Published : 08 Mar 2016 09:23 AM
Last Updated : 08 Mar 2016 09:23 AM
சென்னை எழும்பூர் ரயில் நிலையம். அறிவிப்புகளைக் கவனிக்க அவகாசம் இல்லாத அவசரம். நெரிசலுக்கும் நெருக்கடிக்கும் இடையே வேகமாக ஒரு ஓட்டம். ரயிலில் ஏறவும் ரயில் புறப்படவும் சரியாக இருந்தது.
ஜன்னலோர இருக்கை. எதிர் ஜன்னலோரத்தில் ஒரு குழந்தை. கையில் தட்டு. இட்லியும் இட்லிப்பொடியும். வாசம் மூக்கைத் துளைத்தது. தருவாயா என்று கேட்டபோது, தட்டை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டது.
இது தேர்தல் பயணம். இந்தியாவின் பொதுத் தேர்தல் உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா என்றாலும், அனல் தகிப்பதில் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு ஈடுஇணை இல்லை. ரயிலிலும் தேர்தல் பேச்சுதான் ஆக்கிரமித்திருந்தது. “இந்த வாட்டி கொஞ்சம் சிக்கலாயிட்டுதான் இருக்கும்போலிருக்கு, என்ன சொல்றீக?” என்றார் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அண்ணாச்சி. “சென்னைல கெடக்கிறவங்களுக்கு ஊர் நெலமை என்னண்ணே தெரியும்? நீங்கதான் சொல்லணும்” என்றேன். அண்ணாச்சி பேச ஆரம்பித்தார்.
தேர்தல்களை வெறுமனே அரசியல்வாதிகளின் சூது விளையாட்டாக அல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான களமாக அணுகும் ‘தி இந்து’வின் இதழியல் மனதுக்கு நெருக்கமானது.
மக்கள்தான் உண்மையான ஆசான். மக்களைக் கீழே வைத்துப் பார்ப்பது மேட்டிமைத்தனம். மக்களறிவு கூட்டறிவு. மக்கள் என்ற சொல்லில் சோறிடும் விவசாயியும் உண்டு; விண்வெளி செல்லும் விஞ்ஞானியும் உண்டு. மக்களின் முடிவின்மீது நாம் தீர்ப்பு எழுத முயற்சிப்பதைவிடவும் அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதே அரசியல் புரிதலுக்கான அடிப்படை வழி. மக்களை நோக்கிச் செல்வது எப்போதும் கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையோருக்குக் கொண்டாட்டம் தருவது.
ரயில் வேகமெடுத்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. இட்லிப் பொட்டலத்தைப் பிரித்தேன். வெளியே பொட்டலத்தின் அளவுக்கும் உள்ளே இட்லியின் அளவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. ரயில் நிலைய வளாகத்திலுள்ள பெரிய கடை ஒன்றில் வாங்கியது.
நண்பர் காளியின் ஞாபகம் வந்தது. காளி சாப்பாட்டுக்காக எவ்வளவும் செலவழிக்கக் கூடியவர். ஆனால், எதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். சென்னை வந்த புதிதில் பெரிய கடை ஒன்றுக்கு காளி போயிருக்கிறார். தோசை கேட்டவருக்குத் தம்மாதூண்டுக்கு ஒன்றைக் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். நேரே கல்லாப்பெட்டிக்காரரிடம் தட்டை எடுத்துச்சென்றிருக்கிறார் காளி.
“ஏன்யா, எங்க ஊருல விக்கிற விலையைக் காட்டிலும் இங்கெ ரெண்டு மடங்கு விலைக்குத் தோசையை விக்கிறீங்க; சரி, ஊருக்கு ஏத்த விலைன்னு ஏத்துக்கிறேன். ஊருக்கு ஏத்த மாதிரி தோசை அளவும் சிறுக்குமாய்யா? அம்பது ரூவான்னு என்கிட்ட நீ கேக்குற நோட்டு இப்படித்தான் இருக்கும்னு உனக்கும் எனக்கும் ஒரே தெளிவு இருக்குல்ல? அப்படி ஒரு தோசைன்னா, உனக்கும் எனக்கும் ஒரே தெளிவா ஒரு அளவு இருக்கணுமா இல்லியா?” என்று சத்தம் போட ஆரம்பித்திருக்கிறார். காளியின் வாதம் எளிமையானது. “எந்த ஊராக இருந்தாலும் ரூவா நோட்டுக்கு ஒரே மரியாதைதானே? உன் ஊருல, உன் கடையில தோசை தரத்துல உசத்தின்னு நெனைச்சா விலையைக் கூட்டிக்க. ஏன் அளவைக் குறைக்கிற?”
பெரிய கடைகள்தான் என்றில்லை; ரயில் நிலையங் களில் டீ/காபி விற்கும் சிறு வியாபாரிகளிடம்கூட இந்தத் தன்மையைப் பார்க்க முடிகிறது. டீ/காபி கேட்பவர்களிடம் நுரையை விற்க அவர்கள் படும் பாடு இருக்கிறதே!
ஒருகாலத்தில் அன்னமிட காசு வாங்கக் கூடாது என்று யோசித்த சமூகம், இன்றைக்கு ஏன் இப்படியானோம் என்று தெரியவில்லை.
ஜன்னலிலிருந்து பேயாகப் பாய்ந்து கொண்டிருந்தது காற்று. மனம் காற்றுடன் போட்டி போட்டது. மக்களவைத் தேர்தலின்போது எழுதிய ‘இந்தியாவின் வண்ணங்கள்’ பயணத் தொடர் ‘தி இந்து’வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவும் அப்படியான ஒரு பயணம்தான். குறுக்கும் நெடுக்குமாகத் தமிழகத்தைச் சுற்றி வரும் பயணம். இந்தத் தொடர் எப்படி இருக்கும்? பெரிய திட்டமிடல்கள் இல்லை. ஆனால், குரலற்றவர்களின் குரல்களைப் பேசும் தொடராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தெளிவாக இருக்கிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் எழுத ஆசை. இடையிடையே தலைவர்களுடனான சந்திப்புகளும் இருக்கக் கூடும்.
எங்கிருந்து தொடங்குவது?
எப்படி ஒரு முதல்வரை இன்றைக்கும் தமிழக மக்கள் கனவு காண்கிறார்களோ அவரிடமிருந்து, அவருடைய ஊரிலிருந்து, அவருடைய வீட்டிலிருந்து தொடங்கினால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
வண்டி இப்போது அந்த ஊர் நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது..
(குரல் ஒலிக்கும்..)
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT