Published : 16 Mar 2016 09:30 AM
Last Updated : 16 Mar 2016 09:30 AM

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- நீடித்த நிலையான ஆட்சி கோஷம்!

எடுத்த எடுப்பிலேயே எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது தமாகா. 1996-ல் அமைந்த மத்திய அரசின் அமைச்சரவையிலும் இடம்பெற்றது. ஆனால் காங்கிரஸ் ஐக்கிய முன்னணி இடையிலான ஈகோ யுத்தம், ஜெயின் கமிஷன் அறிக்கை ஆகியவற்றால் டெல்லியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தேவகெளடா, குஜ்ரால் அரசுகளை வீழ்த்தின. விளைவு, 1998- ல் மீண்டும் மக்களவைத் தேர்தல்.

தமிழ்நாட்டில் திமுக அணியிலேயே நீடித்த தமாகாவுக்கு 20 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதிமுகவால் விலக்கப்பட்ட காங்கிரஸ் திருநாவுக்கரசுவின் ‘எம்.ஜி.ஆர். அதிமுக’வுடன் அணியமைத்து, 35 தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுக தலைமையிலான அணி பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் கொண்ட பலமான கூட்டணியாக உருவெடுத்திருந்தது.

கவிழ்ந்த வாஜ்பாய்

அற்ப ஆயுளில் ஆட்சி வீழ்ந்திருந்ததால் நிலையான ஆட்சி என்பது தேர்தல் கோஷமானது. பிரச்சாரம் தீவிரமடைந்தபோது திடீரென நடந்த கோவை குண்டுவெடிப்பு, தேர்தல் களத்தில் எதிரொலித்தது. விளைவு, தமிழகத்தில் அதிமுக அணி அபாரவெற்றி பெற்றது. முன்பு 20 எம்.பிக்களை வைத்திருந்த தமாகாவுக்கு திடீர் இறங்குமுகம். வெறும் 3 இடங்களே கிடைத்தன. காங்கிரஸுக்கும் படுதோல்வி.

அதிமுக ஆதரவோடு மத்தியில் அமைந்தது வாஜ்பாய் அரசு. பின்னர், அது அதிமுகவினாலேயே கவிழ்க்கப்பட்டது. மீண்டும் மக்களவைக்குத் தேர்தல். கடைசி நேரத்தில் வாஜ்பாய் அரசை ஆதரித்த திமுகவுடனான உறவை முறித்துக்கொண்டது தமாகா. அதேசமயம் அதிமுகவுடன் அணிசேர அக்கட்சி விரும்பவில்லை. புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து அணி அமைத்தது. அதிமுக அணியில் ஐக்கியமான காங்கிரஸுக்கு 11 தொகுதிகள் தரப்பட்டன. இம்முறை பாஜக உள்ளிட்டோரைக் கொண்ட பலமான அணியைத் திமுக உருவாக்கியிருந்தது.

மீண்டும் நிலையான ஆட்சி கோஷமே எதிரொலித்தது. தேர்தலின் முடிவில் மீண்டும் வாஜ்பாயே பிரதமரானார். தமிழகத்தில் தமாகா அணிக்குப் படுதோல்வி. ஆனால் அதிமுக அணியில் இடம்பெற்ற காங்கிரஸுக்கு 2 தொகுதிகள் கிடைத்தன. அதன்மூலம், தமாகா பலவீனமாகிவிட்டது போன்ற தோற்றம் உருவானது. ஏதோவொரு பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்தாலொழிய தமாகாவுக்கு மீட்சியில்லை என்ற சூழல்.

மூப்பனாரின் மரணம்

2001-ல் தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்தது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியிலிருந்து திமுகவை வீழ்த்த பலமான கூட்டணியை அமைக்க விரும்பிய அதிமுகவின் உடனடித் தேர்வு தமாகா. தொடர் தோல்விகளால் துவண்டுபோன தமாகாவுக்கு உயிர்கொடுக்கும் வகையில் அதிமுகவுடனான கூட்டணிக்குச் சம்மதித்தார் மூப்பனார். கூடவே, காங்கிரஸையும் சேர்த்துக் கொண்டார். இருகட்சிகளுக்கும் சேர்த்துக் கிடைத்தவற்றில் 32-ல் தமாகாவும் 14-ல் காங்கிரஸும் நின்றன. அதன்மூலம், பிரிந்துகிடந்த காங்கிரஸும் தமாகாவும் ஓரணிக்கு வந்தன.

அதிமுகவோ பலமான அணியை உருவாக்கி யிருக்க, சிறுகட்சிகளைக் கொண்ட பலவீனமான கூட்டணியை உருவாக்கியது திமுக. விளைவு, அதிமுக அணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதிமுக ஆட்சியமைத்தது. தமாகாவுக்கு 23 தொகுதிகளும் காங்கிரஸுக்கு 7 தொகுதிகளும் கிடைத்தன. அதன்மூலம், கடந்தகாலத் தோல்விகளிலிருந்து மீண்டெழுந்தது தமாகா. பிறகு காங்கிரஸிலேயே இணைந்தது. காரணம்: மூப்பனாரின் மரணம்!

- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com (கோஷம் போடுவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x