Last Updated : 13 Oct, 2021 05:48 AM

6  

Published : 13 Oct 2021 05:48 AM
Last Updated : 13 Oct 2021 05:48 AM

ஐந்நூறு கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்த ஒற்றைப் பிறவி

கலைப் பிரபலங்களின் மறைவின்போது மலையாள ஊடகங்கள் பயன்படுத்தும் நிரந்தர வாசகங்களில் ஒன்று: ‘அன்னார் அரங்கு நீங்கினார்’ என்பது. நெடுமுடி வேணுவைப் பொறுத்து இந்த வாசகம் ‘அரங்குகளை நீங்கினார்’ என்று பன்மையில் பயன்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், அவர் பல்துறைக் கலைஞராக விளங்கியவர். இலக்கியம், இசை, நாடகம், சினிமாத் துறைகளில் பங்களித்தவர். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலக் கலை வாழ்க்கையில் தொடர்ந்தும் அவ்வப்போதுமாக இந்தத் துறைகளில் ஈடுபட்டுச் செயலாற்றியவர்.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம், நெடுமுடியில் 1948-ல் பிறந்தவர் வேணு என்ற வேணுகோபாலன். அவர் பிறந்த மண்ணான குட்டநாடு கலைகளின் கூடற்களம். கர்நாடக இசை, கதகளி ஆகிய செவ்வியல் கலைகளுக்கும், சோபான சங்கீதம் போன்ற சடங்குக் கலைகளுக்கும், படையணி முதலான நாட்டார் கலைகளுக்கும் ஈரமும் செழுமையும் ஊட்டிய மண். தகழி சிவசங்கரன் பிள்ளை, அய்யப்பப் பணிக்கர், காவாலம் நாராயணப் பணிக்கர் உள்ளிட்ட எழுத்தாளர்களும் கவிஞர்களும் இலக்கியப் பின்புலமாகச் சித்தரித்த நிலம். குட்டநாட்டின் இந்த இயல்புகள் மனித வடிவத்தில் நெடுமுடி வேணு என்ற கலைஞனிடம் வெளிப்பட்டன. கல்லூரிக் காலத்தில் சக மாணவரும் நண்பரும் பின்னாட்களில் மலையாளத் திரையுலகில் பிரபல இயக்குநராகப் புகழ்பெற்றவருமான பாசில், மாணவர்களுக்கான போட்டிக்கு எழுதிய நாடகத்தில் வேணு நடித்தார். நடுவராக வந்திருந்த கவிஞரும் நாடகக்காரருமான காவாலம் நாராயணப் பணிக்கர் வேணுவுக்குள் ஒரு நடிகரைக் கண்டார். பட்டப் படிப்புக்குப் பின்பு சிறிது காலம் தனிப்பயிற்சிக் கல்லூரி ஆசிரியராக ஆலப்புழையிலும் பத்திரிகைச் செய்தியாளராகத் திருவனந்தபுரத்திலும் வேணு பணியாற்றினார்.

காவாலம் நாராயணப் பணிக்கரின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்ததும் வேணு திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்தார். அவரது கலை வாழ்க்கையின் தொடக்கமானது அந்தக் குடிபெயர்வு. 1972-ல் வெளியான ‘ஒரு சுந்தரியுடெ கத’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர் பி.கேசவதேவின் நாவலை ஆதாரமாகக் கொண்ட கதை. திரைக்கதையும் இயக்கமும் பிரபல இயக்குநர் தோப்பில் பாசி. பிற்கால நேர்காணல் ஒன்றில் இந்த அனுபவம் பற்றி வேணு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “நடனமாடும் கல்லூரி மாணவர்களில் ஒருவனாகச் சின்னப் பாத்திரம். யாரும் என்னைக் கவனித்திருக்க முடியாத வேடம். எனக்கும் மனக்குறைதான். ஆனால், கவனத்துக்குரிய படத்தில் அறிமுகமானேன் என்பதால், அந்தக் குறை பெரிதாகப் படவில்லை.”

1978-ல் அரவிந்தன் இயக்கத்தில் வெளிவந்த ‘தம்பு’ நெடுமுடி வேணுவைத் திரையுலகின் கவனத்துக்கும் பார்வையாளரின் வரவேற்புக்கும் இலக்காக்கிற்று. எழுபதுகளின் இறுதியில் உருவான கலைப் படங்களிலும் எண்பதுகளில் வெளிவந்த இடைநிலைப் படங்களிலும் நெடுமுடி வேணு நிரந்தரப் பங்கேற்பாளரானார். பரதன் இயக்கிய ‘தகர’ (1979) படத்தில் வேணு ஏற்றிருந்த செல்லப்பன் ஆசாரி பாத்திரம், அவரது நடிப்பின் நுண்ணியல்பை எடுத்துக்காட்டியது. ஜான் ஆப்ரகாம் இயக்கிய ‘செறியாச்சன்டெ குரூர கிருத்திய’ங்களில் கிறிஸ்தவப் பாதிரியாராக வேடமேற்றார். பத்மராஜன் இயக்கிய ‘கள்ளன் பவித்ர’னில் (1981) மனந்திருந்திய கள்வனாக நடித்தார். இந்த ஆரம்பக் கால வேடங்களில், அவரது நடிப்பு புதிய தோற்றங்களைக் கொண்டிருந்தது. அதன் விளைவாக ‘சமாந்தர சினிமா’ என்ற இடைநிலைப் படங்களில் வேணு இன்றியமையாதவராக ஆனார். பரதன், பத்மராஜன், மோகன், கே.ஜி.ஜார்ஜ், லெனின் ராஜேந்திரன் போன்றவர்களின் படங்களில் அவரை நம்பிப் பாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. மோகன் இயக்கிய ‘விட பறயும் முன்பே’ (1981) வேணுவின் நடிப்புக்காகவே பார்க்கப்பட்ட படமாக இருந்தது.

துணைப் பாத்திரங்களிலேயே பெரும்பாலும் அவரைக் காண முடிந்தது. அந்தப் பாத்திரங்களிலேயே அவரது நடிப்பு சிறப்பாக வெளிப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த ‘ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா’வில் (1990) அவரது பாத்திரம் ஒரு சிற்றரசர். அவரது உறவினர்களாலேயே கொல்லப்படும் சதிக்குள் அகப்பட்டிருக்கிறது, அந்தப் பாத்திரம். அவரைத் தீர்த்துக்கட்ட அமர்த்தப்படும் வாடகைக் கொலையாளியின் இசைத் திறனிலும் நல்லியல்பிலும் தன்னை இழந்துபோகிறார். தான் நம்பிய அந்தப் பாத்திரம் தன்னை ஏமாற்றியதைப் புரிந்துகொள்கிறார். அந்தத் தருணத்தில் நெடுமுடி வேணு வெளிப்படுத்தும் நடிப்பு நுட்பமானது. உடலும் பார்வையும் சோர்ந்த நிலையிலிருப்பவராக அந்தக் காட்சியில் அவர் நிரம்பி நிற்கிறார்.

வேணுவின் நடிப்புப் பாணி, நாடகத்திலிருந்து பெறப்பட்ட ஒன்று. நாடகத்தில் நடிகனின் முழு உடலுமே நடிப்புக் கருவியாகச் செயல்படுகிறது. அந்தப் பாணியையே திரை நடிப்பிலும் வேணு கையாண்டார். அவரது சிகை முதல் கால் நகம் வரையுமே அவரது நடிப்பை வெளிப்படுத்தின. ‘மனசின் அக்கரே’ (2003) என்ற சத்யன் அந்திக்காடு படத்தில் அவருக்கு சவடால் பேர்வழியான கிறிஸ்தவப் பாத்திரம், ஒரு காட்சியில் பாத்திரத்தின் டம்பத்தைக் காட்டுவதற்காகப் புட்டம் குலுங்க நடப்பார். அந்த நடையிலேயே பாத்திரத்தின் குணத்தைக் கொண்டுவருவார். திரைப்படங்களின் ‘குளோஸ் அப்’ காட்சிகளில் வேணு காட்டும் நுட்பமான சலனங்கள் நாடக நடிப்பிலிருந்து முற்றிலும் வேறானவை.

ஒரு படத்தில் வேணு ஏற்றிருந்த பாத்திரம் இறந்த நிலையில் கால்நீட்டிக் கிடப்பதாகக் காட்சி. காட்சி படமாக்கப்படும்வரை அசையாமல் கிடந்தார். காட்சி முடிந்ததும் சிரித்துக்கொண்டே எழுந்தார். ‘அசையாமல் படுத்துக் கிடப்பதைச் சுலபமாக நடித்துவிடலாம், இல்லையா?’ என்று ஒருவர் குறிப்பிட்டார். ‘இல்லை... அதுவும் சிரமமானதுதான். சும்மா கட்டைபோலக் கிடப்பதல்ல நடிப்பு. அந்தப் பாத்திரம் இறக்கும்போது என்ன மனநிலையில் இருந்தது என்பதையும் நடிகன் முகத்தில் காட்ட வேண்டும். நிம்மதியான சுக வாழ்க்கை நடத்தியவரென்றால் சிரித்த முகமாக இறந்திருப்பார். கடன்பட்டு நொந்துபோனவரானால் அந்தச் சலிப்பும் நோயாளியாக இருந்தால் அந்த வாதையும் முகத்தில் தென்படும். அதை வெளிப்படுத்துபவனே நல்ல நடிகன்’ என்று பதில் சொன்னார் வேணு. நெடுமுடி வேணு நல்ல நடிகர்தான் என்று சான்றளிக்க ஐந்நூறுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன.

அரை நூற்றாண்டுக் காலம் திரைப்படங்களில் நடித்து வந்தவர். எனினும், நாடகத்தின் மீதான நெடுமுடி வேணுவின் காதல் ஒருபோதும் ஓய்ந்ததில்லை. காவாலம் நாராயணப் பணிக்கரின் ‘அவனவன் கடம்ப’, ‘தெய்வத்தார்’ போன்ற நாடகங்கள் வேணுவின் நடிப்பால் உயிர்பெற்றன. நாடகத்துக்கு இணையாகவே அவரது இலக்கிய ஆர்வமும் மங்காமல் தொடர்ந்தது. அய்யப்பப் பணிக்கர், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் ஆகிய கவிஞர்களை, கவிதைகளை அவர் சொல்லும் பாங்கு கவிதைகளுக்கு இன்னொரு பரிமாணத்தையே அளிக்கும். இந்த இலக்கிய ஈடுபாடுதான் அவரை திரைக்கதை எழுத்தாளராக்கியது. பரதன் இயக்கிய ‘காற்றத்தெ கிளிக்கூடு’ (1983) முதலாக ஏழு திரைக்கதைகளை எழுதியுள்ளார். ‘பூரம்’ (1989) என்ற திரைப்படத்தை இயக்கியும் இருக்கிறார். நடிகராக மட்டுமல்லர், சினிமாவின் பிற தளங்களிலும் செயல்பட்ட கலை ஆளுமை அவருடையது.

குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தாலும் நெடுமுடி வேணுவுக்குத் தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாள மயம்’ ஆகிய படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவரது நடிப்பு பெரிதும் சிலாகிக்கப்பட்டது, ‘மோக முள்’ளில்தான். ஜானகிராமன் உயிரும் உடலுமாகக் கற்பனை செய்த ரங்கண்ணா வேடத்துக்கு, வேணுவைத் தவிர பொருத்தமான இன்னொரு நடிகர் இருந்திருக்க வாய்ப்பில்லை.

நடிப்பைப் ‘பகர்ந்தாட்டம்’ என்று மலையாளத்தில் குறிப்பிடுவது உண்டு. நெடுமுடி வேணு என்ற ஒற்றைப் பிறவி, ஏறத்தாழ ஐந்நூறு உடல்களில் பகர்ந்தாடியிருக்கிறது. வெவ்வேறு மனிதராக, வெவ்வேறு வயதினராக, வெவ்வேறு பின்னணி சார்ந்தவராக உருவாக்கப்பட்ட பாத்திரங்களில் நெடுமுடி வேணு வாழ்ந்துகாட்டினார். பார்வையாளர்களின் ஏற்பைத் தாண்டி நெடுமுடி வேணுவுக்குக் கிடைத்த அதிகாரபூர்வமான அங்கீகாரங்கள் குறைவே. ஆறு முறை கேரள மாநில அரசின் விருதுகளைப் பெற்றார். இரண்டு முறை மத்திய அரசின் விருதுகள் அளிக்கப்பட்டன. ஆனால், அந்த இரு விருதுகளும் அவருடைய தகுதிக்குப் பெருமை சேர்ப்பவை அல்ல. பி.ஜே.ஆண்டனி முதல் சுராஜ் வெஞ்ஞாற மூடு வரையான மலையாள நடிகர்களுக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகருக்கான தேசிய விருது, மலையாளத்தின் மகத்தான இரு கலைஞர்களுக்கு அளிக்கப்படவே இல்லை. அவர்கள் திலகனும் நெடுமுடி வேணுவும். சில ஆண்டுகளுக்கு முன்பு வேணுவுடனான நேர் சந்திப்பில் இதைச் சுட்டிக்காட்டியதும் கண்களைச் சிமிட்டி, தோளைக் குலுக்கி வாய்விட்டுச் சிரித்தார். அசல் குட்டநாட்டுக்காரனின் பகடிச் சிரிப்பு. அது இப்போதும் காதில் ஒலிக்கிறது.

- சுகுமாரன், கவிஞர், ‘காலச்சுவடு’ இதழின் பொறுப்பாசிரியர். தொடர்புக்கு: nsukumaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x