Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM
இந்திய அரசியலுக்கு தமிழ்நாடு அளித்திருக்கும் கொடைகள் என்று மூன்று விஷயங்களைச் சொல்லலாம். 1.சமூகநீதி 2.மாநில சுயாட்சி 3.பொதுநலப் பொருளாதாரம். தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த வரலாற்றுத் தொடர்ச்சியாலும் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தாலும் உருவான ஓர் அரசியல் கருத்தாக்கம்தான் இந்த மூன்றையும் ஒருசேர உருவாக்கியது. இந்தக் கோட்பாடுகளுக்கு அரசியல் அதிகார உருவத்தை அளித்து, இவற்றை ஜனநாயக ஆயுதங்களாக மாற்றியவர் அறிஞர் அண்ணா.
சுதந்திரம் அடைந்தபோது இந்தியா எத்தகைய அரசியல் பாதையை முன்னெடுக்கும் என்பதில் யாருக்கும் ஆச்சரியம் இருந்திருக்கவில்லை. ஜவாஹர்லால் நேருவும் அண்ணல் அம்பேத்கரும் பிறரும் இங்கே ஓர் அரசமைப்புச் சட்டரீதியிலான குடியரசு முறையைத்தான் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். மக்களின் போராட்டங்களின் எதிர்வினையாக பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த மின்டோ-மார்லி சீர்திருத்தங்கள், மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள், 1935 இந்திய அரசுச் சட்டம் போன்றவை மூலமாக இந்தியாவில் மக்களாட்சி மலரப்போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்துவிட்டது. காலனிய நாடுகளில் எல்லாம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு சுதந்திர ஆட்சிகள் உருவானபோது, பல நாடுகளில் அரைகுறை ஜனநாயகமும் ராணுவ ஆட்சிகளும் ஒற்றைக்கட்சி ஆட்சிகளும் உருவாயின. ஆனால், இந்தியாவில் ஜனநாயக ஆட்சி முறை உருவானது. சுதந்திர விடுதலைப் போராட்டக் காலத்திலேயே அரசியல் பன்மைத்துவம் ஓங்கியிருந்த காரணத்தால் இங்கே பல கட்சி ஆட்சிமுறை இயல்பாகவே கைகூடியது.
இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைப் பார்க்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழ்நாட்டில் உருவான பிராமணரல்லாதோர் இயக்கமும் சுயமரியாதை இயக்கமும் பிறகு நீதிக்கட்சியும் திராவிடர் கழகமும் ஏற்கெனவே இந்த அரசியல் மாற்றச் சூழலில்தான் வளர்ந்திருந்தன. எனவே, 1947-க்குப் பிறகு அதைத் தொடர வேண்டிய தேவையும் இருந்தது.
அந்தத் தேவையை 1947-க்குப் பிந்தைய அரசியல் சூழலுக்கேற்ப வகுத்தளித்தவர்தான் அண்ணா. அதன் முதல் முயற்சிதான் 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை அவர் உருவாக்கியது. அதை, தந்தைக்கும் மகனுக்குமான பிரிவாகப் பார்ப்பது பிழை. அதைக் காலனிய காலத்துக்கு முற்பட்ட சூழலுக்கும் பின்வந்த சூழலுக்கும் இடையிலான வித்தியாசமாக, ஒரு மாற்றமாகப் பார்ப்பதுதான் முறை.
சாதியச் சமூகத்தில் நவீன முன்னேற்றம் சாத்தியமில்லை என்று அம்பேத்கரும் பெரியாரும் காட்டிய வழிதான் அண்ணாவின் வழி. ஆனால், அந்தச் சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதில் அண்ணாவுக்கென்று ஒரு தனித் திட்டம் இருந்தது. அதுதான் முதலில் தமிழ்நாட்டின் சமூகநீதிப் பாதையையும் இன்று அனைத்திந்திய அளவிலான சமூகநீதிப் பாதையையும் உருவாக்குவதில் பெரும்பங்காற்றியது. அண்மையில், மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதிசெய்ததில் இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றிகூட, அன்றைய திமுக தலைவர் உருவாக்கிய அரசியல் பாதையில்தான் இருக்கிறது. அந்த வெற்றி தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமேதானா என்ன?
அண்ணா தொடக்கத்தில் தனிநாடு கேட்டார். பிறகு, மாநில சுயாட்சி முழக்கத்தை முன்வைத்தார். இரண்டுக்குமே அடிப்படையாக அவர் முன்வைத்த அரசியல் பிளவுவாத அரசியல் அல்ல. இனவெறுப்போ ரத்தக்களரியோ அல்ல. இந்தியாவை ஜனநாயகபூர்வமாக ஆள்வதற்கான கூட்டாட்சி சூத்திரத்தை அவர் முன்வைத்தார். அவர் காலத்தின் வேறெந்தத் தலைவர்களைவிட அண்ணாவின் பங்கு இதில் பெரியது. அன்று அவரது முயற்சி பேசப்படாமல் இருந்திருக்கலாம்; புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், காலத்தின் கட்டளை வேறொன்றாக இருக்கிறது. இன்று மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களிலிருந்தும் - அதாவது எதிர்க்கட்சிகள் ஆள்கிற மாநிலங்களிலிருந்தும் - மாநில சுயாட்சிக் கோரிக்கை வெளிப்படுகிறது. பல சமயங்களில், பல தலைவர்கள் இவற்றைப் பற்றிப் பேசியிருக்கலாம். ஆனால், கூட்டாட்சிக்கும் சுயாட்சிக்குமான அரசியல் அடிப்படையை அண்ணாவைப் போல தீர்மானகரமாக முன்வைத்தவர் வேறு ஒருவரில்லை.
மூன்றாவது கொடையான பொதுநலப் பொருளாதாரம் என்பதைப் பற்றிப் பார்ப்போம். ஈரோட்டு சமதர்மத் திட்டத்தின் வாயிலாக ஏற்கெனவே ஒரு பொதுவுடைமை சிந்தனை வட்டத்தில் இருந்தவர்தான் அண்ணா. மிட்டாமிராசுகளின் கட்சியாக இருந்த நீதிக்கட்சியை மக்கள் கட்சியாக மாற்றியதில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இருந்த வியூகம் பற்றி நாம் அறிவோம். எல்லோரும் அறியாத ஒன்று என்னவென்றால், அண்ணா மிகத் தீவிரமான சோஷலிச மனப்பான்மையர் என்பதுதான். திராவிடர் கழகம் என்கிற பெயரிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் எனத் தன் கட்சிக்குப் பெயர் வைத்தபோது, முன்னேற்றம் என்ற சொல்லை எந்த அர்த்தத்தில் அண்ணா சேர்த்தார்? வளர்ச்சி என்ற பொருளில் அல்ல, முற்போக்கு என்ற பொருளில்தான் முன்னேற்றம் என்ற சொல் சேர்க்கப்பட்டது. திமுகவை ஆங்கிலத்தில் தொடக்க காலத்தில் ‘Dravidian Progressive Federation’ (DPF) என்றுதான் அழைத்தார்கள். பிறகுதான் அது ‘DMK’ ஆனது.
அண்ணா ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. ஆனால், மிகத் தெளிவாகவே சோஷலிசப் பொருளாதாரத்துக்கு ஆதரவாக இருந்தவர். அதே சமயம் இந்தியாவின்/ தமிழ்நாட்டின் சூழலின் இயக்கப் போக்கை அறிந்தவர். உலக அளவில் சோஷலிசத்துக்கும் இந்திய அளவில் நேருவின் சோஷலிசத் திட்டமிடல் பாதைக்கும் அவர் ஆதரவாக இருந்தார். சொல்லப்போனால், அது போனதுமான அளவுக்கு சோஷலிசத் தன்மை வாய்ந்ததாக இல்லை என்றும் விமர்சித்தார், அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் மீதும் நேருவின் மீதும் அவர் வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் வேறு தளத்திலானது.
பிற்காலத்தில் கழக ஆட்சிகளின்போது – குறிப்பாக கலைஞர் முதல் இன்று ஸ்டாலின் வரை திமுக அரசுகளின்போது - பின்பற்றப்படும் அனைத்து சமூகப் பொருளாதாரக் கோட்பாடுகளுக்கும் அண்ணா போட்டிருந்த வலுவான சித்தாந்த அடித்தளமே காரணமாக இருந்தது. அதுதான் இன்று ‘தமிழ்நாடு மாதிரி’ என்று பேசப்படுவதற்கு முதல் காரணமாக இருந்தது. இந்த மூன்று அம்சங்களும் இன்று இந்திய அளவில் பேசப்படுகின்றன. அண்ணாவின் சிறப்பு இந்த மூன்று அம்சங்கள் மட்டும் அல்ல. இந்த மூன்றையும் ஒரே வடிவத்தில் அவர் வடித்துக்கொடுத்ததுதான். அதற்கான சிக்கலான வியூகத்தையும் அவர் வகுத்து, நடைமுறைப்படுத்தி, வெற்றியும் பெற்றார்.
அண்ணா சொல்வது என்ன? சமூகநீதி நிலவ வேண்டும் என்றால், சமூக அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும், போராட்டத்தின் விளைவாக அரசியல் அதிகாரத்தையும் வென்றெடுக்க வேண்டும். ஒரு ஜனநாயக அரசியலில் அது தேர்தலின் மூலமாகவே நடக்கிறது. எனவே, தேர்தலில் பங்கேற்று ஆட்சி அமைக்க வேண்டும், அந்த ஆட்சி மக்களின் அரசியல், சமூக, பொருளதார உரிமைகளை மீட்டளிப்பதாக இருக்க வேண்டும். மக்களுக்கான உரிமைகளை மீட்டளிக்க அந்த அரசுக்கு முதலில் உரிமை இருக்க வேண்டும். அந்த உரிமை டெல்லியில் சிறைபட்டிருக்கிறது. எனவே, அதை மீட்க வேண்டும். சுயாட்சி இல்லாமல் சுதந்திரமான சமூகத்தை உருவாக்க முடியாது. சமூக நீதி என்பது வெறும் பிரதிநிதித்துவம் அல்ல, மக்களின் நல்வாழ்வு. நல்வாழ்வுக்கு வழி வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல். அதற்குப் பொருளாதாரம் முக்கியம். எனவே, அரசின் பொருளாதாரக் கொள்கை மக்கள் நலப் பொருளாதாரமாக இருக்க வேண்டும். பலமான பொதுத்துறைக் கட்டமைப்பும் கூட்டுத் திட்டமிடலும் வேண்டும். சுதந்திரமான முறையில் தொழில்முனைவோர் வளரவும் வேண்டும். ஆனால், தொழிலும் நிதியும் சில பனியாக்களிடம் சிக்கிக்கொள்ளக் கூடாது. அதிகாரம் டெல்லியில் மாட்டிக்கொள்ளக் கூடாது. நாம் யாரிடமும் கையேந்தி நிற்கக் கூடாது. எதிர்காலம் எதேச்சாதிகாரிகளிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது – இதுதான் அண்ணாவின் மனத்தோட்டம். இதுதான் இன்று மீண்டும் பேசப்பட வேண்டிய அரசியல் சித்தாந்தம்.
- ஆழி செந்தில்நாதன், மூத்த பத்திரிகையாளர் – பதிப்பாளர், தொடர்புக்கு: zsenthil@gmail.com
இன்று அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT