Last Updated : 06 Mar, 2016 09:54 AM

 

Published : 06 Mar 2016 09:54 AM
Last Updated : 06 Mar 2016 09:54 AM

ஞாயிறு அரங்கம்: ஜெயலலிதாவாதல்!

திமுகவின் ‘முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவியில பாத்திருப்பீங்க.. நேர்ல பாத்திருக்கீங்களா? என்னம்ம்ம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!' விளம்பரமும் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் களேபரங்களும் தேசியக் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த 5 ஆண்டுகளில் சென்னையிலிருந்து கொடநாடு, பெங்களூருவைத் தாண்டி ஜெயலலிதா சென்ற இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் - அரசியல்வாதிகள் இடையேயான தொலைவுக்கான குறியீடு ஜெயலலிதாவின் அரசியல்.

இந்திய அரசியலில் கேலிக்கூத்துகளுக்கு எந்தக் காலத்திலும் பஞ்சம் இருந்ததில்லை. எனினும், ஜெயலலிதாவையும் அதிமுகவினரையும் அந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. எட்ட முடியாத உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள். வெள்ளத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்ற மக்களுக்குத் தன்னார்வலர்கள் கொண்டுசென்ற நிவாரணப் பொருட்களைப் பறித்து, ஜெயலலிதா ஸ்டிக்கர்களை அதிமுகவினர் ஒட்டியதாகட்டும்; சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த வீரர் கணேசனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, கதறியழுத தாயின் கையில் ஜெயலலிதா படத்தைத் திணித்ததாகட்டும்; பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில், கதறக் கதற சிறுமியின் கையில் ஜெயலலிதா உருவப்படம் பச்சை குத்தப்படுவதை அதிமுக அமைச்சர்கள் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டதாகட்டும்; இந்தியாவின் ‘பின்நவீனத்துவ அரசியல்’ பிம்பம் ஜெயலலிதா.



தலைவர் போட்ட பாதை

ஆயிரம் அடி உயரத்தில் ஹெலிகாப்டர் தெரியும்போதே அஷ்ட கோணலாய் ஜெயலலிதாவின் அமைச்சர்கள் போடும் கும்பிடுக்கு ஈடு இணையே இல்லைதான். எனினும், முழுப் பெருமையையும் பேசும்போது, ஒரு முன்னோடியை விட்டுவிட முடியாது. அதுவும் அவரது நூற்றாண்டு தருணத்தில். சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு “பச்சை குத்திக்கொள்வீர்! பொதுச்செயலாளர் புரட்சித்தலைவர் ஆணை!” என்று அறிவிப்பு வெளியிட்டவர் எம்ஜிஆர். பச்சையைக் கட்சி விசுவாசச் சின்னமாக அமல்படுத்தியவர்.

திராவிட இயக்கம் வழிவந்தவர்கள் பச்சை குத்திக்கொள்வதா என்று பலர் திடுக்கிட்டார்கள். சிலர் வெளிப்படையாகவே கேட்டார்கள். “இதுவரை எதற்கு யாரைக் கேட்டேன்? இதற்குக் கேட்பதற்கு?” என்பதுபோல எம்ஜிஆர் பதில் அளித்தார். கோவை செழியன், பெ.சீனிவாசன், கோ.விஸ்வநாதன் மூவரும்

‘இது பகுத்தறிவுப் பாதைக்கு முரணானது' என்று கடிதம் எழுதினார்கள். மூவரையும் கட்சியிலிருந்து எம்ஜிஆர் நீக்கினார். அதிமுக, இப்படித்தான் வளர்ந்தது அல்லது வளர்த்தெடுக்கப்பட்டது.



குப்பனும் பரிமளமும்

காஞ்சிபுரம் குப்பன் அதிமுகவில் அடிமட்டத்திலிருந்து வந்தவர். ஒன்றிய அவைத் தலைவர் பதவியைத் தாண்டி குப்பனால் வளர முடியவில்லை. தன் மகன் பரிமளத்தை அரசியல் களத்தில் இறக்கினார். எனினும் பெரிய வளர்ச்சி இல்லை. பரிமளம் இடையில் ஒரு முறை தன் விரலை வெட்டிக் காணிக்கை அளித்தார். ஒரு அரசு பஸ்ஸை எரித்தார். இப்போது பரிமளத்தின் நிலை என்ன என்று விசாரித்தேன். நகர்மன்ற உறுப்பினராக இருக்கிறார். கூடவே, அம்மா பேரவையின் மாவட்ட இணைச் செயலாளராக இருக்கிறார். பட்டு நெசவுக் கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும் இருக்கிறார்.

பொது இடத்தில், “அம்மாவுக்காக பஸ்ஸை எரித்துச் சிறை சென்ற அம்மாவின் உண்மைத் தொண்டன் காஞ்சி கே.பரிமளம்” என்று இப்போது தேர்தல் சமயத்தில் ஒரு பதாகை வைக்கிறார் என்றால், பரிமளம் வெகுளி அல்ல. இன்றைய அரசியல் சூட்சமங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்.



மாயக்கோட்டையின் கடவுள்

ஜெயலலிதா இன்றைக்கு இருக்கும் தொட முடியா உயரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஒரு நடிகையாக கட்சிக்குள் வந்த ஜெயலலிதா, எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பிக்கொண்டதற்கு நியாயங்கள் உண்டு. காலப்போக்கில் மக்கள் தன் பக்கம் திரண்ட பின், மக்களைக் கோட்டையாக மாற்றிக்கொண்டு, மாயக்கோட்டையை அவர் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். மாறாக, மாயக்கோட்டை உண்மை என நம்பினார். மேலும் மேலும் கோட்டைச் சுவர்களைப் பலப்படுத்தினார். ஒருகட்டத்தில் கோட்டை கோயிலானது. ஜெயலலிதா கடவுளானார். இன்றைக்கு அந்த மாய அரண் ஜெயலலிதாவுக்கும் அவருடைய எதிரிகளுக்கும் இடையிலானதாக இல்லை; ஜெயலலிதாவுக்கும் மக்களுக்கும் இடையிலானதாக மாறிவிட்டது. இதன் மோசமான விளைவுகளையே இங்கு ஸ்டிக்கர்களாக, பச்சைக்குத்தல் கதறல்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இந்திய அரசியலில் ஜெயலலிதாவுக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கும் அதிகாரம் அரிதானது. ஒரு தலைவருக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான நெருக்கம் எவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவு மக்களுக்கும் தலைவருக்குமான இடைவெளி அதிகரிக்கும் என்பதையே ஜெயலலிதாவிடமிருந்து பார்க்கிறோம்.

இந்திய அரசியல் எதிர்கொள்ளும் அபாயம், ஒரு ஜெயலலிதா அல்ல. சமகால அரசியல்வாதிகள் பலர் ஜெயலலிதாவாக மாறிக்கொண்டிருப்பது. உதாரணத்துக்கு மூன்று பேர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், திரிணமுல் காங்கிரஸின் தலைவர் மம்தா பானர்ஜி.

முதலாமவர், இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத் தன்னை அறிவித்துக்கொண்டவர். இரண்டாமவர், பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டவர். மூன்றாமவர், பெண் அரசியலின் எளிமையான பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்பவர். ஜெயலலிதா அம்மா என்றால், மாயாவதி பெஹன்ஜி (அக்கா), முலாயம் சிங் யாதவ் நேதாஜி (தலைவர்), மம்தா தீதிஜி (அக்கா).



இது பெஹன்ஜி பாணி

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பிறந்த நாளானது மக்கள் நலனுக்கான நாள். அதாவது, வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களும் பண மாலைகளுமாகக் கட்சியின் தொண்டர்கள் தலைவியைக் கொண்டாடும் நாள். பதிலுக்கு ஏழைபாழைகளுக்கு மாயாவதி உதவிகள் அளிப்பார். ஒரு சாதாரண ஆசிரியையாகத் தன் வாழ்வைத் தொடங்கிய மாயாவதி 2007-08-ல் ரூ.26 கோடி வரி செலுத்தி, நாட்டில் அதிகம் வருமான வரி செலுத்திய 20 பேரில் ஒருவரானார். 2012-ல் மாநிலங்களவை உறுப்பினரானபோது அவர் அளித்த தரவுகளின்படியே சொத்து மதிப்பு ரூ.111.26 கோடி.

புத்தருக்கும் அம்பேத்கருக்கும் கன்ஷிராமுக்கும் சிலை வைக்கிறேன் என்று அறிவித்த மாயாவதி, தனக்கும் சிலைகள் வைத்துக்கொண்டார். உலகிலேயே அதிகம் பசி, பட்டினியால் வாடும் குழந்தைகள் வாழும் ஒரு பிராந்தியத்தை ஆள்கையில் இந்தச் சிலைகளுக்காக அவர் அரசு செலவிட்ட தொகை ரூ.2,500 கோடி. மாயாவதி தான் நடக்கும் பாதையைக்கூடப் பால் ஊற்றிக் கழுவிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் என்று குமுறினார் ஒரு உத்தரப் பிரதேச விவசாயி.



இது நேதாஜி பாணி

உத்தரப் பிரதேசத்தின் பரம ஏழைகளைக் கொண்ட ஊர்களில் ஒன்று சைஃபை. முலாயம் பிறந்த கிராமம். இப்போது சைஃபையில் விமான நிலையம் உண்டு. முலாயம் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் இங்குதான் நடக்கும். இந்த ‘சைஃபை மஹோத்சவ’த்தின் முக்கிய அம்சம் அமிதாப் பச்சன், சல்மான் கான், மாதுரி என்று பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள். இந்நிகழ்வில் பங்கேற்கும் பெரும் தொழிலதிபர்களும் பாலிவுட் பாதுஷாக்களும் வந்திறங்கும் தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களுக்காகவே கட்டப்பட்ட விமான நிலையம் இது. ஏனைய நாட்களில் ஒரு விமானமும் வந்து செல்வதில்லை.

இந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் 73 மாவட்டங்களில் 50 மாவட்டங்கள் கடுமையான வறட்சியில் சிக்கியிருந்தன. விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடித்தார்கள். முலாயம் கூட்டமோ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் குத்தாட்டம் ஆடியது. முலாயமின் சகா ஆசம் கானின் எருமைகள் தொலைந்தபோது, தனிப்படை அமைத்து காவல் துறை தேடியதைப் பார்த்து நாடே சிரித்த கதை எல்லோருக்கும் தெரியும். ஆசம் கான் வீட்டு எருமைகளுக்கே இந்த மதிப்பென்றால், முலாயமின் அதிகாரம் எப்படிக் கொடிகட்டிப் பறக்கும்!



இது தீதிஜியின் பாணி

மம்தாவின் செயல்பாடுகளை ஆடம்பரங்களோடு பொருத்திப் பேச முடியாது. அவர் வேறு ரகம். கொல்கத்தாவின் பெரிய அரசு மருத்துவமனை எஸ்எஸ்கேஎம். சில மாதங்களுக்கு முன் அதன் இயக்குநர் பிரதீப் மித்ரா பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மனிதர்களுக்கான அந்த மருத்துவமனையில், டயாலிஸிஸ் சிகிச்சைக்காக ஒரு நாய் அனுமதிக்கப்பட்ட ரகசியம் ஊடகங்களில் அம்பலமானதே காரணம். நாயின் சொந்தக்காரர் மம்தாவின் சகோதரர் அபிஷேக் பானர்ஜி.

கட்சி தொடங்கியபோது மம்தாவோடு நின்ற முன்னணித் தலைவர்கள் பலரும் அடையாளமற்றவர்கள் ஆக்கப்பட்டு விட்டனர். மம்தாவுக்கு ஈடுஇணை யாரும் இல்லை.

ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில், “வானமே எங்கள் இலக்கு” என்று அறிவித்தார் மம்தா. அதைப் பிரகடனப்படுத்துவதற்காக அவர் கண்ணில் படும் இடங்களிலெல்லாம் வானத்தின் நீல வண்ணம் பூசப்பட்டது. அரசு அலுவலகங்கள், பாலங்கள், சாலையோரச் சுவர்கள்.. எங்கும் நீலம். நிலம் மட்டும் சிவப்பு. நாட்டிலேயே இன்றைக்கு எதிர்க்கட்சியினர் அதிகம் கொல்லப்படும் ஆவேசக் களம் மேற்கு வங்கம்.



துடிக்கும் கனவுகள்

நாம் நம் பார்வையிலிருந்து ஜெயலலிதாவைப் பார்க்கிறோம்; முகம் சுளிக்கிறோம். அரசியல்வாதிகளோ ஜெயலலிதாவைப் பார்த்து ஏங்குகிறார்கள். இடைவெளியே ஜெயலலிதாவிடமிருந்து வெளிப்படும் முடியாட்சிக் கால, தனி மனித ஆராதனைக் கலாச்சாரத்தைக் கடுமையாக ஏசுபவர்களில்கூடப் பலர் ஜெயலலிதாவாகத் துடிப்பவர்கள் அல்லது ஜெயலலிதாவாக முடியாதவர்கள் என்பதே கசப்பான உண்மை. அதிமுகவின் பரம வைரியான திமுகவின் எதிர்கால முகமாகப் பார்க்கப்படும் ‘தளபதி’ மு.க.ஸ்டாலினும், அடுத்த தலைமுறைக் கனவுகளோடு தமிழகத்தைச் சுற்றிவரும் ‘சின்ன ஐயா’ அன்புமணியும் யாருடைய அரசியலைப் பிரதிபலிக்கிறார்கள்?

காஞ்சிபுரத்தில் நடந்த திமுகவின் ‘நமக்கு நாமே மாநாடு’ ஒரு வெளிப்பாடு. பல லட்சம் தொண்டர்கள் கூடிய அந்நிகழ்வில் எத்தனை பேர் பேச அனுமதிக்கப்பட்டார்கள்? வரவேற்பு, முன்மொழிதல், வழிமொழிதல், நன்றிகூறல் சம்பிரதாயங்களைத் தாண்டிப் பேசியவர்கள் 3 பேர். மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்த மாவட்டச் செயலர் தா.மோ.அன்பரசன், கட்சியின் துணைப் பொதுச்செயலர் துரைமுருகன் இருவரும் பத்துப் பத்து நிமிடங்கள் பேச, மூன்றாவதாக ஸ்டாலின் பேசினார். கூட்டம் முடிந்தது.

மேடைகளில் தான் மட்டுமே பிரதான பிம்பமாய் நின்று முழங்குவது, தன்னைச் சுற்றி சிறு அதிகார வட்டத்தை உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் கட்சியை / ஆட்சியை நிர்வகிப்பது, தொண்டர்களாலும் மக்களாலும் அணுக முடியாத தேவதூதராய்க் காட்சியளிப்பது இவையெல்லாம் ஜெயலலிதா பாணி அரசியலின் அடிப்படைச் சட்டகங்கள். ஸ்டாலினிடமிருந்து வெளிப்படுவது கருணாநிதி பாணி அரசியலா, ஜெயலலிதா பாணி அரசியலா? “கூட்டங்கள்ல மேடையிலயே தொண்டன் பேர் சொல்லிக் கூப்பிடுவார் கலைஞர். இப்போதெல்லாம் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு ஸ்டாலின் பதில் வணக்கம்கூடச் சொல்வதில்லை” என்கிறார்கள்.

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்கிறார் அன்புமணி. கவனிக்க: மாற்றம், முன்னேற்றம், பாமக அல்ல. சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும், மேடைகளிலும் அன்புமணியிடம் வியாபித்திருக்கும், ‘நான் நான் நான்’ என்கிற ‘நான்’ யாருடைய அரசியலின் தாக்கத்திலிருந்து வெளிப்படுகிறது? ராமதாஸிடமிருந்தா, ஜெயலலிதாவிடமிருந்தா?

மக்களைச் சந்திப்பது அரசியல்வாதிகளின் அன்றாடக் கடமைகளில் ஒன்று. இப்போதெல்லாம் ஏன் அது செய்தியாகிறது? ஒரு ஜெயலலிதா அல்ல; ஒவ்வொரு கட்சியிலும் ஜெயலலிதாக்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்!

- தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x