Published : 29 Mar 2016 09:03 AM
Last Updated : 29 Mar 2016 09:03 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் பேட்டி தொடர்கிறது.
தேர்தல் களத்தில் தவறாக முடிவெடுக்கும் கலாச்சாரம் இடதுசாரிகளிடம் தொடர்கிறதா?
ஏனைய கட்சிகள்போல அல்லாமல், எந்த ஒரு முடிவையும் தேச நலனை அடிப்படையாகக்கொண்டே எடுப்பவர்கள் இடதுசாரிகள் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இன்றைக்கு கேரளத்திலோ, வங்கத்திலோ நாங்கள் ஜெயிப்பது, மேலும் ஒரு மாநிலத்தில் ஏதோ ஒரு கட்சியின் வெற்றி என்பது போன்ற விஷயம் அல்ல. இந்த நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, நல்லிணக்கம், விளிம்புநிலை மக்கள் பாதுகாப்பு யாவற்றையும் காக்கும் பொறுப்போடு சம்பந்தப்பட்டது அது. எவ்வளவு பெரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அந்தப் பொறுப்பினூடேதான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறோம்.
2019 மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகள் காங்கிரஸுடன் கைகோக்காமல் மதவாத பாஜகவை வீழ்த்த முடியாது. நீங்கள் இணைந்து செயல்படுவதற்கு நிலம் கையகப்படுத்தல் மசோதா, ரோஹித் வெமுலா, கண்ணய்யா குமார் விவகாரங்கள் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. தேர்தல் களத்திலும் இப்போதிருந்தே இணைந்து செயல்படுவதில் என்ன சிக்கல்?
இந்த நாடும் சாமானிய மக்களும் எப்போதெல்லாம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிறார்களோ அப்போதெல்லாம் பொது எதிரியை வீழ்த்த ஜனநாயகச் சக்திகளோடு கைகோத்துச் செயல்படுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் விவசாயிகள் நசுக்கப்படும் சூழல் உருவானபோது, நாடாளுமன்றத்தில் நானும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் இணைந்து குரல் கொடுத்தோம். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்படும் சூழல் உருவானபோது, ஒரே மேடையில் நானும் ராகுலும் கைகோத்திருந்தோம். அப்போது மதச்சார்பற்ற ஜனதா தளமும்கூட எங்களோடு வந்தது. இதெல்லாம் வேறு. தேர்தல் களத்தில் அணி சேர்ந்து நிற்பது வேறு.
ஆனால், வங்கத்தில் இப்போது காங்கிரஸுடன் இணைந்துதான் தேர்தலை எதிர்கொள்கிறீர்கள்…
யார் சொன்னது, அப்படி எதுவுமே இல்லை!
அதிகாரபூர்வமற்ற முறையில்… உங்கள் மொழியில் ‘அண்டர்ஸ்டேண்டிங்’… மம்தா இதைக் கள்ளக்கூட்டு என்று சொல்கிறார்…
நான் இதற்குக் கொஞ்சம் விரிவாகவே பதில் சொல்ல நினைக்கிறேன். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சூழல் வங்கத்தில் நிலவுகிறது. எப்படியிருந்த கொல்கத்தா இன்றைக்கு எப்படியாகியிருக்கிறது தெரியுமா? டெல்லியில் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து நடந்த கலவரத்தின்போது, சீக்கியர்கள் அடைக்கலம் தேடி ஓடிவந்த இடம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம். சீக்கியர்கள் பலர் அப்போது தஞ்சம் தேடி வந்த நகரம் கொல்கத்தா. குஜராத் கலவரத்தின்போது முஸ்லிம்களும் கொல்கத்தாவைத் தேடியே வந்தார்கள். இந்துத்துவ பயங்கரவாதிகளிடம் உயிர்ப் பிச்சை கேட்டுக் கையெடுத்துக் கும்பிடும் புகைப்படத்தால் உலகம் முழுவதும் அறியப்பட்ட குதுப்புதீனும் அடைக்கலம் தேடி கொல்கத்தாதான் வந்தார், தெரியுமில்லையா? அன்றைக்கு மத நல்லிணக்கத்தின் தலைநகரமாக அறியப்பட்ட கொல்கத்தா இன்றைக்குப் பாலியல் வன்முறைகளின் தலைநகரமாக மாறியிருக்கிறது. தலைநகரத்திலேயே சட்டம் - ஒழுங்கு இந்த நிலையில் இருக்கிறது என்றால், மாநிலம் முழுவதும் எப்படி இருக்கும்?
ஐந்தாண்டு கால மம்தாவின் ஆட்சி ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயமாக மாறியிருக்கிறது. எங்கும் அடக்குமுறை. சமூக வலைதளங்களில் முதல்வரைப் பற்றிய பகடிகளைப் பரிமாறிக்கொண்டதற்காகக் கைதுசெய்யப்படும் சூழல் நாட்டில் எந்த மாநிலத்தில் நிலவுகிறது? முதல்வரின் கேலிச்சித்திரத்தை வரைந்ததற்காகக் கொலை மிரட்டலுக்கு ஆளாகும் சூழல் எந்த மாநிலத்தில் நிலவுகிறது? இந்த ஐந்தாண்டுகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட எங்கள் கட்சித் தோழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 60,000 பேர் அவரவர் வசிக்கும் பகுதியிலிருந்து விரட்டப்பட்டிருக்கின்றனர். மம்தா கட்சியினர் வெள்ளைச் சேலையைக் கையில் வைத்துக்கொண்டு, எங்கள் கட்சிக்காரர்களின் வீடுகளுக்குச் செல்கிறார்கள். “உங்கள் கணவர் தனது அரசியல் செயல்பாடுகளை நிறுத்தாவிட்டால் இதுதான் உங்கள் உடையாக இருக்கும்” என்று அவர்கள் மனைவியரை மிரட்டுகிறார்கள். கல்வி நிலையங்களில் தாக்குதல்கள். பேராசிரியர்கள் வேலையை விட்டு துரத்தப்படுகிறார்கள்; மாணவர்கள் விலக்கப்படுகிறார்கள்.
ஜனநாயகச் சக்திகள் யாவும் இப்போது இதற்கு எதிராகத் திரண்டு நிற்கின்றன. ‘மம்தாவை வெளியேற்றுவோம்; வங்கத்தைக் காப்பாற்றுவோம்!’ என்பது மக்கள் சக்தியின் முழக்கமாக மாறியிருக்கிறது. மம்தா அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு ஓட்டு போட்டால், திரிணமூல் காங்கிரஸ் வீட்டுக்கு அனுப்பப்படுமோ அவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்கிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸுடன் எந்தவித உடன்பாடோ, கூட்டணியோ நாங்கள் கொள்ளவில்லை. ஆனால், மக்களின் உணர்வு அப்படி இருக்கிறது. இதை எதிர்கொள்ள முடியாத மம்தா எங்கள் மீது புழுதி வாரி இறைக்கிறார்.
இப்படியான வன்முறை அரசியல் கலாச்சாரத்தை மம்தாவுக்குக் கற்றுக்கொடுத்தது யார்? கால் நூற்றாண்டு அங்கு ஆட்சியில் இருந்த உங்களுக்கும் இதில் பங்கிருக்கிறது இல்லையா?
இது அபாண்டம். நான் ஒன்று சொல்லட்டுமா? எங்களிடம் இத்தகைய அரசியல் பண்பாடு இருந்திருந்தால், மம்தா ஒருபோதும் முதல்வராக ஆகியிருக்கவே முடியாது.
சரி, தமிழக நிலவரத்துக்கு வருவோம். கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றாக விஜயகாந்தை முன்னிறுத்தியிருக்கிறீர்கள். எந்த வகையில் அவர் இவர்களுக்கான மாற்று?
துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டின் தேர்தல் அரசியலானது, யாரை வெளியே அனுப்ப வேண்டும் அல்லது யார் வந்துவிடக் கூடாது என்பதையே மையமாகக் கொண்டு இயங்குவதாக மாறிவிட்டது. தமிழகத்தில் இன்றைக்குப் பெரும்பான்மை மக்களின் எண்ணம் என்ன? கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது. இடதுசாரிகளுக்கு இங்கு போதிய பலம் இல்லாத சூழலில், இந்தப் பொது எதிரிகளை மையமாக வைத்துக் கூட்டணியை அமைக்கிறோம்.
பாஜகவும் பாமகவும்கூட இதே முழக்கத்தை முன்வைக்கின்றன. அவர்களோடும் கூட்டணி சேர்வீர்களா?
அது எப்படி முடியும்? மதவாத, சாதியவாத சக்திகளுடன் நாங்கள் ஒதுங்கித்தானே இருக்கிறோம்! பொது எதிரியை மையப்படுத்திய கூட்டணி, கூடவே நம்முடைய இயல்புக்கேற்ற கூட்டணி. இந்த வகையில் தமிழகத்தில் இப்போதைய கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பொது எதிரியை மையமாக வைத்தே நாம் உறவுகளைத் தேர்ந்தெடுக்கிறோம். ஊழல் சக்திகளான திமுக, அதிமுக இரண்டுக்கும் மாற்றாக கவனிக்கக்கூடிய ஒரு சக்தியாக உருவெடுத்தாலே இந்தத் தேர்தலில் பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்றுதான் நினைக்கிறோம். இது தமிழ் மக்களின் விருப்பத்தையொட்டி நாங்கள் அமைத்த கூட்டணி. நிச்சயம் நாங்கள் ஜெயிப்போம்!
திராவிட அரசியலுக்கு மாற்று என்று மக்கள் எதிர்பார்ப்பது வெறும் ஊழலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல...
நீங்கள் குறிப்பிடும் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ற அமைப்பாகத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றால், இடதுசாரிகள் மட்டுமே தனித்து நிற்க வேண்டும். இன்றைய சூழலில், அமைப்பு பலம் போதாது என்பதாலேயே அதைத் தவிர்த்திருக்கிறோம். மக்கள் இடதுசாரிகளை வலுப்படுத்தட்டும். அவர்கள் எதிர்பார்ப்புக்கேற்ப தனித்து நிற்கிறோம்.
கடைசியில், எல்லாவற்றையும் மக்கள் பக்கம் திருப்பிவிடுகிறீர்கள்…
இல்லை. கடைசியில், நல்லதாக ஒரு முடிவை நோக்கி வந்திருக்கிறோம். இதை ஒரு வியூகம் என்றுகூடச் சொல்லலாம். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே முடிவெடுக்கிறோம். இனி எங்கள் முடிவுகளை அந்தந்தப் பிராந்திய மக்களே தீர்மானிப்பார்கள். பெட்ரோல் விலை உயர்வு என்றால், நாம் இதை எதிர்த்துப் போராட வேண்டும் என்று மத்திய கமிட்டி சொல்லும் வரை காத்திருக்கும் நிலை தொண்டர்களுக்கு இருக்காது. சுதந்திரமான முறையில், அந்தந்தப் பகுதி மக்களின் தேவைக்கும் உணர்வுக்கும் ஏற்ப அவர்களுக்கேற்ற முடிவுகளை எடுப்போம்; செயல்படுவோம்.
இந்த வியூகம் எத்தகைய விளைவுகளைத் தரும் என்று நினைக்கிறீர்கள்?
மக்கள் நலனை மையமாக வைத்து எடுக்கப்படும் எந்த வியூகமும் ஒருநாளும் தோற்பதில்லை. ஜெயிப்போம்!
- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT