுதமும் வியூகமுமின்றி குழப்பமான மனநிலையில், வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்ததுபோல் இருந்தது அவர்களின் செயல்பாடு. “ஊழல் காங்கிரஸ், மதவாத பாஜக வேண்டாம்” என்று சொன்னவர்களால், மாற்று பிரதிநிதியை முன்வைக்க முடியவில்லை. மூன்றாவது அணி என்று அவர்கள் உருவாக்க முயன்று அணுகிய கட்சிகள் யாவும் மாநில அளவில் ஊழல், சாதிய அரசியலில் கரை கண்டவை. ஏனைய மாநில மக்களிடம் மதிப்பிழந்தவை.

தமிழகத்தில் இரு பெரிய கட்சிகளையும் தவிர்த்து இடதுசாரிகள் தனித்து நின்றது உண்மை. இந்த முடிவை அறிவிக்கும் முன்பு வரை அவர்கள் எங்கிருந்தார்கள்? அதிமுக கூட்டணியில். கடைசி தருணம் வரை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவைப் பார்க்க முடியாமல் காத்துக் கிடந்தார்கள். மக்கள் எல்லாவற்றையும் ஒரே நாளில் மறந்துவிடுவார்களா? நீங்கள் மாறிய ஒரே நாளில் கழுத்தில் மாலை சூடிவிடுவார்களா? சரி, ஒரு பெரும் தேர்தலைத் தனித்து எதிர்கொண்டவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் தனித்து நின்று காட்ட வேண்டாமா? தங்கள் மீது தங்களுக்கே நம்பிக்கையில்லாதவர்கள் மீது மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்?

இடதுசாரிகளுடனான உரையாடலின்போதெல்லாம், பலர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்பது உண்டு. “தோழர், இந்த வெற்றிடச் சூழலை நிரப்ப வேண்டும் என்றால், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களைப் போன்ற பொதுத்தளத்தில் இருப்பவர்கள் நினைக்கிறீர்கள்?” நான் அவர்களிடம் சொல்வது: “ஒரு பெரும் அரசியல் இயக்கத்தின் மாற்று முழக்கம் என்பது பளிச்சென்று பட்டவர்த்தனமாகத் தெரிய வேண்டும். அதனுடைய செயல்திட்டங்களில் மட்டுமல்ல; அதன் ஒவ்வொரு அசைவிலும் தெரிய வேண்டும். தேர்தல் களம் என்றால், அது முன்வைக்கும் முழக்கங்கள், அது முன்னிறுத்தும் பிரதிநிதிகள், அதன் பிரச்சார பாணிகள் ஒவ்வொன்றிலும் புதுமை தெரிய வேண்டும். சூழலின் வேறுபாடு தெரிய வேண்டும். பழைய உதாரணம் காந்தியின் காங்கிரஸ். சமீபத்திய உதாரணம் ஆம் ஆத்மி கட்சி.”

இடதுசாரிகள் இந்தியாவுக்குப் புதிய கட்சியல்ல. பழைய கட்சி என்பதே ஒரு பெரிய சுமை. இந்தச் சுமையைத் தூக்கிக்கொண்டுதான் ஓட வேண்டும் என்றால், கூடுமானவரைக்கும் தூக்குமூட்டைகளைக் குறைக்க வேண்டும். அமெரிக்காவில் பால்ட் கழுகுகள் தொடர்பாக சுவாரஸ்யமான ஒரு கதை உண்டு. இந்தக் கழுகுகள் முதுமையை அடைந்ததும் ஓரிடத்தில் போய் உட்கார்ந்துவிடுமாம். தன்னுடைய மூக்கின் நுனியை உடைத்துக்கொள்ளுமாம். தன்னுடைய இறகுகள் எல்லாவற்றையும் பிய்த்தெறிந்துவிடுமாம். மீண்டும் புத்தம் புதிதாக எல்லாம் முளைக்க வாழ்க்கையைத் தொடங்குமாம். இன்னொரு ஆயுளை வாழுமாம். பழமையைக் களைதல் என்பது ஒரு மறுபிறப்பு. மாற்றம் வெளியில் மட்டும் அல்ல; உள்ளுக்குள்ளும் நடக்க வேண்டும். அப்படி ஒரு மாற்றத்துக்கு இடதுசாரிகள் இங்கே தயாராக வேண்டும் என்றால், முதலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்.

இந்திய இடதுசாரிகளோ, திரும்பத் திரும்ப தங்களுடைய பழம்பானைகளில் யோசனைகளைத் தேடுபவர்கள். தமிழகத்தில் இந்தத் தேர்தலை அவர்கள் எதிர்கொள்ளும் வியூகம் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன் வங்கத்தில் தங்கள் கணக்கைத் தொடங்க கையாண்ட வியூகம். வங்கத்து இடதுசாரிகளாவது அன்றைக்குத் தங்களைக் காட்டிலும் பலவீனமான கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு, முடிவெடுக்கும் மையமாக தங்களை முன்னிறுத்திக்கொண்டு காய் நகர்த்தினர். தமிழகத்தில் உருக்குலைவு நடந்திருக்கிறது.

இடது கூட்டணியை விஜயகாந்த் கூட்டணியாக மாற்றியதன் மூலம் இடதுசாரிகள் தங்கள் தலையில் மட்டும் மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளவில்லை. இத்தனை நாட்களும் எதை மையப்பொருளாகப் பேசினார்களோ அதையும் அவர்களே கேலிப்பொருளாக்கிவிட்டார்கள். கூடவே இந்த அரை நூற்றாண்டில் இல்லாத சூழலாக உருவாகியிருந்த மூன்றாவது அணிக்கான ஒரு காத்திரமான சாத்தியத்தையும் நாசமாக்கி விட்டார்கள்.

என்ன சாதித்தார் விஜயகாந்த்?

தமிழக வரலாற்றிலேயே மிக மோசமாக செயல்பட்ட அல்லது செயல்படாத ஒரு சட்டப்பேரவை மற்றும் ஆட்சிக்காலம் என்கிற குற்றச்சாட்டு இந்த அதிமுக ஆட்சி மீது உண்டு. ஜெயலலிதா மட்டுமா இதற்குக் காரணம்? சட்டப்பேரவைப் பக்கம் எட்டியே பார்க்காத எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்தும் ஒரு காரணம் இல்லையா? மேடைக்கு மேடை “மக்களைப் பார்க்காத முதல்வர், பத்திரிகையாளர்களைச் சந்திக்காத முதல்வர், கேள்வி கேட்க முடியாத முதல்வர்” என்றெல்லாம் இடதுசாரிகள் பேசினார்களே, இவை அத்தனையும் விஜயகாந்த்துக்கும் பொருந்தும் இல்லையா?

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் போர்க்குணத்துடன் செயல்பட முடியும் என்பதற்கும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை எதிரிலிருந்து எப்படித் தீர்மானிக்க முடியும் என்பதற்கு இன்றைக்கும் தமிழகத்தில் அண்ணாவின் காலகட்டம் நம் நினைவிலிருக்கும் உதாரணம். எம்ஜிஆர் ஆட்சிக்கு எதிரான கருணாநிதியின் செயல்பாடுகளும் அசாத்தியமானவை. விஜயகாந்துடன் ஒப்பிடுகையில் கடந்த காலங்களில், கருணாநிதிக்கு எதிராகப் பல மடங்கு சிறப்பாகச் செயல்பட்டவராகிறார் ஜெயலலிதா. இன்றைக்குத் தமிழகம் பெருமிதமாகப் பேசும் 69% இடஒதுக்கீடு வந்த வரலாற்றில் ஆளும்கட்சியான அதிமுகவுக்கு இணையாக அன்றைய எதிர்க்கட்சியான திமுகவுக்கும் பங்கிருக்கிறது இல்லையா? சட்டசபையில் பேச முடியவில்லை என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லும் விஜயகாந்த் மக்கள் சபையில் சாதித்தது என்ன?

தனிநபர் வழிபாட்டு அரசியல், குடும்ப அரசியல், வாரிசு அரசியல் எது ஒன்றிலும் விஜயகாந்த்தின் தேமுதிக விதிவிலக்கல்ல. திமுக, அதிமுகவாவது ஆட்சிக்கு வந்த பின் ஊழல் குற்றச்சாட்டுக்களில் அடிபட ஆரம்பித்தவை. விஜயகாந்த் மீது இப்போதே ‘தேர்தல் பணப் பேரம்’ குற்றச்சாட்டுகள் அடிபடுகின்றன. சொந்தக் கட்சியினரே பல கதைகளைப் பேசுகிறார்கள்.

மீண்டும் சினிமா கலாச்சாரமா?

அரசியல் கட்சிகளின் முடிவெடுக்கும் உரிமை அரசியல் தற்கொலை முடிவுகளையும் உள்ளடக்கியது. கட்சியின் எதிர்காலம், தேர்தல் வெற்றி, தோல்விகளைத் தாண்டி ஒரு கட்சியின் தேர்தல் முடிவுகளும் பிரச்சாரங்களும் உருவாக்கும் தாக்கங்களும் விளைவுகளும் பொதுச் சமூகத்துக்கு முக்கியமானவை. கருணாநிதி, ஜெயலலிதா பாணி அரசியலுக்கு மாற்று என்று சொல்லி அவர்களை மிஞ்சும் விஜயகாந்தை முன்னிறுத்துவதைத் தாண்டி, இந்தத் தேர்தல் மூலம் இடதுசாரிகள் தமிழகத்திற்கு இழைக்கும் மிகப் பெரிய கேடு, சினிமா கவர்ச்சி அரசியலை மீண்டும் அடித்தட்டு மக்களிடம் தர்க்கரீதியாக கொண்டுசெல்வது. ஒரு சங்கரய்யாவும் நல்லகண்ணுவும் விஜயகாந்த் தலைமையை வலியுறுத்திப் பேசும் தாக்கம் என்னவாக இருக்கும்? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் சேரிகளில் எதிர்த்துப் பேசிவந்த சினிமா கவர்ச்சி அரசியலை மீண்டும் அவர்கள் கையாலேயே கொண்டுசேர்க்கும் திருப்பணியை இடதுசாரிகள் கூட்டணி சாதிக்கவிருக்கிறது.

ஒருவிதத்தில் வரலாறு திரும்புகிறது. எந்த திராவிடக் கட்சிகளுக்கு இன்றைக்கு முடிவு கட்டுவோம் என்று பேசுகிறார்களோ அந்த இரு கட்சிகளையும் இந்த அரை நூற்றாண்டும் மாறிமாறிச் சுமந்தவர்கள் இடதுசாரிகள். தமிழகத்தின் சினிமா அரசியல் கலாச்சார பிதாமகனான எம்ஜிஆருக்கும் சினிமா கவர்ச்சி அரசியலின் பீடமான அதிமுகவுக்கும் ஊர் ஊராக தர்க்க நியாயம் கற்பித்தவர்கள் இடதுசாரிகள். இந்த ஐம்பதாண்டு திராவிட அரசியல் அவலங்களில் இடதுசாரிகளுக்கும் பங்கிருக்கிறது. அன்றைக்கு திமுகவுக்கு மாற்றாக எம்ஜிஆரை முன்வைத்ததுபோலவே இன்றைக்கு விஜயகாந்த்தையும் தர்க்கரீதியாக மாற்றாக முன்வைக்கிறார்கள் என்றால், இரு கோடுகள் தத்துவப்படி இது சரியான மாற்றுதான்!

சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x