Published : 11 Nov 2021 03:07 AM
Last Updated : 11 Nov 2021 03:07 AM
மழை இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது. ஆனால், தற்போதைய மழையில் சென்னையே முடங்கிப்போய்க் கிடக்கிறது. 2019-ல் நீரில்லாமல் தவித்த சென்னை இன்று மழைநீர் சூழ்ந்து தத்தளிக்கிறது. இந்த இரட்டைத் துன்பத்திலிருந்து சென்னை மக்கள் விடுபட என்னதான் தீர்வு? விரிவாகப் பேசுகிறார் நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன்.
சென்னை மாநகரம் மழைக்கு உகந்ததல்ல என்னும் குரல்களைக் கேட்க முடிகிறது. ஏன் இந்த நிலைமை?
சென்னை நகரம் மழைக்கு உகந்ததல்ல என்று சொல்வது அறிவீனம். இப்போதைப் போலவே 2005-லும் ஒரே நாளில் 22 சென்டிமீட்டர் மழை பெய்தது. அப்போதே நமது நகரின் கட்டமைப்பில் நிகழும் குளறுபடிகளை எதிர்த்து நான் தீவிரமாகப் பேசினேன். வருங்காலங்களில் நாம் இன்னும் மோசமான துன்பங்களை அனுபவிப்போம் என்று எச்சரித்திருந்தேன். அடுத்து 2015-லும் ஒரே நாளில் 27-28 செ.மீ. மழைபெய்தது. அப்போது என்னிடம் ஊடகங்கள் கருத்துக் கேட்டபோது 2005-ல் என்ன எழுதினேனோ அதை அப்படியே படித்தேன். 2015-க்குப் பிறகாவது நாம் பாடம் கற்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால், நாம் கற்கவில்லை. ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். சென்னை நகரம் மழைக்கு மிகவும் உகந்த நகரம். மிகப் பெரிய அளவில் வெள்ளத் தடுப்புக்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கும் நகரம். சென்னையில் மூன்று பெரிய ஆறுகள் இருக்கின்றன. வடக்கே கொசஸ்தலை ஆறு எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதை எண்ணூர் அருகே கடலில் கொண்டுசேர்த்துவிடும். மத்திய சென்னையில் கூவம் ஆறு, தென் சென்னையில் அடையாறு ஆகியவையும் மழைநீரைக் கடலில் சேர்ப்பதற்கான கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. சென்னை முழுக்க 16 கால்வாய்கள் இருக்கின்றன. இவை தவிர, பக்கிங்ஹாம் கால்வாய் இருக்கிறது. இத்தனையையும் வைத்துக்கொண்டு மழை பெய்தால் தத்தளித்துக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால், இந்தக் கட்டமைப்புகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். ஆற்றின் இரண்டு பக்கமும் இருக்கும் வெள்ளச் சமவெளிகளை ஆக்கிரமித்துக் கட்டிடங்கள், தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆற்றுக்கு உண்டான அகலமும் இல்லை... ஆழமும் இல்லை. பிறகு எப்படி தண்ணீரை அவை தாங்கும்? அனைத்துக் கால்வாய்களும் வெள்ளத்தைச் சுமப்பவை. அவற்றைச் சீரழித்தால் தண்ணீர் தேங்காமல் என்ன செய்யும்?
வீடுகளில் மழைநீர் புகுவதற்கும் மழை காரணமல்ல. சாலைகளை அமைக்கும்போது பழைய சாலையை நீக்கிவிட்டுத்தான் புதிய சாலையை அமைக்க வேண்டும் என்னும் விதி இருக்கிறது. ஆனால், எல்லா இடங்களிலும் ஒன்றுக்கு மேல் இன்னொன்று, அதற்கு மேல் மற்றொன்று என்று சாலையைப் போட்டுவிடுகிறார்கள். இதனால் சாலையின் உயரம் வீட்டு நிலைப்படியின் உயரத்தைவிட அதிகரித்துவிடுகிறது. அதனால்தான் மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. இதனால் சாதாரண மக்களுக்கு எவ்வளவு துன்பம்!
சென்னையின் வெள்ளநீர் வடிகால்கள், கால்வாய்களின் தரம் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன அல்லவா?
மேற்கத்திய நாடுகளில் வெள்ளநீர் வடிகால் அமைப்பதற்கு முன்பு அந்தப் பகுதி முழுவதற்குமான ஏற்ற-இறக்க நிலை குறித்துக் கணக்கெடுப்பு நடத்துவார்கள் (Elevation Survey). இதன் மூலம் அந்தப் பகுதியில் எங்கெல்லாம் மேடு, எங்கெல்லாம் பள்ளம், எதிலிருந்து எதை நோக்கித் தண்ணீர் போகிறது என்றெல்லாம் தெரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல் வடிகால்களை அமைக்க வேண்டும். ஆனால், இங்கோ அதுபோன்ற அறிவியல்பூர்வ அணுகுமுறை எதுவும் இருப்பதில்லை. ஒரு ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைத்துவிட்டால் அவருடைய பணியாளர்கள் நேராக வந்து பள்ளம் தோண்டி வடிகால் கட்டிவிட்டுச் சென்றுவிடுவார்கள். இப்படிக் கட்டுவது வெள்ளநீர் வடிகாலே அல்ல. மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் குற்றம். இன்றைய முதல்வருக்கு நான் முன்வைக்கும் வேண்டுகோள் இது: வெள்ளநீர் வடிகால்களைக் கட்டமைப்பதற்காகக் கடந்த பத்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவுசெய்யப்பட்டிருக்கிறது. இவை குறித்து ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். அவை ஒழுங்காகக் கட்டப்பட்டிருந்தால் இன்று இவ்வளவு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்காது. உயர் நீதிமன்றம் இதே கேள்வியைத்தான் எழுப்பியிருக்கிறது.
வருங்காலத்தில் இந்தப் பிரச்சினைகளைத் தடுக்க அரசு செய்ய வேண்டியவை என்ன?
பருவநிலை மாற்றத்தை இனியும் நாம் ஒதுக்கித் தள்ள முடியாது. சென்னை கடலோர மாநகரம். இங்கு கடல் மட்டத்தைவிட பத்து மீட்டர் உயரத்துக்குக் கீழே இருக்கும் பகுதிகள் அதிகமாக உள்ளன. வரும் காலங்களில் மழை, வறட்சி ஆகியவற்றின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போகுமே தவிரக் குறையாது. இவற்றால் விளையக்கூடிய பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற நீண்டகால நடவடிக்கைகள் பல எடுக்கப்பட வேண்டும். அதற்கு உடனடியாக ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டும்.
கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆகிய ஆறுகளில் இரண்டு பக்கமும் கரைகளை வலுப்படுத்தி, எங்கெல்லாம் தடுப்பணை கட்ட முடியுமோ அங்கெல்லாம் கட்ட வேண்டும். அத்துடன் கொசஸ்தலை ஆறு கடலில் கலக்கும் பாதையில் அமைந்துள்ள எண்ணூர் கழிமுகப் பகுதி மிகவும் பாழடைந்து கிடக்கிறது. அந்தக் கழிமுகத்தைச் சீரமைக்க வேண்டும்.
2015-ல் 9,70,000 கன அடி தண்ணீர் கூவத்தில் கலந்தது அடையாறில் 1,07,000 கன அடி தண்ணீர் கலந்தது. இதனால்தான் அப்போது மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் 120-க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீர் வந்து கலக்கிறது. அந்த ஏரிகளைத் தூர்வாரி ஆழப்படுத்தி, அகலப்படுத்தி அவற்றின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். அதைச் செய்யாததால் பெருமழை நேரத்தில் ஏரிகளில் தேங்க முடியாத நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரே நேரத்தில் வந்து நிரம்புகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு, வெள்ளம் வருமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. தண்ணீரையும் வீணடிக்க வேண்டியிருக்கிறது. கூவம் ஆற்றுக்கும் 70-80 ஏரிகளின் உபரிநீர் வந்து கலக்கிறது. அது தவிர, பாலாற்றிலிருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீர் வருகிறது. அந்த ஏரி கிட்டத்தட்ட ஐந்தரை டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. அது நிரம்பிய பின் பெரிய ஆறு மாதிரி அடித்துக்கொண்டு வரும் தண்ணீர் கேசவரம் அணைக்கட்டுக்கு வந்து, அங்கிருந்து கூவம் ஆற்றில் கலக்கிறது. அதனால்தான் கூவத்தில் வெள்ள அபாயம் ஏற்படுகிறது. மழைநீரை அந்தந்த ஏரிகளிலேயே சேகரிப்பதற்கான வழிகளைச் செய்துவிட்டால், நமக்கு வெள்ள அபாயமும் கிடையாது. குடிநீர்ப் பிரச்சினையும் வராது. பல்லாயிரம் கோடி, பல லட்சம் கோடிகளில் நதிநீர் இணைப்புத் திட்டங்களைத் தீட்டுவதற்குப் பதிலாக ஏரிகளைச் சீரமைத்தாலே நாம் வெள்ளம், வறட்சி இரண்டிலிருந்தும் தப்பிக்கலாம். சுற்றுச்சூழலையும் வளமாக்கலாம்.
இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?
இன்றைய அரசு தமிழ்நாடு முழுக்க நிறைய அதிகாரிகளை நியமித்திருக்கிறது. அவர்கள் அல்லும் பகலும் அயராமல் உழைக்கிறார்கள். உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இப்போது இதைத்தான் செய்ய முடியும். ஆனால், இதுபோன்ற பெருமழைக் காலங்களில் நாம் என்னென்ன இடர்களை எதிர்கொண்டோம் என்பதை முறையாகப் பதிவுசெய்ய வேண்டும். இதற்கென்று தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுச் செயல்பட வேண்டும். என்னென்ன இடர்கள் வந்தன. எதனால் அவை ஏற்பட்டன, அவற்றுக்கான தீர்வுகள் என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்து அந்தக் குழுவினர் விரிவான அறிக்கையைக் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்துவதற்குத் தயாராக வேண்டும்
நாம் மழைக்காலத்தில் மட்டும்தான் மழைக்காலப் பிரச்சினைகளைப் பேசுகிறோம். இது மிகப் பெரிய தவறு. மழை வராத சமயத்தில்தான் மழையைப் பற்றிப் பேச வேண்டும். மழை வரும் நேரத்தில் நாம் வறட்சி பற்றிப் பேச வேண்டும். இன்னும் இரண்டு மாதங்களில் நகர்ப்புற வெப்பம் அதிகரிக்கப்போகிறது. உடனடியாக நீர்ப் பற்றாக்குறையும் வரும். எனவே, நமக்கு வறட்சியையும் வெள்ளத்தையும் ஒருசேரப் பார்க்கும் அணுகுமுறை வேண்டும். வெள்ளம் வரும்போது வறட்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுத் தண்ணீரைச் சேமிக்க வேண்டும். மழை இல்லாதபோதும் மழைக்காலத்துக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
- எஸ்.கோபாலகிருஷ்ணன்,
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT