Published : 05 Jun 2014 12:00 AM
Last Updated : 05 Jun 2014 12:00 AM

ஜூன் 5, 1857- சிப்பாய் கலகம்: கான்பூர் எழுச்சியின் நாள்

இந்தியாவை ஒரு கம்பெனி அடிமைப்படுத்தி வைத்திருந்தது என்று சொன்னால், அதை நம்ப இன்று பலருக்கும் கஷ்டமாக இருக்கும். பெரும் பாலான இந்தியப் பகுதிகளை அடிமைப்படுத்தி வைத் திருந்த ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி அதற்காக ஒரு ராணுவத்தையே செயல்படுத்திவந்தது. அந்த ராணுவ வீரர்களில் பெரும்பான்மையோர் இந்தியர்கள்தான்.

அவர்கள் 1857-ல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு எதிராக இந்தியாவின் பல இடங்களில் புரட்சியில் இறங்கினர். அவர்களோடு மக்களும் சேர்ந்துகொண்டனர். இந்த வரலாற்று நிகழ்வை ஆங்கிலேயர்கள் சிப்பாய்க் கலகம் என்றனர். நமது தலைவர்கள் இந்தியப் புரட்சி என்றும் முதல் சுதந்திரப் போர் என்றும் அழைத்தனர்.

அந்தப் புரட்சியின் ஒரு பகுதியாக கான்பூரில் எழுச்சி உருவான நாள் இன்று. முதலில் கான்பூரைப் புரட்சிப் படையினர் கைப்பற்றினர். அவர்களிடமிருந்து கான்பூரை மீட்க ஆங்கிலேயர்கள் போராடினார்கள். சர். ஹக் வீலர் என்ற ஆங்கிலேயரின் தலைமையில் 300 படைவீரர்கள் உள்பட 900 பேர் இருந்தனர். நானா சாகேப் எனும் இந்தியத் தலைவரின் தலைமையில் புரட்சிப் படைவீரர்களும் வணிகர்களுமாக 4,000 பேர் இருந்தனர். இருதரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். மொத்தம் 20 நாட்களுக்குச் சண்டை நடந்தது. சண்டையின் முடிவில் ஆங்கிலேயர் தரப்பில் ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களுமாக ஏழு பேர்தான் உயிருடன் மிஞ்சினர். அதே நேரத்தில், புரட்சிக்காரர்கள் தரப்பில் அனைவருமே வீரமரணம் அடைந்தனர். பக்கத்து ஊர்ப் படைகள் வந்து சேர்ந்தவுடன் மீண்டும் கான்பூர் ஆங்கிலேயர்கள் வசமானது. நானா சாகேப் காணாமல் போய்விட்டார்.

இந்த எழுச்சியில் இந்தியர்கள் தோற்றுப்போனாலும் அகில இந்திய அளவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுந்த முதல் புரட்சியாக இது அமைந்தது.

அந்த அனுபவங்களையெல்லாம் வைத்துக் கொண்டுதான் இந்திய சுதந்திரப் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வென்றது. இந்த முறை இந்தியர்களின் கையில் ஆயுதங்களுக்குப் பதிலாக இருந்தது அகிம்சை.​ - சரித்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x