Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM
கல்வி தருவதில் பள்ளிக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அதே நேரம் வீதிக்கும் ஒரு பங்கு இருக்கிறது. வீதி என்பது சமூகத்தின் குறியீடு. இந்தியாவில் பொதுப் பாதைகளும் சரி, பொதுப் பள்ளிகளும் சரி, இயல்பாகவும் உருவாகவில்லை; இரக்கம் கொண்டும் உருவாகவில்லை. ஒரு போராட்ட வரலாற்றின் பின்னணியில் உருவானவை அவை.
1898-ல் மறுக்கப்பட்ட பொதுப் பாதையில் அய்யங்காளி செலுத்திய வில்வண்டியின் சக்கரங்கள் வீதியில் மட்டும் ஓடவில்லை. சாதி வெறி ஏற்படுத்திய தடைகளின் மீதும் ஏறி ஓடின. கட்டைகளோடும் கத்திகளோடும் பாதையில் வந்து மறித்தவர்களை, அய்யங்காளி தீரத்துடன் தாண்டியது புரட்சி எடுத்துவைத்த முதல் எட்டு. இப்படி மறுக்கப்பட்டவை ஒன்றா இரண்டா? வைகுண்டசாமிக்குப் ‘பெருமாள்’ என்கிற பெயர் மறுக்கப்பட்டது. தன்னிரு மார்பகங்களை அறுத்துக்கொண்டு மாண்ட நங்கேலிக்கு மார்புச் சேலை மறுக்கப்பட்டது.
பொதுப் பள்ளிகள் எளிய மக்களின் எட்டாக் கனவாக இருந்தன. 19-ம் நூற்றாண்டு முழுக்க இந்தியாவில் இதுதான் நிலை. 20-ம் நூற்றாண்டில் சொற்ப அளவில் தொடங்கப்பட்ட கிறிஸ்தவப் பள்ளிகள் சிறு ஆறுதல். அங்கு நுழைய சாதி ஒரு தடையாக இல்லை.
பொதுப் பள்ளிகள் கைவிரித்தபோது, கைகொடுத்தது வீதிதான். 19-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவப் பாதிரியார்கள் வீதிகளில் தொடங்கிய ‘இரவுப் பள்ளிகளில்’ எழுத்தறிவு பெற்றோர் - குறிப்பாகப் பெண்கள் - லட்சக்கணக்கில் இருந்தார்கள். 1900-களின் தொடக்கத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில், பொருளாதாரத்தில் பெரிதும் பின்னுக்குக் கிடந்த நெல்லை மாவட்டம், பெண் கல்வியில் முன்னுக்கு வந்து நின்றது. காரணம், வீதியில் நடந்த இரவுப் பள்ளிகள். கல்வியில் சமூகத்தின் பங்கை நிராகரிக்க முடியாது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
அறிவொளி வைத்த எட்டு
1990-களின் தொடக்கத்தில் இந்தியா முழுக்க எழுத்தறிவு இயக்கம் மலர்ந்தது. தமிழகத்தில் அறிவொளி இயக்கம் என்ற பெயரில் உருவானது. ‘வீதியிலே வீதியிலே ஊர்வலம் வருகின்றோம்...’ - என்று பாடி நடந்த நாட்கள் மறக்க முடியாதவை. அறிவொளி ஒருங்கிணைப்பாளர்களாகப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பலர் இருந்தனர். அவர்களின் சுவர் வகுப்பறைகளில் இருந்து மாறுபட்டு, அறிவொளியின் வீதி வகுப்பறைகள் முற்றிலும் விலகியிருந்ததைக் கண்டனர். பள்ளி வகுப்பறையில் இல்லாத ‘நெருக்கம்’, அறிவொளி மையத்தில் இருந்ததை அவர்கள் உணர்ந்தனர். அது கற்போருக்கும் ஆசிரியர்க்கும் இடையிலான நெருக்கம்! கல்விக்கு அழகு நெருக்கம்தான், இடைவெளி அல்ல என்பது அறிவொளிக்குப் பொறுப்பேற்ற ஆசிரியர்களுக்குப் புரிந்தது, கொஞ்சம் உறைத்தது. மிக முக்கியமாக, அறிவொளி மையத்தில் நிலவிய ‘சுதந்திரம்’ இதுவரை அவர்கள் அறியாதது. அங்கு, ‘ஏன் லேட்?’ என்று கேட்கவும் முடியாது; ‘கெட் அவுட்’ என்று சொல்லவும் முடியாது. விதிகள் அற்ற சுதந்திரம்!
அந்தச் சுதந்திரம் காரணமாக, அறிவொளி மையங்களில் கட்டற்ற உரையாடல் பெருகியது. ‘பேசு... பேசு!’ என்று கெஞ்சிக்கொண்டிருக்காமல் பெருகிய உரையாடல் அது. அறிவொளியின் முதல் பாடத்தில் இருந்த ஒரு சொல் - ‘பினாமி’. பினாமி என்ற ஒரு சொல் குறித்து அறிவொளி மையத்தில் கற்போர் பேசிய பேச்சுகளையும், கொட்டிய குமுறல்களையும் மட்டுமே ஒரு சிறு நூலாக்க முடியும். மடை திறந்து பெருகும் இந்த உரையாடலை வகுப்பறை ஒருபோதும் கண்டதில்லை. பக்கத்தில் நின்று ‘பரீட்சை’ முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கும்போது பேச்சு எப்படி வரும்?
வேறுபாடுகள் இல்லையா?
வீதியில் நடந்தது என்கிற ஒற்றுமை இருந்தபோதும், ஒவ்வொரு முயற்சியும் வேறுபட்டது. 19-ம் நூற்றாண்டு இரவுப் பள்ளி ‘எழுத்தறிவு, எண்ணறிவை’ மட்டும் முதன்மைப்படுத்தியபோது, அறிவொளி இயக்கம் மூன்றாவதாக ‘விழிப்புணர்வை’யும் இணைத்தது. கேள்வி கேளு... தடைகளை உடை! (Ask and Break) - என்பது அறிவொளி இயக்கத்தின் முழக்கமானது.
இன்று ‘இல்லம் தேடிக் கல்வி’ இயக்கம் வீட்டருகே வீதியில் குழந்தைகளைக் கூட்டுகிறது. கதை, பாட்டு, விளையாட்டுகளோடு நடக்கும் குதூகலச் சந்திப்பு இது. அறிவொளியின் சாயல் இருக்கிறது; வேறுபாடும் இருக்கிறது. குழந்தைகளிடமிருந்து கரோனா பறித்துவிட்ட கல்வியை மீட்டெடுக்கும் முயற்சி இது; குழந்தைகளின் உணர்வுகளைப் புதுப்பிக்கும் முயற்சி இது; பள்ளியிலிருந்து ஒரு குழந்தையும் விடுபட்டுப் போகாதபடி பள்ளிக் கல்வியைப் பாதுகாக்கும் முயற்சி இது. ‘இல்லம் தேடிக் கல்வி’ - அறிவொளியிடமிருந்து வேறுபட்டாலும் அறிவொளியிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய அனுபவங்கள் நிச்சயம் இருக்கின்றன.
அறிவொளி தந்த அனுபவங்கள்
கருத்துரைகளையும் சொற்பொழிவு களையும்விட முக்கியமானது புத்தகம் என்பது அறிவொளி அனுபவம். ‘புத்தகம் கையில் எடுத்துவிடு - அதுவே உன் போர்வாள்’ என்றது அறிவொளி.
குறைந்த படிப்பாளிகளும், புதிதாக எழுதப் படிக்கக் கற்றோரும் வாசிப்பதற்கென நூறு சிறிய புத்தகங்களை (24 பக்க அளவில்) படங்களுடன் கொண்டுவந்தது அறிவொளியின் மிகப் பெரிய சாதனை. எந்தச் சந்திப்புக்கும் ஒரு முன்னுதாரணமான முயற்சி இது. சந்திப்புகள் புத்தகங்களோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்பது அறிவொளியின் கலையாத கனவு.
கரோனா பறித்த கல்வியை மீட்டெடுக்க இத்தகைய சிறு புத்தகங்கள் ஏராளம் தேவை - குழந்தைகள் வாசிக்கவும், குழந்தைகளிடம் வாசித்துக்காட்டவும். குழந்தைகளுடைய சந்திப்பில் ஒரு வாசிப்பு இயக்கம் மலர வேண்டும். வாசிப்பியக்கம் குழந்தைகளையும் மலர வைக்கும்.
இப்படிப்பட்ட வீதி முயற்சிகளின்போது குறைந்த படிப்புடைய பெற்றோரை மறந்துவிடக் கூடாது. மழையில் சேதமான பயிர்களைப் போன்றவர்கள் அவர்கள். அவர்கள் கையருகே சின்னஞ்சிறு நூலகங்கள் வீதிதோறும் வேண்டும். கேரளம் சாதித்துக் காட்டிய முயற்சிதான் இது. மரங்கள்கூட அங்கு நூலகங்களாக மாறியிருக்கின்றன. இங்கும் அது சாத்தியமே. சாத்தியப்படுத்துவதற்கான தருணம் இது.
ஒரு மழையில் - ஒரு திருவிழாவில் - ஒரு சாதிச் சண்டையில் காணாமல் போகும் ஆபத்தும் அறிவொளி மையத்துக்கு இருந்தது. மாறாக ‘இல்லம் தேடிக் கல்வி’ பாதுகாப்பானது. வீதியை மட்டும் அது நம்பி இருக்கவில்லை. வீதியில் கூடி, விளையாடி, பேசி, வாசித்து புது சக்தி பெற்றுவரும் குழந்தைகளைக் கொண்டாட தினசரி காத்திருக்கிறது பள்ளி; அன்புடன் அரவணைக்கக் காத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். பள்ளி, வீதி என்ற இரட்டை பலத்தோடு நிற்கிறது ‘இல்லம் தேடிக் கல்வி’ இயக்கம்.
- ச.மாடசாமி, ‘எனக்குரிய இடம் எங்கே?’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: smadasamy1947@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT