Published : 25 Mar 2016 08:48 AM
Last Updated : 25 Mar 2016 08:48 AM

தேர்தல்.. கொள்கை.. கூட்டணி!- இணைந்த இடதுசாரிகள்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) என கம்யூனிஸ்ட்கள் பிரிந்து கிடந்த நிலையில், 1967 பொதுத் தேர்தல் வந்தது. காங்கிரஸுக்கு எதிரான அணியில் சிபிஎம்மைச் சேர்க்க விரும்பியது திமுக. கூடவே, ராஜாஜியின் சுதந்திரா கட்சியின் மீதும் ஒரு ஈர்ப்பு. ஆக, இடதையும் வலதையும் இணைக்கும் வகையில் தொகுதி உடன்பாடுகள் கையெழுத்தாகின. பழைய வீடுகளில் கதவு பூட்டியிருந்தாலும் கதவுக்குள் கதவாகத் திட்டிவாசல் எனும் சின்னக் கதவு இருக்கும். அப்படிப்பட்ட கதவும் இந்தக் கூட்டணியில் இருந்தது. சிபிஎம்மும் சுதந்திராவும் எதிர்த்துப் போட்டியிட்டுக் கொள்ளலாம் என்பது தான் அது.

திமுக அணியில் சிபிஎம்முக்கு 22 சட்டமன்றத் தொகுதிகளும் 5 மக்களவைத் தொகுதிகளும் தரப்பட்டன. சிபிஐ 32 சட்டமன்றத் தொகுதிகளிலும் 7 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. பல தொகுதிகளில் சிபிஐயும் சிபிஎம்மும் பரஸ்பரம் மோதிக்கொண்டன. தேர்தலின் முடிவில் தமிழ்நாட்டில் சிபிஎம்முக்கு 11 எம்எல்ஏக்களும் 4 எம்பிக்களும் கிடைத்தனர். ஆனால், தனித்துப் போட்டியிட்ட சிபிஐக்கு 2 எம்எல்ஏக்களே கிடைத்தனர்.

1971 தேர்தலில் நிலைமை தலைகீழ். திமுக அணியில் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் 4 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டது சிபிஐ. திமுக அணியில்தான் இந்திரா காங்கிரஸும் இருந்தது. சிபிஎம் 37 சட்டமன்றத் தொகுதிகளிலும் 6 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. சிபிஐக்கு 8 எம்எல்ஏக்களும் 4 எம்பிக்களும். சிபிஎம் படுதோல்வி.

இந்த காலகட்டத்தில் நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரதமர் இந்திரா அறிவித்தார். அதைத் தீவிரமாக எதிர்த்த சிபிஎம்மும் திமுகவும் 1977 மக்களவைத் தேர்தலில் அணி அமைத்தன. சிபிஎம்முக்கு 2 தொகுதிகள். சிபிஐயும் இந்திரா காங்கிரஸும் அதிமுகவோடு அணி சேர்ந்தன. சிபிஐக்கு 3 தொகுதிகள். இந்தியாவின் பெரும்பாலான பகுதி இந்திராவை எதிர்த்து வாக்களித்தது. ஆனால், தமிழகத்தில் அதிமுக - காங்கிரஸ் அணிதான் வெற்றி. சிபிஐக்கு 3 எம்பிக்கள். திமுக அணியிலிருந்த சிபிஎம்முக்கு மீண்டும் படுதோல்வி.

மக்களவைத் தேர்தல் முடிந்த சில மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல். திமுக அணியிலிருந்து சிபிஎம் அதிமுக அணிக்கு மாறியது. கருணாநிதி மீதான சர்க்காரியா கமிஷன் விசாரணையைக் காரணமாகச் சொன்னது.

அதிமுக அணியிலிருந்து விலக்கப்பட்ட சிபிஐயும் இந்திரா காங்கிரஸும் அணியமைத்தன.

நான்குமுனைப் போட்டி நடந்தது. சிபிஎம் இடம்பெற்ற அதிமுக அணி ஆட்சியைப் பிடித்தது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம் 12ஐ கைப்பற்றியது. இந்திரா காங்கிரஸ் அணியில் 32 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஐக்கு 5 எம்எல்ஏக்கள். எதிரெதிர் அணியில் இடம்பெற்றுவந்த இடதுசாரிகளை 1980 மக்களவைத் தேர்தல் ஒரே அணியில் இணைத்தது!

- கட்டுரையாளர் ‘கச்சத்தீவு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com (கோஷம் போடுவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x