Published : 16 Sep 2021 04:58 PM
Last Updated : 16 Sep 2021 04:58 PM
சைடு ஸ்டாண்ட், பேன் சீப்பூ பல்லா, எஸ்கேப் பைத்தியம் என இன்னும் பெயர்கள் நீள்கின்றன.
நடிகர் சந்தானத்தின் சமீபத்திய 'டிக்கிலோனா' திரைப்படத்தில் நகைச்சுவை எனப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் தற்போது எதிர்வினையைச் சந்தித்து வருகிறது.
மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதித்தவர்கள் என அனைவரையும் நகைச்சுவை என்ற பெயரில் மோசமான முறையில் கேலி செய்திருக்கும் படமாக இப்படம் அறியப்பட்டிருக்கிறது. உருவ கேலி மட்டுமல்லாமல் பெண்களின் ஆடை சார்ந்து பல பிற்போக்குக் கருத்துகளைப் படத்தின் முக்கியக் கதாபாத்திரம் பேசுகிறது.
மேலே கூறப்பட்ட அனைத்தும் புதிதாக நடந்ததல்ல, இதற்கு முன்னரும் பல படங்களில் உருவ கேலிகளும், பெண்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் ( ஸ்லட் ஷேமிங்) நிறைய வந்திருக்கின்றன. அவற்றுக்கு எதிராக விமர்சனக் குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன. ஆனால் இந்த எதிர்ப்புக் குரல்களை மிக எளிதாகக் கடக்கும் போக்கு அச்சத்தையும், ஒருவித நெருடலையும் தந்திருக்கிறது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கவுண்டமணி முதல் தற்போதுள்ள நடிகர்கள்வரை பெரும்பாலானவர்கள் உருவ கேலியைச் செய்துள்ளனர். ஆனால், 80களின் காலகட்டத்தையும், தற்போதுள்ள காலகட்டத்தையும் ஒப்பிட முடியாது அல்லவா? நாம் முற்போக்கை நோக்கி நகர்ந்திருக்கிறோம். அவ்வாறு இருக்கும்போது அறமற்ற உருவ கேலிகளை நகைச்சுவை என்ற பெயரில் கலைப் படைப்புகளாக வருவதை எப்படி அனுமதிக்க முடியும்.
எனவே, திரைப்படங்களில் உருவ கேலிகளைத் தடுக்க நெறிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும் என்கிறார் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக்.
இதுகுறித்து அவர் தொடர்ந்து கூறியதாவது:
“திரைப்படங்களில் உருவ கேலிகள் இருக்கக் கூடாது என்று ஒளிப்பதிவு சட்டம் கூறுகிறது. ஆனால் அதனை நாம் சரியாகப் பின்பற்றுகிறோமா என்றால், நிச்சயமாக இல்லை. இயக்குநரின் கற்பனையான கதாபாத்திரம்தான், அந்த வசனம் கதாபாத்திரத்தைக் கிண்டல் செய்கிறது, மக்களை அல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இதனை எப்படி ஏற்றுக்கொள்வது?
கலைப் படைப்புகளுக்கு சமூகத்தின் மீதான கூட்டுப் பொறுப்பு இல்லை என்று ஒட்டுமொத்தமாகக் கை கழுவிட முடியாது. அவர்களுக்கும் பொறுப்பு உள்ளது. இயக்குநர்களின் கற்பனைத் திறனில் நாம் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் எவ்வளவு தூரம். எனவே சட்டங்கள் வலிமையாக்கப்பட வேண்டும். சமுதாயம் அதன் மனசாட்சியோடு எப்போது இருப்பதில்லை.
இங்கு சமுதாயம், சமுதாயமாக இல்லை. அது சந்தையாக மாறிவிட்டது. கலை என்பது விளைபொருளாகிவிட்டது. இவ்வாறு இருக்கையில் நமது நெறிமுறைகள் தேவைப்படும் அல்லவா?
சந்தானத்தை மதிக்கக்கூடிய ரசிகர்கள் எங்களை மாதிரியான மனிதர்களை சைடு ஸ்டாண்ட் என்று அழைப்பார்கள் அல்லவா? இது நிச்சயம் சமூகத்தில் தாக்கத்தைத் தானே ஏற்படுத்துகிறது.
ஒளிப்பதிவு சட்டம் மற்றும் தணிக்கை வாரியம் தனது நெறிமுறை வேலையிலிருந்து தவறுகிறது. ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தங்களைக்கொண்டு வருகிறார்கள் என சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்கள் பக்கம் நியாயமே இருக்கட்டும். இதனை எந்தக் கலைஞர்கள் பேசப் போகிறார்கள். சின்னத்திரை, விளம்பரத்துறை போன்ற துறைகள் இந்தச் சட்டத்தின் கீழ் வரவில்லை. அவற்றிற்கும் தணிக்கை வாரியம் தேவை.
'டிக்கிலோனா' படம் சமூகத்தில் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால் ஏற்பட்ட சேதத்தை நாம் எப்படி கட்டுப்படுத்தப்போகிறோம்?”
இவ்வாறு தீபக் கேள்வி எழுப்பினார்.
உருவ கேலிகள் நமது அனைவரது பேச்சு வழக்கிலும் கலந்திருக்கிறது. குடும்பங்கள், பள்ளிக்கூடங்கள், பணியிடங்கள் என எதாவது ஒரு தருணத்தில் நாமும் அத்தகைய சொற்களைப் பிறர் மீது வீசி இருக்கலாம். நாம் வீசிய சொற்கள் அந்த நபரை பாதித்து இருக்குமா? இல்லையா? எனச் சிந்திப்பதற்குக் கூட இடம் தராமல் அந்தத் தருணங்களைக் கடந்திருப்போம். அவ்வாறுதான் 'டிக்கிலோனா' படத்தையும் அதன் அபத்தத்தையும் பலர் கடந்து இருப்பார்கள்.
பைத்தியம் என்று சக மனிதனை அழைப்பது இயல்பாகியிருக்கிறது. உணர்வு சார்ந்து சமூகத்தைப் பார்க்கும் பார்வை சமீபகாலமாக மாறியுள்ளது. உருவ கேலிகள் நிச்சயம் மனித உரிமை மீறல்கள்தான். மனிதர்களில் உடல் பாதிப்பை நகைச்சுவை என்ற பெயரில் காட்சிப்படுத்துவது தவறு என்பதை அனைவரும் உணர வேண்டும். குறிப்பாக கலைப் படைப்புகளில் உள்ளவர்களுக்குக் கூடுதல் பொறுப்புணர்வு உள்ளது. அம்மக்களது வெற்றியை நீங்கள் பதிவு செய்யாவிட்டாலும், அவர்களை கேலிப் பொருளாக மாற்றிவிடாதீர்கள்.
உங்கள் படத்தைப் பாராட்டும்போது தூக்கிப் பிடிக்கும் உங்கள் வெற்றிகளைப் போன்று, விமர்சனங்களையும் புறம்தள்ளாமல் ஏற்றுக்கொண்டு அடுத்த படைப்புகளைச் சீர்படுத்துங்கள். அதுவே அறவுணர்வுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான வழியும் கூட.
இறுதியாக, கலை என்ற பெயரில் உங்கள் எதிரில் இருக்கும் சக மனிதனை எந்தவித அறவுணர்வும் இல்லாமல் கீழே தள்ளுவதை இனியாவது நிறுத்துங்கள்.
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT