Published : 13 Jun 2014 12:00 AM
Last Updated : 13 Jun 2014 12:00 AM
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான 20-வது உலகக்கோப்பைக் கால்பந்து போட்டி, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று தொடங்கியது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில், அமெரிக்க பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸ், பாப் பாடகர் பிட்புல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உலகக்கோப்பைப் போட்டிக்கான அதிகாரபூர்வ பாடலைப் பாடியும், நடனமாடியும் ரசிகர்களை மகிழ்வித்தனர். 600-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள், ஜிம்னாஸ்டிக் கலைஞர்கள் உள்ளிட்டோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் நடனமாடினர்.
திருவிழாக் கோலம்
64 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் பிரேசிலின் வீதிகளெல்லாம் விழாக்கோலம் பூண்டிருந்தன. பிரேசில் முழுவதும் உலகக்கோப்பையில் பங்கற்கும் பல்வேறு அணிகளின் கொடிகள், எங்கு பார்த்தாலும் ரசிகர் கூட்டங்கள் எனக் களைகட்டியிருந்தது.
உலகின் பலம் வாய்ந்த 32 அணிகள் களத்தில் மோதிக்கொள்ளும் கால்பந்து திருவிழாவை நேரில் காண்பதற்காக உலகின் அனைத்துக் கண்டங்களிலுமிருந்து சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிரேசிலில் கூடியுள்ளனர்.
ரியோ டி ஜெனிரோ, பிரேசிலியா, சாவோ பாவ்லோ, ஃபோர்ட்டலீசா, பீலோ ஹரிஸான்டே, சல்வடார், கியூயாபா, போர்ட்டோ அலெக்ரே, ரெசிபே, மனாஸ், நேட்டல், கியூரிட்டிபா ஆகிய 12 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது. மைதானம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.84 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஆசியப் பங்கேற்பு
ஆசியாவில் இருந்து ஜப்பான், தென் கொரியா, ஈரான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
பிரேசில் கனவு நனவாகுமா?
மொத்தம் 64 ஆட்டங்கள் நடைபெறு கின்றன. தொடர்ச்சியாக 20-வது உலகக்கோப்பையில் பங்கேற்கும் ஒரே அணியான பிரேசில், ஐந்து முறை கோப்பையை வென்றிருந்தாலும், சொந்த மண்ணில் இதுவரை கோப்பையை வென்றதில்லை. அந்தக் குறையை இந்த முறை தங்கள் நாட்டு வீரர்கள் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் பிரேசில் ரசிகர்கள் உள்ளனர்.
1978-க்குப் பிறகு தென் அமெரிக் காவில் நடைபெறவுள்ள இந்த உலகக்கோப்பையை பிரேசில் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அதேநேரத்தில், தென் அமெரிக்காவில் இதுவரை நடைபெற்ற நான்கு உலகக்கோப்பைப் போட்டிகளிலும் ஐரோப்பிய அணிகள் ஆதிக்கம் செலுத்தியதில்லை. ஆனால், இந்த முறை அந்த வரலாற்றை ஐரோப்பிய அணிகள் மாற்றுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐரோப்பிய அணிகளில் தற்போது ஸ்பெயின், ஜெர்மனி ஆகியவை பலம்வாய்ந்த அணிகளாக உள்ளன. அந்த அணிகள் சிறப்பாக ஆடினாலொழிய ஐரோப்பிய அணிகள் வரலாறு படைக்க முடியாது. இந்த உலகக்கோப்பைப் போட்டியை உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 500 கோடிப் பேர் பார்த்து ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT