Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM
கடந்த மாதம் (ஆகஸ்ட் 17) சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு வந்தது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களைப் பற்றி அந்த வழக்கில் பேசப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரனும் புகழேந்தியும் வெளிப்படுத்திய கவலை கவனத்துக்குரியது. 1962 வரை, நாடாளுமன்றத்துக்குத் தமிழ்நாடு 41 உறுப்பினர்களை அனுப்பியது. 1967 முதல் இந்த எண்ணிக்கை 39 ஆகக் குறைந்துவிட்டது. மக்கள்தொகை அடிப்படையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதால் தமிழ்நாட்டின் வீதம் குறைந்துவிட்டது. மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திவரும் ஒரு மாநிலத்துக்கு இது தண்டனையாகாதா? 1999-ல் வாஜ்பாய் அரசு ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் பதவி இழந்ததை நினைவூட்டிய நீதிபதிகள், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு இடமும் முக்கியமானதில்லையா என்று கேட்டார்கள். இதைத் தொடர்ந்து ஊடகங்களில் ஒரு காத்திரமான உரையாடல் நடக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
சட்டமும் திருத்தமும்
நீதிபதிகள் தொட்டுக் காட்டியிருப்பது ஒரு பெரிய சிக்கலின் சிறிய நுனியை மட்டுமே. நமது அரசமைப்புச் சட்டத்தின் 81-வது கூறு, ஒவ்வொரு மாநிலமும் அதனதன் மக்கள் தொகையின் விகிதத்தில் நாடாளுமன்ற இடங்களைப் பெறும் என்கிறது. 1962 பொதுத் தேர்தலில் 1951 மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி நாடாளுமன்ற இடங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு 41 இடங்களைப் பெற்றது. 1967 பொதுத் தேர்தலில் 1961 மக்கள்தொகைக் கணக்கீடு பயன்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 ஆகக் குறைந்தது. 1971 தேர்தலிலும் அதுவே நீடித்தது. 1976 நெருக்கடி நிலைக் காலகட்டத்தில், இந்திரா காந்தியின் அரசு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொணர்ந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கு (அதாவது 2001 வரை) மாற்றப்படாமல் இருக்கும் என்பதுதான் திருத்தம். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதுதான் நோக்கம். 2002-ல் வாஜ்பாய் அரசும் இன்னொரு திருத்தத்தின் வாயிலாக இந்தக் கால அவகாசத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு (2026 வரை) நீட்டித்தது. 2026-க்குப் பிறகு இந்தச் சட்டம் மீண்டும் திருத்தப்படாவிட்டால் என்ன ஆகும்?
இதற்கு அலிஸ்டர் மாக்மில்லன் எனும் அரசியல் அறிவியலர் பதில் சொல்கிறார். 2001 மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி நாடாளுமன்ற இடங்கள் ஒதுக்கப்பட்டால், தமிழ்நாடு ஏழு இடங்களை இழக்கும், உத்தர பிரதேசம் மேலதிகமாக எட்டு இடங்களைப் பெறும். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய ஐந்து தென்மாநிலங்கள் கூட்டாக 18 இடங்களை இழக்கும். உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உத்தராகண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய இந்தி பேசும் வடமாநிலங்கள் 22 கூடுதல் இடங்களைப் பெறும். இது 2001 கணக்கு. சட்டத் திருத்தத்தின் கால அவகாசம் முடிகிற 2026-ல் இருக்கக்கூடிய மக்கள்தொகையைக் கணக்கிட்டுப் பங்கு வைத்தால், தென்மாநில இருக்கைகள் இப்போதைய 24%-லிருந்து 19%ஆகக் குறையும்; இந்தி பேசும் மாநில இருக்கைகள் இப்போதைய 40%-லிருந்து 46%ஆக உயரும். தெற்கு செல்வாக்கை இழக்கும். இந்தி பேசும் மாநிலங்களில் வெற்றி பெறும் பெரிய கட்சி எந்தத் தென்மாநிலத்தின் உதவியுமின்றி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகும்.
ஆலோசனைகள் மூன்று
இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசுபவர்கள் பிரதானமான மூன்று கருத்துகளை முன்வைக்கிறார்கள். முதல் ஆலோசனை, அரசமைப்பைப் பின்பற்றி மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற இடங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பது. இப்போதைய தேர்தலில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை பெருமளவில் வேறுபடுகிறது. தமிழ்நாட்டின் ஒரு உறுப்பினர் சராசரியாக 18 லட்சம் மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார். அதே வேளையில், உத்தர பிரதேசத்தின் ஒரு உறுப்பினர் 30 லட்சம் மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார். இதைச் சமன்படுத்த வேண்டும் என்கிறார்கள் முதல் பிரிவினர். அப்படிச் செய்தால், தென் மாநிலங்கள் தண்டிக்கப் படுமே என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.
இரண்டாவது ஆலோசனை, உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டிவிடலாம் என்பது. கேரளத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 20. இதை நிலைநிறுத்திக்கொண்டு, அந்த விகிதத்தில் மற்ற மாநிலங்களின் உறுப்பினர்களை நிர்ணயிக்க வேண்டும் என்பது மாக்மில்லன் போன்றவர்கள் வழங்கும் ஆலோசனை. இதன்படி தமிழ்நாடு 49 உறுப்பினர்களைப் பெறும். உத்தர பிரதேசம் 143 (இப்போது 80) உறுப்பினர்களைப் பெறும். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 848 ஆக உயரும். இதன்படி, தமிழ்நாட்டின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடினாலும், அவையில் அதன் விகிதம் இப்போதைய 7.2%-லிருந்து (39/543) 5.8%ஆக (49/848) குறைந்துவிடும். மாறாக, உத்தர பிரதேச உறுப்பினர்களின் விகிதம் 14.7%-லிருந்து 16.9%ஆக உயர்ந்துவிடும். இந்தத் திட்டத்தின் கீழும் தென்மாநில இருக்கைகள் 19%ஆகவும் இந்தி மாநில இருக்கைகள் 46%ஆகவும் இருக்கும். இந்த ஆலோசனையும் தென்மாநிலங்களுக்கு உகந்ததாக இராது.
மூன்றாவது ஆலோசனை, மக்களவையின் இடங்களை மக்கள்தொகை அடிப்படையில் மாற்றிவிட்டு, மாநிலங்களவையில் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே அளவிலான இடங்களை நிர்ணயித்துவிடலாம் என்பது. இதிலும் மக்களவையில் தென்மாநிலங்கள் இழக்க நேரும்; மேலும், அந்த இழப்பு மாநிலங்களவையில் ஈடுகட்டப்படாது. இந்தியாவின் ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு வாக்குதான். இதனால் தமிழகம் போன்ற பெரிய, வளமான, அதிக வரி வருவாய் ஈட்டுகிற மாநிலத்தால் தனது சக்திக்கேற்ற குரலை கவுன்சில் கூட்டங்களில் எழுப்ப முடிவதில்லை. ஆகவே, இந்த மூன்றாவது ஆலோசனையும் தென்மாநிலங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது.
எண்களும் மனிதமும்
இது போன்ற ஆலோசனைகள் இந்தப் பிரச்சினையைக் கணக்குகளாக மட்டும் பார்க்கின்றன. மாறாக, மனிதர்களின் பிரச்சினையாக அணுக வேண்டும். தென்மாநிலங்களால் எப்படி மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முடிந்தது? ஒரு பெண் சராசரியாகப் பிரசவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, கருவள விகிதம் எனப்படுகிறது. இந்த விகிதம் 2.1 ஆக இருந்தால், அது பதிலீட்டு விகிதம் எனப்படும். அதாவது, ஒரு பெண் சராசரியாக 2.1 குழந்தைகளை ஈன்றால், அந்தச் சமூகத்தில் மக்கள்தொகை நிலையாக இருக்கும். தமிழ்நாட்டில் கருவள விகிதம் 1981-ல் 3.4ஆக இருந்தது, இது பதிலீட்டு விகிதத்தைவிட அதிகம். இப்போது 1.5, பதிலீட்டு விகிதத்தைவிடக் குறைவு. இதே காலகட்டத்தில் உத்தர பிரதேசத்தில் கருவள விகிதம் 5.8 என்பதிலிருந்து 3 ஆகியிருக்கிறது.
மக்கள்தொகை குறைவதற்கு ஒரு சமூகம் கல்வியில் சிறந்ததாக இருக்க வேண்டும். பெண்கள் கல்வியிலும் உழைப்பிலும் உற்பத்தியிலும் பங்கெடுக்க வேண்டும். மருத்துவ வசதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். இதனால் தொழில் பெருகும், பொருளாதாரம் வளரும். தமிழ்நாட்டில் அதுதான் நடக்கிறது. அதனால்தான் இந்தியாவின் 5.96% மக்களைக் கொண்டுள்ள தமிழகத்தால் நாட்டின் மொத்த உற்பத்தியில் 9% பங்களிக்க முடிகிறது. நாட்டின் 16.51% மக்களைக் கொண்டிருக்கும் உத்தர பிரதேசமும் அதே அளவுக்குத்தான் பங்களிக்கிறது. ஆனால், வரி வருவாயில் தமிழ்நாட்டுக்கு 6% வழங்கும் ஒன்றிய அரசு, உத்தர பிரதேசத்துக்கு 17% வழங்குகிறது. நிதி ஒதுக்கீட்டில் நிலவும் இந்தச் சமமின்மை நாடாளுமன்றத்துக்கும் நீண்டுவிடக் கூடாது.
இந்தியாவின் எல்லா மாநிலங்களும் கல்வி, மருத்துவம், உடல் நலம், பெண்கள் முன்னேற்றம், பொருளாதாரம் போன்ற எல்லா அலகுகளிலும் முன்னேற வேண்டும். அதுவரை நாடாளுமன்றம், இப்போதைய இடப்பகிர்வின் அடிப்படையிலேயே இயங்க வேண்டும். அதுதான் சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நீதியாக இருக்கும்.
- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT