Last Updated : 11 Mar, 2016 09:29 AM

 

Published : 11 Mar 2016 09:29 AM
Last Updated : 11 Mar 2016 09:29 AM

நீள் துயில் ரகசியம்

மனிதனால் விலங்குகளைப் போல் பல மாத காலம் அன்ன ஆகாரம் இன்றி இருக்க முடியாது.

மனிதனால் தொடர்ந்து பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் சில நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. ஆனால், வட துருவப் பகுதிக்கு அருகே உள்ள ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, கனடாவின் வட பகுதி, ரஷ்யாவின் வட பகுதி போன்றவற்றில் குளிர் காலம் வந்தால், சில வகை விலங்குகள் அன்ன ஆகாரம்

இன்றி இயல்பாக மாதக் கணக்கில் உறங்க ஆரம்பித்துவிடும். என்ன முயன்றாலும் அவற்றை எழுப்ப முடியாது. இந்த வகை உறக்கத்துக்கு நீள் துயில் என்று பெயர். குளிர் காலம் அகன்றதும் அவை விழித்துக்கொண்டு நடமாட ஆரம்பித்துவிடும்.

மரத் தவளைகள், தரை அணில், வெளவால், சில வகை எலிகள், ஒரு வகைப் பாம்புகள் எனப் பல சிறிய பிராணிகளுக்கு இவ்விதம் நீள் துயிலில் ஈடுபடும் திறன் உள்ளது.

இயற்கை அளித்த வரம்

எங்கும் வெண் பனியால் மூடப்படும் பிராந்தியத்தில் கடும் குளிர் காலத்தில் இரை தேடிப் போவது கடினம். தவிர, இரை கிடைக்காது. எனவே, குளிர் காலத்தில் உயிர் பிழைக்க இப்பிராணிகள் உணவு, தண்ணீர் இன்றிப் பல மாத காலம் தொடர்ந்து உறங்குகின்றன. இது இயற்கை அளித்த வரம். நீள் துயில் ஆங்கிலத்தில் ‘ஹைபர்னேஷன்’ (Hibernation) எனப்படுகிறது.

நீள் துயில் காலத்தில் இவை சுருண்டு படுத்துக்கொள்ளும். தரை அணில் ஒன்பது மாத காலம்கூட நீள் துயிலில் இருக்கும். நீள் துயிலில் ஈடுபடும் பிராணிகளைப் பார்த்தால் செத்த மாதிரி இருக்கும். உடலின் மேற்பகுதியில் பனித் துகள்கள் படிந்திருக்கலாம். உடல் பயங்கரக் குளிர்ச்சியாக இருக்கும். தொட்டுப் பார்த்தால் இதயத் துடிப்பு அறவே நின்றுவிட்டதுபோல இருக்கும்.

சாதாரணக் காலங்களில் துருவ வெளவாலின் இதயம் ஒரு நிமிடத்துக்கு 400 தடவை துடிக்கும். நீள் துயில் காலத்தில் அது ஒரு நிமிடத்துக்கு 25 ஆகக் குறைந்துவிடும். சுவாசம் ஒரு மணிக்கு ஒரு தடவை என்ற அளவுக்குக் குறைந்து போவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அயர் நிலைத் துயில்

துருவ வட்டாரப் பிராணிகள் நீள் துயிலில் ஈடுபடுவதும் பின்னர் விழித்தெழுவதும் எப்படி என விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்துவருகின்றனர். ஆனாலும் இன்னமும் இதன் ரகசியம் தெரியவில்லை. இது ரத்தம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு சமயம் விஞ்ஞானிகள் நீள் துயிலில் இருந்த தரை அணிலின் உடலிலிருந்து சிறிது ரத்தத்தை எடுத்து நீள் துயிலில் ஈடுபடாத தரை அணிலின் உடலில் செலுத்தினர். அதுவரை விழித்த நிலையில் இருந்த அந்தத் தரை அணில் உடனே நீள் துயிலில் ஈடுபட்டது.

நீள் துயில் மாதிரியில் இன்னொரு நிலையும் உண்டு. இது அயர் நிலை எனப்படுகிறது. அதாவது, துருவக் கரடிகள் இவ்வித நிலைக்கு உள்ளாகின்றன. அயர் நிலைக்கும் நீள் துயில் நிலைக்கும் வித்தியாசம் உண்டு. அயர் நிலையில் உள்ள பிராணிகளை உலுக்கினால் அவை விழித்துக்கொள்ளும். நீள் துயிலில் உள்ள பிராணிகளை எழுப்ப முடியாது.

அயர் நிலைக்குச் செல்கின்ற விலங்குகளும் சரி, உணவு எடுத்துக்கொள்ளாமல் பல நாட்களுக்குச் சுருண்டு உறங்கும். ஆனால், குளிர் காலம் என்று இல்லாமல் நினைத்த நேரத்தில் அவற்றால் அயர் நிலைக்குச் செல்ல முடியும். ஆங்கிலத்தில் இதை ‘டோர்போர்' (Torpor) என்று கூறுகின்றனர்.

நீள் துயில் ஆய்வு

உலகில் சில பகுதிகளில் கடும் வெயில் காலத்தில் சில வகைப் பிராணிகள் பெரும்பாலும் நிலத்துக்குள் புதைந்துகொண்டு நீள் துயிலுக்குச் செல்கின்றன. சில வகை நத்தைகள், பாலைவன ஆமை, முதலை, சில வகைத் தவளைகள் இவ்விதம் நீள் துயிலில் ஈடுபடுகின்றன. இந்த வகை நீள் துயிலை ஆங்கிலத்தில் ‘எஸ்டிவேஷன்' (Estivation) என்று கூறுகின்றனர்.

மனிதனால் இப்படிப் பல மாத காலம் அன்ன ஆகாரம் இன்றி இருக்க முடியாது. ஒருவர் பல மணி நேரம் தொடர்ந்து உறங்கலாம். ஆனால், அப்படி உறங்கும்போதும் உடல் வெப்ப நிலை ஒரே சீராக இருந்தாக வேண்டும். ரத்த ஓட்டம் வழக்கம்போல இருக்க வேண்டும். இதயமும் வழக்கம்போலச் செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். இவை அனைத்துக்கும் உடலுக்குச் சக்தி வேண்டும்.

நீண்ட விண்வெளிப் பயணத்தின்போது விண்வெளி வீரர்களைத் துருவப் பகுதி பிராணிகளைப் போல் நீள் துயிலில் ஈடுபடச் செய்தால் பல வகைகளிலும் வசதியாக இருக்கும். இந்த நோக்கில் நாஸா 1950-களில் நீள் துயில் குறித்து ஆராய்ச்சி நடத்தியது. ரஷ்யர்களும் இவ்வித ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாஸா இப்போது மறுபடியும் நீள் துயில் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தில் கிளம்பினால் போய்ச் சேர 8 மாதங்கள் ஆகும். விண்கலத்தில் 6 பேர் ஏறிச் செல்வதாக வைத்துக்கொள்வோம். எந்த நேரத்திலும் 4 பேர் நீள் துயிலில் ஈடுபடுவதாக வைத்துக்கொண்டால் சாப்பாட்டுப் பிரச்சினை உட்படப் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும். விண்கலத்தில் 2 பேருக்கு 8 மாதக் காலத்துக்கான உணவு இருந்தால் போதும். எனவே, விண்கலத்தில் ஏற்றிச் செல்ல வேண்டிய உணவுப் பொருட்களின் அளவு குறையும். அந்த அளவில் எடுத்துச் செல்ல வேண்டிய எடை குறையும்.

எதிர்காலத்தில் அண்டவெளியில் எங்கோ இருக்கின்ற ஒரு கிரகத்துக்குச் செல்ல பல ஆண்டுப் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். அவ்விதப் பயணத்துக்கு நீள் துயில் ஏற்பாடு மிகவும் உதவும்.

நீள் துயில் பயன்கள்

உணவுத் தேவை மட்டுமன்றி, விண்கலத்தில் ஆக்சிஜன் தேவையும் குறைந்துவிடும். ஏனெனில், நீள் துயிலில் ஈடுபட்டவர்களின் சுவாசம் குறைவாக இருக்கும். தவிர, விண்கலத்தில் சேரும் கழிவுகளும் குறைவாக இருக்கும். வட துருவப் பகுதியில் நீள் துயிலில் ஈடுபடும் பிராணிகளின் உடலிலிருந்து கழிவுகள் வெளியாவதில்லை.

மனிதனால் நினைத்தபோது நீள் துயில் நிலைக்குச் செல்ல முடியும் என்றால் அது பெரும் புரட்சியாக இருக்கும். வேலைக்குச் சென்று சம்பாதிக்க விருப்பம் இல்லாதவர்கள் நீள் துயிலில் ஈடுபட்டுவிடலாம். வீட்டில் சமையல் செய்ய விரும்பாத பெண்கள், தங்களது கணவன்மார்கள் திண்டாடட்டும் என்ற எண்ணத்தில் நீள் துயிலில் ஈடுபடலாம்.

விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட மருந்தை உட்கொள்வதன் மூலம் அல்லது ஊசி போடுவதன் மூலம் ஒருவரைத் திட்டமிட்டு நீள் துயிலில் ஈடுபடும்படி செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதில் குறியாக இருக்கிறார்கள்.

நீள் துயில் நிலையில் இதயத் துடிப்பு குறையும். சுவாசம் குறையும் என்பதால் மருத்துவ நிபுணர்களும் நீள் துயில் விஷயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். விபத்து காரணமாக அல்லது வேறு காரணத்தால் ஆபத்தான நிலையில் உள்ள ஒருவருக்கு சிகிச்சை அளிக்க அவரை செயற்கையாக நீள் துயிலில் ஈடுபடும்படி செய்தால் டாக்டர்களால் உரிய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப் போதுமான அவகாசம் கிடைக்கும்.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: nramadurai@gmail.com

(நிறைந்தது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x