Published : 12 Sep 2021 03:18 AM
Last Updated : 12 Sep 2021 03:18 AM
‘மேன்மேலும் புதியகாற்று எம்முள் வந்து/ மேன்மேலும் புதியஉயிர் விளைத்தல் கண்டீர்’ என்று எழுதித் தமிழ் மொழி மீதும் தமிழ் சமூகத்தின் மீதும் புதிய காற்றைப் படச் செய்தவர் பாரதி. வடிவத்தால் மரபுக் கவிஞராகவும் உள்ளடக்கத்தால் நவீனக் கவிஞராகவும் பாரதி காட்சியளிக்கிறார். மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இனம், மொழி, நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள், பிற நாட்டின் விடுதலைப் போராட்டங்கள், பிற நாட்டுத் தமிழர்களின் இன்னல்கள், வானியல் நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற பல கருப்பொருள்கள் பாரதியிடம்தான் தமிழ்க் கவிதை வரலாற்றில் முதன்முதலில் எட்டிப்பார்த்தன.
பாரதியின் சமத்துவக் கனவு
‘எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்/ எல்லாரும் இந்தியா மக்கள்/ எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை/ எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்ற சமத்துவக் குரலை இந்தியாவிலேயே அநேகமாக முதலில் எழுப்பியவர் பாரதி. அதுமட்டுமன்றி ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்/ ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சத்திய ஆவேசத்துடன் பாடியவர் யார்? ‘இடம்பெரிது உண்டு வையத்தில் – இதில்/ ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?’ என்ற வரிகளுக்கும், பாரதி இறந்து 19 ஆண்டுகள் கழித்து வெளியான, சார்லி சாப்ளினின் ‘த கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் இறுதிக் காட்சியில் சாப்ளின் ஆற்றும் உரையில் வரும் ‘இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது’ என்ற வார்த்தைகளுக்கும் இடையில் எத்தனை ஒற்றுமை!
‘பாருக்குள்ளே சமத்தன்மை… சகோதரத் தன்மை’ மட்டுமே புவி எங்கும் விடுதலை செய்யும் என்று பாடியவர் பாரதி. ‘… குடியரசு என்று/ உலகறியக் கூறி விட்டார்’ என்று ‘புதிய ருஷியா’வைப் பற்றி எழுதுகிறார். இந்தியாவை ‘முப்பது கோடி ஜனங்களின் ஸங்கம்/ முழுமைக்கும் பொதுவுடைமை’ என்கிறார். இப்படியாக, சமத்தன்மை, சகோதரத் தன்மை, குடியரசு, பொதுவுடைமை, புரட்சி போன்ற சொற்களையும் அவற்றின் கருத்துகளையும் தமிழ்ச் சமூகத்தில் ஊன்றியவர் அவர். அதனால்தான் ஜீவா, தொ.மு.சி.ரகுநாதன், ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள் பாரதியை ஆரத்தழுவிக்கொண்டனர்.
பாரதியின் தமிழ்க் கனவு
தமிழ்ச் சமூகத்துக்கு பெரும் பார்வை நோக்கை 20-ம் நூற்றாண்டில் வழங்கிய பேராளுமைகளில் பெரியார், பாரதியார், அண்ணா ஆகிய மூவரும் தலையாயவர்கள். மேலைநாடுகளில் புத்தம் புதிய கலைகள், புத்தம் புதிய தொழில்நுட்பங்கள் வளர்கின்றன; தமிழில் அவையெல்லாம் இல்லை; ஆகவே, ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும் – அந்த/ மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்’ என்று ஒரு பேதை கூறியதைக் கேட்டு பாரதி கொதித்துப் போகிறார். கிண்டி பொறியியல் கல்லூரியில் இருந்த ‘கம்ப்யூட்டரை’ காண 1965-ல் பெரியார் சென்றிருக்கிறார். அந்தச் சாதனத்துக்குத் தமிழ்ப் பெயர் என்ன என்று தன்னுடன் வந்தவரைக் கேட்டிருக்கிறார். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. “நீ கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தால்தானே அதற்குப் பெயர் இருக்கும்” என்று அவரிடம் சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பெரியார். பாரதிக்கு ஏற்பட்டதும் அதேபோன்றதொரு சீற்றமும் ஆதங்கமும்தான். அதேபோல், புவியைக் கடந்த ஹாலி வால்நட்சத்திரத்தைப் பற்றி பாரதி எழுதிய ‘சாதாரண வருஷத்துத் தூமகேது’ கவிதையிலும் அந்த வால்நட்சத்திரத்தைப் பற்றிகூட ‘அன்னியர் உரைத்திடக் கேட்டே தெரிந்தனம்’ என்று குறைபட்டுக்கொள்கிறார்.
பன்மைத்துவக் கவிஞன்
தாயின் மணிக்கொடியைப் புகழ்ந்து பாடும்போது ‘இந்திரன் வச்சிரம் ஓர்பால்- அதில்/ எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்’ என்று எழுதுகிறார். பாரதி கற்பனை செய்த நாடு இந்துகள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள் அனைவரையும் உள்ளடக்கியதே. தமிழில் முதன்முதலில் ஏசுவைப் பற்றிப் பாடிய கிறிஸ்தவரல்லாத கவிஞர், அல்லாவைப் பற்றிப் பாடிய இஸ்லாமியரல்லாத கவிஞர், குரு கோவிந்தரைப் பற்றிப் பாடிய கவிஞர் பாரதிதான். தமிழின் முதல் பன்மைத்துவக் கவிஞர் என்று சந்தேகமில்லாமல் பாரதியை நாம் கூறிவிடலாம். அப்பேர்ப்பட்ட பன்மைத்துவக் கவிஞருக்கு, பல வண்ணங்கள் கொண்ட கவிஞருக்குக் காவி நிறத்தை மட்டும் பூசி பிறர் அவரை அபகரிக்க நாம் விடலாகாது.
காதல் கவிதைகள்
பாரதியின் காதல் கவிதைகள் அலாதியானவை. காதலின் உச்சத்தில் காதலனின் முகமே மறந்துபோய்விடும் கொடுமை எங்கேயும் உண்டோ? பாரதியின் கவிதைத் தலைவி பாடுகிறாள், ‘ஆசை முகம் மறந்துபோச்சே – இதை/ ஆரிடம் சொல்வேனடி தோழி?’ தன்னைக் கண்டதும் நாணிக் கண் புதைக்கும் காதலியைப் பார்த்து, ‘நீட்டும் கதிர்களொடு நிலவுவந்தே – விண்ணை/ நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ?’ என்று தலைவன் கேட்கிறான். ஆனால், பெண் அப்படித்தான். முதலில் நிலவாகிய ஆண், விண்ணாகிய பெண்ணிடம் வந்து ‘எப்படி இருக்கிறாய், உன் பட்டுக் கருநீலப் புடவை அழகு, அதில் பதித்த நல்வயிரங்கள் அழகு’ என்றெல்லாம் வர்ணித்துவிட்டுத்தான் ‘மருவ’ வேண்டும். ஆண்கள் அப்படியில்லை, அவர்களைப் பொறுத்தவரை வாய்ச்சொல்லில் பயனில.
காதல் இந்த உலகத்துக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. உலக இயக்கத்துக்கு உந்துவிசை அது. ஆகவேதான், ‘காதலினால் உயிர் வாழும்;-இங்கு/ காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்;/ காதலினால் அறிவு உண்டாம்,-இங்கு/ காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்’ என்கிறார் பாரதி. ‘காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்’ என்ற வரி நம்முள் முறுக்கேற்றுகிறது.
புதிய பாலம்
பாரதிக்கும் திராவிட இயக்கத்தவருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் கெடுவாய்ப்பானது. எனினும், பின்னாளில் பாரதியை ‘மக்கள் கவி’ என்று பெயர்சூட்டித் தமிழ்ச் சமூகத்தின் உடைமையாக அண்ணா மாற்ற முயன்றது ஆரோக்கியமான முன்னெடுப்பு. ‘நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கும் வாளும்’ என்ற பாரதியின் வரியிலிருந்து கருணாநிதி தன் சுயசரிதைக்குத் தலைப்பைப் பெற்றுக்கொண்டார் என்பது பாரதி மீது அவருக்கு இருந்த பற்றை வெளிப்படுத்துவது. இப்போது, பாரதியார் நினைவுநாளை ‘மகாகவி நாள்’ என்று கொண்டாடுவது, பாரதி நினைவு நூற்றாண்டை ஓராண்டு கொண்டாடுவது, மாணவர்களிடம் பாரதியைக் கொண்டுசெல்வது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிவிப்புகள் பாரதிக்கும் திராவிட இயக்கத்தவருக்கும் இடையில் இருந்த பிளவைச் சரிசெய்வது மட்டுமல்ல ‘பாரதி தமிழ்ச் சமூகத்தின் சொத்து’ என்று எல்லோருக்கும் உணர்த்தும் செயலாகும். பாரதி அன்பர்களும் தமிழ் மக்களும் எப்போதைக்கும் இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
‘ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்/ பொற்பைகள் ஜதிபல்லக்கு,/ வயப்பரிவாரங்கள் முதல் பரிசளித்துப்/ பல்ஊழி வாழ்க நீயே!’ என்று எட்டயபுரம் ஜமீன்தாரிடம் பாரதி வைத்த மிரட்டலான விண்ணப்பத்தை அவரும் நிறைவேற்றவில்லை; பாரதி வாழ்ந்த காலத்தில் நம் தமிழ்ச் சமூகமும் நிறைவேற்றவில்லை. ஆனால், அவர் காலத்துக்குப் பிறகு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே முரசறைந்து கொண்டிருக்கிறது, ‘எம் கவிஞன் நீ!’ என்று!
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT