Published : 13 Jun 2014 10:35 AM
Last Updated : 13 Jun 2014 10:35 AM

விளையாடுவதே வெற்றிதான்!

“கால்பந்தாட்டத்தில் எவ்வளவோ சவால்கள். கோபமற்ற சவால்கள். பயங்கரமான வெறி. ஆனால், பாதகமற்றது. வெற்றியில் பெரும் எக்களிப்பு. ஆனால், நிறுவன அமைப்புகள் இந்த விளையாட்டைக்கூடக் கீழ்த்தரமான தளத்திற்குச் சரித்துவிட்டன. நிறுவனங்கள், நோக்கத்தின் அடிப்படையையே உலரச் செய்து, அமைப்புகளுக்கே உரித்தான முட்களை முளைக்கவைத்துவிடுகின்றன. நோக்கம் பின்னகர்ந்து போய்விடுகிறது. கோபம், கசப்பு, மனிதத்தன்மை துறந்த இறுக்கமான விதிகள், சம்பிரதாயம், மரபு சார்ந்த அடிமைத் தனங்கள் படர்கின்றன. மனித மனம் மூல அர்த்தங்களைப் பழக்கத்தில் கெடுத்துச் சிடுக்கை ஏற்படுத்திவிடுகிறது. இதுதான் வளர்ச்சிக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டை.

“போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்து, மகாராஜா கையிலிருந்து கோப்பையை வாங்கிக் கொடு’என்று உயிரை எடுக்கிறார்கள். இவர்களுடைய மிதமிஞ்சிய உற்சாகம் என்னை உள்ளூரச் சுருங்கவைக்கிறது. விளையாட்டுகளில் தோல்வி என்பது தோல்வியுமல்ல. வெற்றி என்பது வெற்றியுமல்ல. விளையாட்டே ஒரு வெற்றி. தீவிரமாக, ஆத்மார்த்தமாகத் தன்னை மறந்து விளையாட வேண்டும். இவர்களுக்கோ, இவர்கள் உயர் நீதிமன்றங்களில் நடத்தும் வழக்கைப் போலத்தான் விளையாட்டுகளும்.

‘தோல்விகளுக்குப் பின் நாம் எப்போதும் காணும் பலவீனம், குழு அல்ல, நான்தான் முக்கியம் என்ற விளையாட்டுக்காரனின் மனோபாவமே. காலடியில் வந்துசேரும் பந்து என்னுடையதல்ல, என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. உனக்குக் கொண்டுபோவதற்குச் சாத்தியமானதற்கு மேல் ஒரு அங்குலம்கூடப் பந்தைக் கொண்டுபோக முடியும் என்று நினைக்காதே. நீதான் ‘கோல்’போட வேண்டும் என்று ஒருபோதும் நினைக்காதே. உனக்குப் பெரும் தடைகள் சூழ்ந்துவரும்போது, பந்தை மேலெடுத்துச் செல்ல, வசதியுடன் உன் சக ஆட்டக்காரன் காத்துக்கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே...

சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலிலிருந்து சில பகுதிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x