Published : 14 Mar 2016 09:23 AM
Last Updated : 14 Mar 2016 09:23 AM
இந்திராகாந்தி 1980-ல் ஆட்சிக்கு வந்த கையோடு தமிழகத்தில் ஆட்சியிலிருந்த எம்.ஜி.ஆர் அரசை அரசியல் காரணங்களுக்காகக் கலைத்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக அணியிலேயே தேர்தலைச் சந்தித்தது இந்திரா காங்கிரஸ். மாறாக, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் உள்ளிட்டவற்றைச் சேர்த்துக்கொண்டது அதிமுக. ஜனதா தனித்து நின்றது.
கூட்டணியில் இரு கட்சிகளும் சம எண்ணிக்கையில் போட்டியிடவேண்டும் என்றார் இந்திரா காங்கிரஸ் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம். தேர்தலில் எம்.ஜி.ஆரை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில், ஆகட்டும் என்றார் கருணாநிதி. அடுத்து, தேர்தலுக்குப் பிறகு யார் முதல்வர் என்று கேட்டனர் இந்திரா காங்கிரஸார். பிரச்சினை தீவிரமடையவே, “இருவரில் எவர் அதிகம் வென்றாலும், கருணாநிதியே முதல்வர்” என்று சொன்னார் இந்திரா.
ஆட்சிக் கலைப்புக்கு நியாயம் கேட்டுப் பிரச்சாரம் செய்தார் எம்.ஜி.ஆர். கூட்டணிக் குழப்பத்தைச் சரிசெய்யவே திமுகவுக்கு நேரம் போனது. விளைவு, அதிமுக மீண்டும் வென்றது. எதிரணியில் போட்டியிட்ட இந்திரா காங்கிரஸுக்கு 21% வாக்குகளும் 31 இடங்களும் கிடைத்தன. அத்தோடு திமுக இந்திரா காங்கிரஸ் உறவு முற்றிலுமாக உடைந்தது. அதன்பிறகு கால் நூற்றாண்டு கழித்தே திமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது. (தமாகா விதிவிலக்கு.)
அதன்பிறகு இந்திரா காங்கிரஸ் அதிமுகவுடன் நெருக்கமானது. 1984-ல் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையில் இருக்க, இந்திரா கொல்லப்பட்டிருந்தார். அப்போது நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக அணியில் இந்திரா காங்கிரஸ் இடம்பெற்றது. அப்போது இந்திரா காங்கிரஸுக்கு சட்டமன்றத் தொகுதிகளில் மூன்றில் ஒருபங்கு; மக்களவைத் தொகுதிகளில் இருபங்கு என்ற ஃபார்முலா உருவாக்கப்பட்டது. திமுக அணியில் ஜனதா இடம்பெற்றது.
எம்.ஜி.ஆரின் உடல்நிலை, இந்திராவின் மரணம் என்ற இரட்டை அனுதாப அலை வீசியதில் அதிமுக அணி அபார வெற்றியைப் பெற்றது. அந்த அணியில் இந்திரா காங்கிரஸுக்கு 61 எம்.எல்.ஏக்களும் 25 எம்.பிக்களும் கிடைத்தனர். 1967-ல் ஆட்சியை இழந்தபிறகு காங்கிரஸ் பெற்ற மிகப்பெரிய வெற்றி இது. ஆனால் அடுத்த தேர்தலையே தனித்துச் சந்திக்கவேண்டிய சூழல் உருவானது. காரணம், எம்.ஜி.ஆரின் மரணமும் அதிமுக ஆட்சிக்கலைப்பும்.
1989 தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளை ஆளுநர் ஆட்சியிலேயே செய்தது காங்கிரஸ். அப்போது அதிமுக, திமுகவுக்கு மாற்றாக காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற கோஷத்துடன் 214 தொகுதிகளில் போட்டியிட்டது. மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழகத்துக்கு 14 முறை வந்து பிரச்சாரம் செய்தார் ராஜீவ் காந்தி.
திமுக, அதிமுக(ஜா), அதிமுக(ஜெ), காங்கிரஸ் என்கிற நான்முனைப் போட்டியில் திமுக வென்று ஆட்சியமைத்தது. தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 20% வாக்குகளைப் பெற்று 26 தொகுதிகளை வென்றது. அதிமுக, திமுகவுக்கு மாற்றாகத் தமிழகத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முயற்சி இது. அதன்பிறகு அத்தகைய முயற்சியை காங்கிரஸ் இன்றுவரை எடுக்கவில்லை.
- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
(கோஷம் போடுவோம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT