Published : 22 Oct 2021 03:05 AM
Last Updated : 22 Oct 2021 03:05 AM
கேரள ஆற்றங்கரை ஒன்றில் உள்ள ஒரு சிமென்ட் வீடு, சிலர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அப்படியே உடைந்து தண்ணீரில் விழுந்துவிடும் காட்சிகளைச் சமூக வலைதளங்கள் வழியே சமீபத்தில் பார்த்திருக்கலாம். கேரளத்தின் கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவில் 35-க்கும் மேற்பட்டோர் மடிந்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் கேரளத்தில் தீவிரமான வெள்ளங்கள், நிலச்சரிவுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்துவருகின்றன. 2018-ல் 483 பேர் பலியானார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் உயிர்ப் பலி குறைவு என்றாலும், சொத்து இழப்பு பெருமளவு தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இயற்கைப் பேரழிவுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள், மக்களுக்குக் கிடைத்த உதவிகளால் கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு, இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதே நேரம், மேற்கண்டது போன்ற இயற்கைப் பேரழிவுகளை மட்டுப்படுத்துவதிலோ, பாதிப்புகளைக் குறைப்பதிலோ அரசும் மக்களும் உரிய வகையில் அக்கறை காட்டியுள்ளார்களா?
பெருமளவு இல்லை என்றே கூற வேண்டியிருக்கிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மூத்த சூழலியலர் மாதவ் காட்கில் தலைமையில் ‘மேற்கு மலைத் தொடர் சூழலியல் நிபுணர் குழு’ 10 ஆண்டுகளுக்கு முன் அரசுக்குத் தன் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையைக் கட்சி வேறுபாடின்றி எதிர்த்த மாநிலங்களில் கேரளமும் ஒன்று. அதற்குப் பிறகு, நீர்த்துப்போன பரிந்துரைகளுடன் மத்திய அரசு வெளியிட்ட கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையையும் கேரளம் ஏற்கவில்லை.
தற்போது ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து, மாதவ் காட்கில் அறிக்கை திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது. மற்றொருபுறம் பருவநிலை மாற்றம் நம்மைச் சூழ்ந்து நிற்கும் பேராபத்தாக மாறிவிட்டதையும் புறக்கணிக்க முடியாது. இதுபோன்ற இயற்கைப் பேரழிவுகளை மனித முயற்சிகளால் முற்றிலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனால், பேரழிவுகள் ஏற்படுத்தும் ஆபத்துகளிலிருந்து மனித உயிரையும் சொத்து இழப்பையும் நிச்சயம் மட்டுப்படுத்த முடியும். 2018 பேரழிவின்போதே மாதவ் காட்கில் அறிக்கையின் பரிந்துரைகள் சுட்டிக்காட்டப்பட்டன. அந்த அறிக்கை விடுத்த எச்சரிக்கைகள் அதற்குப் பின்னரும்கூட கேரள அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அறிக்கை என்ன சொல்கிறது?
இமாலய மலைத்தொடரைவிடப் பழமையான மேற்கு மலைத்தொடர் சூழலியல்ரீதியில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறது. 1,600 கி.மீ. நீளமும் 1,40,000 சதுர கி.மீ. பரப்பும் உடைய இந்த மலைத்தொடரில், நாட்டின் 30% தாவர, மீன், ஊர்வன, நீர்நில வாழ்வி, பறவை, பாலூட்டிகள் வாழ்ந்துவருகின்றன. ‘தென்னிந்திய தீபகற்பத்தின் பாதுகாவல’ராக மேற்கு மலைத்தொடரை காட்கில் குழு அடையாளப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த மேற்கு மலைத்தொடரையும் மூன்று வகைகளாகப் பிரித்து சூழலியல் கூருணர்வு கொண்ட பகுதிகளாக, எந்த வகையிலும் தொந்தரவு செய்யப்படக் கூடாததாக அறிவிக்கப்பட வேண்டும். குறிப்பாக 64% பகுதியில் எந்த வளர்ச்சிச் செயல்பாடுகளையும் அனுமதிக்காமல் தீவிரமாகப் பாதுகாக்க வேண்டுமென 552 பக்க விரிவான அறிக்கையில் காட்கில் குழு கூறியிருந்தது.
அந்த அறிக்கையின் குறிப்பிடத்தக்க பரிந்துரைகள்:
மண்ணரிப்புக்குக் காரணமாக இருக்கும் ஒற்றை வணிகப் பயிர் சாகுபடியைக் கைவிட வேண்டும்.
காலாவதியான அணைகள், அனல்மின் நிலையங்கள் போன்றவற்றைக் கைவிட வேண்டும்.
புதிய வசிப்பிடங்களை உருவாக்குதல், வேளாண் நிலத்தை வேறு பயன்பாட்டுக்குத் திருப்புதல், ஆறுகளின் போக்கை மாற்றுதல் போன்ற நிலப் பயன்பாட்டு மாற்றங்களைத் தடை செய்ய வேண்டும்.
சாலக்குடி ஆறு பாயும் காட்டுப் பகுதியில் கேரள மின்வாரியம் கட்டத் திட்டமிட்டிருந்த அதிரப்பள்ளி நீர்மின் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
காட்கில் குழுவுக்குப் பதிலாக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழுவோ, மொத்தப் பரப்பில் 37%-ஐ மட்டும், அதாவது 56,825 சதுர கி.மீ. பரப்பை மட்டும் சூழலியல் கூருணர்வு கொண்ட பகுதியாக அறிவித்தால் போதுமெனக் கூறியிருந்தது. இரண்டு அறிக்கைகளையும் கேரள விவசாயிகள், மத அமைப்புகள், கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
திருத்தமும் அழிவும்
கேரளத்தில் 2017-ல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு 7,157 ஹெக்டேர் மலைப் பகுதி வெட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறது. இந்த அழிவு பெருமளவு நடைபெற்ற மத்திய மாவட்டங்களே பிற்பாடு நிலச்சரிவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டன. கேரள மலைப் பகுதிகளில் நிலப்புரையோட்டமும் (soil piping), பக்கவாட்டுப் பரவலும் (lateral spread) சமீபகாலமாக அதிகரித்துவருகின்றன. இவையே நிலச்சரிவு சார்ந்த பேரழிவுகளுக்குக் காரணம் என நிலவியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 2018-க்கு முன்புவரை கேரளத்தில் நிலச்சரிவுகளால் 293 பேர் பலியாகியிருப்பதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் நிலச்சரிவுகளால் 170 பேர் பலியாகியுள்ளதாகவும் அதிர்ச்சி தரும் அரசுக் கணக்குகள் கூறுகின்றன.
மலைகளிலிருந்து கற்களை வெட்டியெடுப்பது, மலைகளைப் பிளப்பது, மணல் கொள்ளை, காடழிப்பு, புதிய சாலையமைப்பு, காடு-நீர்நிலையோர ஆக்கிரமிப்பு-இந்தப் பகுதிகளில் கட்டுமானங்களை ஏற்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் இத்தனை வெள்ளங்கள், நிலச்சரிவுகளுக்குப் பிறகும் கேரளத்தில் தொடரவே செய்கின்றன. இயற்கைச் சமநிலையைச் சீர்குலைக்கும் இதுபோன்ற செயல்பாடுகள் பேராபத்தை விளைவிக்கும் என்பதையே மாதவ் காட்கில் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கணக்கில் வருபவை எவை?
மலைகளையும் காடுகளையும் அழித்து வளர்ச்சி-தொழில்மய நடவடிக்கைகளில் ஈடுபடுவதே மக்கள், மாநிலத்தின் பொருளாதார ஏற்றத்துக்கு வழி எனக் கருதும் அரசியல் கட்சிகளும் ஆட்சி நிர்வாகமும் இயற்கைச் சமநிலையைத் தக்கவைப்பதற்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை. அது மட்டுமில்லாமல், பொருளாதார நடவடிக்கைகளால் இயற்கைப் பேரழிவுகள் தீவிரமடையும்போது, மனித, சொத்து இழப்புகள் ஏதோ ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அதே நேரம் மலைகளும் காடுகளும் திரும்ப மீட்டெடுக்க முடியாத மோசமான சீர்குலைவுக்குச் சென்றுவிடுவது, எந்தக் கணக்கிலும் வராமல் போகிறது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் பேரழிவுகளை மேலும் தீவிரப்படுத்துகிறது.
அறிவியலை மனித குல வளர்ச்சிக்கானதாகக் கருதும் இடதுசாரிகள், அதே அறிவியல் விடுக்கும் சூழலியல் எச்சரிக்கைகளை உரிய வகையில் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ‘சூழலியலர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’ என்கிற முத்திரையுடனே சூழலியல் எச்சரிக்கைகளைப் பார்க்கிறார்கள்.
மக்களும் மக்கள் நலனுமே முதன்மையாகக் கருதப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்துகிறார்கள். காடுகளும் மலைகளும் தொந்தரவு செய்யப்படாமல் இருக்கும்போது மட்டுமே இதை உறுதிப்படுத்த முடியும். வேற்றுக்கிரக வாசிகளுக்காகச் சூழலியல் பாதுகாப்பு வலியுறுத்தப்படவில்லை. இந்த மண்ணில் வாழும் மக்கள் ஆரோக்கியமாகவும் வளத்துடனும் வாழவே இயற்கை சமநிலை பேண வலியுறுத்தப்படுகிறது.
யார் கையில் இருக்கிறது?
ஒரு நிலத்தில் பாதுகாப்புடன் வாழ்வது நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. ஒவ்வொரு குடிநபரும் சுரண்டப்படுவதற்கு எதிராகக் குரல்கொடுப்பதற்கான உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. அதை உறுதிப்படுத்த வேண்டியது அரசுதான் என்றாலும், அரசுக்கு அந்த நெருக்கடியை ஏற்படுத்த வேண்டியது மக்கள்தான் என்கிறார் மாதவ் காட்கில். பிளாச்சிமாடாவில் நீருக்கான உரிமையை வலியுறுத்தி கோக கோலா நிறுவனத்துக்கு எதிராக உள்ளூர் மக்கள் வழக்குத் தொடுத்து வென்றபோது, கேரள உயர் நீதிமன்றம் கூறியதுபோல், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு உரிமை உள்ளதை காட்கில் சுட்டிக்காட்டுகிறார். இயற்கைப் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்தவும், உள்ளூர் ஜனநாயக நிறுவனங்கள் அதேபோல் செயலில் இறங்க வேண்டும் என்கிறார்.
மாதவ் காட்கில் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள அம்சங்களும் சரி, பருவநிலை மாற்றம் தூண்டும் பேரழிவுகளும் சரி கேரளத்தை மட்டுமல்ல தமிழ்நாடு, கர்நாடகம், கோவா, மஹாராஷ்டிரம் உள்ளிட்ட மேற்கு மலைத்தொடர் மாநிலங்களையும் சேர்த்தே பாதித்துவருகின்றன. இமயமலைத்தொடர் அடிவார மாநிலங்களான உத்தராகண்ட், இமாசல பிரதேசத்தையும் இதேபோன்ற இயற்கைப் பேரழிவுகள் சமீப ஆண்டுகளில் தீவிரமாக பாதித்துவருகின்றன. மற்ற மாநிலங்களும் இந்திய மக்களும் கற்றுக்கொள்வதற்கு எத்தனையோ பாடங்களை இந்தப் பேரழிவுகள் வழங்கியுள்ளன. அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு வாழ்வதும் புறக்கணித்தால் வீழ்வதும் நம் கையிலேயே இருக்கிறது.
- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT