Published : 10 Mar 2016 09:34 AM
Last Updated : 10 Mar 2016 09:34 AM
அரசியல் பேச்சில் தமிழ்நாட்டில் இன்றைக்கும் அண்ணாவை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. ஆனால், அண்ணாவின் பேச்சுகள் படிக்கக் கிடைக்கின்றனவா? கிடைக்கின்றன, பல நூல்கள் கிடைக்கின்றன. குறிப்பிட வேண்டிய நூல்களில் ஒன்று இது. ‘பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்.’ நூலிலிருந்து ஒரு சிறு பகுதி.. சென்னையில் 2.4.1950-ல் நடந்த சேரி வாழ்வோர் மாநாட்டில் அண்ணா பேசியதிலிருந்து..
“நான் 1935-ல் சென்னை நகரசபைக்குப் போட்டியிட்டுத் தோற்றேன். பிரச்சாரக் கூட்டங்களில் ‘சேரிகளில் விளக்குகள் இல்லை. ஆனால், கோயில்களின் முன்னால் அலங்கார விளக்குகளை நகரசபை போடுகிறது’ என்று விமர்சித்தேன். ஒரு காங்கிரஸ் அன்பர் ‘எனக்கு ஓட்டுப் போடாதீர்கள்’ என்று துண்டுப் பிரசுரங்கள் அளித்தார்.
வெளிநாட்டுத் தூதுவர்களுக்குச் செலவிடும் பணத்தில் ஒரு பகுதியே நாட்டில் உள்ள சேரிகளைச் சீர்திருத்துவதற்குப் போதும். சேரிகளைச் சீர்திருத்த ரூ.50 லட்சம் ஒதுக்குமாறு சர்க்காரைக் கேட்கிறோம். பணம் இல்லை என்று சர்க்கார் சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள். பணம் இருக்கும் இடத்தைக் காட்ட நாங்கள் இருக்கிறோம்.
காலி மனைகளைக் குறைவான விலை கொடுத்து வாங்கி, அழகிய வீடுகளை சேரி மக்களுக்குக் கட்டிக்கொடுக்கலாம். என்னுடைய இளமைப் பருவத்திலே மாம்பலம் காடாக இருந்தது. இப்போது ஒளிவீசும் நட்சத்திரங்கள் குடியிருக்கும் இடமாக மாறியிருப்பதைக் காண்கிறேன்.
ஊரிலிருந்து துரத்தப்பட்ட மக்கள், ஊருக்கு உழைக்கும் மக்கள், ஊருக்கென்று உழைத்து உருக்குலைந்த மக்கள், ஒரு சாராரால் உலுத்தர்கள், பறையர்கள் என்று ஒதுக்கித் தள்ளப்பட்ட மக்கள், ஆண்டவனே உன் மக்களல்லவா? உன் கோயில்களின் காலியிடங்களில் அவர்கள் ஏன் புகக் கூடாது?
திராவிட முன்னேற்றக் கழகத்தாரிடம் அரசாங்கம் ஒப்படைக்கப்பட்டால் கோயிலிலே குடியேற ஏழை மக்களுக்கு இடமளிக்கப்படும். ஆண்டவனின் சொந்த மக்களான ஏழைகளுக்கு வெளியிலே இடமில்லையென்றால், ஆண்டவனின் சந்நிதானத்தில் இடமில்லையா?
ஒன்பது பேர் ஒரு ஓட்டைக் குடிசையிலே வாழத்தக்க இடமின்றித் தவிக்கிறார்கள். பங்களாக்களில் சீமான்களும் சீமாட்டிகளும் உலாவி வருகிறார்கள்.
காரில் சென்றால்தான் வீட்டைக் கண்டுபிடிக்கும் அளவுக்குச் சில பங்களாக்கள் மிகப் பெரியதாக இருக்கின்றன. சேரி மக்கள் வாழவோ இடமில்லை! பங்களாக்களில் தேவைக்கு மேல் உள்ள இடங்களையெல்லாம் சிறுசிறு வீடுகளாக மாற்ற வேண்டும்.
நம்முடைய கிளர்ச்சிகள் அடிக்கடி தோன்றி அமுங்கிவிடுகிற காரணத்தால், சர்க்கார் நமது பிரச்சினைகளைக் கவனிக்காமல் இருக்கிறார்கள். கிளர்ச்சிகள் தொடர்ந்து செயல்பட்டால்தான் பலன் காண முடியும். சர்க்காரால் ஏழை மக்களின் நலத்திலே நாட்டம் செலுத்த முடியவில்லை என்றால், எங்களிடம் சில ஆண்டுகளுக்கு காண்ட்ராக்டாக விடட்டும். அப்போது நாங்கள் ஏழை மக்களின் நலன் கருதிச் செய்யும் வசதிகளைக் கண்டு சர்க்காரே வெட்கமடையும்.
‘நாங்கள் கையாலாகாதவர்கள். உங்கள் பிரச்சினைகளை எங்களால் கவனிக்க முடியாது’ என்று சர்க்கார் துண்டு நோட்டீஸ் போட்டுக் கொடுக்கட்டும். அதை வைத்துக்கொண்டே தமிழகத்தில் ரூ.50 லட்சம் வசூலித்துக்காட்டுகிறேன். சேரி என்ற பெயரையே சர்க்கார் ஒழித்துக்காட்ட வேண்டும். நாமெல்லாம் ஒன்றுகூடிக் கேட்பது ரூ.50 லட்சம்தான். ஏதோ சிறு சீர்திருத்தமாவது தற்போது செய்யவே இந்தத் தொகையை ஒதுக்குமாறு சர்க்காரைக் கேட்கிறோம்!”
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
இரு தொகுதிகளும் சேர்த்து ரூ.740.
பூம்புகார் பதிப்பகம்,
சென்னை- 108.
தொடர்புக்கு: 044- 25267543
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT