Published : 29 Oct 2021 03:09 AM
Last Updated : 29 Oct 2021 03:09 AM
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஃபேஸ்புக்கின் தீய விளைவுகள் தொடர்பாகக் கேள்விகளும் விவாதங்களும் விசாரணைகளும் தீவிரமடைந்துள்ளன. புகார்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் உலகின் செல்வாக்கு மிக்க சமூக வலைப்பின்னல் சேவை நிறுவனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
ஃபேஸ்புக்குக்கு எதிரான தற்போதைய விமர்சன சூறாவளியின் மையமாக இருப்பவர் பிரான்சிஸ் ஹாகன். ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியான ஹாகன் அந்நிறுவனத்திலிருந்து விலகி, தவறுகளை அம்பலப்படுத்துபவராக மாறி வெளியிட்டுவரும் தகவல்களே இணைய உலகில் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.
சமூக நலனையும் பயனாளிகள் நலனையும்விட வர்த்தக லாபத்தையே ஃபேஸ்புக் முதன்மையாகக் கருதுகிறது என்பதே ஹாகனின் முக்கியக் குற்றச்சாட்டு. இணைய உலகில் ஃபேஸ்புக்கின் செல்வாக்கை மனதில்கொண்டு பார்க்கும்போது இந்தக் குற்றச்சாட்டின் தீவிரத்தை உணரலாம். இதற்கான ஆதாரங்களையும், தொடர்புடைய இன்ன பிற தகவல்களையும் அவர் பத்திரிகை மூலம் வெளியிட்டு, ஒட்டுமொத்த இணைய உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.
சர்ச்சை வரலாறு
2018-ம் ஆண்டு வெடித்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் தகவல்களை விளம்பர நோக்கில் அறுவடை செய்வதில் ஃபேஸ்புக் தீவிரமாக இருப்பதும், இதன் விளைவாகப் பயனாளிகளின் தனியுரிமை கேள்விக்குள்ளாவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஃபேஸ்புக்கின் லாப நோக்கிலான செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி, ‘ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுவோம்’ எனும் இணைய எதிர்ப்பு இயக்கத்துக்கும் இந்த சர்ச்சை வித்திட்டது. இந்த சர்ச்சைக்கு மத்தியில், 2016 அமெரிக்கத் தேர்தலில் ஃபேஸ்புக் பயன்படுத்தப்பட்ட விதமும் விவாதப் பொருளானது. ஃபேஸ்புக்கின் தகவல் அறுவடை உத்திகள் மூலம், குறிப்பிட்ட இலக்கு வாக்காளர்களைக் குறிவைத்துப் பிரச்சாரம் செய்ய ஃபேஸ்புக் பயன்பட்டதாகவும், இந்தப் பிரச்சாரத்தில் பொய்ச் செய்திகள் முக்கியப் பங்கு வகித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஃபேஸ்புக் தனது நியூஸ்ஃபீடில் தகவல்களைத் தோன்றச்செய்யும் விதமும், அதற்குப் பின்னே உள்ள ஆல்கரிதத்தின் செயல்பாடும் விமர்சனத்துக்கு உள்ளாயின. ஃபேஸ்புக் தவறான தகவல்களையும் பொய்ச் செய்திகளையும் பகிர்வதற்கான கூடாரமாக மாறிவிட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதனிடையே, 2021 அமெரிக்கத் தேர்தல் முடிவை ஏற்காமல் அப்போதைய அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் கேபிட்டல் பகுதியில் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைக்கும் ஃபேஸ்புக் பயன்படுத்தப்பட்ட விதம் கண்டனத்துக்கு உள்ளானது.
ஃபேஸ்புக் கோப்புகள்
மேலும், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் வன்முறையையும் துவேஷத்தையும் தூண்டும் கருத்துகளையும் பொய்ச் செய்திகளையும் பகிர்ந்துகொள்ளும் வாகனமாக ஃபேஸ்புக் விளங்குவது தெரியவந்தது. இது போன்ற குற்றச்சாட்டுகள் குவிந்த நிலையில், ஃபேஸ்புக் தனது மேடையில் தோன்றும் கருத்துகளை நெறிப்படுத்துவதில் போதிய பொறுப்புணர்வைக் காட்டுவதில்லை எனும் விமர்சனமும் பலரால் முன்வைக்கப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் ஃபேஸ்புக் மீதான புதிய குற்றச்சாட்டுகள் வெளியாகத் தொடங்கின. அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழில் இவை முதலில் வெளியாகத் தொடங்கின. ஃபேஸ்புக்கின் துணைச் சேவையான இன்ஸ்டாகிராம், இளம் பெண்களின் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கிறது என்பதை நன்கு அறிந்திருந்தும் ஃபேஸ்புக் அது தொடர்பாக மாற்று நடவடிக்கைகள் எடுக்காமல், பாதிப்பு ஏற்படுத்தும் உத்திகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது என்பது இந்தக் குற்றச்சாட்டின் மையம்.
குழந்தைகளுக்கான இன்ஸ்டாகிராம் சேவையை ஃபேஸ்புக் அறிமுகம் செய்ய இருப்பதாக வெளியான தகவல், கடும் கண்டனத்துக்கு உள்ளான சூழலில், இந்தத் தகவல் வெளியானது. இதற்கு ஆதாரமாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்குள் பயன்படுத்தப்பட்ட ஆய்வுக் குறிப்புகளையும், தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட ஆவணங்களையும் அந்த நாளிதழ் ஆதாரமாக வெளியிட்டிருந்தது. ஃபேஸ்புக்கின் நியூஸ்ஃபீடை இயக்கும் ஆல்கரிதம் பயனாளிகளிடமிருந்து கோபமான எதிர்வினையைத் தூண்டும் தகவல்களை முன்னிறுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும், இதை ஃபேஸ்புக் தெரிந்தே தொடர்ந்து செய்துவருவதாகவும் மற்றொரு முக்கியக் குற்றச்சாட்டும் இந்த நாளிதழில் வெளியானது. பயனாளிகளை அதிக நேரம் ஃபேஸ்புக்கில் தங்கியிருக்கச் செய்வதே இதன் நோக்கம் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டது.
விசிலூதி ஹாகன்
ஃபேஸ்புக்கின் தாக்கத்தையும், அதன் வர்த்தக நோக்கிலான செயல்பாட்டையும் அம்பலப்படுத்திய இந்தத் தகவல்கள் ஃபேஸ்புக் கோப்புகள் எனக் குறிப்பிடப்பட்டன. இந்நிலையில்தான், இந்தத் தகவல்களைத் துணிந்து வெளிப்படுத்திய நபர் யார் எனும் விவரம் வெளியானது. அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஃபேஸ்புக்கின் முன்னாள் அதிகாரியான பிரான்சிஸ் ஹாகன், தன்னை விசிலூதியாக அறிமுகம்செய்துகொண்டு மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடுகளால் வெறுத்துப்போய், அதிலிருந்து விலகியதாகவும் கூறினார். ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறும் முன், அதன் மோசமான செயல்பாடுகளை உணர்த்தும் ஆதாரங்களை அவர் கவனமாகத் திரட்டிக்கொண்டார். இப்படித் திரட்டிய ஆதாரங்களே ஃபேஸ்புக் கோப்புகளாக இணைய உலகில் சூறாவளியை உண்டாக்கின. இதைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத் துணைக் குழுவின் முன் அவர் ஆஜராகி, ஃபேஸ்புக்கின் மோசமான செயல்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளித்தார். இதே போல பிரிட்டனில் நடைபெறும் விசாரணையிலும் சாட்சியம் அளித்திருக்கிறார். ஃபேஸ்புக்கின் தீய விளைவுகளைத் துணிந்து அம்பலப்படுத்தியதற்காக அமெரிக்காவின் ‘நவீன நாயகி’ என்றும் ஹாகன் பாராட்டப்படுகிறார்.
ஃபேஸ்புக் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை ஏற்கெனவே சொல்லப்பட்டு, விவாதிக்கப்பட்டுவருபவைதான். ஃபேஸ்புக்கின் நியூஸ்ஃபீட் முன்னிறுத்தும் தகவல்களின் சார்பும், பல சமூகங்களில் இவை ஏற்படுத்தும் தாக்கமும் வல்லுநர்களால் தொடர்ந்து கவலையோடு விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கின்றன. ஹாகன், ஃபேஸ்புக்கின் ஆவணங்களையும் அதன் சொந்த ஆய்வுக் குறிப்புகளையும் கொண்டு, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்த்திருக்கிறார் என்பதே விஷயம்.
நடவடிக்கை என்ன?
இந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஃபேஸ்புக் நிறுவனம் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பான கேள்விகளும் தீவிரமடைந்துள்ளன. ஃபேஸ்புக்கின் செயல்பாடுகள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் விசாரணை ஒருபக்கம் இருக்க, நிறுவனத்தின் ஏகபோக நிலையைக் குறைக்க அதன் துணை நிறுவனங்களைத் தனி நிறுவனங்களாக ஆக்குவது பற்றியும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதனிடையே இந்தியாவிலும் துவேஷம், வன்முறை சார்ந்த உள்ளடக்கத்தை நெறிப்படுத்துவது தொடர்பாக ஃபேஸ்புக் நடந்துகொண்டவிதம் குறித்துத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், செல்வாக்கு மிக்க பயனாளிகளுக்காக ஃபேஸ்புக் தனது விதிகளையும் நெறிமுறைகளையும் தளர்த்திக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஃபேஸ்புக்கின் பதில் பலவீனமாகவே இருக்கிறது. ஹாகன் சர்ச்சைக்கு ஃபேஸ்புக் பதிவு மூலம் விளக்கம் அளித்த ஸக்கர்பர்க், நிறுவனம் தவறாகச் சித்தரிக்கப்படுகிறது என்றும், நிறுவனம் பயனாளிகளின் நலனைவிட லாப நோக்கில் செயல்படுவதாகச் சொல்லப்படுவதை மறுத்தும் பதிவிட்டிருந்தார். ஆய்வுகளை ஃபேஸ்புக் அலட்சியம் செய்கிறது என்றால், இத்தகைய ஆய்வுகளை அது ஏன் நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்.
முழு விவாதம்
ஆக, ஃபேஸ்புக் மீதான விவாதமும் விசாரணையும் தீவிரமாகியுள்ள நிலையில், இது ஃபேஸ்புக் என்ற தனி நிறுவனம் தொடர்பான பிரச்சினை மட்டும் அல்ல, உண்மையில், இணைய யுகத்தில் சகல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் ‘பிக் டெக்’ எனக் குறிப்பிடப்படும் ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்களை உள்ளடக்கிய பிரச்சினை இது என்று இணைய வல்லுநர்கள் கூறுகின்றனர். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தகவல் அறுவடை - அல்கரிதம் செயல்பாடு தொடர்பான விளைவுகளை நெறிப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனிடையே ஃபேஸ்புக் தனது பெயரை மாற்றிக்கொண்டு, மெய்நிகர் உலகம் சார்ந்த தொழில்நுட்ப மேடையில் கவனம் செலுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக, ஃபேஸ்புக் தனது வளர்ச்சியில் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. மாறிவரும் உலகில் வளர்ச்சியைத் தக்க வைப்பதற்கான எதிர்கால உத்திகளை வகுப்பதில் கவனம் செலுத்துகிறது. ஃபேஸ்புக் போன்ற எல்லாம் வல்ல இணைய நிறுவனங்களுக்குக் கடிவாளம் போடுவதற்கான செயல்களும் இதற்கு ஈடுகொடுக்க வேண்டும் என்பதே இணைய வல்லுநர்கள், செயற்பாட்டாளர்களின் கருத்தாக இருக்கிறது.
- சைபர் சிம்மன், பத்திரிகையாளர்.
தொடர்புக்கு: enarasimhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT