Published : 06 Feb 2016 08:31 AM
Last Updated : 06 Feb 2016 08:31 AM
தார்மிக அடிப்படையிலான எதிர்ப்புக் குரல்கள் தேவைதான்; ஆனால், பேச்சுவார்த்தைதான் தீர்வுதரும்!
‘தி கார்டியன்’ பத்திரிகையின் இணையதளப் பகுதிக்குச் சென்றால், ‘ஆர்ப்பாட்டம்’ என்ற தனித் தொகுப்பில் செய்திகள் இடம்பெற்றுள்ளன. காலையில் காபி குடிக்கும்போதே இன்றைய தலைப்புச் செய்திகள், வானிலை, விளையாட்டுச் செய்திகளுடன் எங்கெல்லாம் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் என்றும் முன்கூட்டியே தெரிந்துகொண்டுவிடலாம். செய்திகளும் அதையொட்டியே உள்ளன. ‘2016-ல் வீதியில் போராடும் கலைஞர்களுக்கான ஐந்து புதிய யோசனைகள்’, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் ‘டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், அமைதியாக எதிர்ப்பைத் தெரிவித்த முஸ்லிம் பெண் வெளியேற்றம்’ என்று செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஆக, நாம் இப்போது ‘போராட்டக் காலத்தில்’ வாழ்கிறோம்!
ஜெர்மனியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது கொலோன் என்ற இடத்தில் பெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் புகலிடம் தேடி அரபு நாடுகளிலிருந்து வந்த அகதிகள்தான் என்று நீதித் துறை அமைச்சர் அறிவித்தார். அதற்காக, பிரதமர் ஏஞ்செலா மெர்கெலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏராளமானோர் அவருக்குக் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.
போராட்டக் காலம்
இப்படி எங்கும் எதிர்ப்பு, எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் என்று ஏற்படுவதற்கு இப்பூவுலகின் மூன்று அம்சங்கள் முக்கியக் காரணம் என்பது என்னுடைய கருத்து. முதலாவது, உலகமயமாக்கல். அடுத்தது, மூரின் விதி (கம்ப்யூட்டர் சிப்புகளின் வேகமும் ஆற்றலும் ஆண்டுதோறும் இரட்டிப்பாகிக்கொண்டே போகும்). மூன்றாவது, இயற்கை அன்னை. இவை அனைத்துமே வேகம்பெற்று வருகின்றன. இதனால் வளர்ந்த நாடுகளும் மத்திய தரக் குடும்பங்களும் நெருக்குதல்களுக்கு உள்ளாகின்றன. இவற்றில் வலிமை குறைந்தவை நொறுங்கிவிடுகின்றன. அதே வேளையில், தனி நபர்களுக்கு ‘அசாதாரணமான வலிமை’கிட்டுகிறது, வேலையின் தன்மையே மாறிவிடுகிறது. அத்துடன் தலைமை, அரசு எல்லாமும்.
இந்த அளவுக்கு ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புகளும் வலுத்துவருவதால் ‘ஸ்மார்ட் போன்’ வைத்திருக்கும் ஒவ் வொருவருமே நிருபர்களாகவும், செய்திப்பட படப்பிடிப் பாளர்களாகவும், ஆவணப்படத் தயாரிப்பாளர்களாகவும் மாறிவிடுகின்றனர். எனவே, எல்லா பத்திரிகைகளிலுமே ஆர்ப்பாட்டம் - போராட்டங்களுக்கென்று தனிப் பகுதி ஒதுக்கப்படுவதில் வியப்பில்லை.
தலைமைப் பண்பு குறித்து பெரு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் எல்.ஆர்.என். நிறுவனத் தலைமை நிர்வாகியும் ‘ஹௌ’ என்ற நூலின் ஆசிரியருமான டோவ் சீட்மேனிடம் இது குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். “மக்கள் எல்லோருமே இப்போது தார்மிக உணர்வு மிக்கவர்களாகிவிட்டார்கள். தொலைவு அதிகரிக்க அதிகரிக்க நெறிசார்ந்த கற்பனை குறைந்துவிடுகிறது என்று டேவிட் ஹியூம் என்ற தத்துவாசிரியர் கூறினார். அவர் சொன்னதற்கு நேர்மாறானது உண்மையாகி வருகிறதென்று கூறுவேன். தொலைவு குறையக்குறைய தார்மிகக் கற்பனை அதிகமாகி வருகிறது. இப்போது உலக மக்களிடையே தொலைவு ஒரு விஷயமே இல்லை!’’ என்கிறார் டோவ் சீட்மேன்.
போலீஸ்காரர்களின் மிருகத்தனத்தையும், பயங்கர வாதிகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க பாரீஸ் நகரக் கலையரங்கின் உயரமான இடத்திலிருந்து அப்பாவிகள் ஜன்னல் வழியாகக் குதிப்பதையும், பெரு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் நிற அடிப்படையிலான, பாலின அடிப்படையிலான மின்னஞ்சல்களையும் (தொலைக்காட்சிகளில்) பார்க்கிறோம். இதையெல்லாம் பார்த்துவிட்டு தார்மிக அடிப்படையில் சினம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?
தார்மிகக் கோபம் நல்லது
“இப்படி நடப்பதாக வைத்துக்கொள்வோம்; மின்னசோட்டாவில் வசிக்கும் பல் மருத்துவர் ஒருவர் ஜிம்பாப்வே நாட்டில் செசில் என்று பெயரிடப்பட்ட, பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்படும் ஒரு சிங்கத்தைச் சுட்டுவிடுகிறார். சில நாட்களில் அச்செய்தி உலகம் முழுவதும் பரவிவிடுகிறது. அவருடைய இச்செயலைக் கண்டித்து டுவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் ஏராளமானோர் கண்டனக் கருத்துகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதன் விளைவாகச் சிலர் அவருடைய பல் மருத்துவமனையை மூடவும் அவர் மேற்கொண்டு தொழில் செய்ய முடியாமல் முடக்கவும் முயல்கின்றனர். அவருடைய மருத்துவமனை குறித்து எதிர்மறையான கருத்துகளை இணையதளத்தில் தெரிவிக்கின்றனர். ஃப்ளோரிடாவில் உள்ள அவருடைய ஓய்வுக்கால இல்லத்தின் மீது, ‘சிங்கக் கொலையாளி’ என்று வண்ணத்தில் எழுதுகின்றனர்.
சேஞ்ச்.ஆர்க் என்ற இணையதளத்தில் ஒரே நாளில் நான்கு லட்சம் பேர் டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு ஒரு வேண்டுகோளை வைக்கின்றனர். பொழுதுபோக்குக்காகவும் விலங்கின் தலை, கொம்பு அல்லது நகத்துக்காகவும் வேட்டையாடுவோரை ஏற்றிச்செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றனர். அவர்களுடைய வேண்டுகோளை டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனம் முதலில் கேட்கிறது. பிறகு, மற்ற விமான நிறுவனங்களும் அதைப் பின்பற்றத் தொடங்குகின்றன. ஜிம்பாப்வேயின் சுற்றுலாத் தொழிலுக்கு மூலாதாரமாகத் திகழும் வேட்டைக்கார்கள் இதைக் கண்டிக்கின்றனர். காரணமின்றித் தங்களைப் பாரபட்சமாக நடத்துவதாகக் கூறுகின்றனர். தார்மிக அடிப்படையில் மென்மேலும் நாம் உணர்ச்சிவசப்படுவது நல்லதுதான். (அமெரிக்க) காவல்துறையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட நிறவெறி நிலவுகிறது; கல்லூரிகளில் மாணவர் குழுக்களிடையே பேதம் நிலவுகிறது; இவையெல்லாம் நிஜமானவை. காலங்காலமாக சகித்துக்கொள்ளப்படுபவை. இதற்கு எதிராக மக்கள் திரண்டெழுந்து கண்டிப்பது நல்ல அறிகுறி; சமூகத்தின் நலன் கெடாமலும், அது அழுகிவிடாமலுமிருக்க அதை மீண்டும் செப்பனிடுவதாகும்” என்கிறார் சீட்மேன்.
மேலும், “அந்த தார்மிக உணர்வே தார்மிகக் கோபமாக வோ, அதிர்ச்சியாகவோ உருவெடுத்தால் உண்மையை அறிய பேச்சுவார்த்தைக்கும் வழிவகுக்கலாம், பேசவிடாமல் வாயை அடக்கவும் உதவலாம்” என்கிறார் சீட்மேன். கல்லூரி வளாகங்களில் அரசியலைத் திருத்த நடக்கும் முயற்சிகளுக்கும், டொனால்ட் டிரம்ப் அரசியல்ரீதியாகவே தவறாகப் பேசினாலும் அதையும் ஆதரிப்போர் அதிகம் இருப்பதற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. யேல் பல்கலைக்கழகத்தில் ஒரு நிர்வாகியின் மனைவி, மாணவர்களின் பேச்சு சுதந்திரத்துக்குக்கூட வரைமுறை இருக்கிறது என்று கூறியதற்காக, நிர்வாகி பதவிவிலக வேண்டும் என்று மாணவர்கள் வெகுண்டெழுந்து கிளர்ச்சி செய்தனர்.
ஏதாவது ஒரு சம்பவம் நடந்து, அதை அறிய வரும் மக்கள் உடனே வெகுண்டெழுந்து சம்பந்தப்பட்டவர் பதவி விலக வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால், அது தேவையற்ற தொடர் போராட்டங்களுக்கே இட்டுச் செல்லும். ஒருவரை அவர் செய்ததற்காக அல்லது செய்யாமல் இருந்ததற்காக பதவி விலகச் சொன்னால், இன்னொரு தரப்பார் வெகுண்டெழுந்து பதவி விலகியவரை மீண்டும் பணியில் சேர்க்குமாறு கோரிப் போராடுவார்கள். இருதரப்பாரும் சந்தித்துப் பேசி கருத்து வேறுபாடுகளைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்வதற்கு இத்தகைய போக்கு இடையூறாகத்தான் இருக்கும்.
பேச்சுவார்த்தையின் அவசியம்
“சுமுகமான பேச்சுவார்த்தைகளால்தான் உண்மையான புரிந்துணர்வும் நீடித்த உடன்பாடும் ஏற்படும். தார்மிகக் கோபம் தார்மிகப் பேச்சுவார்த்தையைவிட வலுவாக இருக்கும்போது திணிக்கப்படும் தீர்வானது, எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் தயக்கத்துடன் ஏற்றுக்கொள்ளப்படுவதாகத்தான் இருக்குமே தவிர, உத்வேகம் தரும் தீர்வாக இருக்க முடியாது” என்கிறார் சீட்மேன். நெருக்குதல் தந்து மன்னிப்பு கோரும் சூழலானது, சிறுவர் சிறுமியர் தவறு செய்துவிட்டதாகக் கருதி விசாரிக்கும்போது, முதலில் மன்னிப்பு கேள் என்று மிரட்டி ‘ஸாரி’ சொல்ல வைப்பதற்கு இணையானது என்கிறார். இப்படிப்பட்ட சூழலில் உதட்டளவில் மன்னிப்பு கோரப்படுமே தவிர, உளப்பூர்வமாகத் தவறுகள் திருத்திக்கொள்ளப்பட மாட்டாது.
இப்படி எது நடந்தாலும், எதைக் கேள்விப்பட்டாலும் தார்மிக ரீதியில் வெகுண்டெழுந்து கருத்துத் தெரிவிப்பதும் தண்டிக்கக் கோருவதும் நாம் முடிவில்லா சூறாவளிக்கு இடையே வாழ்வதைப் போல ஆகிவிடும். தார்மிகப் பூசல்களுக்குத் தீர்வு காண அனைத்து அம்சங்களையும் அலசிப்பார்த்து, அர்த்தமுள்ள வகையில் பேச வேண்டும். இதை மேற்கொள்ளும் தலைவர்களுக்கு துணிவும் கருணையும் அதிகமிருக்க வேண்டும். ஒரேயடியாகக் கத்திக் கூச்சலிட்டு குரலை உயர்த்துவதற்குப் பதிலாக நடந்தவை குறித்து அமைதியாகச் சிறிது நேரம் சிந்தித்துப் பிறகு முடிவுக்கு வர வேண்டும். அப்படிச் செய்ய முடியுமா, செய்வார்களா என்பது கேள்விக்குறிதான் என்றாலும், அவ்வாறு செய்தால்தான் நாம் ஒற்றுமையுள்ள சமுதாயத்தை நோக்கிப் பயணப்பட முடியும்.
தமிழில்: சாரி
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT