Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM
அழகிய தமிழ் நிலத்தின் மேன்மை அதன் நில அமைப்பில் அமைந்திருக்கிறது. கேரளம் அளவுக்கு மலைகளோ ஆந்திரம் அளவுக்கு ஆறுகளின் வெள்ளத்தில் உருவான பள்ளத்தாக்குகளோ தமிழ்நாட்டில் இல்லை. இவ்வாறு ஆபத்தில்லாத ஆறுகள் ஓடி விளையாடும் பரந்த சமவெளியின் பெயர்தான் தமிழ்நாடு. பருவங்கள் மாறினாலும் எளிதில் இங்குள்ள மண்ணின் ஈரம் மாறுவதே இல்லை. பெரும் மழைக்கால நீரைச் சேகரித்து, எல்லாப் பருவங்களிலும் நீரைப் பயன்படுத்திக்கொள்ளும் தொன்மையான நீர் மேலாண்மையைத் தமிழர்கள் காலந்தோறும் வளர்த்தெடுத்துவந்துள்ளனர்.
இந்தச் சிறப்பு கல்லணையிலிருந்து தொடங்குகிறது. கரிகாலன் காலத்தில் கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர் முதலான பல அணைகள் கட்டப்படவில்லை. தமிழ்நாட்டிலும் மேட்டூர் அணை உள்ளிட்ட பல அணைகள் இல்லை. வனங்கள் மிகுந்து, சூழல் கெட்டுப்போகாத காலம். இன்று பெய்வதைவிடக் கூடுதலாகத்தான் மழை அன்று பெய்திருக்க வேண்டும். பெருவெள்ளம் தரும் பேரழிவுதான் அன்றைய சோழ நாட்டின் பிரச்சினை.
முதலில் கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்துப் பார்த்தார், பயிர்களைப் பாதுகாக்க முடியவில்லை. பின்னர்தான் கல்லணை கட்டும் முயற்சியை மேற்கொண்டார். கல்லணை ஒரு அணை மட்டுமல்ல. உலக நீரியல் துறையில் முன்னோடி முயற்சிகளுள் ஒன்று. மொத்தமாக நீர் ஓடினால் அது பெரும் சேதத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்து, நீரின் அளவைக் கணக்கிட்டு, அதை மூன்றாகப் பிரித்துப் பயன்படுத்தும் தொன்மையான நீரியல் நுட்பம். காவிரியின் மொத்த நீரும் கல்லணையில் கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு என்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.
இவ்வாறு நீரைப் பிரித்து வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் நீர் மேலாண்மையை உலகுக்கு முதலில் அளித்தவர்கள் தமிழர்கள்தான் என்பதில் பெருமை கொள்ள முடியும். கரிகாலன் கல்லணையைக் கட்டி இரண்டாயிரம் ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன. கரிகாலன் கால இந்த நீரியல் கட்டமைப்பை, பிற்காலச் சோழர்கள் மேலும் வலுப்படுத்தினார்கள். இதற்குச் சிறந்த உதாரணம், வீராணம் ஏரியின் நீர்ப் பாசனக் கட்டமைப்பு. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் இதை முழுமையாக ஆய்வுசெய்த புகழ்மிக்க நீர்சார் பொறியியல் அறிஞர் ஆர்தர் காட்டன், உலகில் இப்படிப்பட்ட நீர்ப் பாசனக் கட்டமைப்பே இல்லை என்றார். இதைத் தொடர்ந்து ஆங்கில அரசு, இதை அப்படியே ஆவணப்படுத்தியது. இது இன்று வரை நாம் பயன்படுத்திவரும் முக்கிய ஆவணமாகும். காவிரிப் படுகையில் நீர் ஓடும் பாதை மைல்களில் கணக்கிட்டு எழுதப்பட்டுள்ளது.
‘காவிரி டெல்டா’ என்னும் காவிரி வடிநிலப் பகுதியில் 36 துணையாறுகள் ஓடுகின்றன. இவற்றின் மொத்த நீளம் 999 மைல்கள். இந்தத் துணையாறுகளில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால்களின் எண்ணிக்கை 29,881. இதன் நீளம் 14,098 மைல்கள். உடலில் அமைந்த ரத்த நரம்பு மண்டலத்தைப் போன்றது காவிரி வடிநிலத்தின் நீர்ப் பாசன மண்டலம்.
தமிழ்நாட்டின் நீர்ப் பாசன வரலாற்றில் புகழ்பெற்று விளங்கியவர் இருப்பைக்குடி கிழவன். பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஏரிகளில் மதகு அமைக்கும் முறையை முதலில் கண்டறிந்தவர் இவர்தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அன்றைய ஏரிகள் பஞ்சம் போக்கிகள். நீரைத் தேக்கி மதகுகள் அமைத்து, நீர் மேலாண்மையில் சிறப்புற்றிருந்த இவர் அமைத்த கண்மாய்கள் பாண்டிய மண்டலம் முழுவதும் விரிந்திருக்கின்றன. இதில் ஒரு முக்கிய தகவல். பெரும் வெள்ளக் காலங்களில் ஏரி உடைந்தால் பேராபத்து ஏற்பட்டுவிடும். இதற்காக ஏரியின் அடியாழத்தில் மூழ்கிக் கிடக்கும் மடை என்னும் நீர் போகும் வழியைத் திறப்பதற்கு ஒரு ஏரிக்கு அல்லது ஒரு கண்மாய்க்கு ஒரு குடும்பத்தைத் தேர்வுசெய்து வைத்திருப்பார்கள். அவர்களுக்கு வைக்கப்பட்ட பெயர்தான் மடையர்கள்.
பெருவெள்ள அபாயத்திலிருந்து மக்களைக் காப்பாற்றி, நீரைச் சேமித்து, வறண்ட காலத்தில் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் மிகவும் நுட்பமான நீர் மேலாண்மை, வடதமிழ்நாட்டில் தனித்துவம் கொண்டதாகத் தெரிகிறது. எவ்வளவு மழை பெய்தாலும் அனைத்தையும் தேக்கி வைத்துக்கொள்ளும் நீர்நிலைகளை இங்கு உருவாக்கி வைத்திருந்தார்கள். இந்த நீர் மேலாண்மையில் பல்லவ மன்னர்களுக்கும் சோழ மன்னர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. சென்னை ஒரு காலத்தில் ஏரிகளின் வேடந்தாங்கல். இதைப் போல, பாலாறு, பெண்ணையாற்றின் நீர்வழிப் பாதைகள் வெள்ளத்தையும் வறட்சியையும் மனதில்கொண்டு உருவாக்கப்பட்டவை.
உலக வங்கி உட்பட உலகில் பல வங்கிகளிடம் நீர்நிலைப் பாதுகாப்புக்கு என்று கடனாகப் பெரும் தொகை பெறப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டின் கடன் அளவுதான் கூடிக்கொண்டே செல்கிறதே தவிர, நீர்நிலைகளைப் பாதுகாக்க முடியவில்லை. இதன் பின்னணி மிகவும் கேவலமானது.
நகர்மயமாதல், ரியல் எஸ்டேட்டுகளின் வளர்ச்சி போன்றவற்றால்தான் தமிழ்நாட்டில் நீர்நிலைகள் பெருமளவில் அழியத் தொடங்கின. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் நீர்நிலைப் பாதுகாப்புக்கென்று பெரும் தொகை ஒதுக்கப்படுகிறது. ஒப்பந்தக்காரர்களிடம் பல கோடிகள் சென்று, பின்னர் ஆளும் அரசியல் வட்டாரங்களுக்குச் சென்றுவிடுகிறது. இதில் பெரும் பணக்காரர்களான எத்தனையோ அதிகாரிகளை நான் பார்த்திருக்கிறேன்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைய நீர்நிலைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதை யோசிக்க வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் முறையான திட்டமிடலும் நீர்நிலைகளைச் சுற்றி வாழும் பொதுமக்களின் கூட்டுச் செயல்பாடும் முக்கியமானதாகும். ரியல் எஸ்டேட் தொழிலும், அரசாங்கத்திடம் தொலைநோக்குப் பார்வை இல்லாததும்தான் நிலைமை மோசமானதற்குக் காரணம் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
இன்றைய பெரும் நீர்நிலைகளின் அழிவில் அரசு நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்களின் பெரும் கட்டிடங்கள் வானுயர்ந்து நிற்கின்றன. இந்த இடங்களில் கட்டிடங்களைக் கட்டி, தனியார் நிறுவனங்கள் பெரும் லாபத்தை ஈட்டியிருக்கின்றன. அவர்களின் லாபத்தின் ஒரு பகுதியைச் சட்டபூர்வமாக அரசு பெற்று, நீர்நிலைகளின் பாதுகாப்புக்குப் பயன்படுத்த வேண்டும். நோயுற்ற நீர்நிலைகளை, நவீனச் சுற்றுச்சூழல் அறிவியலைப் பயன்படுத்திப் பாதுகாப்பதும், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குவதும் இன்றைய காலத்தின் தேவை. இதற்கு ஒரு நிதியை அரசின் முயற்சியில் திரட்ட வேண்டும். இதற்கு நீர்நிலைகளில் தங்கள் வளாகங்களை அமைத்திருக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் பெரும் பங்களிப்பைச் செலுத்த வேண்டும். அவர்களின் பங்களிப்பைச் சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்திப் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை.
இன்றைய காலத்தில் இளைஞர்கள் நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் பெரும் பங்களிப்பைச் செலுத்துகிறார்கள். இவர்கள் எனக்குப் புது நம்பிக்கையை அளிக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த அரசு சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும். பயனற்றுக் குப்பைக் கிடங்குகளாக ஆக்கப்படும் நீர்நிலைகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும். ஐரோப்பாவில் தொழிற்புரட்சிக்குப் பின்னர் நீர்நிலைகள் அழியத் தொடங்கின. உயிரற்றுப்போனதாக அறிவிக்கப்பட்ட தேம்ஸ் நதி மீண்டும் உயிர்பிழைத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதை நாம் தமிழ்நாட்டிலும் நிகழ்த்திக் காட்ட வேண்டும்.
தமிழக அரசு ‘நீர்வளப் பாதுகாப்பு’ என்ற கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும். பத்து ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயித்து அதனைச் செயல்படுத்த வேண்டும். இதுதான் இந்த அழகிய தமிழ் நிலத்துக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.
நீரின்றி அமையாது தமிழ்நாடு.
- சி.மகேந்திரன், மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தொடர்புக்கு: singaram.mahendran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT